மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரபலக் கல்லூரி ஒன்றில், மாணவர்களை உற்சாகப்படுத்திப் பேசுவதற்காகப் பிரபல பேச்சாளர் ஒருவர் வந்திருந்தார். ‘‘என்ன தலைப்பில சார் நீங்க பேசப்போறீங்க?’’ என மாணவர்கள் அந்தப் பேச்சாளரிடம் கேட்டார்கள்.

“தம்பி, ஒரு சின்னத் திருத்தம். இன்னைக்கு நான் மட்டும் பேசப் போறதில்ல. நீங்களும், நானும் சேர்ந்துதான் பேசப்போறோம்’’ என்றவர், அடுத்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

“சொல்லுங்க, நீங்கள் எதுக்  கெல்லாம் அவசரப்படுவீங்க?’’  என்று கேட்டார் பேச்சாளர்.

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!

“நாங்க காலேஜுக்கு அவசரமா தான் வந்தாகணும்” என்றான் ஒரு மாணவன். அடுத்து ஒரு மாணவன், “பஸ்ஸோ, டிரெய்னோ பிடிக்க அவசரமாதான் வந்தாகணும்” என்றான். இன்னொரு மாணவன், “நாளைக்கு எக்ஸாம்ன்னா இன்றைக்கு அவசரமா படிச்சா தான் சார் உண்டு” என்றான்.

“உங்க எல்லோருக்கும் ஒரே பதில்தான். நேரத்தைச் சரியா திட்டமிட்டு, பிளான் பண்ணி செஞ்சா, இந்த அவசரமான சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப் பில்லை. வெற்றியாளர்களைப் பாருங்கள்... அவசரம் இல்லாம நின்னு நிதானிச்சுதான் சாதனை படைச்சிருக்காங்க. நாளைக்கு பரீட்சைக்கு இன்னைக்கு ஏன் தம்பி படிக்கிறீங்க..? நமக்கு நல்லாத் தெரியும் ஜூன்ல கிளாஸ் ஸ்டார்ட் ஆச்சுனா நவம்பர்ல எக்ஸாமுன்னு. ஆனா, நாம அதுக்கு முன்னாடி வரைக்கும் ஜாலியா இருந்துட்டு, எக்ஸாமுக்கு முதல் நாள் உக்காந்து படிச்சா என்னவாகும்?” என்றார்.

“சார், நீங்கதான அவசரப்படக்கூடாதுன்னு சொன்னீங்க” என்று ஒரு மாணவன் கேட்டான் கொஞ்சம் நக்கலாக. “அவசரப்  படக்கூடாதுன்னுதான் சொன்னேன். எந்தவொரு வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லலையே தம்பி” என்றவுடன், அந்த மாணவன் அமைதியாகி உட்கார்ந்தார்ன்.

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!‘‘என் அடுத்த கேள்வி, சகிப்புத்தன்மை இன்றைக்கு யார்கிட்ட இருக்கு?’’ என்று கேட்டார். “சார், இன்றைக்கு எல்லாருமே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டுதான் வாழறோம்” என்றான். “சார், நம்ம ரோட்டுல வண்டிய ஓட்டிட்டு வர்றதுக்கே சகிப்புத்தன்மை இருந்தாதான் முடியும்” என்றான் இன்னொரு மாணவன். “கிளாஸ்ல பாடத்த கேக்கறதுக்கே சகிப்புத்தன்மை வேணும்’’ என்றான் கீழே குனிந்துகொண்டே ஒரு மாணவன்.

“தம்பிங்களா... இதுக்குப் பேர் சகிப்புத்தன்மை இல்லை. இயலாமை” என்றார். சகிப்புத்தன்மை எதுல இருக்கணுமோ, அதுல இருக்கறதில்ல. ரோடு சரியில்லனா அரசாங்கத்தைச் சரியான முறையில கேள்வி கேட்கணும். ஆசிரியர் நடத்துறது புரியலையா, புரியும்படிச் சொல்லித்தர சொல்லிக் கேக்கணும். ஆனா, நாம அதைப் பண்றோமா? எதுக்குப் போராடணுமோ அதிலெல்லாம் சகிப்புத்தன்மையோட இருக்கோம்.
உதாரணத்துக்கு, இந்தத் தம்பி சொன்னமாதிரி ரோடு குண்டும் குழியுமா இருந்தாலும், அதைப்பத்தி கவலை இல்லாம வண்டி ஓட்டி, வீட்டைச் சுத்திக் குப்பைகள் இருந்தாலும் அதைக் கண்டுக்காம நாம போறோம். இதெல்லாம் சகிப்புத்தன்மையா, கையாலாகத்தனமா?’’ என்று கேட்க, மாணவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள்.

அடுத்து, “நீங்க எதுக்கெல்லாம் கோபப்படுவீங்க... எங்கே கொஞ்சம் கோபப்படுங்க பார்க்கலாம்” என்று பேச்சாளர் சொல்லவும் எல்லோரும் சிரித்தனர். “என்ன தம்பிகளா கோபப்படச் சொன்னா சிரிக்கிறீங்க” என்றார். “அதெப்படி சார் டக்குன்னு கோபப்படுறது” என்றான் ஒரு மாணவன். “தம்பி நீங்களே சொல்லுங்க... கோபம் யாருக்கெல்லாம் வரும்” எனக் கேட்டார். “நாங்க எங்க சார் கோபப்படுறோம், எங்களைத்தான் கோபப்படுத்துறாங்க” என்றனர்.

‘‘சரி, கோபம் வராம இருக்க நீங்க ஏதாவது செஞ்சு பார்த்திருக் கீங்களா? என்று கேட்டார். “நிறைய முயற்சி பண்ணிட்டோம் சார்... ஆனா, முடியல” என்றனர் மாணவர்கள்.

“எந்தவொரு விஷயத்துக்காவும் கோபப்படுறத்துக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க... இந்தக் கோபம் சரியானதா, இதனால பயன் ஏதும் இருக்கான்னு. பயன் ஏதும் இல்லைன்னு உங்களுக்குப் புரியும்போது கோபம் காணாமல் போய்டும்” என்றவர், “நான் உங்களுக்கு சில டிப்ஸ் சொல்றேன். இதை மனசுல பதிய வெச்சுக்குங்க, நிச்சயம், உங்களால இந்த மூன்று விஷயங்களைக் கையாள முடியும்.

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!

*  அவசரம் என்னைக்குமே ஆபத்தானது மட்டுமல்ல, நாம் செய்ய வேண்டிய வேலைகளை அது அலங்கோலமாக்கிவிடும்.

*  நாம ஒரு வேலை செய்யப் போறோங்கறது முடிவான பின்னாடி, அதற்கான நேரத்தை முன்கூட்டியே பிளான் பண்ணணும். உதாரணத்துக்கு, நீங்க நாளை காலை 8 மணிக்கு காலேஜ்ல இருக்கணும்னா, அதுக்கு அந்த 8 மணியை மட்டும் மனசுல வெச்சிக்காம அதற்குமுன்பான வேலைகள், போகவேண்டிய இடத்திற்கும், இருக்கும் இடத்திற்குமான பயண நேரம் மற்றும் அந்த வழி டிராபிக்கா இருக்குமா, இருக்காதா  என எல்லாத் தையுமே கணக்குல எடுத்து, வீட்டில இருந்து கிளம்பும் நேரத்தைக் கணக்குப் பார்த்தா, அவசரமா ஓட வேண்டிய அவஸ்தை இருக்காது.

*  இதுமாதிரி ஒரு பிளானிங், பிரிப்பரேஷன் செய்யறதுக்கு டைம் எடுக்கும். ஆனா, ஒருமுறை இதற்காகச் செலவிடும் நேரம், அதன்பின் வருங்காலத்தில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

*  இது எப்ப நடைமுறை சாத்தியமாகும்னா, அதனை உடற்பயிற்சி செய்வதுபோல, தொடர்ந்து செயல்பயிற்சியாக செய்யும்போதுதான். முதலில் பொறுமையைக் கையாள்வது கடினமாக இருக்கும். ஆனால், தொடர் பயிற்சியின் மூலம் இது சாத்தியப்படும். எந்தவொரு செயலும் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால், அது மூளையில் பதிவாகி நம்மை யறியாமல் அடுத்த நாளிலிருந்து செய்யத் தொடங்கிவிடுவோம்.

* ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். நீங்கள் எந்தெந்த இடங்களில் அவசரப் படுகிறீர்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனைச் சரிசெய்ய நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த அட்டவணையில் பூர்த்தி செய்யுங்கள்.

* எங்கு நமக்குச் சகிப்புத்தன்மை வரவேண்டுமோ, அந்த இடத்தில் சகிப்புத்தன்மையுடன் இருத்தல் வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு நர்ஸ் ஒரு நோயாளியிடம் சகிப்புத்தன்மையுடன் இருந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில், அது அவர்கள் செய்யும் தொழிலுக்குச் செய்யும் அவமரியாதை.

* எங்கு சகிப்புத்தன்மையற்று இருக்க வேண்டுமோ, அங்கு சகிப்புத்தன்மை கொள்ளக்கூடாது. அநீதிகள் நடக்கும்போது சகித்துக்கொண்டு இருக்காமல் எதிர்க் குரல் கொடுங்கள்.

* கோபம் என்பது பிறர் செய்த தவறுக்கு நமக்கு நாம் கொடுக்கும்  தண்டனை என்பதை உணருங்கள். கோபத்தைத் தவிர்க்க முதலில் உங்களுக்குக் கோபம் ஏற்படும்போது பேசாதீர்கள். சிறிது நேரம்  கழித்து, உங்களைக் கோபத்திலிருந்து விடுவித்து, பிறகு தெளிவுடன் பேசுங்கள். அந்தப் பிரச்னையும் முற்றுப்பெறும்.

* உங்கள் கோபத்தின் எல்லைகளைத் தீர்மானியுங்கள். எதுவரை உங்களால் பொறுமையாக இருக்க முடியும் என்று. அதற்குப் பிறகான கோபத்திற்குத் தீர்வு காணுங்கள்.

(காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 12 - கட்டுப்படுத்த வேண்டிய மூன்று விஷயங்கள்!

பாரதிய யுவ சக்தி... போட்டிக்கான கடைசித் தேதி நீட்டிப்பு !

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் நடத்தும் பிசினஸ் ஐடியா போட்டிக்கான விண்ணப்பம் அனுப்பும் கடைசித் தேதி, வருகிற மார்ச் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு இதுவரை இரண்டா யிரத்துக்கும் அதிகமான வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 500 பேர் நேர்காணல் செய்யப்பட்டு, அவர்களுக்குரிய பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிகமானவர்கள் இந்தப் போட்டிக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என்பதால், இந்தப்  போட்டியில் கலந்துகொள்வதற்கான கடைசித் தேதி, வருகிற 10-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஐடியா வைத்திருக்கும் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.