நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: பிராக்ட்டிக்கல் திங்கிங் (Practical Thinking)

ஆசிரியர்: எட்வர்ட் டி போனோ

பதிப்பகம்: Vermilion

மனிதர்கள் அனைவருமே சிந்திக்காத நிமிடமே இல்லை. எல்லா நேரத்திலும் எதைப் பற்றியாவது மனிதர்கள் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவ்வளவு சிந்தித்துச் செயல் பட்டாலும், தவறு செய்யாமல் இருக்கிறார்களா என்று கேட்டால், நிறைய தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி இது நடக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது எட்வர்ட் டி போனோ எழுதிய ‘பிராக்ட்டிக்கல் திங்கிங்’ என்கிற புத்தகம். சரியாக யோசித்து, சரியாகச் செயல்படத் தேவையான நான்கு வழிகளையும், தவறாகச் செயல்படத் தேவையான ஐந்து வழிகளையும் சொல்கிறது இந்தப் புத்தகம். 

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

‘‘உங்களுடைய கார் அல்லது பைக்கின் இன்ஜின் செயல்பாடு கொஞ்சம் கரடுமுரடாக இருந்தால், உடனடியாக நீங்கள் அதை உணர்ந்து கொள்கிறீர்கள். அதே இன்ஜின், பிரச்னை இல்லாமல் சாதாரணமாகச் செயல்பட்டால்,  அதை நீங்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதை என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?  அதேபோல்தான், உங்களுடைய சிந்தனைகளும். சீராக இருக்கும் வரையில் அப்படி ஒன்றை நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது.
நமது அன்றாடச் சிந்தனைகள் என்பது நம்முடைய குடும்ப நடவடிக்கைகள், இன்றைய சமையல், இந்த வருட விடுமுறைக்கு எங்கு செல்லலாம், இன்றைக்கு வேலைக்குத் தாமதமாகப் போகிறோமே! என்ன பொய் சொல்லலாம் என்பது போன்ற விஷயங்களை உள்ளடக்கியதாகும். இதைத் தாண்டி, நாம் சரியாகச் செயல்படுகிறோமா,  எதற்காக இந்த வாழ்க்கை என்பது போன்ற பெரும் சிந்தனைகள் வேறு வகையானது. பெரும் அறிஞர்கள் இதுகுறித்து சிந்தித்து பல அரிய கருத்துகளைச் சொல்லிச் சென்றுள்ளனர்’’ என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், அந்த வழிகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லி  விளக்கியிருக்கிறார். 

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!


 
‘‘உள்ளுணர்வு, கற்றுக்கொள்ளுதல், புரிந்து கொள்ளல் என்ற மூன்று படிநிலைகளிலிலேயே நம்முடைய சிந்தனை என்பது கட்டமைக்கப் படுகிறது. சாதாரணமாக, நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நாம் அசால்ட்டாக டீல் செய்துவிடு கிறோம். இது இப்படித்தான், இதற்கு இதுதான் என்று நம்முடைய நடவடிக்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. ஆனால், சில விஷயங்கள் எதிர்பாராமல் நடக்கும்போது, நாம்  இப்படி செய்ய முடியாது. அப்போது நம்மை உள்ளுணர்வு எச்சரிக்கும். இது வழக்கமாக நடக்கும் விஷயமில்லை என உள்ளுணர்வு எச்சரிப்பதை நாம் காதுகொடுத்துக் கேட்பதில்லை. நம் வசதிக்கேற்ப அது சொல்வதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

அதேசமயம், ஒரு புதிய சூழலை நாம் எதிர்கொள்ளும்போது ‘ட்ரையல் அண்டு எரர்’ என்ற சோதனை முறை அடிப்படையி லேயே நாம் செயல்படத் தொடங்குகிறோம். நம்முடைய செயல்பாட்டுக்கு அந்தச் சூழல் என்னவிதமான பலனைத் தருகிறது என்பதைக் கற்றுக்கொள் கிறோம். உள்ளுணர்வைத் தாண்டிய விஷயமாக இது இருப்ப தால், இதுகுறித்து நாம் கற்றுக்கொள்ள முயல்கிறோம்.  இப்படிக் கற்றுக்கொண்டு செயல்படுவதால், புதுப்புதுச் சூழ்நிலைகளை நாம் சுலபத்தில் கையாண்டுவிடுகிறோம்.

இதில் இரண்டாம் நிலை கற்றல் என்று ஒன்று உண்டு. நண்பர்கள் சொல்லுதல், புத்தகத்தில் படித்தல் போன்றவற்றின் மூலமாக நாம் சில விஷயங்களை அறிந்துகொண்டு அது குறித்துச் சிந்திக்கும் நிலையாகும் இது.

மூன்றாவதாக, நாம் புரிந்து கொண்டு செயல்படும் விதம் என்ற ஒன்று இருக்கிறது. நம்மிடம் தயாரான முடிவுகள் எதுவும்  இல்லாதபட்சத்தில் நாம் என்ன செய்கிறோம்? உதாரணமாக, நமது வீட்டின் கதவை ஒரு பெண் தட்டுகிறாள். நாம் என்ன செய்கிறோம்? முதலில் நமக்குத் தெரிந்த சூழ்நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

யார் இவள், ஏதும் சர்வே எடுக்க வந்திருப்பாளோ அல்லது பொருள்களை விற்பனை செய்யவந்திருக்கும் மார்க்கெட்டிங் பெண்ணோ, நன்கொடை கேட்டு வந்திருப்பாளோ, பக்கத்து வீட்டிற்கு வந்து அவர்கள் இல்லை என்பதால், நம்மிடம் விசாரிக்க வந்திருப்பாளோ அல்லது நம்முடன் ஏற்கெனவே பழக்கமாகி,  நீண்ட இடைவெளியானதால், மறந்துபோன பெண்மணியோ எனப் பல விஷயங்களை வைத்து அளவீடு செய்ய முயல்கிறோம்.

பகலில் கொடியில் தொங்கும் கயிற்றைக் கண்டுகொள்ளாத நாம், இரவில் அது ஒருவேளை பாம்பாக இருக்குமோ என நினைப்பது போன்ற சூழல் இது. இந்தச் சூழல் களில் செயல்பட நாம் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதன்பின்னால் அதை எப்படிக் கையாள்வது என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்

சிந்தனை என்பது எதற்காகத் தேவை என்று கேட்கும் ஆசிரியர் அதற்கான பதிலைச் சொல்கிறார். ‘‘ஒன்றைப் பற்றி அது என்ன என்று தெரிந்துகொள்வதற்கும் அல்லது அந்த விஷயத்தை எப்படி நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதற்குமே சிந்தனை என்பது மனிதனுக்குத் தேவைப்படுகிறது. 

எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற நினைப்பே சிந்தனைக்கு வழிவகுக்கிறது. நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், நம்முடைய கல்விமுறை நமக்குச் சொல்லித் தந்திருக்கும் எதையும் சரியாகச் செய் என்பதுமே நம்மை எந்தவொரு விஷயம் குறித்தும் சிந்திக்க வைக்கிறது’’ என்கிறார் ஆசிரியர். 

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

நம்முடைய சிந்தனை சரி என்பதை உறுதிசெய்ய நாம் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் ஆசிரியர், “நம்முடைய மூளை நான்கு விஷயங்களை மட்டுமே நாம் சிந்திக்கும்போது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

உணர்வுப்பூர்வமான சரியான நிலை, தர்க்கரீதியான சரியான நிலை, தனித்துவமான சரியான நிலை, இந்தச் சூழ்நிலையில் இதுவே சரியான முடிவு எனும் நிலை என்கிற இந்த நான்கு விஷயங்களின் அடிப்படையிலேயே நம்முடைய சிந்தனை என்பது இருக்கிறது” என்பதைப் பல்வேறு  உதாரணங்களுடன் விளக்குகிறார்.

தவறான சிந்தனைகளுக்கான வழிமுறைகளைச் சொல்லும் ஆசிரியர், ஒருவழிமுறையிலிருந்து மற்றொரு வழிமுறைக்குப் பட்டென்று மாறி விடுதல் என்பதை முதலாவதாகவும், பெரிய அளவிலான தவறான பாதையைச் சரியென்று நம்பிவிடுவதை இரண்டாவதாகவும், தவறான விஷயத்தைச் சரியானது என்று முழுமையாக நம்பிவிடும் நிலையை மூன்றாவதாகவும், நான் இப்படித்தான் முடிவெடுப்பேன் என்று  அகம்பாவத்துடன் முடிவெடுப்பதை நான்காவதாகவும், பாதி விஷயத்தைத் தெரிந்துகொண்டவுடனேயே முடிவெடுக்க முயற்சி செய்வதை ஐந்தாவதாகவும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர்.

சிந்தனையைப் பொறுத்தவரை, இரண்டே சட்டங்கள்தான் உள்ளன என்று சொல்லும் ஆசிரியர், முதலாவது சட்டத்தில் எல்லோரும், எப்போதும் சரியான சிந்தனையைச் செய்து சரியான முடிவெடுப்பார்கள்  என்கிறார். இரண்டாவது சட்டமாக அவர் சொல்வது, எல்லோரும் எல்லாக் காலத்திலும் தவறாகச் சிந்தித்து, தவறான முடிவெடுப்பவர்களே என்கிறார்.

யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. எல்லோரும் எப்போது சரியாக இருக்க முடியாது என்பதை ஒருவர் உணர்ந்து கொண்டால் மட்டுமே அடுத்தவர் என்ன நினைக்கிறார் என்பதைக் காது கொடுத்துக் கேட்டு, அதே ரீதியில் சிந்தித்துச் செயல்பட்டால்,  நாம் நிச்சயம் வெற்றியாளராகத் திகழமுடியும்’’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.

சிந்தித்தல் பற்றிய கடினமான விஷயத்தை, நம் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட விஷயங்களை உதாரணங்களாக முன்வைத்து விளக்கிப் புரியவைக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

இன்ஃப்ரா திட்டங்கள்... ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்!

கு
றித்த காலத்தில் முடிக்கப்படாததால் 356 திட்டங்களுக்கு ஏறக் குறைய ரூ.2.19 லட்சம் கோடி அதிகம் செலவு ஆகி யுள்ளது. கிட்டத்தட்ட 1304 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.16.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் பல குறித்த காலத்தில் நிறை வேறாமல் போனதால் செலவுகள் ரூ.18.41 லட் சம் கோடியாக உயர்ந்திருக் கிறதாம். ஏற்கெனவே ஒதுக் கப்பட்ட செலவைவிட இது 13% அதிகமாம். இந்த 1304 திட்டங்களில் 356 திட்டங்களுக்கான செலவு 258 மடங்கு அதிகரித்தி ருக்கிறதாம். இப்படியே போனால், எப்படித்தான் நாம் செலவு செய்து இந்தத் திட்டங்களை நிறை வேற்றப் போகிறோமோ!