
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : அன்ஷேக்கபிள் (Unshakeable)
ஆசிரியர் : டோனி ராபின்ஸ்
பதிப்பகம் : Simon & Schusterw
நம் எல்லோருடைய மனது, மூளை, ஆத்மா என இவை எல்லாம் விரும்பும் விஷயம் ஒன்றே ஒன்றைத்தான். பொருளாதாரம் எழுந்தாலும் விழுந்தாலும், சந்தை சரிந்தாலும் உயர்ந்தாலும், ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்தாலும் பாதாளத்தில் கிடந்தாலும் நம்முடைய நிதிநிலைமை வாழ்நாள் முழுவதுமே சீராக இருக்கவேண்டும் என்பதுதானே! இது போன்றதொரு நிலையைத்தான் ‘அசைக்க முடியாத நிலை’ என்கிறோம். இதுவே பெரும்பாலானவர்களின் கனவும்கூட. இந்தக் கனவு மெய்ப்படும் வழிமுறைகள் பற்றித் தெளிவாகச் சொல்கிறது டோனி ராபின்ஸ் எழுதிய ‘அன்ஷேக்கபிள்’ என்கிற புத்தகம்.
‘‘வெறுமனே நிதிநிலைமை மட்டுமே உங்களை அசைக்க முடியாத நபராக ஆக்கிவிடுமா என்றால், இல்லை. சூறாவளி, புயல், சுனாமி என நிதிச் சந்தையில் எதுவந்தபோதும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். எல்லோரும் பயப்படும் சூழலிலும், நாம் சுலபத்தில் தெளியும் வண்ணம் இருக்கவேண்டும். அதாவது, நிதிநிலையில் நாம் ஒரு தலைவனாக இருக்கவேண்டும். தொண்டனாக இருக்கக்கூடாது. சதுரங்கம் விளையாடும் நபராக இருக்கவேண்டும். சதுரங்கத்தில் பயன்படுத்தப்படும் காய்களாக இருந்துவிடக்கூடாது. வெற்றுப் பேச்சுக்கு இடமில்லாமல் செயல் ஒன்றே வெற்றிக் கான வழி என்கிற வகையில் நம் கவனம் இருக்க வேண்டும்’’ என்ற ஆணித்தரமான விஷயங்களைச் சொல்லி ஆரம்பிக்கிறார் டோனி ராபின்ஸ்.
‘‘அட, இந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியமா சார். ஆனானப்பட்டவர்களெல்லாம் ததிகினத்தோம் போடுகிறார்களே! இதெல்லாம் வெறும் கனவுதான். கனவு, காண்பதற்கு நன்றாக இருக்கும். ஏழையோ, பணக்காரனோ அவரவர் களை அவரவர்கள் திறனுக்கு ஏற்றாற்போல் அசைத்துப் பார்க்கும் விஷயம் என்ற ஒன்று ஏதாவது இருக்கத்தானே செய்யும். 2008-ல் என்ன நடந்தது? வங்கிகள் முதல் தனிமனிதர் வரை பலரும் பந்தாடப்பட்டனர். சேமிப்பு காலி, வீடு காலி, ரியல் எஸ்டேட் சந்தை சுக்குநூறாகிப் போனது. சரி, 2008 முடிந்து, பத்து வருடங்கள் ஓடிவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டதென்று சொல்ல முடியுமா? ஒவ்வோர் அரசும், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் புதுப்புது நடவடிக்கை களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன. பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் வட்டிவிகிதம் பூஜ்யத்துக்கும் கீழேபோனது நினைவிருக்கிறதா?

சமீப காலத்தில் டொயோட்டோ நிறுவனத்தின் நிதி திரட்டும் நிறுவனம் 0.0001% வட்டிக்கான கடன் பத்திரத்தை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளது. இந்த வட்டியில் பணம் இரட்டிப் பாக 69,300 வருடங்களாகும் என்ற தகவல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். இதையெல்லாம் கேட்டல் குழப்பமாக இருக்கிறதே என்பீர்கள்.
‘‘குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வாய்ப்பேயில்லை. நீங்கள் குழப்பமாக இல்லாவிட்டால் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை என்றே அர்த்தம். 90 வயதானவரும், 19 வருடம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவராக இருந்தவருமான ஆலென் க்ரீன் ஸ்பானிடம், ‘‘உங்கள் அனுபவம் பெரியது. உலகத்தின் பல்வேறு பொருளாதார எழுச்சியையும், வீழ்ச்சியையும் பார்த்தவர் நீங்கள். இன்றைய நிலையில், நீங்கள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்தால் என்ன செய்வீர்கள்?’’ என்று புத்தக ஆசிரியர் டோனி ராபின்ஸ் கேட்க, ‘‘ராஜினாமா செய்வேன்’’ என்றாராம். பழம் தின்று கொட்டை போட்ட இவரைப் போன்றவர்களே இப்படிச் சொல்லும் சூழலில் உங்களையும், என்னையும் போன்ற சாமான்யர் கள் என்ன செய்ய முடியும்?
ஆனால், ஒருசிலர் நல்ல நேரத்திலும், கெட்ட நேரத்திலும் பணம் பண்ணும் திறமையைக் கொண்டவராக இருக்கின்றனர். ஏழு வருடம் இதுபோன்ற ஐம்பதுக் கும் மேற்பட்ட திறமையான நபர்களைச் (ரே டேலியோ, வான்கார்டு நிறுவன ஸ்தாபகர் ஜாக் போக்லே, ஜேபி மார்கன் சேஸ் நிறுவனத்தின் மேரி கலாகன் இரோட்ஸ், வாரன் பஃபெட் போன்றவர்கள்) சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறேன். இவர்களை ‘மணி மாஸ்டர்ஸ்’ என்று சொல்ல லாம். இவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம், பணம் சம்பாதிக்க எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கவேண்டிய தேவையே இல்லை என்பதே.
உங்களால் எதை கன்ட்ரோல் செய்ய முடியுமோ, அதை கன்ட்ரோலில் வைத்துக் கொண்டும், எதை கன்ட்ரோல் செய்ய முடியாதோ (பொருளாதாரம், பங்குச் சந்தை போன்றவற்றை) அதை அப்படியே விட்டுவிட்டும் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.நிதிசார்ந்த விஷயங்களை ஒரு விளையாட்டு என்று வைத்துக்கொண்டால், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது, யார் யார் விளையாடுகிறார்கள், அவர் களுடைய எண்ணம்தான் என்ன, எங்கே/எப்போது நீங்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது மற்றும் எப்படி நீங்கள் வெற்றி பெறுவது என்பது போன்றவற்றைத் தான். இவையே உங்களை வெற்றி பெறச் செய்யும். நிதிசார்ந்த விஷயங்களில் உங்களின் முடிவுகளே உங்களின் விதியை நிர்ணயம் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கும் ஆசிரியர், ‘‘நம் வாழ்க்கையைச் செதுக்கிக்கொள்வதற்கான சக்தி (பவர்) நமக்கு எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார்.
‘‘ஆதி மனிதன் வெறுமனே வேட்டையாடித் திரிந்தபோது இயற்கையின் கருணையிலேயே வாழ்ந்தான். அவனுக்கென்று பவர் ஒன்று கிடையாது. சாப்பிடலாம் அல்லது சாப்பாடாகிவிடலாம் என்கிற சூழலில் பவர் என்ற ஒன்று உண்டா என்ன? ஆனால், நாள்பட நாள்பட சுற்றுச்சூழலைப் புரிந்துகொண்டு, பயிரிட ஆரம்பித்து தட்டுப்பாடு என்ற சூழலிருந்து ஏராளம் என்ற சூழலுக்கு வந்துசேர்ந்தோம் இல்லையா? இது எப்படிச் சாத்தியமானது என்றால், நம்மால் ஒரு நிகழ்வின் பாங்கினைப் புரிந்துகொள்ள முடிந்ததால், சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்ய கற்றுக்கொண்டோம். மனித வரலாற்றில் இந்தப் பாங்கினை உணர்ந்துகொள்ளுதல் என்பது அதிக வேகத்தில் வளர்ந்துவரும் கலையாகிப்போனது’’ என்றவர், பங்குச் சந்தை தொடர்பான சில நுணுக்கமான விஷயங்களையும் சொல்கிறார்.
‘‘முதலீட்டுச் சந்தையில் பேட்டர்னை உணர்ந்துகொள்ளும் திறனைப் பெற்ற கணத்திலேயே வெற்றி என்பது உங்களை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பிக்கும். விவசாயத்தில் பிரச்னைகள் பெரிதாக இல்லை. கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் எனக் கொஞ்சம் தெளிவாக உணரும்படி நிகழ்வுகள் இருக்கிறது. ஆனால், முதலீட்டுச் சந்தையில் அப்படி சொல்லிக்கொள்ளும்படி நடப்பதில்லை. சந்தையைத் திரும்பிப் பார்த்தால், குளிர்காலம் எப்போது வருகிறது என்பதே தெரிவதில்லை. வருடா வருடம் வருகிறது என்பது உண்மையானாலும், எப்போது என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.
1900-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கச் சந்தைகளின் சரித்திரத்தைப் புரட்டினால் கரெக்ஷன் என்பது வருடம் ஒருமுறை வந்தேவிடுகிறது. ஆனால் எது பயங்கரம். கரடிச் சந்தையா, கரெக்ஷனா என்றால் இந்த இரண்டும் இல்லை. சந்தையை விட்டு ஒதுங்கியிருப்பதே என்பதுதான் கசப்பான உண்மை. வருடத்துக்கு ஒரு கரெக்ஷன் வரவே செய்கிறது. வரும் கரெக்ஷன்களில் 20% கரெக்ஷன்களே கரடிச்சந்தைக்கு இழுத்துச் செல்ல வல்லதாய் இருந்துள்ளது. யாராலும் எப்போது காளைச் சந்தை வரும், எப்போது கரடிச்சந்தை வரும் என்று தொடர்ந்து வெற்றிகரமாகக் கணித்துச்சொல்ல முடியாது. குறைந்த காலகட்டத்தில் பல இறக்கங் களைச் சந்தித்தபோதிலும், பங்குச் சந்தை என்பது நீண்ட நாள்கள் அடிப்படையில் ஏற்றத்தைச் சந்திக்கவே செய்கிறது.
நினைவிருக்கட்டும், கரடிச் சந்தைகள் நிச்சயமாக காளைச்சந்தைகளாக மாறவே செய்யும். ஏனென்றால், அவநம்பிக்கைகள் நம்பிக்கைகளாக மாறவே செய்யும். மனதினை கன்ட்ரோல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மனது உங்களைக் கையில் எடுத்துக்கொள்ளும்’’ என்று சொல்லி முடிக்கும் ஆசிரியர், முதலீடு குறித்த நடைமுறைப்படுத்தக்கூடிய அளவிலான ஆழ்ந்த கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.
பணரீதியான அசைக்க முடியாத வாழ்வினைப் பெறுவது எப்படி என்பதைத் தெளிவாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் படிக்கலாம்!
-நாணயம் டீம்

பி.எஃப் : இனி நேரடியாக விண்ணப்பம்!
வருங்கால வைப்புநிதி ரூ.10 லட்சத்துக்குமேல் இருக்கும்பட்சத்தில், அதைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை நேரடியா கவும் விண்ணப்பிக்கலாம் எனத் தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.10 லட்சத்துக்குமேலான வருங்கால வைப்பு நிதியைப் பெறவேண்டும் எனில், ஆன்லைன் மூ லமாக மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும் எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தது.
இந்த விதிமுறை எல்லோருக்கும் பொருந்த வில்லை என்கிற காரணத் தினால், இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது இந்த நிறுவனம்.