தொடர்கள்
Published:Updated:

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com-க்கு அனுப்புங்க!

``என் மகள் ப்ளஸ் -2 தேர்வெழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் நிச்சயம் நல்ல மார்க் எடுப்பாள். இன்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்பது அவளது விருப்பம். ஆனால், கல்விக்கடன் வாங்கித்தான் படிக்கவேண்டும். கல்விக்கடன் வாங்குவது எப்படி?’’

-விஜயா, கோவை

தெர்ல மிஸ்!

``கல்விக்கடன் பெற 12-ம் வகுப்புத் தேர்வில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் படிப்புகளில், ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்ப அரசாங்கத்தால் கல்விக் கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இதில் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம் போன்றவை அடங்கும். அதைப் பெறுவதற்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், சாதிச்சான்றிதழ், தந்தையின் வருமானச் சான்றிதழ், கவுன்சலிங்கில் தரப்பட்ட கல்லூரித் தேர்வுச் சான்று அல்லது கல்லூரியிலிருந்து தரப்படும் சேர்க்கைக்கான சான்றிதழ் (bonafide certificate) போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்”

- கலை. சாய் அருண்குமார்,

மேலாளர் விஜயா வங்கி, காரைக்குடி.

தெர்ல மிஸ்!

`` ‘இத்தனை லட்சம் பரிசு விழுந்திருக்கிறது. உங்கள் அக்கவுன்ட் நம்பர், மற்ற தகவல்களைக் கொடுங்கள் பணம் போடுகிறோம்’ என்று அவ்வப்போது எனக்கு மெசேஜ் வருகிறது. இதை நான் நம்புவது, நம்பாதது இருக்கட்டும். முதலில் என்னுடைய போன் நம்பர் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது?’’

-அக்னேஷ், மதுரை


``நமது செல்பேசி எண்கள் பொதுவெளியில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம். ஏதாவது சங்கங்களில் உறுப்பினராகச் சேரும்போதோ, கருத்தரங்கம், கண்காட்சி போன்றவற்றில் கலந்துகொள்ளும்போதோ பதிவு செய்வதற்காக நம்முடைய எண்ணைக் கொடுக்கிறோம். சில ஆப்களைப் பயன்படுத்தும்போது நமது செல்பேசியில் உள்ள எண்கள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதி கொடுக்கிறோம். இப்படி ஏதேனும் ஒரு வழியில் நம் எண்கள் இன்னொருவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏமாற்றுக் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் இலக்கு, 10 லட்சம் பேருக்கு அனுப்பினால் அதில் 10 பேர் ஏமாந்து சிக்கினாலே போதும் என்பதுதான். இவர்களது குறுஞ்செய்தியை நம்பி அவர்கள் கொடுத்த லிங்க்கை க்ளிக் செய்தால், நம்முடைய வங்கிக்கணக்கு குறித்த முழுத்தகவலையும் பெற்று, நம் பணத்தைக் களவாடிவிடுவார்கள். பிரபல நிறுவனங்களின் பெயரைப் போன்றே போலி நிறுவனங்களின் சார்பிலும் அறிவிப்புகள் வருவது உண்டு. இப்படி உறுதியற்ற அறிவிப்புகள் வந்தால், உடனே அந்த எண்ணை பிளாக் செய்ய வேண்டும் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். இந்த விழிப்பு உணர்வு இருந்தால் நமது எண் கிடைத்தாலும் ஆசைகாட்டிப் பணம் பறிக்க இயலாது.”

- வ.நாகப்பன்

பங்குச்சந்தை நிபுணர்

தெர்ல மிஸ்!

``நான் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 11 ஆண்டுகள் இத்துறையில் அனுபவமுள்ள நான் தற்போது வேலை பார்க்கும் அலுவலகத்தில் 6 வருடமாகப் பணிபுரிகிறேன்.  தற்போது என்னுடைய நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். நிறையபேரை ஒரே நேரத்தில் மொத்தமாக வேலையை விட்டு எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலையை விட்டு அனுப்புகிறார்கள். எனக்கு என் வேலை பறிபோய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும், அல்லது இந்தச் சூழலை நான் எப்படிச் சமாளிக்கலாம் என ஆலோசனை வேண்டும்?’’

- ரீட்டா, சென்னை


``பொதுவாக இந்த `திடீர்’ வேலை நீக்க சிக்கல் வருவது 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்களுக்குத்தான். அதாவது முப்பது வயதைத் தாண்டிய, திருமணம் ஆகி ஒன்று இரண்டு குழந்தைகளுள்ள தகவல் தொழில் நுட்பப் பணியாளருக்குத்தான். 10 ஆண்டு அனுபவம் உள்ளவர் வாங்கும் சம்பளத்தைவிட, அதே இடத்தில் 5 ஆண்டுக்கும் குறைவாக அனுபவம் இருப்பவர்களை, அல்லது அனுபவமே இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தினால் அதிக  லாபம் ஈட்டலாம் என்ற தப்புக் கணக்குதான் ஆட்குறைப்புக்குக் காரணமாக இருக்க முடியும். ஆனால் பயப்படாதிருங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கொட்டிக்கிடக்கிறது. நீங்களே தொழில் முனைவோராகக்கூட மாறலாம். இந்த நிறுவனத்திலேயே வேலையைத் தக்க வைக்க சட்டபூர்வ வழிகளும் உண்டு. இதற்கு உதவி செய்ய நிறைய தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளன”

தெர்ல மிஸ்!

- வினோத் ஏ.ஜெ.

பொதுச் செயலாளர், FITE.

(ஐ.டி. தொழிற்சங்கம்)

``பேலியோ டயட் இருந்தால் உடல் எடையை எளிதில் குறைத்துவிடலாம் என நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், பேலியோ டயட்டால் பாதிப்பு இருக்கிறது என்றும் ஆன்லைனில் படித்தேன். எது உண்மை?’’ 

- கணேஷ் சங்கர், விழுப்புரம்.


`` ‘குறைந்த கார்போஹைட்ரேட்’ உணவுமுறைதான் பேலியோ டயட் (Paleo Diet).  தானிய வகைகளை விளைவிக்காத, கால்நடைகளை வளர்த்துப் பழகாத காலத்தில் விலங்குகளை வேட்டையாடி, சுட்டுத் தின்றார்கள். காய்கறிகளைச் சமைக்காமல் அப்படியே  சாப்பிட்டார்கள். அதுதான் ‘க்ளீன் ஈட்டிங்’.  உண்மையான ‘பேலியோ டயட்’ அதுதான். ஆனால், இப்போது  சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.  இது  உண்மையான பேலியோ டயட் அல்ல, பேலியோ டயட்டைப் பொறுத்தவரையில் புரதமும், கொழுப்பும் நிறைந்த உணவுகள்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. உடலில் இவையிரண்டும் அதிகரித்தால் இதயத்தின் செயல்பாடுகள் குறைந்து இதய பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதய பாதிப்புள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பேலியோ டயட் இருக்கக் கூடாது. பேலியோ டயட்டை முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால் இதயநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. உடல் எடையைக் குறைக்க பேலியோ டயட்டைத் தவிர்த்து வேறு மாற்றுவழிகளைப் பின்பற்றுவது நல்லது. பழங்களில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. சிறுநீரக பாதிப்பு வீரியம் பெறுவதற்குக் காரணம் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதுதான். இதனால் சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் கண்டிப்பாக பேலியோ டயட் இருக்கக்கூடாது.  அதேசமயம், பேலியோ டயட்டால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் என்பதற்கும் ஆதாரம் இல்லை”

தெர்ல மிஸ்!

- டாக்டர் ஜே.கே.பெரியசாமி, மூத்த, இதய நோய் மருத்துவ ஆலோசகர்

தெர்ல மிஸ்!

- கோபாலகிருஷ்ணன், சிறுநீரக சிறப்பு மருத்துவர்