
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
சதீஷ் மற்றும் நகுல் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே அலுவலகத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கிறார்கள். ஆனால், சதீஷின் மனசுக்குள் சின்ன வருத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. காரணம், நகுலுக்கு அலுவலகத்தில் எப்போதுமே நல்ல பெயர். தன் வேலைகளைச் சுலபமாக முடித்து விடுவதால், அவர் அலுவலகத்தின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார்.

ஆனால், சதீஷினால் அந்த அளவுக்கு முன்னேற முடியவில்லை. அவரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால், நகுல் அளவுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் சதீஷுக்குக் கிடைக்கவே இல்லை.
ஒருநாள் அலுவலகம் முடிந்து ஒரு ஹோட்டலில் இருவரும் சாப்பிடும் வேளையில் அதைப் பற்றி நகுலிடம் கேட்டான் சதீஷ்.

எந்த பந்தாவும் இல்லாமல், சதீஷ் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான் நகுல். ‘சிங்கம் படத்தை நம்ம ரெண்டு பேரும் தானே பார்த்தோம். ஞாபகமிருக்கா?’’ என்று ஆரம்பித்தான் நகுல்.
‘‘அதுல ஒரு சீன் உனக்கு நல்லா ஞாபக மிருக்கும். சூர்யாவோட அப்பா ராதா ரவி, கான்ஸ்டேபிளா இருக்கும் விவேக்கை அழைத்து, கடையில் சரக்கு வந்துவிட்டதா என்று விசாரித்துச் சொல்லச் சொல்வார். அவரும் கடைக்கு போன் செய்து சரக்கு வந்தவிட்டதா என்று கேட்டுச் சொல்வார். எவ்வளவு சரக்கு வந்தது, எப்போது வந்தது என்கிற கேள்வியை ராதா ரவி கேட்க, அதைக் கடைக் காரரிடம் கேட்டுச் சொல்வார் விவேக்.
பிற்பாடு, அதே விஷயத்தை இன்ஸ்பெக்டராக இருக்கும் சூர்யாவிடம் விசாரித்துச் சொல்லச் சொல்வார். சூர்யாவோ அந்தக் கடைக்கு போன் செய்து, சரக்கு வந்துவிட்டதா, எத்தனை மணிக்கு வந்தது, எவ்வளவு வந்தது என்கிற எல்லா விவரத்தையும் ஒரே போனில் கேட்டுச் சொல்வார். ‘‘இப்ப தெரிஞ்சுதா, நீ ஏன் கான்ஸ்டேபிளா இருக்கேன்னு?’’ என்று விவேக்கைப் பார்த்துக் கிண்டலடிப்பார் ராதா ரவி.
எந்தவொரு விஷயத்தைப் பார்க்கும்போதும், எது நமக்குத் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்கெட்டிங் தொழிலில் கம்யூனிகேஷன் என்பது மிகவும் முக்கியம். அது சரியா இருந்தா, வெற்றி நிச்சயம்’’ என்று நகுல் சொல்ல, சதீஷுக்குத் தன் தவறுகள் புரிய ஆரம்பித்தன.
ஆமாம், கம்யூனிக்கேஷனில் பல வகை உண்டு. நாம் மற்றவர் களுக்குச் சொல்லவேண்டிய கருத்தை வார்த்தைகளைப் பயன்படுத்தி நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிப்பது வெர்பல் கம்யூனிகேஷன்.
நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லும் போது வார்த்தைகளை மிக நேர்த்தி யாகப் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் மேலதிகாரி உங்களிடம் ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்கிறார் என்றால், முதலில் அந்த வேலை எப்படிப்பட்டது, எந்த அளவுக்கு முக்கியமானது, நீங்கள் அந்த வேலையை ஏற்கெனவே செய்திருக்கிறீர்களா அல்லது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களில் யார் அந்த வேலையைச் சரியாகச் செய்வார்கள் என்பது பற்றி யெல்லாம் நீங்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வேலை செய்வது பற்றி உங்களுக்கு எந்த முன்அனுபவமும் இல்லையெனில், அதை உடனடி யாகத் தெரியப்படுத்திவிடுவது நல்லது. பிறகு பார்த்துக்கொள்ள லாம் என உயரதிகாரி சொல்லும் போது தலையாட்டிவிட்டு, அந்த வேலையைச் சரியாகச் செய்து தரவில்லையெனில், பிற்பாடு கெட்ட பெயரையே சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதை மறக்கக்கூடாது.

சரத், வருண் என்கிற இரு நண்பர்களும் வேலை தொடர்பாக மும்பைக்குப் போனார்கள். இரண்டு பேருக்குமே இந்தி தெரியாது. அங்கு அலுவலகத்தில் ஆங்கிலத்தில் பேசி சமாளித்து விட்டார்கள். ஆனால், தங்கிய இடத்தில் அவர்களுக்குச் சிக்கல். அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதால், சாப்பாடு கொண்டுவரச் சொல்ல ரூம் சர்வீஸ் பாயிடம் படாதபாடு பட்டார்கள். அப்போது சரத், “வருண், மொழி தெரியாத இடத்துல வந்து சரியா மாட்டிக்கிட்டோம்டா” என்றான்.
அதற்கு வருண், “கவலைப்படாதே, இந்தப் பிரச்னையை நான் எப்படி ஹேண்டில் பண்றேன்னு பாரு” என்று சொல்லிவிட்டு வெளியே போனான். சிறிது நேரம் கழித்துத் திரும்ப ரூமுக்கு சரத் கேட்ட சாப்பாட்டுடன் வந்து சேர்ந்தான். அதைப் பார்த்து சரத்திற்கு ஆச்சர்யம். ‘‘எப்படிடா அவங்களுக்குப் புரிய வச்சே?’’ என்று கேட்டான் சரத்.
‘‘சிம்பிள்டா, ஆதிகாலத்திலே மனுஷன் பேசுறதுக்கு முன்னால, ஒரு விஷயத்தை இன்னொரு மனுஷனுக்கு எப்படிப் புரிய வச்சான்? கையைக் கால ஆட்டி, நடிச்சுத்தானே புரிய வச்சான். அந்தமாதிரி நானும் சில விஷயங்களை நடிச்சுக் காமிச்சேன். நான் என்ன கேக்கிறேன்னு அவங்களுக்கு சட்டுன்னு புரிஞ்சுடுச்சு. பிராபளம் ஓவர்’’ என்றான் வருண்.
இதற்குப் பெயர்தான் நான்-வெர்பல் கம்யூனிகேஷன். இதற்கு சொல், வார்த்தை, மொழி எதுவும் தேவையில்லை. நமது கை, கால், முகம், கண் என உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி, நாம் சொல்ல வந்த விஷயத்தை மற்றவர்களுக்கு எளிதாகப் புரிய வைத்துவிட முடியும்.
வெர்பல் கம்யூனிகேஷனோ அல்லது நான் - வெர்பல் கம்யூனிகேஷனோ... சில விஷயங்களை நாம் நன்கு கற்றுக்கொண்டால்தான், நாம் வெற்றி பெற முடியும். என்னென்ன விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.
1. கவனித்தல் - பிறர் பேசும்போது உற்று கவனிப்பது அவசியம். அப்போதுதான் நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை அவர்களிடம் தெளிவாக எடுத்துச்சொல்ல முடியும்.
2. திறமையாகப் பேச பயிற்சி மேற் கொள்ளுதல்.
3. எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் அதில் நம்முடைய தொழில் சார்ந்து தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.
4. சொல்ல வேண்டிய விஷயங்களைத் தெளிவாகவும், நேரடியாகவும் சொல்ல பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. நாம் சொல்லும் விஷயத்தைச் சுருக்கமாகவும், எளிய முறையிலும் தெரிவிப்பது வெற்றிக்கான அடிப்படை அம்சமாகும்.
6. எந்த விஷயத்தைத் தெரிவிக்கும்போதும் அதில் அணுகுமுறை மிக முக்கியமானது. நட்பு உணர்வோடு அணுகும்போது நாம் தெரிவிக்க விரும்பும் விஷயம் எதிரில் இருப்பவருக்கு எளிதில் புரியும்.
சொல்லவந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லி முடிப்பவர்கள், வெற்றிக்கு அருகில் மிக விரைவில் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பேசுவதற்குமுன்பு, மற்றவர்கள் என்ன சொல் கிறார்கள் என்பதைக் காதுகொடுத்து கவனித்துக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் அரைகுறையாகக் கேட்காமல், கவனமாகக் கேட்டால், உங்கள் கம்யூனிகேஷன் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் தேடித் தரும்!
(காலம் வெல்லும்)
படங்கள்: ப.சரவணக்குமார்