
கேள்வி பதில்

என் தாத்தா பெயரில் 4 சென்ட் இடம் உள்ளது. ஆனால், பத்திரத்தில் 3 சென்ட்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாத்தா, பாட்டி, அம்மா மூவரும் இறந்துவிட்டனர். பத்திரம் 42 வருடங்கள் பழைமையானது. இதை எப்படி மாற்றம் செய்வது?

மனோகரன், கும்பகோணம்.
கே.அழகுராமன், அட்வகேட், உயர்நீதிமன்றம். சென்னை
‘‘பத்திரத்தில் 3 சென்ட் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், 4 சென்ட் இடம் உள்ளது எனக் கூறியிருப்பதே முரணாக உள்ளது. அநேகமாக வித்தியாசப்படும் ஒரு சென்ட் இடமானது தாத்தா காலத்திலிருந்தே அனுபவப் பாத்தியமாக பெறப்பட்டிருக்கும். பத்திரத்தில் 3 சென்ட் என்று குறிப்பிட்டிருக்கும் நிலையில், வித்தியாசப்படும் ஒரு சென்ட் இடத்தைச் சேர்ப்பதற்கு பத்திரம் எவ்விதத்திலும் உதவாது. ஆனால், பட்டா, சிட்டா, வரி ரசீது போன்ற ரெவன்யூ ஆவணங்களில் உங்கள் தாத்தா, பாட்டி காலத்திலிருந்து அனுபவப் பாத்தியமாக 4 சென்ட் இடம் அனுபவிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகக் குறிப்பிட்டிருந்தால் அந்த 4 சென்ட் இடத்திற்கான உங்கள் உரிமையை எவரும் மறுக்கமுடியாது. அதை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அனுபவப் பாத்தியதை (ADVERSE POSSESSION) என்பதே உங்கள் உரிமையை நிலை நாட்டுவதற்குப் போதுமானது.’’
பிர்லா காட்சின் இந்தியா, எஸ்.வி.ஓ.ஜி.எல் ஆயில் காஸ் அண்டு எனர்ஜி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளேன். இப்போது இந்தப் பங்குகளை விற்க முடியவில்லை. என்ன செய்வது?

மணிகண்டன், சென்னை.
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.
‘‘பிர்லா காட்சின் இந்தியா (Birla Cotsyn India) நிறுவனப் பங்கின் தற்போதைய விலை ரூ.0.08. தினசரி 100 பங்குகள்மீது வர்த்தகம் நடப்பதே பெரிய விஷயமாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனப் பங்குகளை விற்பவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்தப் பங்கு முதலீட்டில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதை பி.எஸ்.இ பங்குச் சந்தை சுட்டிக் காட்டியுள்ளது. அந்த வகையில், இந்தப் பங்கை வாங்கும்முன் மிகவும் கவனத்துடன் பரிசீலித்திருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் அடிப்படை, பின்புலம் தெரியாமல் முதலீடு செய்வது இப்படி அபாயத்தில் கொண்டு வந்துவிட்டுவிடும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் நிகர இழப்பில் இருக்கிறது.
எஸ்.வி.ஓ.ஜி.எல் ஆயில் காஸ் அண்டு எனர்ஜி (SVOGL OIL Gas & Energy) நிறுவனத்தின் பங்கு வர்த்தகமும் தடை செய்யப்பட்டிருக்கிறது.எனவே, இவ்விரு நிறுவனங்களின் பங்குகளையும் தற்போது விற்க இயலாது.’’
நல்ல மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்வது எப்படி?

முகேஷ் குமார், சேலையூர்.
நாகராஜன் சாந்தன், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர், SNPwealth.com
‘‘சிறந்த மியூச்சுவல் ஃபண்டை நீங்கள் சில காரணிகளின் மூலம் தேர்வு செய்யலாம்.
எந்தவொரு மியூச்சுவல் ஃபண்டும் அதன் பெஞ்ச்மார்கைத் தாண்டித் தொடர்ந்து வருமானம் கொடுத்து வந்தால், அந்த ஃபண்ட் அதன் செயல்பாடுகளில் சரியாக உள்ளது என எடுத்துக்கொள்ளலாம். இதைத் தவிர ஒரு ஃபண்டை நிர்வகிக்கக்கூடிய ஃபண்ட் மேனேஜரின் கடந்த காலச் செயல்பாடுகள் எவ்விதம் உள்ளன என்பதையும், சந்தையின் ஏற்ற இறக்கங்களில் அந்த ஃபண்ட் செயல்பட்ட விதம் குறித்தும் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்துள்ள வருமானம் எவ்விதம் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை மிக அதிகமாக இருந்தால், அந்த மியூச்சுவல் ஃபண்ட் சமீப காலங்களில் கொடுத்துள்ள வருமானம் எவ்வாறு உள்ளது என்பதையும் கவனத்தில்கொண்டு தேர்வு செய்தல் அவசியமாகும். அதேநேரத்தில், குறைந்த நிர்வகிக்கும் தொகை கொண்ட ஃபண்டுகள் செயல்பாட்டில் இதைவிடச் சிறப்பாக இருந்தால், அதிக நிர்வகிக்கும் தொகை கொண்ட ஃபண்டுகளைத் தவிர்த்தல் நலம்.
மிக முக்கியமாக, உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தும், முதலீட்டுக் கால அளவை பொறுத்தும் அதற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் வகையில் உள்ள ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், உங்கள் முதலீட்டை வருடத்திற்கு ஒரு முறை மறுசீராய்வு செய்து, தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம்.
நீங்கள் ஒரு ஆலோசகரின் உதவியுடன் உங்கள் முதலீட்டை மேற்கொள்ளும்பட்சத்தில், இவை அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார்.’’
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.