
உழைப்பே துணை
ஆர்வம், தேடல், விடாமுயற்சி, புதிய சிந்தனை, தோல்வியை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஊழியர்களுடன் ஈகோ பார்க்காமல் பழகுவது... இவைதாம் பிசினஸில் வெற்றிபெற முக்கியமான விஷயங்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மலர்விழி. தன் ஃபேஷன் ஆர்வத்தால் `பிளாக் பிரின்ட்டிங்' தொழிலைத் தொடங்கியவர், இன்று 60-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
``நான் மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவ. ஓர் ஊழியராகத்தான் என் பயணம் தொடங்கிச்சு. அடிப்படையில் என்றுமே நான் ஒரு தொழிலாளிதான். அதனாலதான் என் சக ஊழியர்களோடு ஃப்ரெண்டு மாதிரியான பாண்டிங்ல பழகுறேன்'' என்கிற மலர்விழி, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டி!

ஃபேஷன் ஆர்வம்
``என் பூர்வீகம், திருவண்ணாமலை. சென்னைக்கு வந்த பிறகு கரஸ்ல பிபிஏ படிச்சேன். ஃபேஷன் டிசைனிங் ரொம்பப் பிடிக்கும். மத்திய அரசின் நான்-புராஃபிட்டபிள் நிறுவனம் ஒன்றில், மூணு மாதங்கள் ஃபேஷன் டிசைனிங் டிரெய்னிங் போனேன். டிப்ளோமா கோர்ஸும் படிச்சேன். வெளிநிறுவனம் ஒன்றில் சில காலம் வேலைசெய்தேன். வீட்டுல இருந்தபடியே பிரின்ட்டிங், டையிங், டிசைனிங், எம்ப்ராய்டரிங்னு உற்சாகமா வேலைபார்த்தேன். அப்போதான், ஃபேஷன் துறை கடல்போல விசாலமானதுனு புரிஞ்சது. இந்தத் துறையில பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.
பட்டுப் புடவைக்கு மாற்று!
பொதுவா பெண்களுக்குப் பட்டுப் புடவை ரொம்பப் பிடிக்கும். காரணம், அதன் தனித்துவமான வேலைப்பாடுகள் மற்றும் கிராண்ட் லுக். ஆனா, அவற்றின் விலைதான் நடுத்தர மக்களுக்குக் கவலையை உண்டாக்கும். சிலரோ பட்டுப் புடவையில் வெரைட்டி டிசைன் வேண்டும்; எடை குறைவாக இருக்கணும்னு நினைப்பாங்க. இப்படிப்பட்ட பல எதிர்பார்ப்பு களையும் பூர்த்திசெய்யும் வகையில், `பிளாக் பிரின்ட்டிங்' சாரீஸ் தயாரிக்கும் யோசனை வந்துச்சு. அவை அதிகம் தயாரிக்கப்படுற இடமான கொல்கத்தாவுக்குப் போய் நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன். அங்கு `பிளாக் பிரின்ட்டிங்' தொழிலில் அனுபவம் வாய்ந்த சில ஊழியர்களை, என்கிட்ட வொர்க் பண்ண அழைச்சுகிட்டு வந்தேன். ரொம்ப ஆடம்பரமான ஒரு பட்டுப் புடவை பிளவுஸ் உடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்போது, பல ஆயிரங்கள் விலையில் இருக்கும். நடுத்தர மக்களால், இவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியாது. அதுவே பிளாக் பிரின்ட்டட் புடவைகளைச் ஆயிரம் ரூபாயில் தொடங்கி, வேலைப்பாடுகள் மற்றும் தரத்தைப் பொறுத்து குறைந்த விலையிலேயே பெற முடியும்.

5,000 டிசைன்கள்!
முதலில் பிளாக் பிரின்ட்டிங் யூனிட்டைதான் தொடங்கினேன். அதிகம் புழக்கத்தில் இல்லாத தனித்துவமான டிசைன்களைத் தயாரிச்சேன். அதை மரத்தில் மோல்டிங் டிசைனாகச் செதுக்க, தனி தச்சர் இருக்கார். இப்போ என்கிட்ட தனித்துவமான,
5,000-க்கும் அதிகமான மோல்டிங் டிசைன்கள் இருக்கு. காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் எங்களுடைய நெசவாளர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து, டிசைன்களே இல்லாத அல்லது பார்டரில் மட்டும் டிசைன் இருக்கும் வகையில் புடவைகளை மொத்தமாக வாங்கிக்குவோம். எங்க பிரின்ட்டிங் யூனிட்டில், அந்தப் புடவைகளின் மீது தேவையான மோல்டிங் டிசைன்களைப் பதிந்து, அவற்றை ஒரு மணிநேரம் உலர வைப்போம். பிறகு அயர்ன் செய்து, பேக்கிங் முடிந்து பார்த்தால், கிராண்ட் லுக்கில் காட்சியளிக்கும். எந்தப் பாதிப்பும் அளிக்காத பொருள்களைத்தான் பயன்படுத்துறோம். அதனால் வேலையாள் மற்றும் கஸ்டமருக்கு எந்தப் பாதிப்பும் வராது. நீண்டகாலம் லைஃப் கொடுக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் சுமார் 100 புடவைகளைத் தயாரிக்கிறோம்.

ஆர்கன்ஸா, டிஷ்யூ வகை புடவைகளுக்கு இப்போ அதிக வரவேற்பு இருக்கு. எடை குறைவு, வசீகரமான டிசைன், யூசர் ஃப்ரெண்ட்லினு இந்த வகை புடவைகள் அதிகம் விற்பனையாகுது. அசல் பட்டுப்புடவையைப்போல ஹெவி டிசைனர் பிளாக் பிரின்ட்டிங் புடவைகளையும் தயாரிக்கிறோம். பிரின்ட்டிங் வேலைகள் முடிஞ்சதும், எங்க எம்ப்ராய்டரிங் யூனிட்ல ஸ்டோன் மற்றும் எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செய்வோம். இப்படி ட்ரெடிஷனல், வெஸ்டர்ன் உட்பட பெண்களுக்கான எல்லா வகையான ஆடைகளையும் தனி யூனிட்ல தயாரிக்கிறோம்.
கோடிகளில் டர்ன் ஓவர்!
என்னிடம் இருந்த ரூபாய் ஐந்து லட்சத்துடன், இரண்டு லட்சம் வங்கிக் கடன் வாங்கித்தான் பிசினஸைத் தொடங்கினேன். கடனை முறையாகச் செலுத்தி, அடுத்தடுத்து கடன் வாங்கிட்டுதான் இருக்கேன். ஸ்டிச்சிங், பிளாக் பிரின்ட்டிங், எம்ப்ராய்டரிங்னு இங்கே மூணு யூனிட் இருக்கு. 50 பேர் வேலை செய்றாங்க. தவிர மாங்காடுல ஒரு யூனிட் இருக்கு. அங்கே பகுதி நேரமா 15 பெண்கள் வேலைசெய்றாங்க. அங்கே குறைந்த மற்றும் நடுத்தர விலையில் பெரிய பல்க்கான ஆர்டர்களில், எம்ப்ராய்டரிங், ஸ்டோன்ஸ் மற்றும் பிரின்ட்டிங் வேலைகள் நடக்கும்.

ஒன்பது வருஷங்களுக்கு முன்பு தொழில் தொடங்கினப்போ, சில ஆயிரங்களில் இருந்து படிப்படியா வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன். ஒருமுறை யூனிட்டை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பெரிய நஷ்டம் ஏற்பட்டுச்சு. இப்படி நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்து, இன்னிக்கு நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கோம். இந்த வருஷம் ரெண்டு கோடி ரூபாய் டர்ன் ஓவரை நோக்கிப் பயணிக்கிறோம்.
வேலை முடிஞ்சு, இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போனாலும் அன்பா சாப்பாடுபோடுற அம்மா, `ப்ளான்ட்டை விரிவுபடுத்தணும் சார்'னு கடனுதவினு கேட்டால், என் மேல் நம்பிக்கைவெச்சு லோன் தர்ற பேங்க் மேனேஜர், `பண்டிகை நேரம், கொஞ்சம் ஓவர் டைம் வேலை பாருங்க'னு சொன்னா உற்சாகமா வேலைசெய்ற என் ஊழியர்கள்னு பலரின் ஒத்துழைப்பால்தான் இன்றைய வெற்றி சாத்தியமாகியிருக்கு. இவங்கதான் முதல் வெற்றியாளர்கள். அதனால், இதை என் தனிநபர் வெற்றின்னு சொல்ல மாட்டேன். நிறைய தேடல், புதிய முயற்சிகளை செய்துட்டிருக்கேன். எனக்குனு ஒரு தனி பிராண்டு அடையாளம் வேண்டும். அதற்காகத்தான் கடுமையா வேலை செய்துட்டு இருக்கேன். கடைநிலை ஊழியரா தொடங்கி, இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற அளவுக்கு உயர்ந்ததில் சந்தோஷம். என்னைப் போன்ற பல பெண்கள் தொழில்முனைவோராக உயரணும். அதற்கான முயற்சிகளையும் செய்யப்போறேன்'' என்கிறார் மலர்விழி உற்சாகத்துடன்.
- ஆனந்த், படங்கள்: ப.சரவணகுமார்