நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விருப்ப ஓய்வு பெறலாமா?

விருப்ப ஓய்வு பெறலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
விருப்ப ஓய்வு பெறலாமா?

ப.முகைதீன் சேக்தாவூது

ன்றைய நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள் பலர். உடல்நலம் காரணமாக இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அவர்களை விட்டுவிடலாம். மற்றபடி, ‘பெரிய அளவில் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்து, இப்போது இருப்பதைவிட இன்னும் நன்றாக இருக்கலாம்’ என நினைத்தால், அது மகா தவறு.  

விருப்ப ஓய்வு பெறலாமா?

அரசு வேலையில் இருந்த என் நண்பர் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்குமுன் விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டார். 58 வயது நிறைவு பெறும் வரை பணி செய்து அவர் ஓய்வு பெறவேண்டியது 2018-ம் ஆண்டில். ஆனால், பணத்தேவை காரணமாக 2015-ம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். விருப்ப ஓய்வு பெற அவர் முடிவு எடுக்கும்முன், அவர் போட்ட கணக்கு என்னவென்றால், ‘சம்பள கமிஷன் வரும் வரை காத்திருந்து ஓய்வு பெற்றாலும் ஒரு லட்சமோ அல்லது இரண்டு லட்சமோதான் கூடுதலாகக்  கிடைக்கும். அது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்போதைக்கு நிறைய பணம் கிடைக்கும். அதை வைத்து பணப்பிரச்னையைத் தீர்த்துவிடலாம்’’ என்று நினைத்துதான். 

ஆனால், சம்பள கமிஷன் பரிந்துரை நடைமுறைக்கு வந்த தேதியான 1.1.2016 வரை காத்திருந்து ஓய்வு பெற்றிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய ஓய்வூதியப் பலன்களின் கூட்டுத்தொகை, 2015-ல் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்த தொகையை விட 180 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்திருக்கும் என்பது, அவர் சற்றும் எதிர்பாராத ஒன்று. அவரது ஆழமான கவலைக்குக் காரணம் இதுதான்.

இவர் மட்டுமல்ல, விருப்ப ஓய்வு பெற்றுச் சென்ற பலரும், “அரசு வேலையிலிருந்து அவசரப் பட்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன்” என்று மனம் வருந்தி பேசத்தான் செய்கிறார்கள். இன்றைய தேதியில் விருப்ப ஓய்வு பெறலாமா, அப்படிப் பெற வேண்டுமெனில், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.  

விருப்ப ஓய்வு பெறலாமா?



ஐந்து வகை ஓய்வு


அரசுப் பணியினர் ஓய்வு பெற்றுச் செல்ல ஐந்து வகையான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது, ஓய்வூதிய விதித்தொகுப்பு.

1. வயது முதிர்வில் ஓய்வு (Superannuation)

அடிப்படைப் பணியாளர்கள் 60 வயதான பிறகும், மற்ற ஊழியர்கள் 58 வயது நிறைவுபெற்ற பின்பும் ஓய்வு பெறுவது இந்த வகை. இதுவே முழுமையானதும், முதன்மையானதுமான ஓய்வாகும். இந்த ஓய்வு பணப்பலன் எதுவும் சிறிதும் குறையாமல் தரக்கூடியது.

2. இயலாமை ஓய்வு (Invalid retirement)

விபத்து அல்லது நோய்த் தாக்குதல் காரணமாக, பணியில் தொடர முடியாதபடி உடல்திறன் குறைந்தவர்கள் மருத்துவக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஓய்வு பெற்றுக்கொள்வது.

3. ஈடுகட்டும் ஓய்வு (Compensatory Retirement) 

பணியில் உள்ள ஒருவரின் பணியிடம் (Post) ரத்து செய்யப்பட நேரிட்டால், அந்த ஊழியருக்கு அதே சம்பளத்தில் மாற்றுப்பணி தரப்படும். அந்த மாற்றுப்பணியில் தொடர விரும்பவில்லை எனில், ஓய்வு பெற்றுச் செல்லலாம்.

4. கட்டாய ஓய்வு (compulsory Retirement)

இது தண்டனை நிமித்தமான ஓய்வு. இவர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் குறைக்கப் படலாம்.

5. விருப்ப ஓய்வு

மேற்கண்ட நான்கு வகையான ஓய்வுமுறைகளும் அரசு, தம் ஊழியர்களை வழியனுப்ப வகை செய்பவை. ஐந்தாவது வகையான ‘விருப்ப ஓய்வு’தான் பணியில் உள்ள ஊழியர்கள் தாமே விரும்பிப் பெற்றுக்கொள்வது.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற் பட்டக் காரணிகளை முன்னிறுத்தி விருப்ப ஓய்வுக்கான முடிவு எடுக்கப்படக்கூடும். அவை, உடல்தளர்வு, குடும்பப் பின்னணி போன்றவற்றால் ஏற்பட்ட மன உலைச்சல், பணத் தேவை, மகள் - மகன் போன்றோருக்குத் துணையிருக்க வெளி நாட்டுக்குச் செல்லுதல், ஆன்மிக நாட்டம், அரசியல் பிரவேசம் போன்றவை.

விருப்ப ஓய்வுக்கான தகுதி

இருபது வருடம் தகுதியான (Qualifying Service) பணியை நிறைவு செய்திருந்தால், விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். விருப்ப ஓய்வு பெற உத்தேசித்துள்ள தேதிக்கு மூன்று மாதம் முன்பாக, ஓய்வுபெற அனுமதிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்பதே விதி.

இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுவோருக்கு, அவர்கள் நிறைவு செய்த (completed service) பணிக் காலத்துடன், அதிகபட்சம் ஐந்து வருடப்பணியும் சேர்க்கப்பட்டு ஓய்வூதியப் பலன்கள் கணக்கிடப்படும்.

என்றாலும், ‘கிடைப்பதை விடுவானேன்’ என்று பெற்றுக் கொள்ளத்தக்கதல்ல விருப்ப ஓய்வு. நன்கு யோசித்து, குடும்பத்தினரைக் கலந்தாலோசித்து, தொலைநோக்கில் நிதிநிலையை ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு இது. ஏனெனில், நாம் எடுத்த முடிவு தவறானது என்று ‘காலம்’ நிரூபித்து விடக்கூடாது.

அதேபோல், ஓய்வுக்கால பணத்தை வாங்கியபின், ‘இதற்குத்தான் ஆசைப்பட்டு மோசம் போனேனா?’ என்று வருத்தப்படுகிற மாதிரியும் இருக்கக் கூடாது. எனவே, பணக்கணக்குடன் காலக்கணக்கையும் கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பற்றிய முடிவை எடுக்க வேண்டும். முதலில் இதற்கான ஒரு பணக்கணக்கைப் பார்ப்போம்.

விருப்ப ஓய்வு தந்த பணப்பலன்

அரசு ஊழியர் ஒருவர் பிறந்த தேதி 1.4.1958 என்று வைத்துக்கொள்வோம். இவர், ரூ.2,000 துவக்க நிலை ஊதியத்துடன் 1.6.1988-ல் பணியில் சேர்ந்து, 30.6.2008-ல் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டதாக வைத்துக்கொள்வோம். 1.6.88 முதல் 30.6.2008 வரையான பணிக்காலத்தில் ஒரு தேர்வு நிலை, ஒரு பதவி உயர்வைப் பெற்றிருந்ததாக வைத்துக்கொண்டால், விருப்ப ஓய்வு பெற்ற 30.6.2008-ல் அவர் பெற்ற பணப்பலன் ரூ.10,13,210 -ஆக இருக்கும். அதாவது, பணிக்கொடை ரூ.3,62,325, விடுப்பு ஊதியம் ரூ.2,89,860, தொகுப்பு ஓய்வூதியம் ரூ.3,61,025. ஆக மொத்தம் ரூ.10,13,210.  இன்றைய தேதியில் அவர் மாத ஓய்வூதியமாக ரூ.25,512 பெறுவார். 

விருப்ப ஓய்வு பெறலாமா?

இவரே 58 வயது வரை பணியாற்றிவிட்டு, 2016-ல் ஓய்வு பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு எவ்வளவு கிடைக்கும்?

பணிக்கொடையாக ரூ.15,90,400, விடுப்பு ஊதியமாக ரூ.12,49,600, தொகுப்பு ஓய்வூதியமாக ரூ.19,01,858 என்று சேர்ந்து, இவரது ஓய்வுக்கால ரொக்கப்பலன் ரூ.47,41,858-ஆக இருக்கும். மாதாந்திர ஓய்வூதியமும் ரூ.40,707  என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும்.

ஓய்வூதிய பணப்பலனை சதவிகிதக் கணக்கில் கொள்வதெனில், விருப்ப ஓய்வால் கிடைத்தது 100% எனில்,  வயது முதிர்ந்து ஓய்வுபெற்றிருந்தால் கிடைத்திருக்கக்கூடியது 468 சதவிகிதமாக இருக்கும். அது மட்டுமல்ல, விருப்ப ஓய்வுக்கும் வயது முதிர்வு ஓய்வுக்கும் இடைப்பட்ட எட்டு வருடங்களில் இவரது ஓய்வூதியம் ரூ.8,483-ல் துவங்கி ரூ.25,512 என்ற நிலைப்பாட்டை அடைந்திருக்கும்.

இவர் பணியில் தொடர்ந்திருந்தால் மாத ஊதியமானது ரூ.28,986-ல் ஆரம்பித்து ரூ.1,13,600 என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும். இந்தப் பணக் கணக்கு, விருப்ப ஓய்வு பரிசீலனைக்குப் பயன்படக் கூடும்.

பணக் கணக்கு இப்படியிருக்க, காலக் கணக்கைப் போட்டால், என்ன நன்மை/தீமை உருவாகிறது என்று பார்ப்போம்.

காலக்கணக்கு

ஒருவரின் சராசரி ஆயுள்காலம்  காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறுபடக் கூடியது. இந்த வகையில் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் பல்வேறு மாநிலத்தவர். 1.1.2014 அன்று இருந்த நிலவரப்படி, ஒட்டுமொத்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்களில் 12 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் 80 - 100 வயதினர். அது மட்டுமல்ல, இவர்கள் பிறந்தபோது இந்திய சராசரி ஆயுள்காலம் 41 வயதுதான். நமது தற்போதைய சராசரி வயது 71 என மதிப்பிடப் படுகிறது. அப்படியானால், இனி ஓய்வுபெறுவோர்  90-வது வயதைத் தாண்டலாம்; சிலர் 100 வயதுகூட வாழலாம். ஆயுள்காலம் இப்படி நீண்டு கொண்டே செல்லும் கால ஓட்டத்தில், 20 வருடங்கள் மட்டுமே பணி செய்து, 50 வயதில் ஓய்வு பெற்றுக் கிடைத்த ஓய்வூதியப்பலன், 40 வருட கால ஓய்வு வாழ்க்கைக்குப் போதுமானதாக, பொருத்தமானதாக இருக்குமா? யோசித்துப் பார்க்க வேண்டிய கேள்வி இது.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, ஒவ்வொரு பத்தாண்டு முடிவிலும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மேம்படுத்திவரும் சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஓய்வு பெற்றோருக்கு ஓர் உன்னத சலுகையும் தரப்பட்டு வருகிறது. அதாவது, ஓர் ஊழியர் 30 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணி செய்து ஓய்வு பெற்றிருந்தால், அவரது ஓய்வூதிய மானது, சம்பள கமிஷன் ஒவ்வொரு முறையும் நிர்ணயம் செய்யும் சம்பள விகிதத்தின்படி, அந்த ஊழியர் கடைசியாக வகித்த பதவிக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் 50 சதவிகிதத்துக்கும் குறையாத தொகையைத் தனது ஓய்வூதியமாகப் பெறலாம் என்பதே அச்சலுகை. இதற்குத் தேவை 30 வருட பணிக்காலம்.

60 முதல் 79 வயது நிறைந்தவர்கள் ‘மூத்த குடி மக்கள்’ என அழைக்கப்படுகின்றனர். 80 வயதைத் தாண்டியவர்கள் முதுமூத்த குடியினர் எனக் குறிப்பிடப்படுகின்றனர். தற்போதைய நிலையில் மூத்த குடிமக்களில் பெரும்பாலோர் முதுமூத்தகுடி மக்களாக முன்னேறி வருகின்றனர்.

பிள்ளைகளுக்கு மட்டுமே மணம் செய்து பார்த்து மகிழ்ந்த காலம் போய், மகன் அல்லது மகள் வழி பேரக் குழந்தைகளின் திருமணத்தையும் நேரடியாகப் பார்க்கிற வாய்ப்புக் கிடைப்பதைக் கருத்தில்கொண்டு, இனியாவது தீர யோசித்து விருப்ப ஓய்வு பற்றிய முடிவை எடுக்கலாமே!