
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : ஸ்கின் இன் தி கேம் (Skin in the Game)
ஆசிரியர் : நசிம் நிகோலஸ் தலேப் (Nassim Nicholas Taleb)
பதிப்பாளர் : Allen Lane
‘நி்னைத்தது ஒன்று, நடந்தது வேறு. நடிகனாக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், இன்று தனியார் கம்பெனியில் கணக்கு எழுதி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’ - இப்படி ஆளுக்கொரு கதை ஒவ்வொருவரின் மனதிலும் நிச்சயம் இருக்கும். நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையிலான மாறுபாடு ஏன் என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லும் நசிம் நிகோலஸ் தலேப் எழுதிய ‘ஸ்கின் இன் தி கேம்’ என்கிற புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.
ஏன் இந்தப் புத்தகம்?
எதற்காக இந்தப் புத்தகம் என்ற கேள்விக்கு ஆரம்பத்திலேயே பதிலளிக்கும் ஆசிரியர், இந்த உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே என்கிறார்.
இந்த உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முதலாவதாக, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, தியரிக்கும் பிராக்டிஸிற்கும் நடுவே எக்கச்சக்கமான வித்தியாசம் இருக்கிறது என்பதையே. அதனாலேயே, கல்வியாளர்கள் செய்யும் ஆராய்ச்சிகளை அப்படியே நம்பி, நீங்கள் ஒருபோதும் காரியத்தில் இறங்கிவிடக்கூடாது என்கிறார்.
இரண்டாவதாக, உங்களுக்கு ஒரு விஷயம் நடப்பதால் லாபம் இருக்கிறது என்றால், அது நடக்காது போனால் வரும் நஷ்டமும் உங்களையே வந்தடையவேண்டும். அதை விட்டுவிட்டு, அந்த விஷயம் நடந்தால், உங்களுக்கு லாபம் என மற்றவர்களுக்கு ஐடியாவை விற்றுவிட்டு, அந்த ஐடியாவை விற்றதால் வரும் பணத்தை (லாபம்) ஒருவர் அனுபவிப்பது தவறு. ஐடியா தோற்றால், நஷ்டம் ஐடியாவைப் பெற்றுச் சென்றவருக்கு.

ஐடியாவானது தோற்றாலும் ஜெயித்தாலும், ஐடியா கொடுத்தவருக்கு லாபம் என்றால், என்ன நியாயம் என்கிறார் ஆசிரியர். “ ஒரு ஐடியாவை ஒருவருக்கு நீங்கள் கொடுத்து, அதன்படி அவர் நடந்து அதில் நஷ்டம் வந்தால், அதற்கு நீங்களும் தார்மிகமாகப் பொறுப்புதான் என்பதை ஒப்புக்கொண்டீர்கள் என்றால், மேலே சொன்ன விஷயம் சட்டென உங்களுக்கு விளங்கும்.
மூன்றாவதாக, எந்தவொரு விஷயத்திலும் பிராக்டிக்கலாக எந்த அளவுக்குத் தகவல்கள் அதிக பட்சமாகப் பகிர்ந்துகொள்ளப் படுகின்றன/பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உதாரணத்துக்கு, ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்க, உபயோகித்த கார் விற்பனை செய்யும் நிலையத்திற்குச் செல்கிறோம். அங்கிருக்கும் பணியாளர், நாம் பார்க்கும் கார் குறித்து எந்த அளவுக்கான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் என்பதில் இருக்கிறது வியாபாரத்தின் சூட்சுமம். இல்லையா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, அடுத்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
நான்காவதாக, பகுத்தறிவு மற்றும் காலம் மாறும்போது ஒரு விஷயம் எப்படி மாறும் என்பதை யும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.
“உலகில் இருக்கும் அனைவருமே ஒரு தேர்ந்த பத்திரிகையாளரின் அளவிற்கோ, கைதேர்ந்த சைக்காலஜிஸ்ட்டின் அளவிற்கோ, எந்தவொரு விஷயத்திலும் பகுத்தறிந்து செயல்படும் திறன் என்பது கிடையவே கிடையாது. எனவே, எந்தவொரு விஷயத்திலும் நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவுமே இருக்கவே வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு, உலக உயிர்கள் அனைத்தையும் காப்போம் எனும் யுனிவர்சலிசமே மக்களை அழிப்பது எப்படி? ரோமானியர்கள் காலத்தில் அடிமைகள் இருந்தது சரி; ஆனால், இன்றைக்கும் அதை விட அதிக அடிமைகள் இருக்கிறார்களே... எப்படி? ஏன் வரலாற்று ஆசிரியர்கள் போர்கள் குறித்து அதிகமாகவும், அமைதி குறித்துக் குறைவாகவும், எழுதவும், பேசவும் செய்கின்றனர்?
பல சமயம், திறமையான அரசு அதிகாரிகளைவிட ஒன்றும் தெரியாத அரசியல்வாதி மக்கள் கண்ணுக்குத் தெய்வமாகத் தென்படுவது ஏன், புரஃபஷனல் மேனேஜர்கள் கம்பெனிகளை நிஜமாகவே நன்றாக நடத்த நினைக்கிறபோதிலும் ஏன் கம்பெனிகள் திவாலாகின்ற?”என என முக்கியமான பல கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.
கிரேக்க புராணத்தில் அண்டேயஸ் எனும் பூமித்தாயின் மகன், எல்லோரையும் சண்டைக்கு அழைத்து, அவர்களை வென்று, அவர்களுடைய மண்டை ஓட்டை சேகரித்து, அவருடைய தந்தைக்குக் கோயில் எழுப்ப நினைத்தார். யாராலும் வெல்ல முடியாத நபராகவும் அவர் திகழ்ந்துவந்தார். ஹெர்குலிஸ் அவரை வென்றார். எப்படித் தெரியுமா?
அண்டேயஸிற்கு கிடைக்கும் அசுரபலம் அவருடைய தாயான பூமி மாதாவிடமிருந்து என்பதைப் புரிந்துகொண்டு, ஹெர்குலிஸ் அவரைத் தாயிடமிருந்து பிரித்து (தரையில் கால் ஊன்றினாலே பலம் என்பதால் உயரத் தூக்கி) சண்டையிட்டு வென்றார் என்கிறது கதைகள். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
‘‘உங்கள் அறிவு என்பது நீங்கள் செயல்படும் செயல்களத்தில் (பூமி) இருந்து பிரிக்கப்படக்கூடியதல்ல என்பதைத்தான். பங்குச் சந்தையோ அல்லது உற்பத்திப் பொருள் சந்தையோ, செயல்படும் செயல்களத்தின் தொடர்பு மிகமிக முக்கியம். இதைவிட்டுவிட்டு, மக்களை விட்டு வெகுதூரத்தில் ஒளிந்துகொண்டு செயல்பட்டால், எதைச் சாதிக்க முடியும்?’’ என்று சவால்விடுகிறார் ஆசிரியர்.
‘‘உங்கள் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சுலபமாக கொலஸ்ட்ராலை அழிக்கும் கேன்சர் செல்களை உங்கள் உடலுக்குள் செலுத்தினால் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். ஆனால் கேன்சர்....? அதை ஒழிக்க முடியாது என்பதால், அந்த நபர் நிச்சயம் இறந்துபோவார். ஒரு வைத்தியர் கொலஸ்ட்ராலைக் குறைப்போம் என்று இந்த வேலையைச் செய்யவேமாட்டார். அவருடைய இலக்கு, ஒருவர் உயிரோடு திடமாக நீண்ட நாள் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, இதை இப்படிச் சரிசெய்துவிடலாம் என்று நீங்கள் கணக்குகளைப் போடும்போது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதையும் முழுமையாக ஆராய்ந்து அறியவேண்டியது அவசியம்’’ என்கிறார் ஆசிரியர்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், களத்தில் இல்லாதவர்கள் சொல்லும் ஆலோசனைகளைச் சற்றும் நாம் மனதில் கொள்ளத் தேவையில்லை என்பதைத்தான். இந்த மாதிரியான எந்தவொரு விஷயத்திலும், இடையில் வரும் ஆலோசகர்கள் எதிர் வினைகளை முற்றிலும் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருப்பார்கள். அதோடு மட்டுமல்ல, வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனற்றவர் களாகவும் இருப்பது மிகவும் கொடுமையானதொரு விஷயமாகும். இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவையாகும்.
முதல் காரணம், அவர்கள் கையில் இருக்கும் பிரச்னையின் சூழல் மாறவே மாறாது என்று நினைப்பது. இரண்டாவதாக, சூழல்களின் கோணங்கள் மிகவும் சாதாரண அளவில் இருப்பதாகக் கருதிக்கொள்வது. மூன்றாவதாக, அவர்கள் நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கத் தெரிந்தவர் களாகவும் எதிர்நடவடிக்கை குறித்துச் சிந்திக்கத் தெரியாதவர்களாகவும் இருப்பது.
சந்தையானாலும் சரி, தனிமனித வாழ்வானாலும் சரி , ஆலோசனை வழங்குபவருக்கு அந்த ஆலோசனைத் தவறாக இருந்தால், நஷ்டம் ஏதும் வர வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். அப்படியில்லாவிட்டால் அந்த ஆலோசனைகளைச் சுத்தமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், அந்த ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் ரிஸ்க்கை உங்களுக்கு மாற்றிவிடுகிறார்களே தவிர, வேறு எதையும் செய்வதில்லை என்கிறார் ஆசிரியர்.
ஆலோசனைக்கு அழைக்கும் நபர்கள் முடிவெடுக்கவேண்டிய களத்தில் அனுபவமிக்கவர்களாகவும், தற்போது அதில் ஈடுபட்டிருப் பவர்களாகவும், அவர்கள் சொல்லும் அறிவுரை தவறானால் அவர் களுக்கும் அதில் பாதிப்பு வரும்படியும் இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச்சொல்கிறது இந்தப் புத்தகம். முடிவெடுக்கும் கலையில் வல்லவராக வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் புத்தகத்தை அவசியம் ஒருமுறை படிக்கலாம்.
- நாணயம் டீம்

எலன் மஸ்க்கை முந்திய சன்ரன்!
வீட்டுக்குத் தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறும் தொழில்நுட்பத்தை அளிப் பதில் எலன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் இதுவரையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைப் பிடித்தி ருக்கிறது சன்ரன் நிறுவனம். இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் டெஸ்லா நிறுவனம் 73 மெகாவாட் அளவு வரை சூரிய மின் உற்பத்திக்கான வசதியை ஏற்படுத்தித் தந்தது. ஆனால், சன்ரன் நிறுவனமோ 89 மெகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தி வசதியை ஏற் படுத்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. நம்பர் ஒன் என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது தானே நிஜம்!