நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கற்றுக் கொள்ளும் கலை!

கற்றுக் கொள்ளும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
கற்றுக் கொள்ளும் கலை!

நாணயம் புக் செல்ஃப்

கற்றுக் கொள்ளும் கலை!

புத்தகத்தின் பெயர் : தி லைஃப் டைம் லேர்னர்ஸ் கைடு டு ரீடிங் அண்டு லேர்னிங் (The Lifetime Learner’s Guide to Reading and Learning)

ஆசிரியர் :
கேரி ஹோவர்

பதிப்பகம் : Assiduity Publishing House

ம்மில் பலரும் தினமும் படிக்கத்தான் செய்கிறோம். செய்தித்தாள், பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலம் நல்ல விஷயங்கள் என மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். இப்படிப் படிப்பதில் எத்தனை விஷயங்கள் நமக்குள் ஊறி, ரத்தத்துடன் கலக்கிறது, எத்தனை விஷயங்கள் தூங்கி எழுந்தபின் மறந்துபோகிறது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாம் படிக்கிற அளவுக்குப் பல்வேறு விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோமா என்பது கேள்விக்குறிதான்.

பல புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு மனதில் நிலைநிறுத்திக்கொள்வது எப்படி என்பதை  கேரி ஹோவர் எழுதிய ‘தி லைஃப் டைம் லேர்னர்ஸ் கைடு டு ரீடிங் அண்டு லேர்னிங்’ என்னும் புத்தகம் நமக்குத் தெளிவாகச் சொல்லித் தருகிறது.
கிட்டத்தட்ட 57,000 புத்தகங்களைத் தன்னுடைய நூலகத்தில் வைத்திருக்கும் கேரி ஹோவர், அந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் 80% இணையத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை என ஆணித்தரமாகச் சொல்கிறார். எப்படி நல்ல புத்தகங்களைக் கண்டறிவது, வாங்குவது மற்றும் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எளிதில் ஜீரணித்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கான பதில்களுடன்,   கட்டாயம் படிக்கவேண்டிய 160 புத்தகங்களின் பட்டியல் மற்றும் எப்படி நீங்கள் தொடந்து கிரியேட்டிவிட்டியுடன் இருப்பது என்பது போன்ற முக்கிய விஷயங்களையும் இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

கற்றுக் கொள்ளும் கலை!


கற்பனைக் கதையல்லாத புத்தகங்களை 15 முதல் 30 நிமிடங்களில் படித்துப் புரிந்துகொள்வது எப்படி என்பதே இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமாக இருக்கிறது. “என் நூலகங்களிலுள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் 15 முதல் 20 நிமிடங்களில் படித்துவிடுவேன். ஆனால், சின்ன வயதில் நான் மெதுவாகப் படிப்பதால், என்னை வேகமாகப் படிப்பதற்கான பயிற்சி வகுப்புகளுக்கெல்லாம் அனுப்பியுள்ளார்கள்’’  என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் ஆசிரியர்.

“ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இது நல்லதொரு வழிகாட்டும் புத்தகமாக இருக்கும் என்று நினைத்து, தேவைப்படும்போதெல்லாம் படித்துப் பார்க்கும்படி வைத்துக்கொள்வேன்.   இரண்டாவதாக, அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் 75% வரை ஆன்லைனில் இருக்காது என்பதையும் உறுதியாக நினைத்துக் கொள்வேன். அதன்பின்னால் புத்தகத்தின் உள்ளடக்கத்தை நன்றாகப் படித்து மனதில் நிறுத்திக்கொள்வேன். நன்றாக எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தின் பொருளடக்கமே, மிகவும் நேர்த்தியாகப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லப் பட்டிருக்கும். சில புத்தகங்களில் உள்ளடக்கத்திற்குப்பின்னால் இந்தப் புத்தகம் எந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது (concept) என்று சொல்லியிருக்கும்.அது, இன்னமும் தனிச் சிறப்பான அமைப்பாகும். புத்தகத்தை ஜீரணித்துக்கொள்ள இதுவே மிகவும் சிறந்த தூண்டுகோலாக இருக்கும்” என்கிறார் ஆசிரியர்.

“பிசினஸ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள், 10 -  20 பக்கங்களுக்குள் அடக்கமாக எழுதப்படவேண்டிய விஷயங்களையே விலாவாரியாக இழுத்துப் பிடித்து 200 - 300 பக்கங்கள் வரையில் எழுதப்படுகின்றன. அந்தப் புத்தகத்தில்  ஓர் அருமையான அடிப்படை ஐடியா இருக்கும். ஆனால், அதையே மீண்டும் மீண்டும் விளக்கமாகப் பல்வேறு உதாரணங் களுடன் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு உதாரணங்களையும் படிக்கிற அளவுக்கு எனக்குக் காலஅவகாசம் இல்லை. எனவே, எந்தப் புத்தகத்தை வாங்கும்முன்பும் உள்ளடக்கம் மற்றும் அட்டவணைத் தொடர்பான பக்கங்களை நிதானமாகப் படித்து விடுவது நல்லது.

புத்தகத்தை வாங்கியவுடன் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் (புத்தகம் குறித்த) முக்கியத் தகவல்களைப் படித்துவிட வேண்டும். பின் அட்டையில் நிச்சயமாக ஆசிரியர் பற்றிய குறிப்பு இருக்கும்.  அவர் யார், எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார், என்ன சொல்லவருகிறார் என்பதைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதன்பின் அவரின் நிலைப்பாடு எப்படி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் புத்தகத்தை யாரெல்லாம்  பாராட்டியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்  ஒருவர், பொருளாதாரம் சார்ந்த புத்தகத்தைப் பாராட்டி எழுதி யிருந்தாலோ அல்லது தொழில்முனைவு குறித்து ரிச்சர்ட் பிரான்சன் ஒரு புத்தகத்தைப் பாராட்டியிருந்தாலோ அந்தப் புத்தகங்களை மிகவும் சீரியஸாக கருத்தில்கொள்ள வேண்டும். அவர்கள் என்ன சொல்லிப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதையும் படித்துக்கொள்ள வேண்டும்.

புத்தகத்தின் உள்ளே பல படங்கள் போடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. புத்தக ஆசிரியரின் விளக்கத்தைப் படிக்கும்முன்னரே அந்தப் படங்கள் எதனைக் குறிக்கின்றன என்பதை, முதலில் நாமே உற்றுப் பார்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், இந்தப்  படங்களில் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல முக்கியக் கருத்துகள் இழையோடியிருக்கும்.

கற்றுக் கொள்ளும் கலை!

புத்தகத்தில் படிக்கும் கருத்துகளை மனதில் நிறுத்திக்கொள்ள நாம் ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். நமக்குப் பரிச்சயமான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள், ஏற்கெனவே படித்த தலைப்புகள் எனப் பல்வேறு விஷயங்களுடன் தற்போது படிப்பதை இணைத்துப் பார்த்தாலே புதிய விஷயங்கள் மனதில் நிலையாக நிற்க ஆரம்பிக்கும். நமது மூளை என்ற அறிவுக்கான மரத்தில் புதிய விஷயங்களை ஆங்காங்கே ஒட்டி வைத்தால் அது நிற்காது. காற்றில் பறந்துவிடும். எனவே, அவற்றை மரத்தோடு நன்கு இறுக்கக் கட்டுகிற மாதிரி இணைத்துப் பார்க்க வேண்டும்.

டிஜிட்டல்மயமான இந்தக் காலத்தில், புத்திசாலித்தனம் என்பது எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பதல்ல. எங்கே எல்லா வற்றையும் தேடிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெரிந்துவைத்திருப்பது தான். இந்த ஐடியாவுடன் நீங்கள் புத்தகங்களை அணுகினால், எல்லாப் புத்தகங்களுமே நமக்கு ரெஃபரன்ஸ் புத்தகங்களாகிவிடும்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘கல்வி என்றால், பள்ளியில் பயில்வது என்கிற எண்ணத்து டனேயே நாம் வாழ்கிறோம். அது மிகவும் தவறு. அதனாலேயே மிகப் பெரிய வெற்றியாளர்கள், தங்களின் பள்ளி, கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய வர்களாகவே இருக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, சராசரியான வேகத்தில் செல்லும் ஒருவிதமான அறிவு வளர்ச்சிக்கு உதவும் கல்வியாகும். மிகப் பெரிய வெற்றியை விரும்பும் நபர்களுக்கு அது செல்லும் வேகம் பிடிக்காமல் போய் விடுகிறது. எனவே, தங்கள் மனோவேகத்தில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காக மட்டுமே கல்விச் சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியம் தேவையோ, அதேபோல் மூளைக்கும் அதைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள மூளைப்பயிற்சி தேவை. கண்ணுக்கும், மூளைக்கும் நாம் யாருமே உபயோகப்படுத்தும் ரீதி யிலான பயிற்சிகளை அளிப்பதே யில்லை. கட்டுமஸ்தான உடல் எப்படி அழகோ, அதேபோல் கட்டுமஸ்தான மூளையும் அழகே. அது என்ன மூளைப்பயிற்சி என்கிறீர்களா?

குழந்தைகளைப் புது இடத்துக்கு அழைத்துச் சென்றால், அந்த இடத்தைக் கிரகித்து, அந்த இடத்துடன் இணையும்முன் எத்தனை கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர். புதியவற்றைக் கண்டு ஆச்சர்யமடைந்து கேள்விகள் கேட்பதனாலேயே அவர்களுடைய மூளை வலுவாக இருக்கிறது. ஆனால், அதுவே பெரியவர்களாகிவிட்டால், ஆச்சர்யங்கள் பலருக்குக் குறைந்து விடுகின்றன. சிலருக்கு ஆச்சர்யங் களே இல்லாமல் போய்விடுகின்றன. அப்படியெல்லாம் இல்லையே என்கிறீர்களா?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பவுண்ட் எடையைக் கூடக் காற்றில் பறக்கவிடத் தெரியாமல் இருந்த மனித இனம், இன்றைக்கு ஏழு லட்சம் பவுண்டு எடையை (போயிங் 747 விமானத் தின் எடை இது) எளிதாகப் பறக்கவிடக் கற்றுக் கொண்டுள்ளது. விமானத்தில் பயணித்திருக்கும் உங்களில் பலரும் இதை நினைத்து  என்றைக்காவது ஆச்சர்யப் பட்டிருக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் ஆசிரியர். 

‘‘எல்லோரும் தேடும் இடத்தில் நாமும் தேடினால் புதியதாக ஒன்றும் கிடைக்காது. எனவே, மாற்றுப்பார்வை மிகமிக அவசியம். புத்தகங்கள் படிக்கவும், புதிய விஷங்களைத் தெரிந்துகொள்ளவும் நீங்கள் பெரிய கல்லூரிப் படிப் பெல்லாம் படித்திருக்கவேண்டிய தில்லை. எத்தனை விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கின்றன,  எவ்வளவு நாளுக்கு ஒருமுறை நீங்கள் இதுவரை தெரியாத சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்துகொள்கிறீர்கள்? புதிதாகத் தெரிந்துகொண்டவையெல்லாம் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவற்றின் நீட்சியா அல்லது முற்றிலும் மாறுபட்டதா என்கிற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருங்கள்.

தினம்தினம் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவும், கற்றுக் கொண்டதை நமக்கு ஏற்கெனவே இருக்கும் அறிவுடன் இணைத்துக் கொள்ளவும் என்னென்ன வழிகளைப் பின்பற்றவேண்டும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை முன்னேறத் துடிக்கும் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்