
சொக்கலிங்கம் பழனியப்பன்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நமக்கு அவசியமா என்பதைப் பார்ப்பதற்கு முன், மியூச்சுவல் ஃபண்ட்

என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது, ஒரு முதலீட்டு வாகனம். நமது வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லலாம் அல்லது ஓட்டுநரை அமர்த்தி அதில் நாம் பயணம் செய்யலாம். ஓட்டுநர் போலத்தான் மியூச்சுவல் ஃபண்டுகளும்.
பங்குச்சந்தையிலோ, கடன் சந்தையிலோ, அல்லது தங்கத்திலோ நாம் நேரடியாக முதலீடு செய்யலாம். ஆனால், முதலீடுகள் பற்றிய போதிய அறிதல் நமக்கு இருக்க வேண்டும். தெளிவும் தகவல்களும் தெரிந்தாலும், அவை பற்றி அப்டேட் செய்துகொள்ள நமக்கு நேரம் வேண்டும். இவை இரண்டும் இல்லாதபட்சத்தில், முதலீடு செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வதுதான் சிறந்தது. முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எங்கு முதலீடு செய்கின்றன?

முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, அவ்வாறு பெறப்படும் பணம் பங்குச்சந்தையிலோ, கடன் சந்தையிலோ, தங்கத்திலோ அல்லது ரியல் எஸ்டேட் சொத்துகளிலோ முதலீடு செய்யப்படுகிறது.
வங்கி முதலீடுகள், அஞ்சலகச் சேமிப்புகள் என நாமே நேரடியாகச் செய்து கொள்ளக்கூடிய முதலீடுகள் இருக்கும்போது, நான் ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
வங்கி முதலீடுகளைப்போலவே வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ளன. அந்தத் திட்டங்களில் வங்கி முதலீடுகளை ஒப்பிடும்போது பல சாதகங்கள் இருந்தாலும், அவற்றில் சிறு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க வில்லை. பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் (பங்கு சார்ந்த) திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தப் பங்கு சார்ந்த திட்டங்களில்தான் சிறு முதலீட்டாளர்கள் நீண்டகாலத்தில் நல்ல லாபத்தைப் பார்த்துள்ளனர், பார்த்துக்கொண்டிருக்கின்றனர், இனிவரும் காலங்களிலும் பார்க்க முடியும்.
உதாரணத்துக்கு, ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் சுமார் 22 வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட ஒரு பங்கு சார்ந்த ஃபண்டில் 1 லட்சம் ரூபாய் ஒருமுறை முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், அதன் இன்றைய மதிப்பு ரூபாய் 1 கோடியே 14 லட்சத்துக்குமேல். அதாவது உங்களின் முதலீடு 114 மடங்காகியுள்ளது. இதை உங்களின் கடந்தகால தங்கம், ரியல் எஸ்டேட் அல்லது வங்கி டெபாசிட் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வேறு எந்த முதலீட்டிலும் சிறு முதலீட்டாளர்கள் இதுபோன்ற அபரிமிதமான லாபத்தைப் பார்க்க முடியாது. இந்த ஒரு காரணமே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குப் போதுமானது.
முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள் பலர் நாடுவது, இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) எனச் சொல்லப்படும் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானவரியைச் சேமித்துத் தரும் டேக்ஸ் சேவர் திட்டங்களில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் முதலீடு செய்யத் தயார். எங்கு, யார் மூலம், எவ்வாறு முதலீடு செய்வது? இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள்போல மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த விநியோகஸ்தர்கள் பலர் தனிநபர்களாக உள்ளனர். சந்தையில் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் பலவும் உள்ளன. அதுபோல வங்கிகளும் மியூச்சுவல் ஃபண்டு விநியோகஸ்தர்களாகச் செயல்படுகின்றன. முதலீட்டாளர்கள் நேரடியாகவும் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு வங்கிக்கணக்கு அவசியம். பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவையும் தேவைப்படும். நீங்கள் முதன்முறை முதலீட்டாளர் என்றால், விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்வது நல்லது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் ஓய்வுகாலத்துக்கு, குழந்தைகளின் கல்விக்கு, செல்வத்தைப் பெருக்குவதற்கு எனப் பல திட்டங்கள் உள்ளன. உங்களின் தேவை மற்றும் காத்திருப்புக் காலத்தைப் பொறுத்து முதலீட்டுத் திட்டங்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும். தனிநபர்கள் தவிர, பிரைவேட் லிமிடெட் மற்றும் பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள், ஹெச்.யூ.எஃப், டிரஸ்டுகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
ரெக்கரிங் டெப்பாசிட்டைப்போல மாதாமாதம் நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக மாதம் 100 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்யலாம். இதற்குப் பெயர் எஸ்.ஐ.பி (SIP Systematic Investment Plan). இவ்வாறு இந்தியா முழுவதிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் 6,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை தற்போது முதலீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட்டைப்போல, தங்கத்தைப்போல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் ஏற்ற இறக்கம் உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்வது அவசியம்!
இந்தியாவில் இருக்கும் பணவீக்கத்தைத் தாண்டி உங்களுக்கு வருமானம் வேண்டுமென்றால், தேவைப்படும்போது முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ பணத்தை நீங்கள் உடனடியாக எடுத்துக்கொள்ளும் வசதி வேண்டுமென்றால், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்தது. ஈட்டும் லாபத்துக்குக் குறைவான வருமானவரி செலுத்தும் முதலீடு இது. சுத்தமான, வெளிப்படையான, குறைவான செலவுகொண்ட, நல்ல லாபத்தைத் தரக்கூடிய, மேலும் நல்ல பாதுகாப்பான முதலீடு வேண்டுமென்றாலும் அதற்கு ஒரே சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்டுதான்.
- வரவு வைப்போம்...