நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!

வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : எக்ஸ்போனென்ஷியல் லிவிங் (Exponential Living)

ஆசிரியர் : ஷெரி ரிலே (Sheri Riley)

பதிப்பகம் : Penguin US

ன்றைய சூழலில் நம்மில் பெரும்பாலானோர்  புரஃபஷனல் வாழ்க்கை, குடும்ப உறுப்பினர் களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிற முழுமையான வாழ்க்கை என்ற இரண்டுக்கும் நடுவே நாம் கொஞ்சம் திண்டாடித்தான் போகிறோம். புரஃபஷனல் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே முழு வாழ்க்கை யையும் நன்கு அனுபவிக்கும் கலையில் வெற்றி காண்பது எப்படி..? ஷெரி ரிலே என்பவர் எழுதிய ‘எக்ஸ்போனென்ஷியல் லிவ்விங்’ என்கிற புத்தகம், அதற்கான ஒன்பது முக்கியமான வழிகளைச் சொல்கிறது.

   அழுத்தும் பட்டியல்

இன்றைக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே எதிர்காலத்தில் செய்துமுடித்தாக வேண்டிய வேலைகளின் பட்டியலைப்  போட்டாக வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம். புதுப்புது இலக்குகளை  உருவாக்கிக்கொண்டு, அதற்காக உழைக்கவேண்டும் என்று நினைக்கும்போது நாம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்து, நம்மை நாமே ஏமாற்றிக்  கொள்கிறோம். ஆனால், அந்த சந்தோஷம் 10 அல்லது 15  நிமிடங் களுக்கு மேல் நிலைப்பதில்லை. ஏன் தெரியுமா?

‘இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது’ என்கிற எண்ணத்தின்மூலம் அந்த சந்தோஷத்திற்கு அணை போட்டு, அடுத்த இலக்கை நோக்கி நாம் உடனடியாகப் பயணிக்க ஆரம் பித்துவிடுவதால்தான். ‘இதை முடித்து... அதை முடித்து... எல்லாம் முடித்து... பின்னர் சந்தோஷப் படலாம்’ என்று நினைத்து இயந்திரத்தனமாக அடுத்த வேலையைச் செய்யத் தொடங்கி விடுகிறோம்.

‘‘இப்படி ஒவ்வொரு நாளும், மாதமும், வருடமும் இலக்கு நோக்கிய நம் பயணம் தொடரவே செய்கிறது. என்னதான் வேகமாக ஓடியோடி உழைத்தாலும், நம் இலக்குப் பட்டியல்தான் நீள்கிறதே ஒழிய, இலக்குகள் நிறைவேறின மாதிரி இல்லை’’ என்கிறார் புத்தக ஆசிரியை. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!

   வேலை - வாழ்க்கைச் சமநிலை

‘‘நம்முடைய பிரச்னையே நீண்டுகொண்டே போகும் இலக்குப் பட்டியல்தான் என்பதை நாம் உணர மறுப்பதுதான். வாழ்க்கை என்பது சாதிக்கத்தான் என்ற நினைப்பில் நாம் வாழ ஆரம்பித்தால், நம் எதிர்காலம் கற்பனையால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. நம்முடைய தனிப்பட்ட வாழ்வின் திருப்தி மற்றும் மன அமைதி என்பது நம் இலக்குகளை எல்லாம் எட்டியபின்னால் வரும் என்று நாமாக நினைத்துக்கொள்கிறோம். அதுவரை நம்முடைய குடும்பம், நண்பர்கள், நாம் வாழும் சமூகம் என நாம் நிஜமாகவே அக்கறை காண்பிக்கவேண்டிய அத்தனை விஷயங்களும் காத்திருக்கும் என நினைக்கிறோம்.

நீங்கள் எங்களுக்காக நேரமே ஒதுக்குவதில்லை என்று புலம்பும் குடும்பத்தினரை, உங்களுடைய நல்லதுக்காகத்தானே இவ்வளவு பாடுபடுகிறேன் எனச் சாந்தப் படுத்த முயல்கிறோம். என்னுடைய வருமானம் இந்த அளவு வரத் தொடங்கியவுடன், நான் குடும்பத் திற்கென்று தனியாக நேரம் ஒதுக்குவேன் என்றெல்லாம் சொல்லி பிதற்றுகிறோம். 

நம் ஆள்மனதோ, ‘நான் இந்த நொடியை வாழ வேண்டும்; நான் என் குழந்தைகளுடன் விளையாட  நேரம் ஒதுக்கவேண்டும்; நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்’  என்று சொல்கிறது. ஆனால், நம் மூளையோ, இலக்குப் பட்டியலை நினைவில் கொண்டுவருகிறது. இதில் மூளையே வெற்றி பெறுகிறது. இதனால் குடும்பம், நட்பு மற்றும் உறவுகளினிடையே பிரச்னை, மோசமாகும் உடல்நிலை போன்ற விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!


‘இதற்குத்தான் வேலை-வாழ்க்கைச் சமநிலை (work-life balance) என்ற ஒன்று இருக்கிறதே! அதை நடைமுறைப்படுத்தினால் சரியாகிவிடுமே’ என்பீர்கள்.  ஆனால், ஏற்கெனவே இருக்கும் இலக்குகள் போதாதென்று இனி இந்த இலக்குக்காகவும் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.  

வேலை, குடும்பம் என இரண்டு இலக்குப் பட்டியலை வைத்துக் கொண்டால் என்னவாகும்? மன அழுத்தம்தான் வரும். இதற்கு என்னதான் வழி என்கிறீர்களா?

வேலையையும், வாழ்க்கை யையும் எப்படிச் சமநிலைப் படுத்துவது என்பதையெல்லாம் விட்டுவிட்டு, அமைதியை நம் வாழ்வில் பின்பற்றுவது எப்படி  என்று சிந்திக்கவேண்டும் என்கிறார் ஆசிரியை. அதற்கான ஒன்பது வழிகளையும் சொல்கிறார்.

   ஒன்பது வழிகள்

1. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப் படாமல், நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த முறையை நீங்கள் கடைப்பிடித்தால் நிச்சயமாக, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும். எது உங்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்கிறது, எது உங்களுக்கு முக்கியம், உங்களுடைய அடுத்த இரண்டு முக்கியச் செயல்களாக இருக்கவேண்டும் என்பது குறித்துத் தெளிவான சிந்தனையை நீங்கள் கொண்டிருக்கவேண்டும்.

2. வெறுமனே உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்காது. நட்பு மற்றும் உறவுகளைப் பேணிக் காத்தல்தான் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

3. ‘இதைச் சாதித்தால் நிம்மதியாக இருக்கலாம். அந்த இலக்கை அடைந்தால் நிம்மதியாக இருக்கலாம்...’ என்றெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு நொடியும் அமைதியாக, நிம்மதியாக இருப்போம் என்ற திட்டத்துடனும், எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடனும்  செயல்படவேண்டும். அதேபோல், எப்போதும் மனதளவில் ஒரு வேலைக்காரராகவும், அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ண முடையவராகவும் இருக்க வேண்டும்.

4. ஒரு விஷயத்தில் வெறுமனே உழைப்பை மட்டும் போடாமல், கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்ப செயல்படவேண்டும்.

5. வேலை, வேலை என்று நினைத்துச் செய்யும்போது, பொறுப்புகள்   நம்மை அழுத்துகின்றன. வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த நினைத்து நாம் செயல்படும்போது, நமக்கு உற்சாகம் கிடைக்கிறது. இந்த இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் நனகு புரிந்துகொள்ள வேண்டும்.

6. மகிழ்ச்சி என்பது நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு விஷயம். அதேநேரம், பெருமகிழ்ச்சி என்பது வாழ்க்கைமுறையாக மாற்றப்படக்கூடிய ஒன்று. கொண்டாட்டம், நன்றியறிதல் மற்றும் மன்னித்தல் என்ற மூன்றையும் வாழ்க்கைமுறையாக நாம் ஆக்கிக்கொண்டுவிட்டால், அதுவே பெருமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

7. முயற்சியே வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறோம். ஆனால், முயற்சியுடன்கூடிய தளராத நம்பிக்கையே வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, தளராத நம்பிக்கையை வளர்க்கக் கற்றுக்கொள்வது நம் அனைவருக்கும் அவசியமான ஒன்று.

8. நம் செயல்கள்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையுடன் கூடிய துணிச்சலே நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. எனவே, நம்பிக்கையுடன் கூடிய துணிச்சலை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

9. கடைசியாக, நாம் இந்த வேகமான ஓட்டத்திலும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் நம்முடைய மனதில் இருந்தால் மட்டுமே அதனை நம்மால் பெறமுடியும்.

ஆசிரியை சுட்டிக்காட்டும் இந்த ஒன்பது கோட்பாடுகளையும் பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் இணைத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தை, வேலை பிரஷரில் மாட்டித் தவிக்கும் அனைவரும்  ஒருமுறை அவசியம் படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் டீம்

வேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்!

சீனாவுக்குப் போகிறார் நிர்மலா சீதாராமன்!

த்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதத் தில் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற் கொள்ள இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோ கர் பரிக்கர், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டில் டோக்லாமில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தபிறகு, இந்திய - சீன நல்லுறவில் பகை என்பது நீறுபூத்த நெருப்பா கவே  தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் பயணம் இந்தப் பகையைக் கொஞ்சம் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். பகைமை முடிவுக்கு வந்து நட்புக்கரம் நீண்டால் நல்லதுதானே!