
சேமிப்பு
நம்மவர்கள் சம்பளப் பணத்தை மிச்சப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கிறார்கள். அதை முறையாக முதலீடு செய்து பெருக்குவதிலோ, அவ்வளவாக ஆர்வம்காட்டுவதில்லை. காரணம், ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார் என்றால், மொத்தப் பணத்தையும் அதிலேயே போட்டுவருகிறார். இன்னொருவர் தங்கம் வாங்கி வருகிறார் என்றால், மொத்தச் சேமிப்பையும் அதிலேயே போடுகிறார். இதுபோலத்தான் ரியல் எஸ்டேட்டும் இருக்கிறது. இப்படிச் செய்வதால், அந்தக் குறிப்பிட்ட முதலீட்டின் விலை அல்லது மதிப்பு இறங்கிவிட்டால், அதிக இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் தானே? அதற்குப் பதில், முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். இதையே அவர்கள் `சரிவிகித முதலீடு' என்கிறார்கள்.
உடலுக்குத் தேவையான அனைத்து உணவுப்பொருள்களையும் உரிய அளவுகளில் கொண்ட உணவே சரிவிகித உணவு. பொதுவாக, மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரி தேவையில் 10-15 சதவிகிதம் புரதங்களிலிருந்தும்
25-30 சதவிகிதம் கொழுப்பிலிருந்தும் மீதி கார்போஹைட்ரேட்டிலிருந்தும் பெறப்படுகிறது. இப்படி இருந்தால்தான் ஒரு மனிதனை நோய்கள் தாக்காது. அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். இதேபோல ஒருவரின் முதலீடும் சரிவிகிதமாக இருந்தால்தான், அவருக்கு அதிக லாபம் கிடைக்கும்.

சரிவிகித முதலீடு!
ரியல் எஸ்டேட் என்கிறபோது, குடியிருக்க அவசியம் ஒரு வீடு தேவை. அதனை நிதி ஆலோசகர்கள் முதலீடாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் முதலீட்டை பொதுவாக தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த திட்டங்கள், பங்குச் சந்தை சார்ந்து என நான்காகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதற்கு ஒரு ஃபார்முலா உண்டு. உங்களின் வயதை 100-லிருந்து கழித்துவரும், எண்ணை சதவிகிதமாகக் கருதி, உங்களின் மொத்த முதலீட்டுத் தொகையில், அந்தச் சதவிகிதத்தைத்தான் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் போட வேண்டும். இங்கு பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடு என்பது, பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த (ஈக்விட்டி) மியூச்சுவல் ஃபண்டுகளைக் குறிக்கும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவரின் வயது 35 என்று வைத்துக்கொள்வோம். அவர் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் 100-35 = 65 சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும்.
35 வயதான இவர் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், 65,000 ரூபாய் மட்டுமே ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த 65,000 ரூபாயில் 20,000 ரூபாயை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால், மீதி 45,000 ரூபாய் மட்டுமே ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், 65,000 ரூபாயையும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிடலாம். மீதி இருக்கும் 35,000 ரூபாயைத் தேவையைப் பொறுத்துத் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.

நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதைவிட, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைந்ததாகும். தனிப்பட்ட சில பங்குகளில் முதலீடு செய்யும்போது, அவை விலை குறைந்துபோனால், அதன் பாதிப்பு முதலீடு செய்பவருக்கு அதிகமாக இருக்கும். இதுவே, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது, இதில் திரட்டப்படும் நிதி, சுமார் 30 பங்கு களில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் குறைகிறது.

முன்னணி முதலீட்டு ஆலோசகர் வ. நாகப்பன் சரிவிகித முதலீட்டின் நன்மை குறித்து விளக்குகிறார்.
``ஒருவர் எப்போதும் தயிர் சாதமோ, சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ மட்டும் சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும்? சாதம், கூட்டு, பொரியல், அப்பளம், ரசம், மோர் இருந்தால்தான் சாப்பாடும் ருசிக்கும். மேலும், சத்தாகவும் இருக்கும். இதுபோல தான் முதலீட்டையும் கலந்து மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, பங்கு முதலீடு சிறப்பாகச் செயல்படும் காலத்தில் தங்கத்தின் விலை இறங்கிக் காணப்படும். உதாரணத்துக்கு, 2007 முதல் 2009 வரையில் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்தக் காலகட்டத்தில் தங்கம் விலை அதிகமாக உயர்ந்தது. அந்த வகையில், முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்துப் போடுவது மூலம் ஒரு முதலீடு லாபகரமாக இல்லை என்றாலும், இன்னொரு முதலீடு லாபம் தரும்'' என்கிறார்.
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி ஏ.பாலசுப்ரமணியம், ``இப்படி முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்கள். ஒன்று, முதலீட்டு மீதான ரிஸ்க் குறைக்கப்படுகிறது. இரண்டு, லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. முதலீடு செய்யும்போது, இலக்குகள் நிர்ணயம் செய்துகொண்டு முதலீடு செய்வது மிக முக்கியம். உதாரணமாக, பிள்ளைகள் படிப்பு - திருமணம், ஓய்வுகாலத் தேவை என இருந்தால் நல்லது. சிலர் ஏதாவது அவசரத் தேவை வரும்போது, இந்த முதலீட்டுத் தொகையை எடுத்து விடுகிறார்கள். இதைத் தவிர்க்க, இலக்கு நோக்கிய முதலீட்டில் அவசரக் காலச் செலவுக்கு எனத் தனியாக அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வர வேண்டும். அவசரத் தேவைக்கு அதிலிருந்துதான் எடுத்து செலவு செய்ய வேண்டும்'' என்கிறார்.
கடந்த பத்தாண்டுக்காலத்தில் பல்வேறு முதலீடுகள் கொடுத்த வருமானத்தை அட்டவணையாகத் தந்திருக்கிறோம். இந்தப் பத்தாண்டுகளில், எஃப்டி-க்கான வட்டி அதிகபட்சம் 9.1 சதவிகிதம் (2011-12), குறைந்தபட்சம் 6.5 சதவிகிதமாக (2017-18) உள்ளது. தங்கம் அதிகபட்சம் 34 சதவிகிதம் வருமானம் (2011-12) கொடுத்த நிலையில், ஓராண்டில் 9.3 சதவிகிதம் (2014-15) விலை இறக்கம் கண்டிருக்கிறது. பங்குச் சந்தை அதிகபட்சம் 94 சதவிகிதம் வருமானம் (2009-10) கொடுத்த நிலையில், ஓராண்டில் 39 சதவிகிதம் வீழ்ச்சி (2008-19) கண்டிருக்கிறது.
முதலீட்டை நான்காக சம அளவில் பிரித்து, நான்கு சொத்துகளில் முதலீடு செய்திருந்தால், கடந்த பத்தாண்டுகளில் 10.5 சதவிகிதம் வருமானம் பெற்றிருக்க முடியும். இதுவே, எஃப்டி அல்லது கடன் ஃபண்டுகளில் மட்டும் செய்திருந்தால், சுமார் 8 சதவிகிதம் வருமானம்தான் கிடைத்திருக்கும். தங்கம் என்றால் 9.2 சதவிகிதம் வருமானம் கிடைத்திருக்கும். பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்திருந்தால், சுமார் 17 சதவிகிதம் வருமானம் கிடைத்திருக்கும். அதேநேரத்தில், பங்கு முதலீட்டில் போட்ட பணத்தை இழப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதிக லாபம் பெற பங்குச் சந்தையில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஃபார்முலாவின் படி முதலீடு செய்து வரலாம்.
முதலீட்டைப் பிரித்து நல்ல லாபம் காண வாழ்த்துகள்!
- சி.சரவணன், அ.குரூஸ்தனம்
உடுமலை அருகில் உள்ள மருள்பட்டியைச் சேர்ந்த ஏ.ரவி (வயது 43), தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக இருக்கிறார்.

‘`என் முதலீடுகளில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கிறது. தங்கத்தில் 5 சதவிகிதம், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 40 சதவிகிதம் முதலீடு இருக்கிறது. கடந்த காலங்களில் தங்கத்தின் விலை பெரிதாக அதிகரிக்கவில்லை என்பதால், இப்போது அணிந்து மகிழ்வதற்கு மட்டும் தங்கத்தை வாங்கிக்கொள்கிறோம். பிற்காலத்தில் தங்கம் வாங்குதற்காக ஈக்விட்டி ஃபண்டுகளில் கூடுதலாக முதலீடு செய்துவருகிறேன். இப்படிச் செய்வதால் எனக்கு இரு லாபங்கள். ஒன்று, முதலீடு அதிகமாகப் பெருகுவதால், பிற்காலத்தில் அந்தத் தொகையைக்கொண்டு அதிக நகை வாங்க முடியும். அதுவும் அப்போதைய டிசைனில் வாங்க முடியும். இப்போதே நகையாக வாங்கி வைக்கும்போது, பின்னர் பழைய மாடல் என்பதால், அதை மாற்றும்போது இருமுறை என சுமார் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக சேதாரம் கொடுக்க வேண்டி வரும்'' என்கிறார் ரவி.
படம்: வி.சிவக்குமார்

புதுச்சேரியைச் சேர்ந்த 40 வயதான டாக்டர் அபிஜித், ``நான் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறேன். இதேபோல், 6 லட்ச ரூபாய்க்கு மெடிக் க்ளைம் பாலிசி எடுத்திருக்கிறேன். எனது சம்பாத்தியத்தில் 30 சதவிகிதம் சேமித்து வருகிறேன்; என் முதலீடுகளில் சுமார் 60 சதவிகிதம் பங்குச் சந்தை முதலீடுகளில் இருக்கிறது. தங்கத்தில் 5 சதவிகிதம், கடன் சார்ந்த முதலீடுகளில் 25 சதவிகிதம், அவசரத் தேவைக்கு 10 சதவிகிதம் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறேன். இப்படிப் பிரித்து முதலீடு செய்வது மூலம் கவலையில்லாமல் இருக்கிறேன்'' என்கிறார் டாக்டர் அபிஜித்.