
10 நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

அர்விந்த் லிமிடெட்
இந்த நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 14% குறைந்து ரூ.62 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.71 கோடியாக இருந்தது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதன் விளைவாக லாபம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் 13% உயர்ந்து, ரூ.2,628 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி, வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய வருமானம், அதாவது எபிட்டா (EBITDA) ரூ.232 கோடியிலிருந்து 9 சதவிகிதம் குறைந்து ரூ.212 கோடியாக உள்ளது.
முடிவடைந்த காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதால், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.329 கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டதால் உள்நாட்டில் ஜவுளி விற்பனை குறைந்துபோனது. இதனால், லாபம் குறைந்திருப்பதாக நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளர் ஜெயேஷ் ஷா குறிப்பிட்டுள்ளார்.

அசோக் லேலண்ட்
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 14% அதிகரித்து ரூ.334 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் ரூ.4,622 கோடியிலிருந்து ரூ.6,047 கோடியாக உயர்ந்துள்ளது. இது 31% அதிகரிப்பாகும். ஏற்றுமதி 39% அதிகரித்துள்ளது. இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 22% அதிகரித்துள்ளது. எபிட்டா லாப வரம்பு 10.1% -ஆக உள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளர் கோபால் மகாதேவன், “எங்கள் நிதி நிலவரம் கடந்த காலாண்டிலும் வலுவான நிலையிலேயே இருந்துள்ளது. இந்தக் காலாண்டிற்கான கடன்/பங்கு மூலதன விகிதமானது 0.35:1 என்ற அளவில் உள்ளது” என்றார்.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நிகர லாபம், ரூ.585 கோடியிலிருந்து ரூ.445 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், வருவாய் ரூ.8,881 கோடியிலிருந்து ரூ.10,285 கோடியாக அதிகரித்துள்ளது.

போலாரிஸ்
போலாரிஸ் கன்சல்ட்டிங் & சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் 75 சதவிகிதம் அதிகரித்து ரூ.72 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக இருந்தது. வருவாயானது ரூ.509 கோடியிலிருந்து 32% உயர்ந்து, ரூ.671 கோடியை எட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளர் என்.எம். வைத்தியநாதன், “எங்கள் நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிதி நிலை வளர்ச்சியானது வருவாய் அதிகரிப்பு, முதலீட்டின் மூலமான லாபம், செயல்திறன் ஆகியவற்றால் அதிகரித்துள்ளது. நடப்புக் காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சாதனை அளவை எட்டுமென நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
போலாரிஸ் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 7,646 -ஆக உள்ளது. கடந்த காலாண்டில் 153 பணியாளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

டேக் சொல்யூஷன்ஸ்
சென்னையைத் தலைமையிடமாகக்கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான டேக் சொல்யூஷன்ஸின் நிகர லாபம் 19% உயர்ந்து, ரூ.37 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.31 கோடியாக இருந்தது.
வருவாய், ரூ.328 கோடியிலிருந்து 13% உயர்ந்து ரூ.371 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனம், இடைக்கால டிவிடெண்டாக, ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ. 0.30 அறிவித்துள்ளது.
உலக அளவில் புதிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக மேலாளருமான ஹெச்.ஆர். சீனிவாசன் தெரிவித்தார்.

சிட்டி யூனியன் பேங்க்
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், கும்பகோணத்தைச் சேர்ந்த சிட்டி யூனியன் பேங்கின் நிகர லாபம் 17% அதிகரித்து ரூ.145 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமானது கடந்த காலாண்டில் ரூ.124 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.894.87 கோடியிலிருந்து ரூ.996.12 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வாராக் கடன் 2.69 சதவிகிதத்திலிருந்து 3.07 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் 1.63 சதவிகிதத்திலிருந்து 1.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.67 கோடியிலிருந்து ரூ.129.29 கோடியாக அதிகரித்துள்ளது.

முத்தூட் ஃபைனான்ஸ்
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 53% உயர்ந்து ரூ.454 கோடியை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.297 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாயானது ரூ.1,386 கோடியிலிருந்து 1,670 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வாராக் கடன் 2.19 சதவிகிதத்திலிருந்து 4.56 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் 1.82 சதவிகிதத்திலிருந்து 3.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம், மொத்த வாராக் கடன்களுக்காக ரூ.1,571 கோடியை ஒதுக்கி வைத்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக் கடன் ரூ.6,016 கோடியாக இருந்தது. இது, இந்த ஆண்டில் ரூ.12,593 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
ஜூன் காலாண்டில் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 77.3% அதிகரித்தது, இந்த வங்கியின் நிகர இழப்பு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். வாராக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை செப்டம்பர் காலாண்டில் 23.6% அதிகரித்துள்ளது.
இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.1,064 கோடியிலிருந்து ரூ.1,039 கோடியாகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் ரூ.20,765 கோடியிலிருந்து ரூ.18,950 கோடியாகக் குறைந்துள்ளது.

பாரத் ஃபோர்ஜ்
பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த காலாண்டில் 60.54% உயர்ந்து ரூ.203.72 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.966.82 கோடியிலிருந்து ரூ.1,294.63 கோடியாக அதிகரித்துள்ளது. இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.2 அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியன் பேங்க்
சென்னையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், கடந்த காலாண்டில், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. வங்கியின் நிகர லாபம் 11.3% அதிகரித்து ரூ.451.54 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 20.8% வளர்ச்சி யடைந்து ரூ.1,544 கோடியை எட்டியது. வங்கியின் மொத்த வாராக் கடன் 7.21 சதவிகிதத்திலிருந்து 6.67 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் 4.05 சதவிகிதத்திலிருந்து 3.41 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்
ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் நிகர லாபம் 67% அதிகரித்து ரூ.226.6 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 14% உயர்ந்து 3,192.6 கோடியாக உள்ளது.
தெ.சு.கவுதமன்