
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
தருண் தன் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக முடிவு செய்ததும், வருணையும் சினிமாவுக்கு அழைத்தான்.

“நான் வரலை தருண். எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நான் ஜாப் ஜாயின்ட் பண்ணி ஆறு மாதம் ஆயிடுச்சு, எப்படியும் கூடியசீக்கிரம் அப்ரைசல் வைப்பாங்க. என்னோட வேலையில் என்னென்ன இன்கம்ப்ளீட்டா இருக்கு, எதைச் சீக்கிரம் முடிக்க முடியும்னு ஒரு டேட்டாபேஸ் எடுத்துக்கிட்டிருக்கேன்” என்றான்.
“ஏன்டா, நானும் நீயும் ஒரே கம்பெனிதான்; ஒரே டிப்பார்ட்மென்ட்லதான் வேலை பார்க்குறோம். நான் எப்படி ஜாலியா இருக்கேன். நீ எப்பப் பாரு எதையாவது சொல்லிகிட்டிருக்க...” என அலுத்துக்கொண்டான் தருண்.
“உனக்குத்தான் தெரியுமே. நான் சின்ன வயசுலேயிருந்தே டைம்டேபிள் போட்டுத்தான் என்னோட வேலைகளை கம்ப்ளீட் பண்ணுவேன்னு. என்னைக் கட்டாயப்படுத்தாதே” எனக் கறாராக மறுத்துவிடவே, தருணும் அவனது நண்பர் களும் சினிமாவுக்குச் சென்றனர். வருண் தன்னுடைய அன்றைய வேலைகளை முடித்துவிட்டான்.

தருணும், வருணும் அண்ணன் தம்பிகள் மட்டுமல்ல, ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவர்களும்கூட. வருணுக்கு அன்றைய வேலைகள் அன்றே முடிய வேண்டும். நாளை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அன்றே முடியாத பட்சத்தில் மறுநாளேனும் முடித்துவிடுவான்.
ஆனால், தருண் அப்படியே நேரெதிர். அவனுக்குத் தோன்றும்போது வேலையைச் செய்வான். தருண் அதிக நேரம் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் போக்கிக் கொண்டிருப்பான்.
இப்படியே ஒருமாதம் சென்றிருக்கும். தருண் கொஞ்சம் டென்ஷனாக இருந்தான். “என்னாச்சு, ஏன் இப்படி இருக்கேன்னு” வருண் பலமுறை கேட்டும்கூட, தருண் சரியாகப் பதில் சொல்லவேயில்லை. எப்படியாவது இன்று தருணிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வருண் முடிவெடுத்திருந்தான்.
உள்ளே வந்த தருணிடம், “என்னாச்சு உனக்கு? நீ ஆளே சரியில்லையே. நீ என்ன விஷயமுன்னு சொன்னாத்தான் என்னால முடிஞ்ச உதவியைச் செய்ய முடியும்” என்றான்.

தருண் கவலையோடு சொல்ல ஆரம்பித்தான். “எனக்கு ஒரே நேரத்துல ஏகப்பட்ட பிரச்னை. ஆபீஸ்ல மேனேஜர் ஒரே டார்ச்சர். என்னோட வொர்க் ரிப்போர்ட்டை முதல் மாதத் திலிருந்து கேக்குறார். நெக்ஸ்ட் வீக் ஃபாரின் போறமாதிரி இருக்கும் போல. ஆனா, என்னோட பாஸ்போர்ட் ரெனிவல் டேட் முடிஞ்சு ஒரு மாதம் ஆகுது. ரெனிவல் பண்ணணும். ஆனா, அதிலேயும் சிக்கல். நம்மோட இந்த வீட்டு அட்ரஸுக்கான புரூப் என்கிட்ட எதுவுமே இல்லை.இன்னைக்கு பண்ணலாம், நாளைக்கு பண்ணலாமுன்னு நாலு மாசம் ஓடிப்போச்சு. இப்ப என்ன அவசரம் இருக்குன்னு விட்டுட்டேன்” என்றான் தருண்.
“சரி, வேற என்ன பிரச்னை” என்று கேட்டான் வருண்.
“கிரெடிட் கார்டு பில் கட்ட மறந்துட்டேன். அதுவும் லாஸ்ட் மன்த் செம செலவு வேறயா... இன்ட்ரஸ்ட் ஏகத்துக்கும் கட்றமாதிரி இருக்கு” என்று தருண் சொல்ல, “உன் நிலைமையைப் பார்த்தா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு? பின்னே என்னடா. நீ சொன்ன எல்லா விஷயத்திலேயும், அதை செய்யவேண்டிய நாள் முன்கூட்டியே தெரிஞ்சிருந்தும் பண்ணாமவிட்டது உன்னோட தப்புத்தானே” என்றான் வருண்.
“ஆமாம், தப்புத்தான். இதை யெல்லாம் சரிபண்ணி சமாளிக்க எனக்கு வழிசொல்வேன்னு பார்த்தா சிரிச்சுகிட்டிருக்க” என்றான் தருண்.
“சரி, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்ற வருண், சில ஜடியாக்களைக் கொடுக்க, அவற்றைக் கேட்டு தருண் தன் வேலைகளை எளிதாக முடித்தான்.
ஏன் தருணுக்கு இந்தச் சிக்கல், தருணுக்கு வந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க சில விஷயங்களைச் சொல்கிறேன்.
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டியது, ஒரு நாளைக்கு என்றைக்குமே 24 மணி நேரம் என்பதையே. அது 25 மணி நேரமாக எப்போதும் மாறப் போவது கிடையாது.
ஒரு வேலையை நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடும் போது, மறுநாளைக்கான வேலை தள்ளிப்போகிறது. அதனால் அன்றைய வேலையை அன்றைக்கே முடிக்க முயற்சி செய்யுங்கள்.
நம் வேலைகளைச் செய்ய நமக்குக் கிடைக்கக்கூடிய நேரம் என்பது தோராயமாக எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரைக்கும்தான்.எட்டு மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக அவசியம். தூக்கம் கெடும்போது நம்முடைய வேலையின் வேகம் குறைவதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.
உணவு எடுத்துக்கொள்ள இண்டு மணி நேரம் ஒதுக்கி விடுவோம். உணவு என்பதும் தூக்கத்தைப்போலவே, மிக முக்கியமான ஒன்றாகும். அதுவும் நேரத்திற்கு எடுத்துக்கொள்வது மிக அவசியமானது. அதிக வேலையின் காரணமாக நேரம் கடத்திச் சாப்பிடுவதோ அல்லது அவசரமாகச் சாப்பிடுவதோ உடலுக்குத் தீங்கையும், மனதுக்குச் சோர்வையும் உண்டாக்கி வேலையின் வேகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.
மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் உடல் தூய்மைக்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்திவிடுவோம். மீதமிருக்கும் இந்த எட்டு அல்லது பத்து மணி நேரம்தான் நாம் உண்மையாகவே நம் உயர்வுக்காகப் பயன்படுத்துகிறோம். நமக்கிருக்கும் மொத்த வேலையில் 80% வேலையை நாம் 20% நேரத்திற்குள் நம்மால் முடித்துவிட முடியும்; ஆனால், மீதமிருக்கும் 20% வேலையை முடிக்க நமக்கு 80% நேரம் தேவைபடுகிறது. இதற்கு ‘பெரிட்டோ அனாலிசிஸ்’ என்று பெயர். இதன் அடிப்படையில் நாம் நேரத்தினைப் பயன்படுத்தினால், வேலையின் பளு நிச்சயம் நமக்குத் தெரியாது.
சரி, நம்மிடம் எட்டு மணி நேரம்தான் இருக்கிறது எனில், இந்த நேரத்துக்குள் செய்யவேண்டிய வேலைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
1. மிக முக்கியமானது. ஆனால், உடனடியாகச் செய்யவேண்டியது. உதாரணமாக, ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் எனில், முதல் இடத்துக்கு முன்னேற முயற்சி செய்ய அல்லது இருக்குமிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் வேகத்தை அதிகரிப்பது.
2. மிக முக்கியமானது, ஆனால் எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடியது. உதாரணமாக, போன் பில், கரன்ட் பில், இ.எம்.ஐ இதெல்லாம் முக்கியமானதுதான். ஆனால், எந்தெந்தத் தேதியில் செலுத்தி முடிக்க வேண்டும் என நமக்கு முன்கூட்டியே தெரியும். எனவே, நேரத்தைத் தீர்மானம் செய்துகொண்டு செய்து முடிக்கலாம்.
3. அவசரம், ஆனால் முக்கியமானது கிடையாது: இது மாதிரியான காரியங்களைத் தள்ளிப் போடலாம். உதாரணமாக, கார் ஓட்டும்போது போன் வருகிறது எனில், அது முக்கியமானதாக இருந்தாலும், உடனே எடுத்துப்பேச வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் நேரம் தள்ளிப்போடலாம்.
4. முக்கியமானதும் கிடையாது; அவசரமும் கிடையாது. இந்தக் காரியங்களைச் செய்யாமல்விடுவதே நல்லது. உதாரணமாக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை. உபரியாக நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கலாம்.
இப்படி உங்கள் நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டால், உங்களுக்கு இருக்கும் காலத்துக்குள்ளேயே அனைத்துக் வேலைகளையும் எளிதில் முடிக்கலாம். எந்த வேலையையும் செய்யாமல் விட்டுவிட்டோமே எனப் பிற்பாடு வருந்த வேண்டிய தேவை இருக்காது!
(நிறைவு பெற்றது)
படங்கள் : ப.சரவணக்குமார்

லீஸுக்கு நிலம்... ஜி.எஸ்.டி வரியா?
விவசாய நிலத்தை லீஸுக்கு விட்டால், ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் வாட்ஸ்அப்களில் தகவல் பரவி பீதியை ஏற்படுத்தி யது. விவசாய நிலத்தை ஒத்திக்குவிட்டால் அதற்கு 18% வரி கட்ட வேண்டும் என்று வாட்ஸ் அப்களில் பரவிய இந்தத் தகவல் தவறானது என மத்திய அரசு தெளிவுபடுத்தி யுள்ளது. மத்திய அரசானது ஒப்பந்த விவசாய முறையைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது. இந்த முறையைத் தோல்வி அடையச் செய்யும் ஒரு முயற்சிதான் இந்தப் பொய்ப் பிரசாரம் என்றும், விவசாயிகள் நிலத்தை ஒத்திக்குவிட்டால், ஜி.எஸ்.டி வரி கட்டத் தேவையில்லை என்றும் மத்திய அரசாங்கம் சொல்லியிருக்கிறது.