
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
‘‘2005 - 2015-ம் ஆண்டு வரை வங்கிச் சேவையைப் பயன்படுத்தினால் `செஸ்’ (CESS) வரி என்று குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்தது மத்திய அரசு. எதற்கு இந்த செஸ் வரி? கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஒரு வரியின் மூலம் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ.1.71 லட்சம் கோடி. அரசுக்குக் கிடைத்த தொகை அத்தனையும் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செலவழித்ததா என்றால் இல்லை’’ என நமது கல்வித் துறை பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் www.Career360.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மகேஸ்வர் பெரி. கடந்த டிசம்பர் 21, 22-ம் தேதிகளில் சென்னையில் நடந்த நாணயம் விகடன் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ்-ல் அவர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது...

``நம் நாட்டில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக நிறையவே உழைக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் கையில் எதிர்காலம் இல்லாத நிலை உருவாகிவருகிறது. மாநிலப் பாடத்திட்டங்கள் சரியில்லை என சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்கள் சரியில்லை என ஐ.சி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பிள்ளைகளை மாற்றி வருகிறோம். பிள்ளைகளுக்கு அதிக அளவில் தேர்வுச் சுமையைக் கூட்டி வருகிறோம். முதல் பருவத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு எனப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குமுன் 400-க்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. இவ்வளவு தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றாலும், வேலை கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்திய மக்கள் தொகையில், சம்பாதிக்கவேண்டிய வயதில் (15 வயது முதல் 64 வயது வரை) 65% பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்களா என்பதற்கும், இவர்களை வேலைவாய்ப்புத் திறனுள்ளவர்களாக மாற்றுவதற்கு அரசு ஏதேனும் முதலீடு செய்கிறதா என்பதற்கும் பதில் இல்லை.

நாட்டில் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் சமவாய்ப்புகளோ, வசதிகளோ கிடைப்பதில்லை. அரசிடம், அதற்கான செயல்திட்டங்களும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இளைஞர்களால் இந்தியா நிரம்பி வழிந்தாலும், அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எந்தவாய்ப்பும் வழங்கப்படுவ தில்லை. ஆனால், ஆட்சியாளர்கள், `மனிதவளம் மிகுந்த வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’ எனப் பெருமை பேசி வருகின்றனர்.
பிரமிப்பூட்டும் புள்ளிவிவரங்கள்
இந்தியாவில், 26.056 கோடி மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் 12.911 கோடி பேர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியிலும், 6.759 கோடி பேர் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிலும், 3.913 கோடி பேர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பிலும், 2.473 கோடி பேர் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பிலும் படிக்கிறார்கள். இந்தியாவில் 3.5 கோடி மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர்.

நம் நாட்டில், 15.2 லட்சம் பள்ளிகள் இயங்குகின்றன. இதில், 18,941 சி.பி.எஸ்.இ பள்ளிகள், 1,125 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 598 ஜவகர் வித்யாலயா பள்ளிகள், 2,200 ஐ.சி.எஸ்.இ பள்ளிகள், 136 ஐ.பி பள்ளிகள் இருக்கின்றன. இந்தியாவில் 54 சதவிகிதப் பள்ளிகள் அரசு நடத்துபவை. 15 சதவிகிதப் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளால் நடத்தப்படுபவை. மூன்று சதவிகிதப் பள்ளிகள் சமூக அமைப்புகளாலும், 22 சதவிகிதப் பள்ளிகள் தனியார் அமைப்பு களாலும் நடத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் 40,750 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 43.3 சதவிகிதக் கல்லூரிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படுபவை. 42.5 சதவிகிதக் கல்லூரிகள் தனியார் அமைப்புகளால் நடத்தப்படுபவை. 14.2 சதவிகிதக் கல்லூரிகள் அரசு உதவியுடன் தனியார் அமைப்புகளால் நடத்தப்படுபவை. கல்லூரிகள் 70% கலை மற்றும் அறிவியல் படிப்பையும், 16% பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியையும், 3.25% ஆசிரியர் பயிற்சியையும், 3% மருத்துவப் படிப்பையும், 2% மேலாண்மைப் படிப்பையும் வழங்குகின்றன.

2010-ம் ஆண்டில், அரசுப் பல்கலைக்கழகங்கள் 288-ஆக இருந்தன, தற்போது 538-ஆக உயர்ந்திருக்கின்றன. இதைப்போலவே, தனியார் பல்கலைக்கழகங்கள் 148 என்ற எண்ணிக்கையிலிருந்து 348-ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த ஏழு ஆண்டுகளில் அரசுப் பல்கலைக்கழகங்கள் 85 சதவிகிதமும், தனியார் பல்கலைக்கழகங்கள் 128 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன. இதில், 492 பல்கலைக்கழகங்கள் அறிவியல் மற்றும் கலை படிப்பை வழங்குகின்றன. 64 பல்கலைக்கழகங்கள் வேளாண்மைப் படிப்பையும், 59 பல்கலைக் கழகங்கள் மருத்துவப் படிப்பையும், 95 பல்கலைக் கழகங்கள் சிறப்புப் படிப்புகளையும், 112 பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்பக் கல்வியையும் வழங்குகின்றன.

2010-ம் ஆண்டில், இந்தியா முழுவதும் 26,000 கல்லூரிகள் இருந்தன. இதில், அரசுக் கல்லூரிகள் 9,000; தனியார் கல்லூரிகள் 17,000. 2014-ம் ஆண்டில் 1,000 புதிய அரசுக் கல்லூரிகளும், 9,000 தனியார் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. அதாவது, நான்கு ஆண்டுகளில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 சதவிகிதமும், தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 171 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன.
2019-ம் ஆண்டில், அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12,000 என்ற அளவிலும், தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 46,000 என்ற எண்ணிக்கையிலும் இருக்கும். தற்போது தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. 2020-ம் ஆண்டில் உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் தாக்கம் 90 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலைக்க வைக்கும் தொகை
தற்போது கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.25,000 செலவு செய்கிறது மத்திய அரசு. அடுத்த 12 ஆண்டுகளில் கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் 2.36 கோடி மாணவர்களுக்கு அரசு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும். தற்போது மத்திய அரசு அதிக செலவில் ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களை நிறுவி வருகிறது. இங்கு, குறைந்த அளவு மாணவர்களே சேர வாய்ப்புள்ள நிலையில், மற்ற மாணவர் களுக்குத் தரமான கல்வி வழங்குவது குறித்து அரசு யோசிப்பதில்லை. கடந்த காலங்களில் ஐ.ஐ.டி-கள் மற்றும் ஐ.ஐ.எம்-களில் அதிக செலவு செய்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.

ஐ.ஐ.டி-கள் மற்றும் ஐ.ஐ.எம்-களில் படிப்புக் கட்டணம் மற்ற கல்வி நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கிறது. 2002-ம் ஆண்டில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தின் படிப்புக் கட்டணம் ரூ.2.20 லட்சம். 2017-ம் ஆண்டில் படிப்புக் கட்டணம் ரூ.16 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அரசு நடத்தும் கல்வி நிறுவனமே அதிகளவில் கல்விக் கட்டணம் பெறுவதைப் பார்த்து தனியார் கல்வி நிறுவனங் களிலும் அதிக அளவில் கட்டணங்களை வசூலிக்கின்றனர். தற்போது, கல்விக் கட்டணங் களுக்கு 18% ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்துச் செலுத்தவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு.
செஸ் வரியும் கல்வித் துறையும்!
ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துவதற்குமுன், 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஆரம்பக் கல்வி ‘செஸ்’ வரியாக 1.70 லட்சம் கோடி ரூபாயையும், உயர்கல்வி செஸ் வரியாக 80 ஆயிரம் கோடி ரூபாயையும் பெற்றிருக்கிறது மத்திய அரசு. இந்தப் பணத்தை ‘பிரதமிக் சிக்ஷா கோஷ்’ பெயரில் வைப்புத்தொகையாக வைத்து, மதிய உணவுத் திட்டத்துக்கும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்காக, 2007-ம் ஆண்டு `செகண்டரி மற்றும் ஹையர் எஜுகேஷன் செஸ் நிதிச்சட்டம்’ ஏற்படுத்தப் பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி அமைச்சகம் 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 64,228 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
குறைந்துவரும் கல்விக்கான பட்ஜெட்
இந்திய மாணவர்கள், வெளிநாட்டில் படிக்க ஒவ்வோர் ஆண்டும் ரூ.45,000 கோடிக்கு மேல் செலவழிக்கின்றனர். ஆனால், மத்திய அரசு, உயர்கல்விக்கான நிதிநிலையில் ஒதுக்கீடு செய்யும் தொகை ரூ.33,000 கோடி மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசால் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை குறைந்து வருகிறது. 1999-ம் ஆண்டில் கல்விக்கான ஒதுக்கீடு 4.4 சதவிகிதமாக இருந்தது, தற்போது பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 3.71% மட்டுமே.
2030-ம் ஆண்டில் 30 கோடி மாணவர்கள் படித்து முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து வெளியே வருவார்கள். இவர்கள் வேலை வாய்ப்பைப் பெறும்வகையில், ஒவ்வோர் ஆண்டும் மூன்று கோடி வேலைவாய்ப்புகள் என்ற வகையில் 2028-ம் ஆண்டில் 30 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 2005 - 2009-ம் ஆண்டு வரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் 90% பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக் கின்றனர். ஆனால், 2017-ம் ஆண்டில் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்த 17 லட்சம் பேரில் 20% பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற பிரிவுகளால் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு, மாற்று வேலைவாய்ப்புகள் குறித்து யோசிக்கவேண்டியது அவசியம்.
இனி என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் செய்தாக வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம். கல்விக்கான கட்டணத்தைக் குறைத்து, தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும். இது, தனியார் கல்வி நிறுவனங் களுக்குச் சவாலாகவும் போட்டி யாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வரியில்லாத சம்பளம் வழங்க வேண்டும். கல்விக்காக வரியில்லாத முதலீட்டையும் செலவையும் அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தொழில் நிறுவனங் களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட உதவி செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் ஆண்டறிக்கையிலும் எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம் என்ற தகவலை இடம்பெறச் செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட முதலீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தரமான கல்வியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குவதற்குச் சாதகமான நிலை ஏற்படும்” என்று முடித்தார் மகேஸ்வர் பெரி.
கல்வித் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மகேஸ்வர் பெரி மிகவும் தெளிவாக உணர்த்தினார் எனக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே நன்கு வளர்ச்சி கண்டுவரும் நம் நாடு, இன்னும் அதிக வளர்ச்சி காண வேண்டு மெனில், கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது அவரது பேச்சு!
-ஞா.சக்திவேல் முருகன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, தி.விஜய்.