
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர்: தி ராடிக்கல் கேன்டர் (The Radical Candor)
ஆசிரியர்: கிம் ஸ்காட் (Kim Scott)
பதிப்பாளர்: St. Martin’s Press

தலைமை அதிகாரிகள் பலவிதம். சில அதிகாரிகளைக் கண்டாலே ஊழியர்கள் பயந்து நடுங்குவார்கள். சில அதிகாரிகளிடம் இணக்கமாகப் பழகுவார்கள். நீங்கள் எப்படிப்பட்ட அதிகாரியாக இருந்தால், ஊழியர்கள் உங்களை விரும்புவார்கள், நீங்கள் மிகச் சிறந்த பாஸாக விளங்க முடியும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் புத்தகம்தான் கிம் ஸ்காட் எழுதிய தி ராடிக்கல் கேன்டர் புத்தகம்.
நான் நல்ல பாஸா?
அவமானப்படுத்தினால் மட்டுமே சிறப்பாக வேலை வாங்க முடியும் என்பதே பெரும்பாலான கார்ப்பரேட் பாஸ்களின் சூத்திரமாக இருக்கிறது. இந்தப் புத்தக ஆசிரியையின் பாஸ் ஒருவர் அதேபோல் நடந்துகொள்ள, ஆசிரியை அந்த வேலையை விட்டுவிட்டுத் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினாராம். அந்த அலுவலகத்தில் எல்லா ஊழியர்களும் ஈடுபாடாக வேலை செய்யும்படி ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, அதற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் செய்துதந்தாராம். ஆனாலும், ஒரு நல்ல பாஸாக அவர் இருக்க தவறிவிட்டாராம். அதாவது, ஒருவருடைய வேலை சரியில்லாத போது, ‘தம்பி, உன் வேலை சரியில்லை’ என்று சொல்வதைத் தவிர்த்ததால், ஊழியர்கள் பொறுப்பில்லாமல் செயல்பட ஆரம்பித்தார்களாம். இந்த மாதிரியான சூழ்நிலையை நீண்ட நாள்களுக்கு நடைமுறையில் வைத்திருந்ததால், ஊழியர்களின் வேலைத்திறன் குறைந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆசிரியை கடைசியில் கோபப்பட வேண்டியதாயிற்று. அப்போது, பணியாளர் கள் செய்யும் வேலை சரியில்லை என்கிற நினைப்பு வராது. பணியாளர்களே சரியில்லை என்ற எண்ணமே வரும். ‘அதற்குப்பின் நான் எப்படி நல்ல பாஸாக இருக்க முடியும்?’ என்று ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை கிம் ஸ்காட்.
இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க, கண்டிப்பு, தண்டிப்பு என்று இறங்கலாம். ஆனாலும், அதிலும் சிக்கல்கள் உள்ளன. காரணம், கண்டிப்பான பாஸாக இருந்தால் கம்பெனி தேறும்; ஆனால், உறவு தேறாது. கண்டிப் பில்லாமல் கலகலவென்று இருக்கும் பாஸாக இருந்தால், கம்பெனி தேறாது, உறவுகள் தேறும். இந்த இரண்டு நிலைமை யையும் எப்படிச் சரியாக எடுத்துச் செல்வது? அதாவது, உறவும் கெடக்கூடாது; வேலையும் சூப்பராக நடக்கவேண்டும். இதற்கு என்ன செய்வது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இரண்டு பிரிவுகள்
இந்தப் பிரச்னைக்கான தீர்வினைச் சொல்லும் இந்தப் புத்தகம், இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பிரிவில், மனநிறைவுடன் செயல் படும் பாஸாக இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறது. இரண்டாவது பிரிவில், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதைச் சொல்கிறது.
பாஸ் என்றால் சரியா?
பாஸ் என்றால், மற்றவர்கள் எல்லாம் அவருக்கு நிகரானவர் இல்லை, கீழேதான் என்றுதானே அர்த்தம். மேனேஜர் என்றால் அது அதிகாரத்துவத்தைக் காட்டுகிறது. தலைவர் என்றால், அது தனி மனித ஆக்கிரமிப்பைக் குறிப்பிடுவ தாகக் காட்சியளிக்கிறது. இந்த மூன்றில் எது சரி என்று கேட்டால், எதைச் சொல்வது? தலைவர்கள் நிர்வாகம் செய்வதில்லை. மேனேஜர்களோ வழி நடத்துவ தில்லை. இந்தச் சூழலில் பாஸ் என்ற பதமே சிறந்ததாகத் திகழ்கிறது என்கிறார் ஆசிரியை.
பின்னூட்டத்தின் மகத்துவம்
பாஸ்களின் வேலை என்ன? தங்களுடைய குழுவினருக்கு அவர்களுடைய இலக்குகளை அடைவதற்கான வழிகாட்டியாக இருப்பதே. இதில் வழிகாட்டுதல் என்றால் என்ன, குழுவினருக்குச் சரியானதொரு பின்னூட்டத்தைக் கொடுத்து, ‘தம்பி, நீ சரியில்லை’, ‘அண்ணே, உங்களால் இன்னும் பெட்டராக வேலை செய்ய முடியும்’, ‘சார், நீங்க நம்ம குருப் பிலேயே கொஞ்சம் மந்தமா வேலை செய்வதுபோல் தெரியுது’ எனப் பின்னூட்டங்களைத் தரவேண்டிய பணியில் இருக் கின்றனர்.இந்தப் பின்னூட்டங்களே குழுவின் பாதையைச் சரியானதாக அமைத்து வெற்றி பெறச் செய்கிறது. ஆக, ஒரு நல்ல பாஸாக இருப்பதற்கு மிக மிக மெனக்கெட வேண்டும்.

இரண்டாவதாக, சிறப்பாகச் செயல்படும் குழுவினரை உருவாக்குவது பாஸின் தலையாயக் கடமை. வேலைக்குச் சேர்ப்பது, நீக்குவது, பாராட்டி ஊக்குவித்துப் பதவியை உயர்த்துவது எனப் பல்வேறு ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற மூன்று வேலைகளையும் பாஸ் செய்யவேண்டியுள்ளது. இதில் திறமை மிகுந்தவர் குழுவைவிட்டு நழுவுவதிலேயே கண்ணாக இருப்பார். திறமையில்லாதவர் குழுவைவிட்டு வெளியேறாமல் இருக்க எல்லா தில்லாலங்கடி வேலையையும் செய்வார். இந்த நிலையில், ஆள்களை எப்படிச் சமாளிப்பது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கும்.
மூன்றாவது, ரிசல்ட்கள் எனும் முடிவுகள். ரிசல்ட் என்றாலே பல மேனேஜர்களும் வெலவெலத்துத்தான் போகின்றனர். ‘நாங்க டீம் சைஸை இரட்டிப்பாக்கினோம். ரிசல்ட் டபுளாகியிருக்கணும் இல்லையா? அதுதான் இல்லை. பாதியாகிவிட்டது’ என்று சொல்லும் மேனேஜர்களைப் பார்க்கிறோம். சிலசமயம் சில மேனேஜர்கள் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பார்கள். சிலசமயம் அதிவேகமாக முடிவெடுத்து நம்மை சிக்க வைத்துவிடுவார்கள். இதற்குக் காரணம் கேட்டால், “நான் கிளம்புகிறேன்...” என்பார்கள். அவர்களைப் பிடித்து நிறுத்துவதே பெரும் பிரச்னையாகிவிடும். “கொஞ்சம் யோசித்துச் செயல்படுங்க” என்று சொல்வதற்கே தயங்க வேண்டியுள்ளது. பல விஷயங்களைச் சரிசெய்து நல்ல ரிசல்ட்டைக் கொண்டுவருவதற்கு என்னபாடு படவேண்டியுள்ளது என்கிறார்கள்.
உறவுகளை மேம்படுத்துவதே சரி
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு? பல அடுக்குகள் கொண்ட நிர்வாகத்தில், உறவுகளை மேம்படுத்துதல் என்பதையே சிறந்த நிர்வாகக் கோட்பாடாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதிகார விளையாட்டுகள் (பவர் டைனமிக்ஸ்), முரண்பாடுகள் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம், எது நம் அதிகார எல்லை என்பதை வரையறுக்கும் தகராறுகள், தோல்வியடைந்தால் மரியாதை குறைந்துவிடுமோ என்கிற பயம், வேலையை நேரத்தில் முடிக்கவேண்டுமே என்ற மன அழுத்தம் போன்ற பல்வேறு இடைஞ்சல்களைக் கொண்டிருக்கும் அலுவலகக் சூழலில், ‘உறவுகளை மேம்படுத்துதல்’ என்ற கலையின் மூலமே வெற்றிக்கான பாதையைப் போட முடியும்.
பணியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், நேரடியாக இந்தந்தக் காரணங்களினால் உங்களுடைய செயல்பாடுகள் சரியில்லை என்பதைச் சொல்வதன் மூலமுமே இதை நடைமுறைப்படுத்த முடியும் என்கிறார் ஸ்காட்.
இதற்கு உங்கள்மீது உங்கள் குழுவினர் அபரிமிதமான நம்பிக்கையைக் கொண்டிருக்கவேண்டும். அப்போது மட்டுமே உங்களுடைய குட்டும் ஷொட்டும் அவர்களால் பெருமையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதே போல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக உங்களிடம் பேசவும் செய்வார்கள். இந்தச் சூழலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாஸ் உருவாக்கும்பட்சத்தில், அந்தக் குழுவே இந்தக் குணாதிசயம் கொண்டதாக மாறி வேலைகள் சுலபத்தில் நகர ஆரம்பிக்கும். இதை வெற்றிகரமாகச் செய்துவிட்டால் ரிசல்ட்கள் தானாகவே வர ஆரம்பித்துவிடும் என்கிறார் ஆசிரியை.
தொழில் போட்டி நிறைந்த இந்தக் காலகட்டத்தில், பணியிடத்தில் உரசல்கள் தவிர்த்து, உயரத்தை அடைய நிர்வாகிகள் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது!
- நாணயம் டீம்

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கும் இந்தியா!
உலக அளவில் மிக வேகமாக வளரும் பொரு ளாதாரம் நம்முடையது என்கிற பெருமை நமக்கு இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதில் நம் நாடு மிகவும் பின்தங்கியிருக் கிறது. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, வளர்ந்து வரும் 74 நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கும் குறியீட்டில் நேபாளம் 22-வது இடத்தி லும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்திலும் உள்ளன.
ஆனால், நம் இந்தி யாவோ 62-வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் 1% மக்கள் 70% சொத்துகளை வைத்திருப்பது இதனால் தானா?