
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : ஆக்செலரேட் (Accelerate)
ஆரிரியர் : ஜான் பி கோட்டர் (John P. Kotter)
பதிப்பகம் : Harvard Business
அதிவேகமாக மாற்றங்களைச் சந்திக்கும் போட்டிமிக்க இந்த வியாபார உலகத்தில் நாம் ஜெயிப்பது எப்படி என்பதை ஜான் பி கோட்டர் என்பவர் எழுதிய ‘ஆக்செலரேட்’ என்கிற புத்தகம் நமக்குத் தெளிவாகச் சொல்லித் தருகிறது.

இன்றைக்கு எல்லா நிறுவனங்களிலும் தென்படும் சூழல் என்ன தெரியுமா..? ஒரு நல்ல வாய்ப்பையோ அல்லது கடுமையான போட்டி வரப்போகிறது என்பதையோ நிறுவனம் கண்டுபிடிக்கும். உடனடியாக அதனை எதிர்கொள்ள, நிறுவனத்தில் இருக்கும் முக்கியமான நபர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்கி மாற்றங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்வார்கள். அந்தக் குழுவும் படாதபாடுபட்டு பல்வேறு முயற்சிகளைச் செய்து பல மாற்றங்களைக் கொண்டுவரும்.
ஆனால், அவை எதிர்பார்க்கும் அளவுக்கான விளைவுகளை ஏற்படுத்தாமல் போகும். இதனால் எல்லோரிடமும் ஒருவிதமான சோர்வு தொற்றிக்கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைமைக்கே நிறுவனம் சென்றுவிடும்.
‘‘இதுபோன்ற நிலை பெருநிறுவனங்களுக்கு மட்டுமல்ல, எல்லா நிறுவனங் களுக்குமே வரவே செய்கிறது’’ என்கிறார் ஆசிரியர். வேகமான மாறுதல்களையும், தொழிலின் ஓட்டத்தை அடியோடு தகர்க்கிற அளவுக்கு அதிரடிகளைத் தரும் போட்டியாளர்களையும் கொண்டிருக்கும் இந்த வியாபார உலகில், இவற்றை எதிர்பார்த்துச் சுதாரித்து வேகமாக மாறிக்கொள்வது எப்படி என்பதற்கான சூத்திரங்களைச் சொல்லித் தரவே இந்தப் புத்தகம் என்கிறார் ஆசிரியர்.

இன்றைக்குத் தொழில்கள் மாறுகிற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், பெரும்பாலான நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே திணறுகின்றன. இன்றைக்கு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களின் முன்பு இருக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். எப்படி இந்தப் போட்டி மற்றும் தொழிலின் போக்கையே தகர்க்கும் மாறுதல்களை எதிர்கொள்வது?
2000-ம் ஆண்டுக்குப்பிறகு, எந்தக் கோணம் அல்லது அளவீட்டில் பார்த்தாலும் பெரிய அளவிலான, வரலாறு காணாத முன்னேற்றம் நடந்துள்ளது. இந்த வேகமான மாறுதல் சுழலில் சிக்கிய நிறுவனங்கள் பல. உதாரணமாக, ப்ளாக்பெர்ரி (ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனம் – ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களால் பாழானது இதன் எதிர்காலம்), பார்டர்ஸ் (2011-ல் செயலிழந்த மிகப் பெரிய புத்தக விற்பனை செயின் ஸ்டோர் – அமேசான் போன்ற ஆன்லைன் புத்தக விற்பனையாளர் களால் பாழானது இதன் எதிர்காலம்).
மாறுதல் சூறாவளி தங்களைத் தாக்க வந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள ப்ளாக்பெர்ரி நிறுவனம் உணர்ந்த போதிலும், அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான காரணத்தைச் சொல்கிறார்.
இதற்குக் காரணம், மாற்றங் களைக் கொண்டுவர நினைக்கும் வேளையில் தாங்கள் ஏற்கெனவே பின்பற்றும் வழிமுறைகளையே கொஞ்சம் தட்டி, கொட்டி மாற்றிச்செய்ய முயற்சி செய்வதே. அதிரடியாக வரும் மாறுதல்களை எதிர்கொள்ள புத்தம்புது நடைமுறைகளே உதவும் என்று புரிந்துகொள்ளாமல், நிறுவனத்தில் ஏற்கெனவே நடைமுறையில் செயல்களையே மாற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதுதான்’’ என்கிறார் ஆசிரியர்.
பொதுவாகவே, நிறுவனங்கள் தங்களது அடிப்படை உத்திகளை (Basic strategies) மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. எப்போதாவது எக்குத்தப்பாகச் சிக்கிக் கொண்டால் மட்டுமே அடிப்படை உத்திகளை மாற்ற முயற்சி செய்கின்றன. மாறாக, ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை தங்களுடைய அடிப்படை உத்திகள் சரிதானா என்பதை அளவீடு செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.
எந்த ஒரு நிறுவனமும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பிற்பாடு பெரிய ஆலமரமாகிறது. ஆரம்பக் காலத்தில் அனைவரும் இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதைச் சரிசெய்யலாம், இதைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம் என அனைவருமே சிறப்பாகச் செயலாற்றுவார்கள். புத்திசாலி களாக இருக்கும் நபர்களின் திறன்கள் வெகுவாகப் பயன்படுத்தப்படும்.
இப்படி ஆரம்பக் காலத்தில் திறமைசாலிகள் பலரும் ஒருங்கிணைந்து சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து வெற்றிக்கொடியை நாட்டி, லாபத்தைக் கொண்டு வருவார்கள்.
காலப்போக்கில் நிர்வாக அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு, நிறுவனம் சீரான லாபத்தை அறுவடை செய்துகொண்டிருக்கும் போதுதான் தொழிலைத் தகர்க்கும் (Disruptive) சூறாவளிகள் வருகின்றன. இந்தவித சூறாவளி களை எதிர்கொள்ள சாதாரணச் சூழலில் இயங்குகிற இந்தப் படிநிலை செயல்பாட்டு நிர்வாக அமைப்புகள் சுத்தமாகச் சரிப்பட்டு வருவதில்லை.
பெரிய அளவிலான மாற்றங் களைச் செய்ய நினைக்கும்போது, சாதாரணச் சூழலில் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நபர்கள், அந்த வேலையை விட்டுவிட்டுப் புதுமை களை அதிகரிக்க அரும்பாடுபட வேண்டியிருக்கும். அவருடைய வேலை உற்பத்தித்திறனை அதிகரிப்பதுதானே என்று வீண்பேச்சு பேசிக்கொண்டிருந் தால், செய்ய நினைக்கும் மாறுதல் களில் தோல்வி நிச்சயம் என்கிறார் ஆசிரியர்.
தொழிலைத் தகர்க்கும் சூறாவளியை எதிர்கொள்ளத் திட்டமிடும் நிறுவனம், அதற்கென நியமிக்கும் குழுவில் படிநிலை (Hierarchy) நிர்வாக அமைப்பில் இருந்து மாறி, நெட்வொர்க் அமைப்பிற்கு வழிவகை செய்யவேண்டும். இந்த மாறுதலைச் செய்யாமல், எத்தனை திறமைசாலிகளை இறக்கினாலும் வெற்றி கிடைப்பது கடினம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த நெட்வொர்க் முறையில் பின்வரும் எட்டு துரிதப்படுத்திகளை (Accelerators) செய்தால் வெற்றி நிச்சயம்
என்கிறார்.
முதலாவதாக, நாம் செய்ய நினைக்கும் காரியம் மிக மிக அவசரமானது என்பதை அனைவரும் உணரும்வகையில் அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, இந்தக் குழுவில் இருக்கும் நபர்கள் ஒருவருக்கொருவர் கூட்டணியாகவும் உதவும் மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டும். சூறாவளி போன்ற சூழ்நிலை களில்கூட அவர்கள் நிதானமாக வேலை செய்யும் பண்பைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
மூன்றாவதாக, தற்போதைய அத்தியாவசியத் தேவை என்பது மாற்றம் மற்றும் வேகம் என்ற இரண்டையும் அந்தக் குழு முழுமையாக உணர்ந்திருக்கவேண்டும். இதுவே, நெட்வொர்க் குழுவின் சிறப்புக் குணாதிசயம். படிநிலை அடிப்படையில் செயல்படும் நிர்வாகத்திற்கு அந்த அவசரம் ஒரு நாளும் புரியாது.
நான்காவதாக, இந்தக் குழுவிற்குத் தேவை திறமையான தொண்டர்கள் என்பதைத் தலைமை நிர்வாகம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். சூறாவளியிலிருந்து காக்கத் தொண்டர்கள் ஈர்க்கப்பட வேண்டுமே தவிர, தொண்டுக்காகப் பணிக்கப்படக் கூடாது. அப்படிச் செய்தால், தொண்டு செய்வதற்காகப் பணிக்கப்பட்டவர் களிடம் அந்த நேரத்தில் தேவைப்படும் அதீத ஈடுபாடு நிச்சயமாக முழுமையாக இருக்காது. இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது.
ஐந்தாவதாக, உச்ச நிர்வாகம் இந்தக் குழுவின் செயல்பாடு களில் தடைகள் வந்தால், அதை எப்படி நீக்குவது என்பதை உடனுக்குடன் சிந்தித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக, ஒரு ஸ்டார்ட்அப் போன்ற சூழலைத் தரவேண்டியிருக்கும்.
ஆறாவதாக, இந்தக் குழுவின் சின்னச் சின்ன வெற்றி களைக்கூட நிர்வாகம் கொண்டாடவேண்டும். இது மற்றவர்களுக்கு அதீத அவசரம் குறித்த புரிந்துகொள்ளலை ஏற்படுத்தவும், மற்ற துறையினரிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பைப் பெறவும் வழிவகை செய்யும்.
ஏழாவதாக, தொடர்ந்து இந்தக் குழு வேகமாகச் செயல்பட்டு, புதிய வழிவகைகளைக் கண்ணும்கருத்துமாகச் செய்து, தேவைகள் வருவதற்கு முன்பே செய்துதரவேண்டும்.
எட்டாவதாக, இந்தக் குழு செய்த மாறுதல்களை நிறுவனம் முழுவதும் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தொடர்ந்து இந்த முயற்சிகள் செய்யப் பட்டால் கலாசார மாறுதல் ஏற்பட்டு ஒட்டுமொத்த நிறுவனமுமே தொழிலைத் தகர்க்கும் சூறாவளியிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் தகுதி பெற்றதாகும் என்கிறார் ஆசிரியர்.
அதிவேகமாகவும், எக்கச்சக்கப் போட்டியுடனும் மாறி வருகிற தொழில் சூழலில் தொழில்முனைவர்களும், நிர்வாகம் செய்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. புதுமையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் அதிவேகமாக செயல்படுகிறவர்களுக்குத் தோல்வி என்பது இல்லவே இல்லை!
நாணயம் விகடன் டீம்
சிஸ்டம் மாற வேண்டும்!
‘‘பொதுவாக, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஒரு விஷயம் சென்றுசேர நிறுவனரீதியாக ஒரு சிஸ்டத்தை வைத்திருப்பார்கள். ஒரு நிறுவனம் தொழில் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையிலும்கூட சில நிறுவனங்களில் அதே சிஸ்டத்தை கடைப்பிடிக்கின்றனர். சிக்கலை எதிர்கொள்ளும் போது இந்தவித ஃபைல் நகர்த்தும் டெக்னிக் சுத்தமாக உதவாது என்று சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், நிர்வாக அடுக்குமுறை (Hierarchical system) என்பது எந்த அளவுக்கு நெகிழ்வுடன் இருக்கிறதோ, அந்த அளவுக்கே மாறுதல்கள் செழித்துவளர வாய்ப்புள்ளன’’ என்கிறார்.