
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : கெட் பெட்டர் (Get Better)
ஆசிரியர் : டாட் டேவிஸ்
பதிப்பகம் : Simon & Schuster
உங்கள் அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்ப்பவர்களில் எத்தனை பேருடன் நல்ல உறவு இருக்கிறது என்று என்றைக்காவது யோசித்திருக் கிறீர்களா? காலம் முழுக்கச் சேர்ந்து பணி செய் பவர்களுடன் ஏன் நல்ல உறவை நம்மால் வைத்துக்கொள்ள முடியவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியருடன் எப்படி நல்லுறவைப் பேணி வளர்ப்பது என்பதைச் சொல்கிறது டாட் டேவிஸ் என்பவர் எழுதிய ‘கெட் பெட்டர்’ என்னும் புத்தகம். இந்தப் புத்தகம் சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பேணி வளர்ப்பதற்கான 15 பழக்கவழக்கங்களைப் பற்றிச் சொல்கிறது.
பொதுவாக, அடுத்தவர்களுடன் நல்லுறவு என்பது மனிதர்களுக்கு மிக மிக முக்கியமானது. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றில் இதுபோல் தனிமைப்பட்டோ அல்லது கூட இருப்பவர்களிடம் இருந்து ஒதுங்கியோ இருப்பவர்களுக்கு வாழ்வின் நடுவயதிலேயே உடல்நிலை மோசமடைவதாகவும், மூளை வேலை செய்யும் வேகம் குறைந்துபோவதாகவும், குறைந்த ஆண்டுகளே அவர்கள் வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது என்று சொல்லும் ஆசிரியர், இதனாலேயே அலுவலக உறவைச் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஆசிரியர்.
ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்து பணியாளர்கள்தான். பணியாளர்கள் நடுவில் இருக்கும் சுமூகமான நல்லுறவும், அந்த நிறுவனத் தின் உறவுக் கலாசாரமும் பணியாளர்களைவிட முக்கியம். தனிமனிதருக்கு எப்படி உறவு என்பது முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு நிறுவனத்திற் கும் அதில் பணி செய்யும் பணியாளர்களுக்கு இடையே இருக்கும் சுமூகமான உறவும் முக்கியம். சக பணியாளர்களுடனான இந்த உறவு எதனால் கெடுகிறது, அதற்கான தீர்வு என்ன என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் சொல்கிறது இந்தப் புத்தகம்.
‘‘எப்போதாவது நீங்கள் இதுதான் நிஜம் என்று நினைத்துக் கொண்டிருப்பதற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் நடப்புகள் இருந்துள்ளதா? அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி தவறானது. இன்று முதல் நீங்கள் ஒரு சரியான கண்ணாடியை அணிந்து கொண்டு உங்கள் சுற்றுப்புறத்தைப் பார்க்க ஆரம்பியுங்கள்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர். இதில் கண்ணாடி என்று ஆசிரியர் குறிப்பிடுவது பார்வை, எண்ணம், உணர்வு, செயல் என்ற எல்லா வற்றிலும் உங்களுடைய நிலைப்பாடு சரியான வகையில் இருக்கட்டும் என்பதைச் சொல்லத்தான்.
‘‘எப்போதாவது நீங்கள் அடுத்தவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்ற எண்ணமோ அல்லது சூழ்நிலைகளின் கைப்பாவையாக இருக்கிறீர்கள் என்ற எண்ணமோ அல்லது உங்களுடைய உணர்வுப்பூர்வமான வேகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்ற எண்ணமோ உங்களுக்குத் தோன்றியுள்ளதா? அப்படியென்றால், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து மற்றவர்களிடம் பழகவில்லை என்று அர்த்தம்.

அப்படி உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபட சொல்லாதபட்சத்தில், உங்களுக்கு எல்லாமே யாரோ நடத்தி வைப்பதைப் போன்ற தோற்றமே தெரியும். உங்களால் அலுவலகத்தில் எதையுமே பாசிட்டிவாக ஆளுமை செய்ய முடியாது’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘நம்பிக்கையே உறவுக்கு வழிவகுக்கிறது என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். நம் அனைவருக்கும் வாழ்க்கையில் பலவகையான பாத்திரங்கள் (Role) இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வெற்றி என்பது, மற்றொரு பாத்திரத்தில் தோல்வியடைவதால் மட்டுமே வந்தது என்றால், உறவுகள் கட்டாயமாகக் கெட்டுப்போகவே செய்யும். ஏனென்றால், எப்போதுமே உங்கள் மனதில் நாம் அதைச் சரியாகச் செய்யவில்லையோ, இதைச் சரியாகச் செய்திருக்கலாமோ என்பது போன்ற எண்ணம் ஓடிக்கொண்டேயிருக்கும். ஒரு சில பாத்திரத்திற்கு உண்டானவற்றைக் கவனிக்காதுபோனால், அதுவே உறவுகளைக் கத்தரித்துவிடும். அதனாலேயே, ‘என்னத்தே வாழ்ந்து’ என்று ஒரு வெறுமை நமக்குத் தோன்றிவிடும்’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘நீங்கள் சகமனிதர்களைப் பார்வையாலேயே எடைபோடும் பழக்கம் கொண்டவரா, அப்படி எடை போட ஆரம்பித்தால் என்னவாகும்? இதற்குப்பிறகு இவர் சரிப்பட மாட்டார் என அனைவரையும் பார்த்த வுடனேயே எடை போட்டுக் கொண்டே போவீர்கள். வேற, வேற, வேற என்று புதியதாக ஆட்களைத் தேட ஆரம்பிப்பீர்கள். நீங்கள் கண்ணால் போடும் எடை தவறாக இருந்து கையில் இருக்கும் திறமையான நபர்களை விட்டுவிட்டு, புதிது புதிதாக ஆள்களைத் தேடினால் நீங்கள் தான் எதற்கும் சரிப்பட்டுவராத ஆளாகிப்போவீர்கள்’’ என்று எச்சரிக்கும் ஆசிரியர், இன்னொரு விஷயம் குறித்தும் எச்சரிக்கிறார்.
‘‘எப்போதாவது ஒருநாளின் இறுதியில் இன்றைக்கு ஒன்றையும் சாதிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியுள்ளதா? அப்படியொரு எண்ணம் வந்தால், ஜாக்கிரதையாக இருங்கள். அப்படி வந்தால், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். எண்ணம் என்றால் எண்ணத்தை அல்ல. அந்த எண்ணத்திற்கான காரணியை. எப்போது உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றும் என்றால் அந்த நாள் முழுவதுமே அலுவலகத்தில் ஃபயர் ஃபைட்டிங்கை மட்டுமே செய்துகொண்டிருந்த போதுதான். நாள் முழுக்க இப்படி ஃபயர் ஃபைட்டிங்கை மட்டுமே செய்து கொண்டிருந்தால், அதுவே உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, உறவுகளை முறியச்செய்துவிடும்’’ என்கிறார்.
‘‘நீங்கள் ஈடுபடும் எல்லா விஷயங் களிலும் உங்களுடைய நோக்கம் செயல் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரி யானதுதானா அல்லது அடித்தளத்தில் நோக்கம் ஒருவிதமாகவும், வெளியே வேறுவிதமாகவும் இருக்கிறதா? அப்படி இருக்கும்பட்சத்தில் உறவுகள் எப்படி நிலைக்கும்? ‘நான் எப்படி அனை வரையும் முட்டாளாக்கி ஜெயிக்கிறேன்’ என நீங்கள் வேண்டுமானால் மனதுக்குள் குதூகலித்துக்கொள்ளலாம். ஆனால், உங்களுடைய நோக்கம் அனைவருக்குமே வெட்டவெளிச்சமாக ஒரு நாள் தெரிந்தே தீரும். அதனாலேயே எக்கச்சக்கமான இடைஞ்சல்கள் உறவில் வரும்’’ என்றும் நம்மை உஷார் படுத்துகிறார் ஆசிரியர்.
‘‘உங்களுடைய பலத்தை நீங்கள் பிரமாண்டமாகப் பீற்றிக்கொள்ளும் நபரா? முதலில் அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், என்றைக் காவது ஒருநாள் யாராவது ஒருவர் உங்கள் பலம் குறித்த பிரசாரத்தை ஏளனப்படுத்தி, அதனால் உங்களுக்குக் கோபம் வந்து அதனாலேயே உறவுகள் தாறுமாறாகக் கெட்டுப்போய்விட வாய்ப்புள்ளது.
ஒருவர்மீது முதலில் அவநம்பிக்கையை வைத்துவிட்டு, பின்னர் அதை நம்பிக்கையாய் மாற்றக்கூடிய ஆளா நீங்கள்? உங்களுக்கும் உறவுகள் திருப்திகரமாக இருக்க வாய்ப்பேயில்லை. யாரையுமே எடுத்தவுடன் நம்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? மைக்ரோ மேனேஜ்மென்ட் என்னும் எல்லா விஷயங்களிலும் நீங்களே முடிவெடுக்கத் தலையைவிடுவீர்கள். அட, அந்த ஆள் எல்லா விஷயத்திலும் தலையிடுவாரப்பா என உங்களுக்கு எதிரான வெறுப்பே சக பணியாளர்களிடம் தோன்றிவிடும்’’ என்று உறவின் அடிப்படைகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார் ஆசிரியர்.
கடைசியாக, ‘‘உங்களைக் குறித்த மற்றவர்களுடைய உண்மையான கருத்தினை எப்போது நீங்கள் பெற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? அப்படி ஒரு விஷயத்தை நீங்கள் செய்ததாக நினைவிலேயே இல்லையா? அப்படியென்றால் உங்களுக்கு மற்றவர்களுடன் எப்படி நல்லுறவு இருக்கும்? மனசார நம்பிப் பேசவே உங்களுக்கு ஆளில்லையே என்கிறபோது, அப்புறம் எப்படி உறவும், அதைப் பேணுதலும் உங்களுக்குச் சாத்தியமாகும்?’’ என்று கிண்டலாகக் கேட்கிறார் அவர்.
இந்தப் புத்தகத்தை இறுதியாக ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறார் ஆசிரியர். ‘‘உங்களுடைய பணிவில்லாத குணம் உங்களுக்கு நல்ல உறவுகளைப் பெற்றுத் தராமல் இருந்திருக் கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டும். பணிவுபோனால் உறவு போயே போச்சு என்பதை நினைவில்கொள்ளுங்கள். பணிவில்லை என்றால், நீங்களே அலுவலகத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பீர்கள். ஆனால், பாசிட்டிவாக அல்ல, நெகட்டிவாக. பணிவின்மை என்பது எதையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உங்களுக்கு நீங்களே நிராகரிப்பதாகும். எனக்குத் தெரியும். நீ சொல்லி நான் கேட்கவேண்டியதில்லை. நீ சொல்லவேண்டியதே இல்லை என்றெல்லாம் பேசுபவர் களை விட்டு உறவு என்பது பலமைல் தூரம் ஓடிப்போய் விடாதா’’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.
பணியிடத்தில் உறவுகளைப் பேணிக் காக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். அதனாலேயே பல விதமான கருத்துகளை, பலவிதமான உதாரணங்களுடன் நச்சென சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
- நாணயம் விகடன் டீம்
‘நாம்’ என்றால் வெற்றி!
‘‘அலுவலகத்தில் நீங்கள் ‘நாம்’ என்று சொல்லும் டைப்பா அல்லது நான் என்று சொல்லும் டைப்பா’’ என்று கேட்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், ‘‘நாம் என்றால் உறவுகள் நிலைத்து நிற்கும். நான் என்றால் உறவுகள் நிலைப்பது கஷ்டம்தான். நான் என்று சொல்லும்பட்சத்தில், உங்களுக்குக் கிடைக்கும் வெற்றிகள் எல்லாம் குறுகியகால டைப் வெற்றி களாகவே இருக்கும். நீண்ட நாள் அடிப்படையில் வெற்றி என்பது நாம் என்று சொல்லும் டைப் மனிதர்களுக்கே கிடைக்கும்’’ என்று அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.