
மகளால் லோன் கிடைச்சுது... கணவரின் ஆதரவால் பிசினஸ் வளர்ந்தது! - ஜெயலட்சுமி
தொழிலாளி to முதலாளி
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் புதிய தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ‘சாஸ்தா லெதர் கிராஃப்ட்ஸ்’ஸின் உரிமையாளர், ஜெயலட்சுமி.
டிப்ளோமா படித்திருக்கும் ஜெயலட்சுமி, ஒரு தனியார் நிறுவனத்தில் அட்மின் நிர்வாகியாக வேலை

பார்த்துவந்தார். கணவர் ரமேஷ்குமார், தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நீண்டகால பணி அனுபவம்கொண்டவர். மகன் பிறந்ததும் அப்போதைய குடும்பச் சூழலால் தன் வேலையிலிருந்து விலகுகிறார். பிறகு `மாத்தி யோசி’த்தவர், வீட்டிலிருந்தபடியே சுயதொழில் தொடங்க முடிவெடுக்கிறார். தெரியாத தொழிலில் இறங்குவதைவிட, தோல் பொருள்கள் தயாரிப்பு பிசினஸ் சிறந்தது என நினைக்கிறார்.
முதல் முயற்சியே சறுக்கலில் முடிகிறது ஜெயலட்சுமிக்கு. வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தவருக்கு, திட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ.7.75 லட்சம் வழங்க ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஆனால், தொகை கைக்குக் கிடைக்கவில்லை; இவர் தளரவும் இல்லை. ப்ளான்ட் அமைந்திருக்கும் அம்பத்தூரிலிருந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள வங்கிக்கு வாரம் தோறும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அலைந்தார். கர்ப்பிணியாக இருந்தபோது விண்ணப்பித்தவருக்கு, அந்தக் குழந்தை பிறந்து பேசும் வயதுவரை நீண்டிருக்கிறது காத்திருப்புக் காலம்.

‘`ரெண்டாவது முறை கர்ப்பமாக இருந்தபோது லோனுக்கு விண்ணப்பிச்சிருந்தேன். சிசேரியன் பிரசவம் நடந்து ஹாஸ்பிடல்ல இருந்தபோது, லோன் அப்ரூவாகி படுக்கையில் இருந்தபடியே கையெழுத்து போட்டேன். முதல்கட்டமா ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதன்பிறகு கடன் தொகையை வாங்க மூணு வருஷமா அலைஞ்சேன். சமாளிக்க முடியாம, பாதி நகைகளை அடமானம் வெச்சேன்; மீதியை வித்துட்டேன்; கொஞ்சம் கடன் வாங்கினேன். 2011-ம் ஆண்டு, கைவசம் இருந்த தொகையுடன் எங்க வீட்டின் முதல்தளத்தில், என்னுடன் சேர்த்து ஐந்து தொழிலாளர்களுடன் தொழிலைத் தொடங்கினேன்.
மகள் பிறந்து, அவளுக்கு மூணு வயசானப்போ அவளை அழைச்சுக்கிட்டு ஒருமுறை வங்கிக்குப் போயிருந்தேன். அவளைப் பார்த்த சீஃப் மேனேஜர், ‘நீங்க கர்ப்பமா இருந்தபோதிலிருந்து அலைஞ்சுட்டு இருக்கீங்க. அந்தக் குழந்தையா இது?!’னு அதிர்ச்சியாகி வருந்தினார். பிறகு உடனடியா லோன் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார்” என்கிற ஜெயலட்சுயின் பொறுமைக்குக் கிடைத்தது, அந்த முதல் வெற்றி.
சோதனையைச் சந்தித்தால்தானே, சாதனையாகும்? ஜெயலட்சுமி தொழில் தொடங்கிய ஆரம்பக்காலத்தில், கணவருக்கு உடல்நிலைப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை மற்றும் ஆபரேஷன் என ஆறு மாதங்கள் கழிகின்றன. பிறகு ஆறு மாதங்கள் வீட்டிலிருந்தபடியே ஓய்வு. குடும்பச் சூழல் சிக்கலாக, அதையும் கவனித்துக்கொண்டு, தொழிலையும் நடத்திக்கொண்டிருந்தார் ஜெயலட்சுமி. அப்போது பர்ஸ், கீ செயின், மெனு கார்டு, சிறிய பேக் எனத் தன் தயாரிப்புகளை உள்ளூரிலேயே விற்பனை செய்துவந்தார். தென்னாப்பிரிக்காவிலுள்ள ஒரு நிறுவனத்துடன் தொழில் ரீதியான நட்பு கிடைத்தது. என்றாலும், எட்டு மாதங்களாக சாம்பிள்களையே தயாரித்து அனுப்பிவருகிறார், மனந்தளராமல். ஒருநாள் அந்நிறுவனத்திலிருந்து அழைப்பு வருகிறது. ‘உங்க பொறுமைக்கு முதலில் நன்றி. இனி நீங்க எங்களின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதியாளர்’ என்ற செய்தியைக் கேட்டதும், ஜெயலட்சுமிக்குப் புது உற்சாகம் பிறக்கிறது. வேலை வேகமெடுக்க, ஊழியர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது.
‘`இனி எல்லாமே வளர்ச்சிதான்னு நினைச்சுடாதீங்க. இதுதான் ரொம்பச் சவாலான காலகட்டம்’’ என்கிற ஜெயலட்சுமி, தோல்வியின் விளிம்புக்குச் சென்று, அபார நம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறார்.
‘`30 ஊழியர்கள் இருந்தாங்க. ஆர்டர்களும் வந்துட்டு இருந்தது. ஆனா, வருவாயைவிட உற்பத்திச் செலவு அதிகம். மேலும், அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாத தன்மைனு புதுப்புதுச் சிக்கல்கள். இதனால, 50 லட்சம் ரூபாய் வரை கடன் சுமை ஆகிடுச்சு. வீட்டுக்கடன், சொத்துக்கடன்னு பல வகையிலும் கடன்சுமை தலையை இறுக்கும் அளவுக்குப் பண நெருக்கடி’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி, இவ்வளவு பிரச்னைகளையும் எப்படிச் சமாளித்தார்?
“ரொம்ப இக்கட்டான சூழல், பெரிய சுமையாகத்தான் இருந்துச்சு. ஆனா, நஷ்டம் வரலை. நஷ்டம்னு பிசினஸையே கைவிட்டுட்டுப் போனால், கடனை அடைக்கவே வாழ்வின் பெரும் பகுதி வேறு நிறுவனங்கள்ல ஊழியரா உழைக்கணும். அப்பவும் சிக்கல் எளிதில் சரியாகிடாது. ‘இந்தத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை, இதிலேயே சரிசெய்யணும்; லாப பாதைக்கு வந்தாகணும்’னு முடிவெடுத்தேன். அதைவிட, ‘அனுபவமுள்ள துறையிலேயே தோல்வியடைஞ்சுட்டாங்க. அப்போ, பிசினஸ்ல வெற்றி பெறுவது கஷ்டம்போல. சுயதொழில் பண்ணவே கூடாது’னு எங்களை முன்னுதாரணமா வெச்சு சிலர் நினைக்கக்கூடும். இப்படி ஒரு பேச்சு வந்தால், எங்க நஷ்டத்தைவிட அது கூடுதல் வலியைக் கொடுத்திருக்கும். அதனால, லாபகரமான வழியில் தொழிலை இயக்க என்ன வழி, கஸ்டமர்களை அதிகரிக்கும் முயற்சிகள்னு ரொம்ப கவனத்துடன் செயல்பட ஆரம்பிச்சேன்” என்று அனுபவங்களை அடுக்குகிறார் ஜெயலட்சுமி.

தோல்விக்கான காரணங்களைக் கண்டறிகிற ஜெயலட்சுமி, தோல்வி வராமல் தவிர்ப்பதற்கான வழிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வீட்டின் முதல் தளத்திலிருந்த நிறுவனம், இரண்டு மாடிக் கட்டடத்துக்கு விரிவாக்கப்படுகிறது. இப்போது, ஜெயலட்சுமியின் நிறுவனம் மட்டும் வளரவில்லை... இவரின் பிரதான வாடிக்கையாளர் நிறுவனங்களும் வளர்ந்தன. வாடிக்கையாளர், விற்பனையாளர் இருவருக்கு மான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. பிசினஸில் இதுதானே பாசிட்டிவ் வளர்ச்சி! இதைத் தொடர்ந்து புதுப்புதுத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார், ஜெயலட்சுமி. இந்த நிலையில், தன் உடல்நிலை சரியாகி வேலைக்குச் சென்றுகொண்டே மனைவிக்கு ஊக்கம் கொடுத்துவந்த ரமேஷ், 2015-ம் ஆண்டு தன் வேலையை விட்டு விலகி, மனைவியின் தொழிலிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார்.
எல்லா கடன்களையும் அடைத்துவிட்ட நிலையில், நிறுவனம் இப்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. ஜெயலட்சுமி இன்று 60 ஊழியர்களுக்கு முதலாளி. டிராவல் பேக், ஸ்கூல் பேக், லேப்டாப் பேக், ஹேண்ட் பேக், பர்ஸ், பெல்ட் என ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்து, ஏற்றுமதி செய்கிறார். ‘எஸ்.எல்.சி’ என்ற பிராண்டு பெயரில் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யவிருக்கிறார். இவற்றோடு, காலணி தயாரிப்பில் இறங்கியிருப்பதுடன், ஆன்லைன் பிசினஸ் மற்றும் உள்ளூர் மார்க்கெட்டிலும் தனிக்கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ஆயிரங்களில் தொடங்கிய இவரின் பிசினஸ், இப்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் டர்ன் ஓவரை கடந்து பயணிக்கிறது.
‘`வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், தரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. பருவநிலை மாற்றங்களால் தயாரிப்புப் பொருள்களில் ஈரப்பதம் ஏற்படுவது, நிறம் மாறுவது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் உண்டாகும். அவற்றைச் சரிசெய்து அனுப்பச் சற்று நேரம் கூடுதலாகும். அதற்குள் எங்களுக்கு அபராதத் தொகை போட்டுடுவாங்க. அதே நேரம் அந்நியச் செலாவணிக்கு எதிரான நம் ரூபாயின் மதிப்பு மாறிடும். அதனாலும் சிக்கல் வரும். இது எல்லாத்தையும் தாண்டி இப்போ எங்க தொழில் வளர்ந்துடுச்சு. பிரச்னையை எளிதாகச் சமாளிக்கிறோம். அதைவிட, வாடிக்கையாளர்கள் எங்க மேல் கொண்ட நம்பிக்கையும், தொழில்துறையில் கற்றுக்கொண்ட அனுபவமும் எதையும் தாங்கும் இதயமாக எங்களை மாத்திடுச்சு. ‘புதுசா லோன் தர தயாரா இருக்கோம்’னு இப்போ பல வங்கிகள் சொல்றாங்க. எங்க வருவாயில் ஒரு பகுதியைத் தொழில் விரிவாக்கத்துக்குப் பயன்படுத்துறோம். அதனால், கடன் வாங்கும் அவசியம் எழவில்லை. பொறுமை, நம்பிக்கை, சரியான திட்டமிடல் இருந்தால், நீங்களும் தொழிலதிபர்தான்!” - ஜெயலட்சுமியின் கண்களில் தெரியும், ஒளி நம்பிக்கை ஊட்டுகிறது.
நாம் வெல்லுவோம்!
- கு.ஆனந்தராஜ்
படங்கள் : பா.காளிமுத்து
நான் கற்ற பாடம்
ஊழியர்களை ஊக்குவித்து அவர்களை மகிழ்ச்சியுடன் வேலை செய்ய வைக்க வேண்டும். ஏனெனில், அவர்களே நம் தூண்கள்.
புதிய தொழில் முனைவோர்களே...
• புதிய தொழில்முனைவோர் களை ஊக்குவிக்க, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தினால் (KHADI & VILLAGE INDUSTRIES COMMISSION - KVIC) வழிகாட்டப்படும் முயற்சி களைப் பற்றி விவரிக்கிறார், அந்நிறுவனத்தின் மாநில இயக்கு நர், கே.எஸ்.லக்ஷ்மிநாராயணன்.
• பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) மூலம் படித்த, படிக்காத அனைத்துத் தரப்பினருக்கும், எல்லாவிதமான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கும் பயிற்சியளிக்கிறோம்; திட்ட அறிக்கை தயார் செய்ய உதவுகிறோம்; மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற வழிகாட்டுகிறோம்.
• தொழில்முனைவோரின் உற்பத்தி பொருள்களை கதர் பவன்களின் மூலமாக விற்பனை செய்ய வழிவகை செய்கிறோம்.
• தமிழகத்தில் ஆண்டுதோறும், சுமார் ரூ.350 - 450 கோடி வங்கிக் கடன் பெற்று, 30,000 முதல் 35,000 வரை வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம்.
• கதர் மற்றும் கிராமத் தொழில்கள் மூலமாகக் கிராமிய கைவினைஞர்களுக்குத் தொடர்ந்து பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறோம்.
• www.kvic.org.in என்ற எங்கள் இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்; இந்தத் தளத்தில் ஆன்லைன் வாயிலாகவே தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். உடனடியாக குறுஞ்செய்தி வரும். பிறகு எங்கள் நிறுவனத்திலிருந்து விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு, வழிகாட்டுவோம்.