
எதிர்மறை கருத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்திவிட்டீர்களென்றால் நம்பிக்கை வளர்ப்பு என்பது சாத்தியமில்லாமலே போய்விடும்...!
புத்தகத்தின் பெயர் : ஹெள டு வொர்க் வித் அண்ட் லீட் பீப்பிள் நாட் லைக் யூ (How to Work With and Lead People Not Like You)
ஆசிரியை: கெல்லி மெக்டொனால்ட்
பதிப்பகம் : John Wiley & Sons
இந்தக் காலத்தில் அலுவலகம் என்று வந்துவிட்டாலே வேறுபட்ட மனிதர்களுடன் வேலை பார்த்து, அவர்களை நன்கு வேலை பார்க்க வைக்கவேண்டிய கட்டாயம் உயர்பதவியில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வந்துவிடுகிறது. இந்த நிலையில், உங்கள் குணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட மனிதர்களுடன் சேர்ந்து வேலை பார்ப்பது அல்லது அவர்களைத் தலைமையேற்று நடத்திச் செல்வது எப்படி என்கிற கேள்வி மிக முக்கியமானது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமான ‘ஹெள டு வொர்க் வித் அண்டு லீட் பீப்பிள் நாட் லைக் யூ’ என்னும் அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார் கெல்லி மெக்டொனால்ட்.
‘‘இந்தக் காலத்தில் லே-ஆப், ஆட்குறைப்பு, சரியான அளவில் பணியாளர்களைப் பணிக்கு வைத்துக்கொள்ளுதல், சம்பளக் குறைப்பு எனப் பல்வேறு சிக்கலுக்கு இடையே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்று சொல்லும் புத்தக ஆசிரியை அது குறித்து விளக்குகிறார்.

‘‘நம்முடன் வேலை பார்க்கும் சக பணியாளர்கள் பல மாதிரியான நபர்களாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பல வகைப் பட்டவர்களாக, நம்மைவிட பல விதங்களில் மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்றவர்களைத் தலைமையேற்று நடத்த வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது. ‘இவர்களோடு எல்லாம் சேர்ந்து பணி செய்யவேண்டியிருக்கிறதே’ என்று நீங்கள் தப்பித்தவறிச் சொல்லிவிட்டீர்களென்றால், உடனே உங்களைப் பழம் பஞ்சாங்கம் என்று ஒதுக்கிவிடுவார்கள். ‘வாவ், சூப்பர், ரொம்ப ஜாலியாய் இருக்கிறது’ என்று மட்டுமே சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இது இன்னும் கடுமையாக இருக்கிறது. பல்வேறு சூழ்நிலைகளில் இருந்துவந்தவர்கள், பல்வேறு மாநிலங்களி லிருந்தும், நாடுகளிலிருந்தும் வந்தவர்கள், பல வகையான திறமைகளைக் கொண்டவர்கள், பல்வேறு தலைமுறைகள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாசாரங்களைச் சார்ந்தவர்கள் எனப் பல மாதிரியான நபர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அங்கே இருக்கின்றன.
இப்படிப் பல வேறுபாடுகளைக் கொண்ட மனிதர்கள் மனதில் வேலை குறித்த எண்ணமும் பலவகையாக இருக்கவே செய்கிறது. எண்ணம், செயல், ஆடை, அணுகுமுறை, மொழி, வயது எனப் பலவும் நமக்கு அந்நியமாக இருக்கும் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது நம் அனைவருக்கும் கொஞ்சம் அசெளகர்யமாகவே இருக்கும். இந்த அசெளகர்யம் குறித்து வாய் திறக்கவே முடியாது. திறந்தால் அலுவலகத்தின் பன்முகத் தன்மைக்கு நாம் எதிரானவராகி விடுவோம்.
மேலே பட்டியலிட்ட பல்வேறு வித்தியாசமான விஷயங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். குழந்தைகள் பெற்ற நபர், குழந்தைகள் பெறாத நபர் (மகப்பேறுக்கான பாக்கியம் இல்லை என்றில்லை – தீர்க்கமாகச் சிந்தித்து எடுத்த முடிவினாலும்கூட) என்ற இரண்டு வகையான மனிதர்கள் ஒரே அலுவலகத்தில் பணியாற்று கிறார்கள் என்றால், குழந்தை பெற்றவர்கள் எடுக்கும் முடிவு களுக்கும், குழந்தை பெறாத நபர்கள் எடுக்கும் முடிவுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். ஒரு குழந்தைக்குத் தகப்பனாக ஒருவருடைய சிந்தனையானது அனைத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியே அமையும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் சிந்தனையோ, தங்கள் எதிர்காலம் குறித்ததாகவே இருக்கும் இல்லையா?’’ என்று நச்சென்று கேட்கிறார் ஆசிரியை.
‘‘இதுபோன்ற பலவிஷயங்களாலேயே பல அசெளகர்யங்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவெனில், நமக்கு மட்டுமே இந்த அசெளகர்யங்கள் இருப்பதில்லை. நம்முடன் பணிபுரியும் பலருக்கும் இந்த அசெளகர்யங்கள் இருக்கவே செய்யும்.

இன்றைய சூழலில் இது இயல்பு மாறிய நிலை இல்லை. இயல்பான நிலை என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதேபோல், பன்முகத்தன்மை கொண்ட பணியாளர்கள் புழங்கும் இடத்தில் நீங்கள் திக்குமுக்காடிப்போனால் நீங்கள் ஒன்றும் மோசமான மனிதர் இல்லை’’ என்று நமக்கு ஆறுதல் சொல்கிறார் ஆசிரியை.
‘‘நம்மைவிட பல்வேறு அம்சங்களில் மாறுபட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே கடினமான ஒன்றாக இருந்தபோதிலும், அப்படிப் பணியாற்றும்போது புதிய கோணங்கள் மற்றும் புதுமையான எண்ணங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்’’ என்று ஆசிரியை சொல்வதை நம்மால் மறுக்க முடியாது.
பன்முகத்தன்மை கொண்ட நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி என்று விளக்கமாகச் சொல்லும் ஆசிரியை முதலில், தொடக்கநிலைச் சிக்கல்களை அகற்றுவது எப்படி என்று சொல்கிறார்.
‘‘முதலில், அவர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும். நம்மைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது சுலபத்தில் நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கு கிறோம். கொஞ்சம் உரசல்கள் ஏற்பட்டாலுமே அது சண்டையாக மாறிவிடாமல் கருத்துகளைச் சொல்லவும், ஒருமித்தக் கருத்தை எட்டவும் சுலபத்தில் முடிகிறது.
ஆனால், நம்மைவிட முற்றிலும் மாறுபட்ட நபர்களுடன் இணைந்து பணியாற்றும்போது கருத்து வேறுபாடுகள் சண்டையாக மாறிவிடக்கூடுமோ என்ற கவலை நமக்குள் வந்துவிடுகிறது. இதற்குத் தான் இந்த நம்பிக்கை வளர்க்கும் முயற்சி உதவுகிறது.
புரியாத மனிதர்களைப் புரிந்துகொள்ள, அவர்களுடன் உரையாடினால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள். நம்மை விட மாறுபட்டவர்களை நாம் சந்திக்கும்போது, நாம் அவர் களுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசங்களையே பார்க்க முயற்சி செய்கிறோம். முதலில் வித்தியாசங்களை நாம் பட்டிய லிடுவதால், இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார் என்ற எண்ணத்தைச் சுலபத்தில் நாம் உருவாக்கிக் கொள்கிறோம். மாறாக, அவருக்கும் நமக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தால், இந்த எண்ணமும் மாற வாய்ப்புள்ளது’’ என பாசிட்டிவ் பார்வையின் அவசியத்தை நம்முன் வைக்கும் ஆசிரியை, ‘‘ரொம்பவும் மாறுபாடுகள் இருந்தாலுமே எங்காவது அவரும் நாமும் இணைந்து வேலை பார்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தைக் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தேடிக் கண்டுபிடியுங்கள்” என்கிறார். இதை எப்படிச் செய்வது என்பதற்கான வழிகளையும் ஆசிரியையே சொல்கிறார்.
‘‘தடைகளை உடைப்பதற்குமுன் (Ice Break) அவரிடம் இருக்கும் நல்ல குணம் எதையாவது பாராட்டிப் பேசுங்கள். பேசுகிறேன் என்று சொல்லி தொணதொண என்று கேள்வி கேட்டு நச்சரிக்காதீர்கள். அதேபோல், கம்பெனி குறித்து நீங்கள் அவரிடம் சொல்லும் கமென்ட்டுகள் வதந்திகளைப்போல் இருக்குமாறு செய்து விடாதீர்கள். இதை எப்படிச் செய்வது, இதில் உங்கள் எண்ணம் என்ன என்று சில உதவிகோரும் வண்ணம் அமையும் கேள்விகளைக் கேட்பது நல்லது. முதல் உரையாடலிலேயே புதிய நபரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மாறாக, ஏதாவது எதிர்மறை கருத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்திவிட்டீர்களென்றால் நம்பிக்கை வளர்ப்பு என்பது சாத்தியமில்லாமல் போய்விடும்’’ என்கிறார் ஆசிரியை.
அதேபோல், இதுபோன்ற புதிய மனிதர்களிடத்தில் இருக்கும் வித்தியாசங்களை அலுவலகத்தில் இருக்கும் ஏனையவர்களிடம் எப்படிப் பேசுகிறோம் என்பதும் முக்கியமான ஒரு விஷயமாகிறது. ‘‘புதியவர்களின் எண்ணம் குறித்த விஷயங்களை நீங்கள் ஏனையவர்களிடம் பகிர வேண்டியதில்லை. அவர்களோடு நீங்கள் இணைந்து பணிபுரிவது மட்டுமே போதுமானது’’ என்கிறார் ஆசிரியை.
‘‘புதியவர்கள், கலாசாரம் பற்றிப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவர்களுடைய எண்ணவோட்டத்தை வெளிப்படையாகச் சொல்லச் சொல்லி ஊக்குவியுங்கள். அவர்கள் உங்களுடன் இணைந்து செயல்படுவதில் பிரச்னைகள் வந்தால், அந்தப் பிரச்னைகள் குறித்து மட்டும் விலாவாரியாக அவர்களுடன் உரையாடுங்கள். அப்படி உரையாடும் போது பிரச்னைகளைப் பேசாமல் அதற்கான தீர்வுகள் குறித்துப் பேசிப் பழகுங்கள். பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது, எனக்கு உங்களுடைய உதவி தேவை என்னும் நான்கு வார்த்தை மந்திரத்துடன் ஆரம்பியுங்கள்’’ என்கிறார் ஆசிரியை.
ஆங்கிலம் தெரியாத நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி, ஒரு தலைவனாக இதுபோன்ற பன்முக நபர்களை நம்பவைப்பது எப்படி, அவர்களுக்கு ஒரு தலைவனாகப் படிப்பினைகளைச் சொல்லித் தருவது எப்படி, பிரச்னைகள் வரும்போது ஒரு தலைவனாக அந்தச் சூழலைக் கையாள்வது எப்படி என்பதையெல்லாம் விளக்கமாகப் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லியுள்ள ஆசிரியை இறுதியாக, பெரிய அளவில் சாதிக்கவேண்டும் என்றால், உங்களைப் போன்றே குணாதிசயம் கொண்டவர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தவிர்த்துவிடுங்கள் என்று முடிக்கிறார்.
வித்தியாசமான தலைவனாக விளங்க நினைக்கும் உயரதிகாரிகள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
- நாணயம் விகடன் டீம்

டேட்டா சர்ச்சை: சரிந்தது ஃபேஸ்புக் பங்கு விலை!
ஃபேஸ்புக் பயனாளர் களின் தனிப்பட்ட விவரங் களைப் பகிர்ந்துகொண்டது தொடர்பாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை 185 டாலரிலிருந்து 152 டாலராகக் குறைந்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, பத்தே நாள்களில் சுமார் 100 பில்லியன் டாலர் வரை குறைந்தது. அதாவது, 537.50 பில்லி யன் டாலரிலிருந்து 463.93 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதனால் மார்க் சக்கர்பர்க்கின் தனிப்பட்ட சொத்துமதிப்பு சுமார் நான்கு பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்தி ருக்கிறது. தொழில் என்று வந்துவிட்டாலே ஏற்ற, இறக்கம் என்பது சகஜம் தானே!