Published:Updated:

பணம் பழகலாம்! - 11

பணம் பழகலாம்! - 11
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் பழகலாம்! - 11

சொக்கலிங்கம் பழனியப்பன்

நான் சந்திக்கும் பல இளைஞர்கள், 45 வயதிலேயே ஓய்வு பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர், `50 வயதில் ஓய்வுபெற முடியுமா?’ என்று கேட்கிறார்கள். பெண்கள் ஓரிரு குழந்தைகளுக்குத் தாய் ஆனவுடன், வேலையிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறார்கள். வெகுசிலரே தங்களின் முழுமையான பணிக்காலத்தையும் முடித்து ரிட்டையர் ஆகிறார்கள்.

இன்றைய சூழலில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது  உண்மைதான். அவ்வாறு சம்பளம் கொடுக்கும் நிறுவனங்கள், ஊழியர்களிடமிருந்து மிக அதிகமான வேலையையும் எதிர்பார்க்கின்றன. ஆகவே, பெரும்பாலான ஊழியர்களுக்கு, தகுதிக்கு மீறிய டார்கெட்டுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதற்கு அரசாங்கமும் விதிவிலக்கல்ல. தகுதிக்கு மீறி நிர்ணயிக்கப்படும் டார்கெட்டுகளால், ஊழியர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சல் மற்றும் நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

பணம் பழகலாம்! - 11

சீக்கிரமாக ஓய்வுபெற விரும்புவதில் தவறேதுமில்லை. ஆனால், தங்களது இளம் வயதிலேயே அதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றுபவர்கள் எத்தனை பேர்? 45 வயதில் ஓய்வுபெற விரும்புகிறவர்கள் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 

பணவீக்கம், ஓய்வுகாலத் திட்டமிடலில் பெரிய பங்குவகுக்கிறது. நமது சராசரிப் பணவீக்கத்தை ஆண்டுக்கு 6 சதவிகிதம் என எடுத்துக்கொள்ளலாம். இவற்றைவிட முக்கியம், நீங்கள் எந்த வழியில் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதுதான். குறைவான வருமானம் தரக்கூடிய தங்கம், ஆயுள்காப்பீடு (எண்டோவ்மென்ட், மணிபேக், ரிட்டையர்மென்ட்) பாலிசிகளில் முதலீடு செய்தீர்கள் என்றால், உங்களுக்கு வளர்ச்சி அவ்வளவாக இருக்காது. இன்னொரு வகையில் கூற வேண்டுமென்றால், நீங்கள் பெற விரும்பும் அதே பென்ஷனுக்கு, மாதம்தோறும் மிக அதிகமான அளவில் சேமிக்க/முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்களின் ஓய்வுக்காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் போன்ற அதிக வளர்ச்சி தரக்கூடிய வகையில் முதலீடு செய்வது நல்லது.

பணம் பழகலாம்! - 11


சூழல் 1:
உங்களின் வயது 25. நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இன்னும் 20 வருடம் இந்தச் சம்பாத்தியம் இருக்கும் என நம்புகிறீர்கள். 45 வயதில் விருப்ப ஓய்வுபெற விரும்புகிறீர்கள். இன்றைய உங்களின் மாதாந்திரச் செலவுகள் 20,000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். 20 வருடம் கழித்து ஆண்டுக்கு 6 சதவிகிதப் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதுவே சுமார் 64,000 ரூபாயாக இருக்கும். அன்றிலிருந்து மாதம்தோறும் உங்கள் வாழ்நாள் முழுவதும் 64,000 ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால், உங்களின் 45-வது வயதில் நீங்கள் சேர்த்திருக்கவேண்டிய கார்ப்பஸ், சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய். அந்த கார்ப்பஸைச் சேர்ப்பதற்கு நீங்கள் மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த 20 வருடத்துக்குச் செய்யவேண்டிய முதலீடு சுமார் 13,000 ரூபாய். மாதம்தோறும் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், இன்றே மொத்தமாக 11.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

சூழல் 2: உங்களின் வயது 30. இன்னும் 15 வருடங்கள் இந்தச் சம்பாத்தியம் இருக்கும் என நம்புகிறீர்கள். 45 வயதில் விருப்ப ஓய்வுபெற விரும்புகிறீர்கள். இன்றைய உங்களின் மாதாந்திரச் செலவுகள் 20,000 ரூபாய். 15 வருடம் கழித்து ஆண்டுக்கு 6 சதவிகிதப் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதுவே சுமார் 48,000 ரூபாயாக இருக்கும். அன்றிலிருந்து மாதம்தோறும் உங்கள் வாழ்நாள் முழுவதும் 48,000 ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால், உங்களின் 45-வது வயதில் நீங்கள் சேர்த்திருக்கவேண்டிய கார்ப்பஸ் சுமார் 82 லட்சம் ரூபாய். அந்த கார்ப்பஸைச் சேர்ப்பதற்கு நீங்கள் மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த 15 வருடத்துக்குச் செய்யவேண்டிய முதலீடு சுமார் 18,500 ரூபாய். மாதம்தோறும் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், இன்றே மொத்தமாக 15 லட்சம் ரூபாய் முதலீடு  செய்ய வேண்டும்.

சூழல் 3: உங்களின் வயது 35. இன்னும் 10 வருடங்கள் இந்தச் சம்பாத்தியம் இருக்கும் என நம்புகிறீர்கள். 45 வயதில் விருப்ப ஓய்வுபெற விரும்புகிறீர்கள். இன்றைய உங்களின் மாதாந்திரச் செலவுகள் 20,000 ரூபாய். 10 வருடம் கழித்து, ஆண்டுக்கு 6 சதவிகிதப் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதுவே சுமார்  36,000 ரூபாயாக இருக்கும். அன்றிலிருந்து மாதம்தோறும் உங்கள் வாழ்நாள் முழுவதும் 36,000 ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால், உங்களின் 45-வது வயதில் நீங்கள் சேர்த்திருக்கவேண்டிய கார்ப்பஸ் சுமார் 62 லட்சம் ரூபாய். அந்த கார்ப்பஸைச் சேர்ப்பதற்கு நீங்கள் மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த 10 வருடத்துக்குச் செய்யவேண்டிய முதலீடு சுமார் 30,000 ரூபாய். மாதம்தோறும் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், இன்றே மொத்தமாக  20 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

இப்போதே இரண்டாவது வருமானத்துக்குத் தயாராகுங்கள்... ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை.

-வரவு வைப்போம்...