
சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர் - படம் : வி.சரவணக்குமார்

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உங்களின், உங்கள் வீட்டுக்காரரின் வருமான வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், 5,000 ரூபாயை அபராதம் கட்ட எண்ணி வைத்துவிடுங்கள்!
`என்னது... 5,000 ரூபாய் அபராதமா, யாரும் சொல்லலையே' என்று அலறாதீர்கள். நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அறிந்து வைத்திருக்கவில்லை என்றால், எவ்வளவு பணம் வீணாகக் கட்ட வேண்டியிருக்கும் என்பதை இனியாவது புரிந்துகொள்வோம்.
சேமிப்புக்குள் சேமிப்பு வரிச் சேமிப்பு!

வரிச் சலுகை தரும் பல திட்டங்களை அரசாங்கமே நமக்குத் தந்திருக்கிறது. இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனமல்ல. வரிச் சலுகை தரும் சேமிப்புகள் 20-30% என நம் வருமான வரம்புக்கேற்றபடி வரிச் சலுகை தருவதுடன், 8-10% வருமானமும் தருகிறது.
பி.பி.எஃப் அல்லது இ.எல்.எஸ்.எஸ்
சமீபகாலமாக இ.எல்.எஸ்.எஸ் எனப்படும் ஈக்விட்டி லிங்க்ட் சேவிங் ஸ்கீம் வரிச் சேமிப்புக்கு மிக உகந்த வழியாக இருந்துவருகிறது. பி.பி.எஃப் எனப்படும் பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் தரும் வட்டி 7.6% எனக் குறைக்கப்பட்ட நிலையில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் 18% வரை வருமானம் தருவதால், மக்கள் அதை நாடுவது அதிகரித்துள்ளது. ஆனால், இது பங்குச் சந்தை சார்ந்த திட்டம் என்பதால், சந்தையின் ஏற்ற இறக்கம் இதன் வருமானத்தைப் பாதிக்கும்.
அதோடு, இந்த வருடத்திலிருந்து இதன் வருமானத்துக்கும் 10% வரி உண்டு என்பதால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதைத் தவிர்க்கலாம். 50 வயதுக்கு உட்பட்டவர்கள் முதலீட்டுத் தொகையில் பாதி பி.பி.எஃப், பாதி இ.எல்.எஸ்.எஸ் என்று பிரித்து முதலீடு செய்யலாம்.

எண்ணாத எண்ணமெல்லாம்…
ஒருநாள் என் சித்தி பெண் பாமா அரக்கப் பரக்க ஓடி வந்தாள். அவளை ஆசுவாசப் படுத்திக் கேட்டதில், “இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் பண்ணினேன்; சரியாகத்தான் பண்ணினேன். ஆனாலும் பெனால்டி, இன்ட்ரஸ்ட் என்று எழுதி ரூ.526 கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு. பின்னாடியே ரெய்டு வருமோ?'' என்று பதறினாள். ``அடியே, ஜுஜுபி 526 ரூபாய்க்கெல்லாம் ரெய்டு வராது'' என்று அவளைத் தேற்றினேன். ஆனால், வரி ஏய்ப்பு செய்பவர்கள் வரித்துறையின் கழுகுக் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது.
வரித்தாக்கலுக்குக் கைகொடுக்கும் டி.ஆர்.பி (Tax Return Professional)
2006-07-லிருந்து நம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள். பட்டதாரி மாணவர்களுக்கு வருமான வரித்துறை இதற்கான சான்றிதழ் தருகிறது. நாம் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கும் டி.ஆர்.பி-யின் பெயர், தொலைபேசி எண் எல்லாம் trpscheme.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவர்கள் நம் வீட்டுக்கே வந்து வரித்தாக்கல் செய்ய உதவுகிறார்கள். இதற்காக அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் 250 ரூபாய் மட்டுமே.
ப(ய)ணம் தொடரும்!
