
பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா
Focus, Learn, Grow and Enjoy. Don’t change The Order.
- Dr. A.Velumani
‘‘இப்படி வேலை செஞ்சுட்டே இருக்கவா பாம்பே வந்தோம்? இதுலயே திருப்தியா இருந்துடறதா? கோயம்புத்தூர்ல இருந்து ஒருத்தன் இங்க வந்து இப்படி வேலை செஞ்சுட்டிருக்கேன்ங்கற விஷயம் எத்தனை பேருக்குத் தெரியப்போகுது? தெரியணும்னா நான் என்ன பண்ணணும்னு யோசிச்சேன். 14 வருஷமா செஞ்சிட்டிருந்த வேலையை விட்டு வெளியேறினேன்” என அறிமுகம் கொடுக்கும் வேலுமணி கைவிட்ட வேலை ஒன்றும் சாதாரணமானதன்று!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 13 வருஷ `சீனியர் சயின்டிஸ்ட்’ . க்ளாஸ் ஒன் அரசு அதிகாரி. அந்த வேலையை விட, அவர் எடுத்த அன்றைய முடிவுதான் 4,000 கோடி சந்தை மதிப்புள்ள தைரோகேர் நிறுவனத்தின் ஆணிவேர்.
வேலுமணி பிறந்தது கோவை அருகே இருக்கிற அப்பநாயக்கன்பட்டிபுதூர். போக்குவரத்து, தபால், மின்சாரம் எதுவுமே இல்லாத கிராமம். படிப்பதற்காக நான்கு கிலோமீட்டர்கள் நடந்து செல்வார் வேலுமணி. உடன் பிறந்தவர்கள் நால்வர். அவரின் அப்பா, மிகவும் செல்லமாக வளர்ந்தவர் என்பதால் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இருந்த விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார் அம்மா.

பருத்திக்காட்டில் ஒருநாள் முழுவதும் பருத்தி எடுத்தால் ஒரு ரூபாய் கூலி. நிலம் குத்தகைக்கு விட்டிருந்தாலும், வீட்டில் மாடும், ஏர், கலப்பையும் இருந்தது. விவசாயம் செய்யும் நிலங்களுக்குச் சென்று ஏர் ஓட்டினால், ஒருநாளைக்கு 10 ரூபாய் கூலி. பள்ளிக்கூடம் படிக்கும்போதே இந்த வேலையெல்லாம் செய்து அம்மாவிடம் பணம் கொடுப்பார் வேலுமணி. அதனால் கல்லூரி படிக்கும்போதும், வேலை செய்யத் தயங்கவில்லை. கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி. பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் சின்னச்சின்ன வேலைகள் பார்த்துக் கல்லூரிக் கட்டணம், விடுதிக்கட்டணம் எல்லாவற்றையும் சமாளித்தார்!
பி.எஸ்சி படித்து முடித்ததும் வேலை கேட்டு கோவையில் தெருக்களெங்கும் அலைகிறார். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ வெளியான காலகட்டம். திரைப்படத்தில் வருவது போலவே, இவருக்கும் சென்ற இடமெல்லாம் மறுப்பு. வ. உ. சி பூங்கா அருகே உள்ள நூலகத்துக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் செல்பவர் வேலுமணி. மும்பையிலிருந்து வேலை வாய்ப்புச் செய்திகள் தாங்கி வரும் இதழொன்றைப் பார்த்து, வாரம் 25 தபால் கார்டுகள் எழுதிப்போட்டுள்ளார். இப்படியே 25 வாரங்கள் கடந்தன. ஒருநாள் பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வருகிறது.
1982 ஆகஸ்ட் மாதம், ஐந்நூறு ரூபாயுடன் மும்பை செல்கிறார். மும்பை சென்றுவர, ஹோட்டலில் தங்க, சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் அந்த ஐந்நூறுதான். யோசித்த வேலுமணி, மூன்று நாள்கள் ரயில்வே பிளாட்பாரத்திலேயே தங்கி நேர்முகத்தேர்வில் பங்கு பெறுகிறார். முதல் கட்டத்தில் தேர்வானவர், மருத்துவச் சோதனையில் ரிஜெக்ட் ஆகிறார்.
ஆனால், வந்த சில மாதங்களில் பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஆஃபர் லெட்டர் வருகிறது. வேலை கிடைக்கிறது. திருமணம் ஆனது, மனைவி சுமதி வங்கி அதிகாரி.
``எந்த அளவுக்கு எளிமையாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கலாம்’’ என்பது வேலுமணியின் பாலிசி. 14 வருடம் அங்கே வேலை செய்துகொண்டிருந்தபோதும், சொந்தமாகக் கார் வாங்கவில்லை. வீடு வாங்கவில்லை. தினமும் ரயில்பயணம். வீட்டிலிருந்து 8 கி.மீ. தூரமுள்ள ரயில் நிலையம் சென்றுவர, அரசுப் பேருந்துப் பயணம். இப்படித்தான் இருந்திருக்கிறார் வேலுமணி.
வேலை செய்துகொண்டே எம்.எஸ்சி முடித்தார். பி.ஹெச்டி படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். பதவி உயர்வும் பெயரும் சேர்ந்துகொண்டே இருந்தன. இரண்டும் சேரச் சேர, நிறைய கேள்விகள்.
வேலை தேடி, கோவையில் அலைந்த நாள்களிலேயே ‘நானும் ஒரு பிஸினஸ் மேன் ஆவேன். முன்னனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன்’ என்று மனதளவில் எடுத்துக்கொண்ட சபதம் விஸ்வரூபமெடுக்கிறது. 14 வருட வேலையை விடத் துணிகிறார்.
வேலையை விட்டு, சொந்தத் தொழில் தொடங்கும் முடிவை வேலுமணி எடுக்கும்போது, குடும்பத்தில் மனைவி, மகன், மகள் என மூவர். கையிருப்பு 2 லட்சம். குடும்பத்தின் மாதச் செலவு 5,000 ரூபாய். ஒரு லட்சம் முதலீடு போட்டாலும், பாக்கி ஒரு லட்சத்தில் 20 மாதங்கள் குடும்பம் ஓடும். மனைவியும் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். மாதத் தவணை என்று எதுவுமே இல்லை. தைரியமாக வேலையை ராஜினாமா செய்கிறார்.
இன்றைக்கு நான்கு லட்சம் சதுர அடியில் இருக்கும் தைரோகேர் நிறுவனத்தின் ஆரம்பம், 1996-ல் சவுத் மும்பையின் `பைகல்லா’வில் 200 சதுர அடி தைரோகேர் - தைராய்டு டெஸ்ட்டிங் சென்டராக ஆரம்பித்தது. அதன் முதல் ஊழியர் வேலுமணி, அவரது அலுவலக உதவியாளராக. இரண்டாவது ஊழியர், இவரின் மனைவி சுமதி.
டெஸ்ட்டிங் சென்டர் ஆரம்பித்தபோதே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுச் சிந்திக்கிறார் வேலுமணி. பிற இடங்களில் பரிசோதனைக்கு 500 ரூபாய். இவரிடம் 100 ரூபாய் மட்டுமே. இரவு நேரங்களில் பெரும்பாலும் பரிசோதனை செய்ய வழி இருக்காது. இவரது பரிசோதனை நிலையம் 24 மணிநேரமும் செயல்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு பரிசோதனை நிலையத்தை பகல் முழுவதும் மனைவி கவனித்துக்கொள்ள, இரவில் இவர் பணிபுரிவார். `குறைவான கட்டணம்’ என்ற இவரது அணுகுமுறை, வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியது. படித்த கல்வி, சோதனை முடிவுகளில் துல்லியத்தைக் கொடுத்தது. உழைப்பு மேலும் மேலும் விரிவாகச் சிந்திக்கச் சொல்லியது.
இன்றைய தேதியில் நாடுமுழுவதும் 3,000 பரிசோதனை மையங்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பணியாட்கள். கோவையில் முன்னனுபவம் இல்லாததால், வேலை கிடைக்க அல்லாடிய வேலுமணியின் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 98 சதவிகிதம் பேர் முன்னனுபவமற்ற `ஃப்ரெஷர்ஸ்.’ வசதிவாய்ப்பற்றவர்கள், ஆங்கிலம் பேசத் தடுமாறுபவர்கள்… இவர்களுக்குத்தான் இங்கே பணியில் சேர முன்னுரிமை.
இப்போதும் இவரது பெயரில் சொந்தமாகக் கார், வீடு இல்லை. நாலு லட்சம் சதுர அடியில் அமைந்திருக்கிற மும்பையின் தைரோகேர் நிறுவனத்திற்குள்தான் வீடு. அதுவும் நிறுவனத்தின் சொத்துதான். மகன் ஆனந்தும், மகள் அமிர்தாவும் இன்றைக்கும் கால் டாக்ஸியைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். தன் வெற்றியில் எல்லாமுமாக இருந்த மனைவி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்ததைத் தவிர, தனிப்பட்ட வாழ்விலோ தொழிலிலோ வீழ்ச்சி என்ற ஒன்று இல்லை என்கிறார் வேலுமணி.
இன்றுவரை, தனிப்பட்டுத் தன் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ ஒரு ரூபாய்கூடக் கடன் இல்லை. எத்தனையோ வங்கிகள் கடன் தர அணுகியபோதும் மறுத்து, சம்பாதித்ததையே, திரும்பப் போட்டுத் தொழிலை வளர்த்திருக்கிறார் வேலுமணி.
இரண்டு வருடங்களுக்கு முன் பங்குச்சந்தையில் காலடி எடுத்துவைத்தது தைரோகேர். இன்றைக்கு இதன் சந்தை மதிப்பு 4,000 கோடி ரூபாய்.
``வியாபாரம்னா என்னென்னே தெரியாது. தைராய்டுல பிஹெச். டி பண்ணின சயின்டிஸ்ட் நான். `உனக்கு மேனேஜ்மென்ட் ஸ்கில் இல்லை, ஆரம்பிக்காதே’ன்னாங்க. எங்க அம்மா, அஞ்சு பத்து ரூபாய வெச்சுகிட்டு, அஞ்சு பேரை வளர்த்தவங்க. அதப் பார்த்து வளர்ந்ததைவிட ஹார்வர்டு என்ன சொல்லிக் குடுத்துடும்?” என்கிறார் வேலுமணி.
தொழில் செய்ய வேண்டும் என்றால், ஏதாவது ஒன்றில் கவனத்தைச் செலுத்துங்கள் என்கிறார் வேலுமணி. 70 கிலோ உடலில், 15 கிராம் இருக்கும் தைராய்டில் இவர் கவனம் இருந்தது. எதைச் செய்யவேண்டும் என்பதைவிட, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் அடங்கியிருக்கிறது வேலுமணியின் வெற்றி.

வேலுமணியின் பிசினஸ்மொழிகள்
* வெற்றிகரமான வாழ்க்கை = X2 - X1.
X2 : உன் இன்றைய நிலை.
X1 : உன் பழைய நிலை.
X1 குறைவாக இருந்தால், நீ தோற்க மாட்டாய். ஏழைகளுக்கு X1 எப்போதுமே ஜீரோதான். ஆகவே ஏழை என்றும் தோற்பதில்லை.
* எளிமையாக இருப்பவன் வாழ்வில் எப்போதுமே கஷ்டப்படமாட்டான். எனவே, உங்கள் வாரிசுகளுக்கு எளிமையைச் சொல்லிக்கொடுங்கள்.
* எல்லோருமே ‘நீ செய்வது சரியாகத்தான் இருக்கிறது’ என்று சொன்னால், நீ செய்துகொண்டிருப்பதைப் பலமுறை சரிபார்த்துக்கொள்.