நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!

நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

வைர நகை அல்லது மோதிரத்தை வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், அதன் விலை அதிகம் என்பதால், நம்மில் பலரும் அதை வாங்க முயல்வதில்லை. இனிமேல் நீங்களும் வைரத்தை எளிதில் வாங்கலாம், விற்கலாம். அதற்கான வழிகளைச் செய்திருக்கிறது பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான ‘செபி’.

வைரங்களை வியாபாரம் செய்வதற்காக ஐ.சி.இ.எக்ஸ் (ICEX) என்கிற சந்தைக்கு ‘செபி’ அனுமதி கொடுத்துள்ளது. இந்தச் சந்தையானது, பங்குகளை வாங்கும் பி.எஸ்.இ., என்.எஸ்.இ., கமாடிட்டிகளை வாங்கும் எம்.சி.எக்ஸ் போன்றதுதான். கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வியாபாரம் செய்வது போல், ஐ.சி.இ.எக்ஸ் சந்தையில் வைரத்தை வியாபாரம் செய்யலாம்.

இந்தச் சந்தையில், வைரத்தை வியாபாரம் செய்வதற்குமுன் கவனிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் பற்றி  தெரிந்துகொள்வோம். 

நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!

   அளவீடு

தங்கத்தை நாம் கிராம் கணக்கில் கணக்கிடுகிறோம். வைரத்தை காரட் என்ற அளவில்  அளக்கிறார்கள். ஒரு மீட்டர் என்பது நூறு செ.மீ. என்கிற மாதிரி, ஒரு காரட் வைரம் என்பது 100 சென்ட் என அளவிடப்படுகிறது. ஒரு காரட் டைமன்ட் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று எடுத்துக்கொண்டால், ஒரு சென்ட் விலை ரூ.3,000 ஆகும். எனவே, சந்தையில் வியாபாரம் ஆகும் வைர யூனிட்கள் சென்ட் என்கிற அளவில் குறிப்பிடப்படுகிறது. ஒரு காரட் வைரம் என்பது 200 மில்லி கிராம் ஆகும்.

   விலை

இப்போது நம்முடைய கையில் ஒரு காரட் வைரம் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அதன் விலை சுமார் ரூ.3 லட்சம் எனில், அந்த காரட்டை இரண்டாக உடைத்தால், இரண்டு அரை காரட்கள் கிடைக்கும். இந்த இரண்டின் மதிப்பு தலா ரூ.1.50 லட்சமல்ல; தலா ரூ.75,000 மட்டுமே. அதாவது, இரண்டு வைரத்தின் மதிப்பும் ரூ.1,50 லட்சம் மட்டுமே. கெட்டி பகோடா விலை அதிகம், தூள் பகோடா விலை குறைவு என்கிற லாஜிக்கை இங்கே அப்ளை செய்து பார்த்தால், இந்த விலை வித்தியாசம் எளிதில் புரியும். வைரம், கல் பெரியதாக இருந்தால் விலை அதிகம். சிறிதாக, சிறிதாக விலை குறையும்.

   வைரம் ஒன்று, தரம் மூன்று

நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!


ஐ.சி.இ.எக்ஸ் சந்தையில் வர்த்தக மாகும் வைரம் 1 காரட், 0.5 காரட் மற்றும் 0.3 காரட் என மூன்று வகை எடையில் வர்த்தகமாகும். (இதில் 0.3 காரட் இன்னும் வியாபாரத்திற்கு வரவில்லை). இந்த மூன்றையும் நாம் முறையே முதல் தரம், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தர வைரங்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதனால்தான் இந்த மூன்று வகை வைரங்களின் ஒரு சென்ட் விலை என்பது குறைந்து கொண்டே போகிறது.

   லாட் மற்றும் யூனிட்டின் அளவு


ஐ.சி.இ.எக்ஸ் சந்தையில் நீங்கள் வைரம் வாங்க வேண்டுமெனில், குறைந்தது ஒரு லாட் அதாவது, ஒரு சென்ட் வாங்க வேண்டுமெனில், ரூ.3,000 தேவை. அரை சென்ட் வாங்க வேண்டுமெனில், ரூ.1,500 தேவை.

   மார்ஜின் தொகை

தற்போது கான்ட்ராக்ட் மதிப்பில் 5% மார்ஜின் தொகையாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு காரட் வைரத்தின் மதிப்பு ரூ.3,000 எனில், அதில் 5% என்பது ரூ.150 ஆகும். இந்தப் பணத்தைக் கட்டி நீங்கள் ஒரு காரட் வைரத்தை உரிமை கொண்டாடலாம்.

   கான்ட்ராக்ட் மாதம் மற்றும் எக்ஸ்பைரி நாள்


டைமன்ட் ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் மூன்று மாத கான்ட்ராக்ட்டுகளைக் கொண்டது. வியாபாரம் முடிவுக்கு வரும் நாள் என்பது ஒவ்வொரு மாதத்தின் 5-ம் தேதி ஆகும். இந்த நாளைத்தான் எக்ஸ்பைரி நாள் என்கிறோம்.

நடப்பில் உள்ள மூன்று கான்ட்ராக்ட்டுகள் 05 மார்ச் 18, 05 ஏப்ரல் 18 மற்றும் 04 மே 2018 ஆகும். பொதுவாக, 5-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால், முந்தைய நாள் எக்ஸ்பைரி தினமாக அறிவிக்கப்படும்.

   டென்டர் பீரியட் (டெலிவரி எடுப்பவர்களுக்கான காலம்)

நீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்!



எக்ஸ்பைரி முடிவில் கான்ட்ராக்ட் முடியும்போது வைரத்தை நீங்கள் வாங்க விரும்பினால், அதை விற்காமல் வைத்துக்கொள்ளலாம். வைரத்தை டெலிவரி எடுக்க விரும்பாதவர்கள் எக்ஸ்பைரி பீரியட் முடிவதற்கு முன்பே, கான்ட்ராக்ட்டை வாங்கியவர்கள் விற்றோ அல்லது விற்றவர்கள் வாங்கியோ வியாபாரத்தைச் சமன்செய்து வெளியே வந்துவிடலாம்.

இதைச் செய்யாவிட்டால், நீங்கள் வைரத்தை டெலிவரி எடுத்துத்தான் ஆகவேண்டும் அல்லது கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

   எப்படி டெலிவரி எடுப்பது அல்லது கொடுப்பது?

நாம் வைத்திருக்கும் கான்ட்ராக்ட் டெலிவரி எடுக்க வேண்டுமெனில், நாம் கான்ட்ராக்ட் மதிப்பு முழுவதையும் கொடுக்கவேண்டும். அதாவது, ஒரு காரட் வைரம் ரூ.3,000. ஏற்கெனவே ரூ.150 மார்ஜின் தந்ததுபோக ரூ.2,850 தந்து டெலிவரி எடுக்கலாம். விலை குறைந்தால், நஷ்ட படவேண்டியிருக்கும்.

உதாரணமாக, ஒரு காரட் வைரம் ரூ.3,000. மார்ஜின் ரூ.150. ஆனால், எக்ஸ்பைரி அன்று அதன் விலை ரூ.2,500 எனில், ரூ.350 -ஐ நீங்கள் கொடுக்க வேண்டும்.

   தரத்தை எப்படி நிர்ணயிப்பார்கள்?

ஐ.சி.இ.எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் வைரத்துக்கு ஐ.ஐ.டி.இ.ஆர் (IIDGR - Internation Institute Of Dimond Grading & Research) நிறுவனம் தரச் சான்றிதழ் தருகிறது.

   டிரேடிங் வாய்ப்பு

வைரத்தை வாங்கி விற்று அல்லது விற்று வாங்கி லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இதற்கு Indian Commodity Exchange (ICEX) -ல் உறுப்பினராக இருக்கும் புரோக்கரிடம் கணக்கைத் தொடங்க வேண்டும். ஆனால், விஷயம் தெரியாமல் இதைச் செய்தால் நஷ்டம் வரலாம்; ஜாக்கிரதை.

வைரத்தை ஒவ்வொரு சென்ட்-ஆக வாங்கி நீண்ட காலத்துக்குச் சேர்த்துவைத்திருக்க விரும்புபவர்கள் டீமேட் கணக்கில் சேமித்து வைக்கலாம்.

இனி தங்கம்போல், வைரத்தையும் சேர்த்து வைக்கலாமே!