
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
“அண்ணா...” அலறல் சத்தத்தில் அப்பார்ட்மென்ட் மொத்தமும் அதிர்ந்தது. “ஏன்டா இப்படிக் கத்துற?’’ என்றபடி வெளியே வந்தான் நிர்மல். “ஸ்கூலுக்கு டைம் ஆகுதுண்ணா... நீங்க இன்னும் ரெடியாகலையா? அப்பா ஊர்ல இல்லாததுனால நீங்க என்னைய கொண்டு வந்து டிராப் பண்றேன்னு சொன்னீங் களே, மறந்துட்டீங்களா? இன்னிக்கு டிராமா வேற இருக்கு. நான் அதுல நடிக்கிறேன்” என்றான் போஸ்வா.

“இதோ... இரண்டே நிமிஷத்துல ரெடி’’ என்ற நிர்மல், பேன்ட்டை மாட்டிக் கிளம்பினான். “அண்ணா, இந்த நேரத்துல பயங்கர டிராஃபிக்கா இருக்கும். எப்படி ஸ்கூலுக்கு டயத்துக்குப் போறது?” என்றான் போஸ்வா.
“நீ வண்டில ஏறு... அண்ணனுக்கு எவ்வளவு குறுக்குவழி தெரியுமுன்னு நீ தெரிஞ்சுக்க” என்றான்.
“ஆமாண்ணா... நீங்க ஏன் ஹெல்மெட் போடல” என்றான் போஸ்வா. “தம்பி, அதெல்லாம் மனசுல தில் இல்லாதவங்க செய்ற காரியம்’’ என்றான் நிர்மல்.

“நீ டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டத்தான் போற பாரு” என்றான் போஸ்வா.
“அடப்போடா டிராஃபிக் போலீஸ்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கணுமுன்னு எனக்குத் தெரி யும்” என்று சொல்லிக்கொண்டே ஸ்டைலாக செல்போனில் பேசியபடி வண்டியை ஓட்டினான்.
‘‘அண்ணா... வண்டி ஓட்டிக்கிட்டே போன்ல பேசறது ரொம்பத் தப்புண்ணா” என்றான். “டேய் கம்முன்னு இருடா” என்று சொல்லிவிட்டு போனில் தொடர்ந்தான் நிர்மல்.
“அண்ணா... அங்கப் பாரு வண்டிக்கிட்ட போய் இடிக்கப் போற” என்று அலறினான் போஸ்வா.
“இவன் தொல்ல தாங்கலப்பா... சரி, சரி நான் அப்புறம் பேசுறேன்” என்று போனை கட் செய்தான். பிறகு போஸ்வாவிடம், “டேய்.. ஏன்டா அப்படிக் கத்துற... எனக்கு பிரேக் போடத் தெரியாதா?” என்றான்.
“அண்ணா... நீங்க எங்கேயாவது போய் இடிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்குண்ணா’’ என்றான்.
இதற்கிடையில் சிக்னல் விழுந்ததைக் கவனிக்காமல் ரோட்டைக் கிராஸ் செய்தான் நிர்மல். சிக்னலைக் கவனித்துவிட்ட போஸ்வா “அண்ணா சிக்னல்” எனக் கத்துவதற்கும் வண்டிக்கு மிக மிக அருகில் ஒரு பெரிய லாரி வந்து பிரேக் போட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.

அந்தநேரம் அங்கிருந்த டிராஃபிக் போலீஸ் ஒருவர் ஓடிவந்து நிர்மலிடம், “ஏன்டா, உனக்கு சிக்னல் போட்டிருக்கறது தெரியலையா” என்று திட்டிவிட்டு, சாலையோரத்துக்கு அழைத்துச் சென்றார். இதனைக் கண்ட போஸ்வா, “அண்ணா, இதுக்குத்தான் சொன்னேன். கவனமா வண்டியை ஓட்டுன்னு... நீ கேட்டியா” என்றான்.
“நீ சும்மான்னு இருடா. எனக்கு இதை எப்படி ஹாண்டில் பண்ற துன்னு தெரியும்” என்ற நிர்மல் டிராஃபிக் போலீஸின் கையில் நூறு ரூபாய் தாளைத் திணித்தான். அடுத்த நொடி அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது. அந்த போலீஸ்காரர் அவனிடம், “என்ன நக்கலா... ஏன்டா நீங்களே பணத்தைக் கொடுக்கவேண்டியது. அப்புறம் போலீஸ்காரன் லஞ்சம் வாங்குறான்னு வீடியோ எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ன்னு போட வேண்டியது. எல்லா போலீஸையும் ஒரேமாதிரி நினைச்சியாடா” என்றார்.
அருகில் இருந்த போஸ்வா மிரட்சியுடன், “சார், அண்ணாவை இந்த ஒருமுறை மன்னிச்சிடுங்க சார்” என்றான். அவர் நிர்மலிடம், “இந்தச் சின்ன பையனை நினைச்சி பாத்தியாடா... அவன் கேட்டதால இன்னைக்கி நீ தப்பிச்ச... இனி நீ இப்படிப் பண்ணினா தொலைச் சிருவேன்” என்றார்.
அவனுக்குத் தப்பித்தால் போதுமென சட்டென அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். சிறிது தூரம் சென்றபின் “உனக்கு ஒண்ணும் ஆகலையாடா” என்றான் போஸ்வாவிடம். அதற்கு அவனோ, “இனிமே நான் உன்கூட வரவே மாட்டேன்” என்றான்.
‘‘ஏய், சாரிடா... இனி அப்படி பண்ணல’’ என்று சொல்லிவிட்டு, பேச்சை மாற்றுவதற்காக “ஆமா, நான் ஒண்ணு கேக்கணுமுன்னு நினைச்சேன்... என்ன டிராமாடா நீ பண்ணப்போற...? கதையைச் சொல்லுக் கேப்போம்” என்றான் நிர்மல்.
“உன்மாதிரி ஆளுக்கான கதைதான். ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தானாம். அவன் ரொம்ப அழகு. ரொம்ப நல்லா வேற படிப்பான். எல்லாத்துலேயும் அவன்தான் நம்பர் ஒண்ணு. ஒருநாள் அவன் அவனோட அப்பாவோட வண்டில போறப்ப ஆக்ஸிடன்ட் ஆகி தலையில அடிபட்டு கண்தெரியாம போயிடுச்சு” என்று நிறுத்தினான்.
“ஏன் ஆக்ஸிடன்ட் ஆச்சு..? அவங்கப்பா என்னைய மாதிரி வண்டி ஓட்டினாரா..?” என்றான். “இல்ல, அவரு சரியான ரூட்லதான் வண்டியை ஓட்டிக்கிட்டிருந்தாரு. ஆனா, உன் மாதிரி ஒருத்தன் தவறான பாதையில வண்டிய ஓட்டி வந்தது மோதுனதால, அவருக்கு கால் போயிடுச்சு; அந்தப் பையனுக்கு கண்பார்வை போயிடுச்சு. இது ரியல் ஸ்டோரி. நான்தான் அந்தப் பையனா நடிக்கிறேன். சரி சரி, என்ன இறக்கிவிடு. ஸ்கூல் வந்துடுச்சு பாரு” என்றான் போஸ்வா.
போஸ்வா இறங்கிவிட்டான். நிர்மலின் மனதில் பாரம் ஏறியது. நிர்மல் தன்னையறியாமல் ஹெல்மெட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கினான். தான் என்னவிதமான தவறுகள் செய்கிறோம் என்பதை உணரத் தொடங்கினான்.
இங்கு நாம் பார்த்த நிர்மலைப் போல் நம்மில் பலரும் இருக்கிறோம். சிறு தவறுதானே என்கிற எண்ணம் நம்மில் பெரும்பாலோனருக்கு இருக்கிறது. சிறிதானாலும், பெரிதானாலும் தவறு தவறுதானே! இதை நாம் உணர்வது எப்போது?
நாம் அடுத்த தலைமுறைக்கு எதைச் சொல்லித் தருகிறோம். வண்டியில் அவர்களைக் கூட்டிச்செல்லும்போது அடுத்த வண்டிகளை முந்திச் செல்வது, சிக்னல்களை மீறுவது, ஹெல்மெட் அணிவது ஏதோ அந்த டிராஃபிக் போலீஸுக்காக மட்டும்தான் என்பதற்கான மாயையை உருவாக்குவது இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விழைவது. கட்டுப்பாடு என்பது யாரோ ஒருவர் வரையறுத்துத் தருவதல்ல. அது நமக்கு நாமே வரையறுத்துக்கொள்வது. உதாரணத்துக்கு, சிக்னல் விழுந்தால் நிற்க வேண்டுமா, போகவேண்டுமா என்பது நம் மனக் கட்டுப்பாட்டில் உள்ளது.
யோசித்துப் பாருங்கள், சிறிது சிறிதாக நாம் செய்யக்கூடிய பிழைகள் நம்மை மட்டும் பாதிப்பதில்லை; நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் , நம் அடுத்த தலைமுறையினரையும் சேர்த்துப் பாதிக்கிறது. இனியாவது நாம் சாலை விதிகளை மதித்து நடப்போம்.
(காலம் வெல்லும்)
படம்: ப.சரவணக்குமார்

திருப்பதி வழியில் செல்லும் சபரிமலை!
திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதி கோயிலை நிர்வகிப்பது போல, சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயி லையும் நிர்வகிக்க முடிவு செய்துள்ளது கேரள அரசு. இது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என அறிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ஐயப்பனைத் தரிசிக்க வந்த பக்தர்கள் ரூ.255 கோடியைக் காணிக்கையாகத் தந்திருக்கிறார்கள். இது, கடந்த ஆண்டைவிட ரூ.45 கோடி அதிகம். கோயில்கள் மூலம் மாநிலங் களுக்கிடையே நல்லுறவு பெருகட்டும்!