Published:Updated:

அன்பும் அறமும் - 8

அன்பும் அறமும் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 8

சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் எங்களது கடையின் முன்னால் தயங்கியபடி வந்து நின்றார் 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி. ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி என்பது தெளிவாகத் தெரிந்தது. கறுப்பு நிறத் தோல்பை ஒன்றைத் தாங்கியிருந்தார். நிறம் மங்கிய சேலையை நேர்த்தியாக உடுத்தியிருந்தார். செருப்புகளில் மட்டுமல்லாமல் கால்களிலும் தூசி ஏறியிருந்தது. மங்கிய நிறத்தில் மெட்டி துருத்திக்கொண்டு தெரிந்தது. அவர் நிச்சயம் பல கிலோமீட்டரை நடந்தே கடந்து வந்திருப்பார் என்பது உறைத்தது.

``என்ன வேண்டும்?’’ என்று கேட்டபோது, சொல்லத் தயங்கியபடியே நின்றார். எங்களது நிறுவனத்தின் பெண் பணியாளர் சென்று கேட்டபோது, கூச்சத்துடன் அந்த உதவியைக் கேட்டார். ``ரெண்டு மணி நேரமா சுத்திக்கிட்டிருக்கேன். ஒன் பாத்ரூம் அவசரமா வருது. இடம் கிடைக்கலை. ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்னாலும் கையில காசு இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.  திரும்பிச் செல்லும்போது ஆண்டாண்டுக்காலத் துயரத்தை இறக்கிவைத்த நிம்மதி அவரது முகத்தில் தெரிந்தது.

யோசித்துப்பார்த்தால், இது மிகப்பெரிய சிக்கல் எனத் தோன்றுகிறது. கட்டடங்கள் எழுந்த நகரங்களில் பெண்கள் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க இடமே இல்லை. பணம் இருப்பவர்கள் ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து காபி குடிக்கிற சாக்கில் போய் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு வரலாம். பணம் இல்லாத இவர்கள் எங்கே போவார்கள்?

ஒருதடவை, தோழி ஒருத்தி அரசாங்கக் கழிவறைக்குச் சென்று உள்ளே நுழைந்த வேகத்தில் வெளியே ஓடிவந்துவிட்டார். அதன் சுகாதாரம் ஒரு காரணம் என்றாலும், சுற்றிலும் வெறித்துப் பார்த்த ஆள்கள் இன்னொரு காரணம். பல இடங்களில் அவை `மூணு சீட்டு’ விளையாடும் இடங்களாக இருக்கின்றன அல்லது குடி மையங்களாக மாறி, குத்தவைத்து ஆண்கள் பீடி குடிக்கும் இடங்களாக இருக்கின்றன.

அன்பும் அறமும் - 8

பளபளக்கும் நகரத்தில் இப்படியொரு பிரச்னை இருப்பது, அரசுக்கும் கட்டட உரிமையாளர்களுக்கும் தெரியுமா என்றும் தெரியவில்லை; தெரிந்துகொள்ள விரும்புவார்களா என்றும் தெரியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் கவலை. இந்த இடத்தில் நான் வேறொரு விஷயத்துக்குத் தாவ விரும்புகிறேன்.

இதைப் பற்றி தம்பி ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவன் தயங்காமல் ஒரு வணிகத் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகச் சொன்னான். ``அடுத்த தலைமுறை, எல்லாவிதமான தயக்கங்களையும் உடைக்கத் தயாராகிவிட்டது. நகரில் பெயருக்குத் தகுந்த மாதிரி அசலான நவீன கழிவறைகள் கட்டி, குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் தொழிலாக மாற்றலாம்’’ என்றான்.

இது ஒன்றும் புதிய வியாபார யோசனையன்று. பழநிக்குப் பாதயாத்திரை போகிறவர்கள் குளித்துவிட்டுப் போவதற்கு என்றே நெடுஞ்சாலைகளில் இப்படியான மையங்கள் இருக்கின்றன. அதுவல்ல இதில் உள்ள விஷயம். உயர் படிப்புகளைப் படித்து முடித்த இளைஞர்கள் இப்படி சம்பந்தமேயில்லாத வியாபாரத்தில் சங்கடமேயில்லாமல் இறங்கும் மனநிலையைப் பற்றியது இது.

நாங்கள் மீன் கடை ஆரம்பித்தபோது, எங்களுடைய சொந்தங்கள் எல்லோருமே ஏளனமாகப் பேசினார்கள். ஒருகட்டத்தில் ‘இவனுக்குக் கிறுக்கு பிடிச்சிருச்சா?!’ என்று கேட்டவர்களும் ஏராளம். லாண்டரித் தொழில் நடத்துவது ஒருகாலத்தில் கேவலமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் லாண்டரித் தொழில் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. துணியை எடைபோட்டு எடுத்துக்கொண்டு போய் துவைத்துத் தருகிறார்கள். அதைப் படித்த இளைஞர்கள்தாம் நடத்துகிறார்கள்.

இதற்கு முந்தைய தலைமுறைக்கு வேறொரு மனநிலை இருந்தது. என் நண்பன் ஒருவன் வளசரவாக்கத்தில் சிறிய அளவிலான சிற்றுண்டிக் கடை போட்டிருந்தான். நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. இன்னும் நன்றாகச் செய்திருந்தால், 5,000 ரூபாய் வருமானமாகக்கூட உயர்ந்திருக்கக்கூடும். நண்பர்களின் இரவுக் கூடுகைகளில், அப்படியான கடை நடத்துகிறேன் என்று சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு, அதை விற்றுவிட்டு நவநாகரிக ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தினான். அந்தக் கடையை ஒரே வருடத்தில் இழுத்து மூடினான். சுற்றிலும் கடன் தொல்லை நெரிக்க, தலைமறைவாகத் திரியவேண்டிய கட்டாயம். மீன் விற்ற காசு நாறவே நாறாது. ஏனெனில், நிறையமுறை நான் அந்தப் பணத்தை எடுத்து மோந்து பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தத் தலைமுறை இத்தகைய மனநிலையிலிருந்து சுதந்திரமாக விடுபட்டுவிட்டது என்றே தோன்றுகிறது.

நகரம், கிராமம் என்று பிரித்துப் பார்க்க முடியாமல், பழைய தடைகளைத் தகர்த்துக்கொண்டு இந்த மனநிலை முளைத்து மேலேறி வருகிறது. திண்டுக்கல் அருகில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் வெள்ளைச்சாமி என்ற இளைஞரைச் சந்தித்தேன். தங்களது துயர் தீரவேண்டும் என வீட்டில் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்திருக்கிறார்கள். சென்னையில் ஏதாவது ஒரு வேலையில் சேர்க்கவே அத்தனை பேரும் விரும்பியுள்ளனர். ஆனால், வெள்ளைச்சாமி வேறு ஒரு வழியைப் பிடித்தபோது, எல்லோரும் சேர்ந்து மறுத்திருக்கிறார்கள். ஜெயித்துக்காட்டிய பிறகு, இப்போது அவர் சொல்லுக்கு மதிப்பு கூடிவிட்டது.

வெள்ளைச்சாமி ஒரு பழைய குட்டியானை வண்டி ஒன்றைக் குறைந்த விலைக்கு வாங்கியிருக்கிறார். சிதறல் சிதறலாக இருக்கும் பழ வியாபாரிகளை ஒன்றிணைத்து, பழப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் கேரளாவில் சாலையோர வியாபாரம் செய்கிறார். ஐந்து கிலோமீட்டருக்கு ஓர் ஆள் என அதிகாலையில் இறக்கி விட்டுவிட்டு, வியாபாரம் முடிந்ததும் திரும்பவும் அழைத்துக்கொண்டு வருகிறார்.பழங்கள் தங்கிப்போய்விட்டால், நூறு ரூபாய் கொடுத்துத் தங்கிக்கொள்கிற மாதிரி சின்னச் சின்ன தங்கும் இடங்கள் அங்கு இருக்கின்றன. ஒரு பெட்டிக்கு இவ்வளவு கமிஷன் என்று அந்தச் சிறு வியாபாரிகளிடம் வாங்கிக்கொள்கிறார். தினமும் வியாபாரம் நடக்கிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விளையும் பழங்களைக் கேரளா தின்றே தீர்ப்பதையும் இந்த இடத்தில் சொல்ல வேண்டும். நல்ல அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன். நான்கைந்து நபர்களோடு தொடங்கிய இந்தப் பயணம், இப்போது நாற்பது பேர் என வளர்ந்து நிற்கிறது. ஒரு வண்டியில் தொடங்கிய ஓட்டம், இப்போது நான்கு வண்டிகள் என வந்து நிற்கிறது. மூச்சு விட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் வெள்ளைச்சாமி. பழக்காடுகளைத் தனியாகக் குத்தகைக்கு எடுக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் அவர்.

தொழில் பார்க்கிற சிறு வியாபாரிகள், வெள்ளைச்சாமியைக் கடவுளுக்கு நிகராக மதிக்கிறார்கள். கழிவறையைத் தேடி அலைந்த அந்தப் பெண்மணிகூட, அப்படி ஒரு தொழிலை யாராவது ஆரம்பித்திருந்தால் வெளியே வந்த வேகத்தில் ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்துவிட்டே நகர்ந்திருப்பார். ஏனெனில், அந்தப் புன்னகையை அன்றைய நாள் நான் நெருக்கத்தில் பார்த்தேன்.

- அறம் பேசுவோம்!