
சொக்கலிங்கம் பழனியப்பன்
கணவன் - மனைவி இருவருமே சம்பாதிக்கும் வீட்டில், குழந்தைகள் பிறக்கும் வரை எந்தச் சிரமும் இருக்காது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதுதான் அழுத்தங்கள் அதிகரிக்கும். அந்த நேரத்தில்தான் அலுவலகத்திலும் இருவரின் பொறுப்புகளும் அதிகமாகும். வேலைப்பளு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரிக்கும். வீட்டையும் அலுவலகத்தையும் மாறி மாறிச் சமாளிக்க முடியாமல், பலர் திணற ஆரம்பிக்கும் சமயம் இதுதான். யாராவது ஒருவர் வேலையை விடலாம் என்றால், பணத்தேவைகள் கழுத்துக்குமேல் இருக்கும். மொத்தத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பார்கள்.

இதை எப்படிச் சமாளிக்கலாம்?
இன்றைய இளைஞர்கள் பலருக்கும், படிப்பு முடித்ததும் நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. கை நிறைய சம்பளம், இளம் வயது, புதிய உலகம், செலவழிக்கப் பலவிதமான வழிகள் என ஆடம்பர வாழ்க்கையை ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த ஆடம்பர வாழ்க்கை, திருமணத்துக்குப் பிறகும் தொடர்கிறது.

இருவரும் சம்பாதிக்கிறோம் என்கிற தைரியம், பெரிய வீடுகளை வாங்கச்செய்கிறது. மாதாந்திர இ.எம்.ஐ., சம்பாத்தியத்தில் பாதிக்குமேல் பணத்தைக் கரைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஒருவரின் சம்பளம் முழுவதும் இ.எம்.ஐ செலுத்துவதற்கே சென்றுவிடுகிறது. வீடு வாங்கும்போது, டவுன் பேமென்ட் போடுவதற்குப் போதுமான பணம் இல்லாமல், பர்சனல் லோன் அல்லது கோல்டு லோனையும் எடுத்து விடுகிறார்கள். இவை குறுகியகாலக் கடன்கள் என்பதால், மாதாந்திரத் தவணை அதிகமாக இருக்கும். யாராவது ஒருவர் குடும்பத்துக்காக, குழந்தை வளர்ப்புக்காக வேலையைவிட வேண்டும் என்றால், முதல் தடுப்புச்சுவராக வந்து நிற்பது வீட்டு லோன்தான். ஆகவே, நீங்கள் இருவர் வேலை செய்யும்போது வீடு வாங்கினால்கூட, ஒருவரின் வருமானம் மட்டுமே உள்ளதாக நினைத்து வீட்டை வாங்குங்கள். அப்போது நீங்கள் வாங்கும் வீடு சற்று சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு நிதிச்சுதந்திரம் கிடைக்கும். குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக யாராவது ஒருவர் வேலையை விட்டுவிடலாம் என நினைக்கும்போது, அந்த முடிவை அமல்படுத்துவது எளிது.
அடுத்ததாக, விலை அதிகமான, பெரிய கார்களை வாங்குவது. இதற்கு உண்டான இ.எம்.ஐ., பராமரிப்புச் செலவு போன்றவை அதிகம் இருக்கும். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு சம்பாத்தியத்தில் குடும்பத்தை ஓட்ட நினைப்பவர்கள், விலை அதிகமான கார்களை வாங்காமல் இருப்பது நல்லது.
அடிக்கடி செல்போன் மாற்றுவதிலிருந்து, எல்.இ.டி டிவி வாங்குவதிலிருந்து, குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது வரை பெயரற்ற பல செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். கிரெடிட் கார்டு, உங்கள் வருமானத்தைக் கரைக்க நீங்களாகவே வாங்கி வைத்துக்கொள்ளும் விஷம். இந்த விஷத்தை ஒழித்துக்கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
செலவுகள் ஒருபுறமிருக்க, யாராவது ஒருவர் வேலையை விடும்போது சேமிப்பு/முதலீடுகள் இருந்தால் பக்கபலமாக இருக்கும். பல இளம் தம்பதிகள் சிறுவயதில் முதலீடு செய்வதைப் பற்றி நினைப்பதே இல்லை. நீங்கள் பேச்சுலராக இருக்கும்போதும் சரி, மனைவி, குடும்பம், குழந்தை எனக் குடும்பத்தலைவராக இருக்கும்போதும் சரி, செலவுகளைக் குறைத்து முதலீட்டை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். இது ஒரு ரெகுலர் வருமானத்தை உங்களுக்குத் தரும். உங்களில் ஒருவர் வேலையைவிட நினைக்கும்போது இந்தப் பணம் உங்களுக்கு கைகொடுக்கும்.