மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!

இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

நாணயம் விகடன் வாசகர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2018 - இரண்டு, பூஜ்ஜியம், ஒன்று, எட்டு - இது வெறும் எண்களா என்றால் இல்லை. அப்படியானால் என்ன..? 

இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!

நாம் இன்று பேசப்போவது நம் பயணம் எதை நோக்கியது என்பது குறித்துதான். நம்மில் பலர் வாழ்கையில் பல கேள்விகளுடன் இருந்திருப்போம்; இன்னும் சிலருக்கோ வாழ்கையே கேள்வியாக இருந்திருக்கும். அடுத்து நாம் எடுத்து வைக்கும் அடி, நம்மிடம் இருக்கும் கேள்விகளுக்கு விடையாக இருக்கவேண்டும்; கேள்வியாக இருக்கும் நம் வாழ்வுக்கு விடையாக மாற வேண்டும்.

அதற்கான வழிமுறைகளோடு உங்களோடு நானும் அடுத்த வருடத்தை வரவேற்க தயாராகிறேன். அதற்குமுன் உங்கள்முன் ஐந்து கேள்விகளை எடுத்து வைக்கிறேன். இதற்கு விடை தேடுங்கள்.

1. முதல் கேள்வி : 2018-ல் எதை நோக்கிப் பயணிக்கப்போகிறோம்? வெறும் 2018 என்கிற இந்த ஓர் ஆண்டை மட்டும் நோக்கிய பயணமா? 2018, 2019, 2020 என மூன்று வருடங்களை மட்டும் நோக்கிய பயணமா? இல்லை, அதனையும் கடந்து ஐந்து வருடங்களை நோக்கிய பயணமா? இல்லை, 10 வருடங்களை நோக்கிய பயணமா? இல்லை, 30 வயதில் இருப்பவர்களுக்கு 60 வயது வரையிலுமான பயணமா? 15 வயதில் இருப்பவர்களுக்கு 40 வயது வரையிலுமான பயணமா? 60 வயது உடையவர்கள் இனி வரும் காலத்தை எப்படி இனிமையானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவது என்பதைப் பற்றிய பயணமா?

இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!ஒரு சிறிய கதை


சுந்தர், ராகேஷ் மற்றும் வருண் மூவரும் நண்பர்கள். அவர்கள் அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தனர். சுந்தரின் இலக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து விடுவது. ராகேஷுக்கோ தனது தகுதிக்கு ஏற்ற வேலையில் சேருவது. வருணிற்கு தானே ஒரு தொழில் நிறுவனத்தை நிறுவுவது.

மூவருமே இலக்குடன் இருக்கின்றனர். ஆனால், இதில் கால அளவு என்பது வேறுபடும். சுந்தருக்கு ஏதேனும் ஒரு வேலை என்பதால், அது இரண்டு மாதங்களுக்குள்ளோ அல்லது மூன்று மாதங்களுக்குள்ளோ கிடைத்துவிடும். ராகேஷுக்குத் தகுதிக்குத் தகுந்த வேலை என்பதால், அதன் கால அளவு ஆறு மாதங்களுக்குள் இருக்கலாம். ஆனால் வருணுக்குச் சொந்தத் தொழில் என்பதால், அதற்கான கால அளவை நிர்ணயிக்க இயலாது. இதிலிருந்து நான் கேட்பது, உங்கள் பயணம் என்பது சுந்தருடையதா, ராகேஷுடையதா, வருணின் இலக்கைப் போன்றதா?

2. இரண்டாவது கேள்வி : யாரை நம்முடைய பயணத்தின் துணையாக அழைத்துச்செல்லப் போகிறோம்?

இந்தக் கேள்வியைக் கேட்டதும், ‘இதென்ன கேள்வி...?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது மிக மிக முக்கியமான ஒரு கேள்வி. நம் வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் நம்முடன் வரக்கூடியவர்கள்தான். ஆனால், நம் வெற்றி பயணத்தின் வழித்துணையாக யார் வரவேண்டும் என்பது நம்முடைய வெற்றி இலக்கைப் பொறுத்தது. உதாரணத்துக்கு, நீங்கள் விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டுமென்றால், அந்தத் துறையில் வெற்றிபெற்ற ஒரு நபரை உங்கள் வழித்துணையாக அழைத்துச்செல்லலாம். அவர்கள் உங்கள் அருகில் இருக்க வேண்டும் என்பதில்லை.

ஒரு சிறிய கதை

கல்லூரிப் படிப்பை முடித்த ஒரு கிராமத்துப் பெண், வேலை தேடி நகரத்துக்கு வருகிறாள். துணைக்குத் தன் தந்தையை அழைத்து வருகிறாள்.   நகரத்தை இதுவரை காணாத தந்தையையும் கூட்டிக்கொண்டு அவள் செல்ல வேண்டிய அலுவலகத்துக்கு ஒவ்வோர் இடத்திலும் விசாரித்துச் சென்றடைகிறாள். அவள் செல்ல வேண்டிய நேரம் தவறிவிடுகிறது. ஆதலால், அவளால் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே, இருவரும் கிராமத்துக்குத் திரும்பி விடுகின்றனர்.

சில மாதங்கள் கழித்து, மீண்டும் நேர்முகத் தேர்வுக்குப் பயணப் படுகிறாள். இந்த முறை தன் தந்தையை விடுத்து ஏற்கெனவே நகரத்தில் உள்ள தனக்குத் தெரிந்த தோழியின் உதவியுடன் அங்கு செல்கிறாள். இந்த முறை நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறாள்.

அந்தந்தச் சூழலுக்கு உகந்தவர்களை அழைத்துச்சென்றால்தான் இலக்கை அடையமுடியும்.

3. மூன்றாவது கேள்வி : எதற்காக அவர்களை உங்கள் வழித்துணையாக அழைத்துச்செல்கிறீர்கள்? நீங்கள் தயாராக இருந்து அடுத்தவர்களை அழைத்துச்செல்கிறீர்களா? நீங்கள் தயாராக இருத்தல் என்பது அறிவு சார்ந்து, பணமதிப்பு சார்ந்து அல்லது தொழில்துறை சார்ந்து முழுத்தெளிவுடன் இருத்தலாகும்.

உங்களைத் தயார் செய்வதற்காக அடுத்தவர்களுடன் நீங்கள் பயணிக்கப்போகிறீர்களா?

உங்களைத் தயார் செய்வதற்கு என்பது நீங்கள் வேலை செய்யும் இடம், தொழில்கூடம் ஆகிய இடங்களில் தயாராக இருக்கக்கூடிய, உங்களுக்கு மேலே உள்ள நபர் அல்லது உங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு நபருடன் நீங்கள் பயணிப்பது.

இரண்டுபேருமே தயார் நிலையில் இல்லை; இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணித்து முன்னேற்றம் காணப்போகிறீர்களா?

புதியதாகத் தொழில் தொடங்கப் போகிறவர்கள், நிறுவனப் பணிமாற்றம் செய்யப்போகிறவர்கள் அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடப் போகிறவர்கள் என இப்படிப் பட்டவர்கள் இருவராகச் சேர்ந்து பயணித்து முன்னேற்றம் காண்பது.

4. நான்காவது கேள்வி : அவர்களை நீங்கள் அழைத்துச்செல்வது அல்லது அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்லப் போவது அல்லது சேர்ந்து சென்று சேரப்போகும் இடம் எது?

அழைத்துச்செல்லக்கூடிய இடம் எது என்று அனைவரும் கூறுவது கிடையாது. எந்த இடம் என்று நான் கேட்பது, நீங்கள் சென்று சேரும் இடம் என்பது பணம் தரக்கூடிய இடமா, மனநிறைவு தரக்கூடிய இடமா அல்லது உங்களது அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய இடமா அல்லது உங்கள் திறமைகளை வளர்த்துவிடும் இடமா அல்லது இவை அனைத்தையுமே தரக்கூடிய இடமா என்பதை நாம் முன்கூட்டியே நிர்ணயிக்க வேண்டும்.

5. ஐந்தாவது கேள்வி : எந்தக் கால அளவுக்குள் நாம சென்றடையப் போகிறோம் அல்லது அழைத்துச் செல்லப்போகிறோம்?

எந்தக் காலத்திற்குள் என்பது   2018-க்குள் அல்லது இன்னும் ஐந்து  வருடங்களுக்குள் அல்லது 10 வருடங்களுக்குள் அல்லது நம் வாழ்நாள் முழுமைக்குமா என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதாவது, இலக்கு எந்தக் கால அளவைக் கொண்டது குறுகியகாலமா அல்லது நீண்டநெடிய காலமா, முடிவேபெறாதா, வாழ்நாள் முழுமைக்குமானதா..? இதைக் கேட்டதும் சிலருக்கு இதை எப்படி இப்போதே சொல்ல முடியுமென்று தோன்றும். அதாவது, நம் பயணம் எந்தக் கால அளவிற்குள் இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்காதபட்சத்தில் நம் இலக்கை எப்படி சென்றடைவது?

யாருக்காகவும் எதற்காகவும் நாம் வாழ்வில் எப்படி வாழவேண்டும் என்று விரும்புகிறோமோ அதிலிருந்து மாறுபடாமல் நாம் வாழவேண்டும். சாதாரணமாக இருக்கும் ஒருவர் பிற பணக்காரர்களைப் பார்த்து, அவர்களைப்போல் ஆகவேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்திக்கொள்வதும், பணம்படைத்த ஒருவர், எங்கே தன்னிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்பதற்காக மிக ஏழ்மையானவராகக் காட்டிக்கொள்வதும் ஒருவித மனநோயைத்தான் ஏற்படுத்தும். ஆதலால் நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான தேடல் உங்கள் கைகளிலே உள்ளது என்பதை மறவாதீர்கள்.

மேற்சொன்ன கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு விடைகளைத் தேடுங்கள். கிடைக்கப்போவது விடைகள் மட்டுமல்ல; உங்கள் வாழ்நாள் பயணத்திற்கான வழியாகவும் இருக்கும். வழியறிந்தால்... 2018 - இரண்டு, பூஜ்ஜியம், ஒன்று, எட்டு என்பது வெறும் எண்கள் அல்ல; உங்கள் லட்சியத்தின் எண்ணங்கள் என்பதை உணரலாம்.

(காலம் வெல்லும்)

இனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்!

தெளிவு பெறுங்கள்...உலகம் வெல்லுங்கள்!

நமக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது மற்றவர் களைக் காட்டிலும் நமக்குத்தான் நன்றாகத் தெரியும். நமக்குத் தெரிந்த விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்தால் தான், நமக்கு என்ன தெரியும் என்பது மற்றவர் களுக்குத் தெரியும். நமக்குத் தெளிவு ஏற்பட வேண்டுமென்றால் நம் மனதிற்கும் மூளைக்கும் இடையிலான இடை வெளியை வெற்றிடம் அற்று நிரப்ப வேண்டும். எந்த ஒரு முடிவும் மனமும் மூளையும் இணைந்து எடுக்கப்படும்போது தெளிவானதாக இருக்கும். எப்போதும் சூழ்நிலையை மட்டுமே காரணம் சொல்லிக்கொண்டு, சோர்ந்து போகாமல் தன்னிலை உணர்ந்து தெளிவுகொள்ளுங்கள், உலகத்தை வெல்லுங்கள்.

பயமும் மாற்றமும்!

நாம் செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற தவறுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவது நாம் மட்டுமே. காலப் போக்கில் நாம் செய்த தவறுகளை மற்றவர்கள் மறந்துவிடக் கூடும். ஆனால், நம்மால் ஒருபோதும் மறக்க இயலாது. அதன்பலன் நம்மை மட்டுமே சேரும். ஆதலால், தவறு செய்கின்ற நாம் அடுத்தவர்களுக்காகப் பயப்பட வேண்டுமா மாறவேண்டுமா என்பதைவிட நமக்காக முதலில் பயப்படவும் மாறவும் வேண்டும் என முடிவெடுங்கள். எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் நூறு சதவிகித நம்பிக்கையுட னும், உறுதியுடனும் செய்யுங்கள். அப்படிச் செய்யும்பொழுது செயல் தெளிவாக இருக்கும். நடந்த முடிந்த விஷயங்களை நடந்துகொண்டிருக்கிற விஷயத்துக்கான நம்பிக்கையாகவும், நடந்துகொண்டிருக்கும் விஷயங்களை நடக்கப்போகிற விஷயங்களுக்கான நங்கூரமாகவும், நடக்கப்போகிற விஷயங்கள் எல்லாமே நல்லதாக அமையும் என்கிற  தெளிவுடனும் அணுகுங்கள். நல்லதாகவே நடக்கும்.