
நிவேதா & சத்யாநீங்களும் செய்யலாம்சாஹா, படங்கள் : பா.ராகுல்
சமைக்க நேரமில்லாத பலருக்கும் அவசரத்துக்குக் கைகொடுப்பது தொக்கு வகைகள். டிபன் அயிட்டங்களுக்குத் தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் தொக்கு சரியான சாய்ஸ். கடைகளில் கிடைக்கிற தொக்குகளில் கெமிக்கல் கலப்பே அதிகம் என்பதால் சுவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். தக்காளியையும் பூண்டையும் விட்டால் பலருக்கும் வேறு எதிலும் தொக்கு செய்யத் தெரியாது. அப்படியே செய்தாலும் முறைப்படி செய்ய முடியாததால் அவற்றை அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இயற்கையான முறையில் ஆரோக்கியமான அயிட்டங்களில் சுவையான தொக்கு வகைகள் செய்வதையே பிசினஸாகச் செய்கிறார் கள் சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த நிவேதாவும் சத்யாவும்.
‘`நாங்க எல்லாரும் கூட்டுக் குடும்பமா இருக்கோம். நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். புகுந்த வீட்டுல வேலைக்குப் போக வேண்டிய தேவை ஏற்படலை. நான் ஆறாவதுலேருந்து காலேஜ் வரைக்கும் ஹாஸ்டல்லதான் படிச்சேன். சாப்பாடு சரியா இருக்காது. லீவுக்கு வீட்டுக்கு வரும்போதெல்லாம் அழுவேன். அதுக்காக அம்மா எனக்கு விதவிதமான தொக்குகள் செய்து கொடுப்பாங்க. 20 நாள்கள் வெச்சிருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. என் புகுந்த வீட்டு மனுஷங்க எல்லாரும் கிராமத்து மனுஷங்க. எங்கம்மா மாதிரியே என் மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிஸ்ட்டுங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சது. மாம னாருக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்த ஆவாரம்பூவில் தொக்கு செய்வாங்க. வீட்டுல யாருக்காவது மூட்டுவலின்னா முடக்கத்தான் கீரை தொக்கு செய்வாங்க.

எங்க வீட்டுல ஒருவேளைக்கு பதினஞ்சு முதல் இருபது பேருக்குச் சமையல் நடக்கும். எந்த உணவையும் வெளியில வாங்க மாட்டோம். சொந்தமா வயல் இருக்கு. இயற்கை விவசாயம் செய்யறோம். செக்கு நல்லெண்ணெய்தான் பயன்படுத்தறோம். எந்த கெமிக்கலும் இல்லாம இயற்கையான முறையில தொக்கு செய்யறது எங்க வீட்டு ஸ்பெஷல் அடையாளமாவே மாறிடுச்சு. வீட்டுக்கு வந்து யார் சாப்பிட்டாலும் பாராட்டத் தவறினதே இல்லை. விலைக்குத் தருவீங்களானு கேட்க ஆரம்பிச்ச பிறகுதான் இதை பிசினஸா பண்ற ஐடியா வந்து ஆரம்பிச்சோம்’’ என்கிற நிவேதா, தன் உறவினர் சத்யாவுடன் சேர்ந்து தொக்கு பிசினஸ் செய்கிறார்.

ஆவாரம்பூ, முடக்கற்றான், பாகற்காய், தக்காளி, புதினா, பூண்டு. பிரண்டை, புளித்தகீரை, தூதுவளை, வல்லாரை என இவர்கள் தயாரிக்கிற தொக்கு வகைகளின் பட்டியல் நீள்கிறது. ஆரோக்கியமான உணவுத் தயாரிப்பையே அசத்தலான பிசினஸாகவும் மாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்கள் நிவேதாவும் சத்யாவும்.
என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?
பாகற்காய், தக்காளி, பூண்டு போன்ற காய்கறிகள், முடக்கற்றான், தூதுவளை, வல்லாரை போன்ற கீரைகள், செக்கு நல்லெண்ணெய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் என அடிப்படையான பொருள்கள் தேவை.
ஒவ்வொரு தொக்கும் ஒரு கிலோ அளவுக்குத் தயாரிக்க 200 முதல் 300 ரூபாய் தேவை. பத்து வகை தொக்கு (தலா 1 கிலோ அளவுக்கு) செய்ய குறைந்தபட்சம் 1,200 ரூபாய் முதலீடு தேவை.
விற்பனை வாய்ப்பு? லாபம்?
கிராமத்து உணவுகளுக்கு நகரத்தில் எப்போதும் மதிப்பு அதிகம். நாங்கள் தயாரிக்கிற இந்த எல்லாத் தொக்கு வகைகளுமே கிராமத்துச் சுவையில் இருக்கும். ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு சாப்பிட விரும்புவோரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். இந்தத் தொக்கு வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஊறுகாய்க்கு நல்ல மாற்றும்கூட.
300 கிராம் அளவு தொக்கு 90 ரூபாய்க்கு விற்கலாம். முதல் 5 நாள்கள் வரை வெளியிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். வேலைக்குச் செல்கிறவர்கள், பேச்சிலர்கள், ஹாஸ்டலில் இருப்பவர்கள்தான் வாடிக்கையாளர்கள். கடைகளில் வாங்கும் தொக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றும் அதன் மூலப்பொருளின் சுவைக்கேற்ப மாறுபடும் என்பதால் தினமும் சாப்பிட்டாலும் அலுப்புத் தட்டாது. 50 சதவிகித லாபம் நிச்சயம்.
கடன் வசதி?
எல்லாமே அன்றாடம் நாம் சமையலுக்குப் பயன் படுத்துகிற பொருள்கள் என்பதால் வீட்டு உபயோகத்துக்குச் செய்யும்போதே சற்றுக் கூடுதல் அளவில் செய்யலாம். முதலில் சிறிய அளவில் பிசினஸைத் தொடங்கலாம். அவற்றில் வரும் லாபத்தை அடுத்தகட்ட பிசினஸுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களில் நான்கைந்து பேர் இணைந்து முதலீடு போட்டும் தொழிலை ஆரம்பிக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்பவர்கள் உள்கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சி?
ஒருநாள் பயிற்சியில் 10 வகையான தொக்கு செய்முறை கற்றுக்கொள்ளலாம். 750 ரூபாய் கட்டணம்.