நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

ந்தியாவிலேயே முதன்முதலாக, ‘சீனியர் சிட்டிஸன் ஹோம்ஸ்’ உருவானது கோயம்புத்தூரில்தான். கோவையின் இதமான வானிலை,  மக்களின் பழக்கவழக்கம், அமைதியான இயற்கை சூழல் உள்ளிட்ட வைகளுக்காக கோவையை எல்லோரும் விரும்புகிறார்கள், குறிப்பாக வயதானவர்கள்.  எனவே, ஓய்வுக்காலத்தில் ஒன்றுகூடி தங்கும் குடியிருப்புகள் கோவையில் அதிகரித்து விட்டன. கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிஸன் ஹோம்கள் இப்போது கோவையில் செயல்படுகின்றன. இதில் பலவற்றில் இப்போது பிரச்னை. தபோவனம், தியான பிரஸ்தா, வானபிரஸ்தா உள்ளிட்ட ஹோம்களில் குடியிருப்பவர்கள் சிலர் நீதிமன்றம் வரை சென்று நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அப்படி அங்கு என்னதான் பிரச்னை? அவர்களை நேரில் சந்தித்துப்  பேசினோம்...

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

தபோவனத்தைச் சேர்ந்த சி.எஸ்.குமார், “வயதான காலத்தில் உறவு நெருக்கடி, பண நெருக்கடி, ஆரோக்கிய நெருக்கடி உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகும் சீனியர் சிட்டிஸன்களுக்கெல்லாம் இந்தக் குடியிருப்புகள் ஓர் வரப்பிரசாதம். ஏறக்குறைய ஒரே வயதுள்ளவர்களெல்லாம் அருகருகில் குடியிருக்கும்போது நாம் தனித்து விடப்பட்டுள்ளோம் என்ற உணர்வு யாருக்கும் வராது. தவிர, காலம் முழுக்க நமக்கு சமைத்துப்போட்டே சலித்துப்போன வீட்டுக்காரம்மாவுக்கும் இங்கே விடுதலை.
இங்கே நாம் யாரையும் கெஞ்சவேண்டிய தில்லை. யாராலும் புறக்கணிக்கப்பட வேண்டியதில்லை. மகனோ, மகளோ...  அவர்களுக்கும் நாம் இடையூறாக இருக்க வேண்டியதில்லை. வசதிபடும்போது அவர்கள் இங்கே கொஞ்ச நாள் தங்கி விட்டுப் போகலாம். அதற்கும் வாய்ப்பில்லை எனில், ஸ்கைப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் நலம் விசாரித்துக்கொள்ளலாம்.  

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

இப்படியெல்லாம் நினைத்துத்தான், செட்டில்மென்ட் பணத்தையெல்லாம் வைத்து சீனியர் சிட்டிஸன் ஹோமில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினோம்.  ஆனால், இங்கே வந்தபின் இருந்த நிம்மதியும் போய்விட்டது’’ என்றவர், கவலையுடன் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இங்கே சுமார் 80 வீடுகள் இருக்கு. அதில் 24 வீடுகள் லீஸுக்குத் தந்திருக்காங்க. மீதமுள்ளவை சொந்த வீடுகள். அவர்கள் செய்துதருவதாகச் சொன்ன எந்த வசதியையும் இன்று வரை செய்துதரவில்லை. படிப்படியாகச் செய்வார்கள் என்று ஆரம்பத்தில் நம்பினோம். ஆனால், போகப்போக நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

எங்களுக்குக் குடிப்பதற்கு சுத்தமான ஆர்.ஓ தண்ணீர்கூட தருவதில்லை. மருத்துவ வசதி இல்லை. கடமைக்கு ஒரு நர்ஸை வைத்திருக்கிறார்கள். அதனால் என்ன பிரயோஜனம்?  ஆனால், பராமரிப்புக் கட்டணத்தையும், சாப்பாட்டு விலையையும் படிப்படியாக உயர்த்தினார்கள். நாளொன்றுக்கு ஒரு நபருக்கான சாப்பாடுக் கட்டணம் 90 ரூபாயிலிருந்து 110, 120, 130, 140 என்று உயர்த்தினார்கள்.

சாப்பாட்டுக்காக 200 ரூபாய்கூட வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், அதற்கு முறையான கணக்குக் கொடுங்கள் என்று கேட்டோம். அங்குதான் பிரச்னை ஆரம்பமானது. கணக்குக் கேட்டவர்களுக்கெல்லாம் சாப்பாட்டை நிறுத்தினார்கள்.  நாங்கள் செய்வதறியாது தவித்தோம். 

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

இங்கே வசிப்பவர்கள் அனைவரும் வயதானவர்கள். அதனால், எந்தச் சூழலிலும் சாப்பாட்டை மட்டும் நிறுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், இவர்கள் நிறுத்தினார்கள். திடீரென்று சாப்பாடு நிறுத்தப் பட்டதால் சுப்பிரமணி என்பவர் மயங்கி விழுந்து பெரிய பிரச்னை ஆனது.

கணக்குக் கேட்ட 14 பேர் வெளியிலிருந்து வரவழைத்துச் சாப்பிட்டோம். மற்றவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நிர்வாகத்தோடு போராடமுடியாத சூழல். வெளியில் போக சொல்லி விட்டால் எங்கே போவதென்ற பயத்தில் நிர்வாகம் கேட்ட  பணத்தைத் தந்து சாப்பிட்டார்கள். நாங்கள் போலீஸுக்குப் போனோம்...’’ அவர் நிறுத்த, அவரோடு சேர்ந்து போராடும் பரமேஸ்வரன் தொடர்ந்தார்.

‘‘சாப்பாடு, பராமரிப்புக்  கட்டண உயர்வு தவிர வேறு பிரச்னைகளும் இருக்கு. இங்கே லாங்க் டேர்ம் லீஸ் முறையில் வீடு எடுத்தவர்களுக்கு முறையாகப் பத்திரப்பதிவு செய்து  தரவேண்டும். அப்போதுதான் அது சட்டப்படி செல்லும். ஆனால், இங்கு ஒருத்தருக்குக்கூட அப்படிப் பதிவு செய்து தரவில்லை. இதனால் இங்கிருப்பவர்களுக்குச் சட்டப்படி எந்த கேரன்டியும் இல்லை. குடியிருப்பவர் திடீரென்று இறந்து விட்டால் அவர் செலுத்திய பணத்தை அவரின் வாரிசுகள் திரும்பப் பெறுவதிலும் சிக்கல். இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. வெறுமனே சர்க்குலர் அனுப்புவதுடன், கடமையை முடித்துக் கொள்கிறார் கள். மேலும்,  20 வருஷ லீஸ் என்று சொல்லிவிட்டு, டாக்குமென்டில் ‘லிவ் இன் லைசென்ஸ்’ என்று போட்டுத் தருகிறார்கள். இதற்கு அர்த்தம், 11 மாதத்திற்கு மேல் அது செல்லுபடி யாகாது. 

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு, எங்களிடம் பணத்தை வாங்கி, அதன் மூலம்தான் வீட்டைக் கட்டினார் இந்த நிறுவனத்தின் புரமோட்டர். இங்குள்ள குடியிருப்பு களில் 24 வீடுகள் மட்டும்தான் அவருக்குச் சொந்தம்.

இங்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களின் பிள்ளைகளுக்கு போன் செய்து, ‘உங்க அப்பா இங்க பிரச்னை பண்ணிக் கிட்டு இருக்கார்’னு இல்லாததையும், பொல்லாத தையும் சொல்ல, வேலை நெருக்கடியில் இருக்கும் அவர்கள், ‘‘வயசான காலத்துல அடங்கி ஒடுங்கி இருக்க முடியாதா... நாங்கதானே பணம் கட்டுகிறோம்’’ என்று எங்களைத் திட்டுகிறார்கள். 

ஆனாலும், நாங்கள் விடுவதாக இல்லை. எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. இதுவரை எதற்கும் அவர் ரசீது  தந்ததில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருக்கிறோம். அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.  தபோவன் சீனியர் சிட்டிஷன் ஃபவுண்டேஷனின் லைசென்ஸை கேன்சல் செய்திருக்கிறார்கள். விரைவில் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்கள்.

அடுத்ததாக, கோவை வடவள்ளியில் உள்ள வானபிரஸ்தாவிற்கு சென்றோம். “பெயர்கள் வேண்டாம் என்றபடி பேசினார்கள் சிலர். ‘‘இதன் புரமோட்டருக்கு தியான பிரஸ்தா, வானபிரஸ்தா, பிரமிட் என மூன்று சீனியர் சிட்டிஸன் ஹோம்கள் உண்டு. சாப்பாடு, பராமரிப்புக் கட்டணத்தை 18 வருடங்களில் 910% உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது மாதத்திற்கு ரூ.5,500 கட்டணம். ஆனால், எந்த வசதியும் கிடையாது. கிளினிக் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள் அதற்குக் கூடுதல் கட்டணம் தரவேண்டும். 

18 ஆண்டுகளுக்குமுன், இங்கே ‘லைஃப் டைம் லீஸ்’ என்றார்கள். அது சட்டப்படி செல்லாது. ஆகையால், 20 வருஷம் என்று தீர்மானித்து ஒவ்வொரு இருபது வருஷத்துக்கும் அந்த லீஸ் அக்ரிமென்டை புதுப்பித்துத் தாருங்கள் என்றோம். ஒப்புக் கொண்டார்கள். அது மட்டுமல்ல,  வீட்டைக் காலி செய்யும்போது வீட்டின் அன்றைய மார்க்கெட் வேல்யூ என்னவோ, அதில் 10% போக மீதத்தொகையை அப்ரிசியேஷ னாகத் தருவோம் என்றார்கள். அப்படி எதுவும் தரவில்லை.

தியானபிரஸ்தாவில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 2016-ம் ஆண்டில்  தொடர்ந்த வழக்கில், சீனியர் சிட்டிஸன் ஹோம்கள்  எப்படி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தது (GO NO:83 -23/11/2016). இந்த ஆணையை ஒவ்வொரு சீனியர் சிட்டிஸன் ஹோம்களும் பின்பற்றினாலே நாங்கள் சொல்லும் பிரச்னை 99% சரியாகிவிடும். ஆனால், அதை யாரும் செயல்படுத்தவில்லை. அரசும் கண்டுகொள்ளவில்லை’’ என்று மனம்நொந்து பேசினார்.
 
இது தொடர்பாக விளக்கம் கேட்க தபோவனம் புரமோட்டர் வரதராஜனிடம் பேசினோம். “அவர்கள் சொல்வது அபாண்டமான பொய். வங்கியில் கடன்  வாங்கி தான் வீடு கட்டியிருக்கிறேன். ‘லிவ் இன் லைசென்ஸ்’ என்று இப்போது சொல்பவர்கள் அப்போது ஏன் கையெழுத்துப் போட்டார்கள்? ஒரு நபருக்கு மூன்று வேளை சாப்பாடு, இரண்டு நேரம் காபியை நூறு ரூபாயில் தர முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள். மற்றபடி நான் சொன்ன எல்லா வசதிகளையும் இங்கே செய்து தந்திருக்கிறேன். மருத்துவமனை அமைத்துத் தருவேன் என்றெல்லாம் நான் சொன்னது கிடையாது. சிலர் மட்டுமே பிரச்னை செய்கிறார்கள். குடியிருக்கும் அனைவரிடமும் பேசிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். அவதூறான குற்றச்சாட்டின் பேரிலேயே ஃபவுண்டேஷன் லைசென்ஸை கேன்சல் செய்திருக்கிறார்கள். என்னிடம் எல்லா ஆதாரங் களும் இருக்கின்றன. இங்கு யாரையும் ஏமாற்றவில்லை, மோசடி செய்யவில்லை’’ என்றார்.

வானபிரஸ்தா சார்பாக பேசிய வெங்கட்ராமன், “எல்லாவற்றுக்கும் கணக்கு  எழுதிப்போட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். வானபிரஸ்தாதான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. அப்போது இது எப்படி வரப் போகிறது என்று தெரியாது. அதனால் அப்போது மார்க்கெட் வேல்யூ அப்ரிசியேஷன் என்று பத்து பேருக்கு வாக்குத் தந்து விட்டார்கள். ஆனால், இப்போது எப்படிக் கொடுக்க முடியும்? பில்டிங் பெயின்ட் அடிப்பதில் ஆரம்பித்து, சாலையை சீர் செய்வது, பிளம்பிங் ஒர்க் பார்ப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கிறது தெரியுமா? அதற் கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்? எல்லோரும் சேர்ந்து தானே கொடுத்தாகணும். பத்து விரல்களும் ஒரேபோல் இருப்ப தில்லை; இதை அழிக்கணும் என்றே திட்டமிட்டு சிலர் செயல்படுகிறார்கள்’’ என்றார்.

வயதில் மூத்தவர்களை நிம்மதியாக வைத்திருப்பது நம் அரசின் கடமை. இந்த விஷயத்தில் தமிழக அரசாங்கம் உடனே தலையிடுவதே நல்லது.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: தி.விஜய்

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!

லாப நோக்கம் கூடாது!

கோ
வை வடவள்ளியில் செயல்பட்டுவரும் ‘நானா நானி ஹோம்ஸ்’ சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்பதற்காக ஒரு விசிட் அடித்தோம். உள்ளுக்குள்ளேயே கோவில், நீச்சல்குளம், ஆயுர்வேதக் குளியல், சினிமா தியேட்டர், ப்ளே ஹால், ஜிம், இரண்டு டாக்டர்களுடன் கூடிய கிளினிக். இரண்டு ஆம்புலன்ஸ் என முதியோர்களுக்கான சகல வசதிகளும் இருக்கிறது. இதன் இயக்குநர் உமா மகேஷ்வரியிடம் பேசினோம்.

நிம்மதி இல்லாமல் போன ஓய்வுக்கால வீடுகள்!



“மற்ற இடங்களில் என்ன நடக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இங்குள்ளவர்கள் ஏன் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதில் லாப நோக்கம் இருக்கவே கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் எனற எண்ணத்தோட யாரும் இதை ஆரம்பிக்கக்கூடாது. அதேசமயம், இது இலவச சேவையும் கிடையாது. தவிர, நாங்கள் லீஸுக்கோ, வாடகைக்கோ கொடுப்பதில்லை. சொந்த வீடுகள்தான்.  நிர்வாகத்தை மட்டும் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் என்ன வாக்குக் கொடுத்தோமோ, அதைவிட அதிகமான வசதிகளையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். நாம் சொன்னவற்றை செய்யத் தவறும்போது இதுமாதிரியான பிரச்னைகள் வரும்’’ என்றார்.