நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்!”

“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்!”

விருது நிகழ்ச்சியில் எழுந்த கோரிக்கை

மிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் சமூக அக்கறையுடன் செயல்படும் நிறுவனங்களில் ஸ்ரீராம் குரூப்புக்கு முக்கிய இடம் உண்டு. பொருளாதாரம் தொடர்பாக மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்களைத் தேர்வு செய்து கடந்த ஆறு ஆண்டுகளாக விருதுகளை வழங்கி வருகிறது ஸ்ரீராம் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடக்க, இந்தியா முழுக்க உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள் அதில் கலந்துகொண்டனர்.   

“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்!”

இந்த விருது நான்கு பிரிவுகளில் அளிக்கப் பட்டது. பொருளாதாரக் கொள்கைகள் பிரிவில் ஸ்க்ரோல்.இன் (Scroll.in) இணையதளத்தில் எழுதிய கட்டுரைக்காக ஃபைனான்ஷியல் மார்க்கெட் பிரிவில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழின் அபிஷேக் வாக்மரேவுக்கு விருது கிடைத்தது. ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன் பிரிவில் தி எக்னாமிக் டைம்ஸ் நாளிதழின் ஜோயல் ரெபெல்லாவுக்கும், சலோனி சுக்லாவுக்கும் விருது தரப்பட்டது. துறை சார்ந்த பிரச்னைகளைச் சொல்லும் (Sectoral issues) பிரிவில் தி எக்னாமிக் டைம்ஸ் ஹரி புலக்கட்டுக்குக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது மின்ட் பத்திரிகையைச் சேர்ந்த பொருளாதாரப் பத்திரிகையாளர் மனஸ் சக்ரவர்த்திக்குத் தரப்பட்டது. ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது  மூன்று ஆண்டுகளுக்குமுன்பு காலமான சி.பி.குருவில்லாவுக்கு தரப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி. ‘‘நம் நாட்டின் பொருளாதார விஷயங்களை நாம் பார்க்கும்போது ஆங்கிலேயர்களின் மூளையைக் கொண்டு பார்க்கிறோம். இந்த ‘ஆங்கிலோ சாக்‌ஷன்’ அணுகுமுறையால் நம் மக்களின் நிதி தொடர்பான பழக்கவழக்கங்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

உதாரணமாக, ஜப்பான் மக்கள் வங்கிச் சேமிப்பைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். மக்கள் பணத்தையெல்லாம் வங்கியில் கொண்டு வந்து போடுகிறார்கள் என்பதற்காக, வட்டியைப் படிப்படியாகக் குறைத்து, ஒரு சதவிகிதத்துக்கும் கீழே கொண்டுவந்தார்கள். ஆனால், வங்கியை நோக்கி மக்கள் வருவது குறையவில்லை. இனி வங்கியில் பணம் போட வேண்டுமெனில், கட்டணம் கட்ட வேண்டும் என்றார்கள். அதையும் ஒப்புக் கொண்டார்கள். காரணம், வங்கிகள்மீது ஜப்பான் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை எப்படி உருவானது என்று புரிந்துகொள்ளாமல், அவர்களிடம் பங்குச் சந்தை பற்றி வலியுறுத்தி என்ன பிரயோஜனம்?

பரஸ்பரம் பொருளாதார உதவி செய்து கொள்வது நமது சமூகத்திலேயே இருப்பதை நம்மில் எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்? மொய் எழுதும் பழக்கும் இன்றைக்கும் பல ஊர்களில் இருக்கிறது. ‘உன் வீட்டுத் திருமணத்துக்கு நான் உதவுகிறேன். என் வீட்டுத் திருமணத்துக்கு நீ உதவு’ என பரஸ்பரம் உதவும் இந்த முறையை நாம் நல்ல விஷயமாகப் பார்ப்பதில்லையே! கொங்கு நாட்டுப் பகுதியில் தொழிலுக்குத் தேவை யான மூலதனத்தைத் திரட்ட வங்கிக்குச் செல்லாமல், சீட்டு கட்டுவதன்மூலம் உருவாக்கிக்கொள்வது பற்றி நாம் ஏன் எழுதுவதில்லை? சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பற்றிச் சொல்லும் கட்டுரைக்கு ஒரு விருது வழங்க ஸ்ரீராம் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் மற்றும் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

- ஆகாஷ்