
கேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora
கேள்வி: ``ஏன் நம் தலைமுறையில் மட்டும் நிறைய தொழில் முனைவர்கள் இருக்கிறார்கள்?”
பதில்: “உலகம் நிறைய மாறியிருக்கிறது. தொழில் தொடங்குவது எளிமையாகியிருக்கிறது. பேஸ்புக் தொடங்கியபோது நான் அதிலிருந்தேன். அப்போது ஒரு டேட்டா சென்டர் தேவையென்றால் முழு நேரமும் அதை மட்டுமே பார்க்கும் ஒருவர் தேவை. இன்னொரு ஊரில் டேட்டா சென்டர் தேவையென்றால் அங்கே போய், கருவிகளை வாங்கி, பொருத்தி, அவை சரியாக வேலை செய்கின்றனவா எனப் பார்க்க ஓரிரு வாரங்கள் ஆகும். அப்படித்தான் பேஸ்புக் தொடங்கியது. இப்போது அமேசான் சேவைகளை டேட்டா சென்டருக்காகப் பயன்படுத்துகிறார்கள். 20 புதிய சர்வர்களை இணைக்க சில நிமிடங்கள் போதும். அலுவலகத்திலிருந்தே ஒரு இன்ஜினீயர் இதைச் செய்து முடித்தால் புதிய டேட்டா சென்டர் தயார். இதேபோல தொழில் தொடங்கத் தேவையான புராசஸ்களும் எளிமையாகியிருக்கின்றன. அதனால்தான் புதிய ஸ்டார்ட் அப்-கள் நிறைய தொடங்கப்படுகின்றன.”
இந்தக் கேள்வியும் பதிலும் கோரா (Quora) எனப்படும் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கேள்வி கேட்டவர் யாரோ ஒருவர். பதில் சொன்னது ஆடம் டி ஏஞ்செலோ (Adam D’Angelo).
ஆடம் டி ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவர் இருவரும் பேஸ்புக் நண்பர்கள். அதாவது, பேஸ்புக்கில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ஒரு மதிய உணவுக்காக இருவரும் சீன உணவகம் ஒன்றைத் தேடிச் சென்றிருந்தார்கள். கண்டுபிடிக்கவே சிரமமாக இருந்த உணவகம் அது. அதேபோல, இணையத்தில் கண்டுபிடிக்க சிரமமான விஷயமென ஏதுமிருக்கிறதா எனப் பேச்சு தொடங்கியது. அதைத் தொடர்ந்து வந்த பல உணவு இடைவேளைகள் இதைப் பற்றியே பேச்சு வளர்ந்தது.
இணையத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள். அதேநேரம் இணையத்தின் சாபக்கேடாக, தவறான செய்திகளும் இருக்குமென அவருக்குத் தெரியும். அதனால், நம்பகமான ஓரிடம் இருந்தால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் எண்ணம். அப்போதுதான் கேள்வி - பதில் வடிவம் அவர்கள் பேச்சுக்கு உள்ளே வந்தது. பதில் கேட்பதும் தருவதும் வாசகர்கள் வேலை எனவும், அதை உறுதிப்படுத்தும் ஒரு சிஸ்டத்தை ஏற்படுத்துவது தன் வேலை எனவும் திட்டமிட்டார் ஆடம். அப்போது Yahoo answers என ஒரு சேவை இருந்தது. ஆனால், நல்ல பதில்களைவிட ஜாலியாக, கிண்டலான பதில்களே அதில் அதிக கவனம் பெற்றன. ஆனாலும் கூட்டம் அள்ளியது. அந்த வடிவத்தை நிறைய பட்டி டிங்கரிங் பார்த்தால் என்னவெனத் தோன்றியது ஆடமுக்கு. ஆடமின் அந்த ஜீபூம்பாவை சார்லியும் நம்பினார்.

பேஸ்புக்கில் ஆடமுக்கு சார்லியைத் தவிர இன்னொரு முக்கியமான நண்பர் இருந்தார். அவர், அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். அவரும் ஆடமும் பள்ளிக்கால நண்பர்கள். இருவரும், கோடிங் எழுதுபவர்களுக்காக இருந்த ஓர் அமைப்பில் உறுப்பினர்கள். கோடிங் எழுதுவதில் நிறைய முறை இரண்டு பேரும் போட்டியிட்டிருக்கிறார்கள். மார்க், பேஸ்புக் தொடங்கியபோது அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக ஆடமைத் தேர்வு செய்தார். காரணம், இருவரும் கோடிங் போட்டியில் கலந்துகொண்ட போதெல்லாம் மார்க்கை “இன்னுமா எழுதிட்டிருக்க” என்பதுபோல எளிதில் வென்றவர் ஆடம். மார்க்கின் பல முக்கியமான, திறமையான முடிவுகளில் ஒன்று ஆடமை CTO ஆக்கியது என்பார்கள் தொழில் வல்லுநர்கள்.
ஆடம் பேஸ்புக்கிலிருந்து இரண்டு முறை வெளியேறியிருக்கிறார். இரண்டு முறையும் புதிய முயற்சிக்காகத்தான் வெளியேறினார். “நான் கோரா தொடங்குவதற்காக பேஸ்புக்கை விட்டு வெளியேறியபோது அது நன்கு வளர்ந்து ஒரு நிறுவனமாகிவிட்டிருந்தது. பேஸ்புக்குக்கு நான் தேவையில்லை என்ற நிலையில்தான் நான் அடுத்த முயற்சியைப் பற்றியே யோசித்தேன். மார்க்கும் அதைப் புரிந்துகொண்டார்” என்றார் ஆடம்.
வேலைகள் தொடங்கின. அவர்கள் ஐடியாவுக்கு உருவம் தர மூன்றாவதாக ஒருவரை வேலைக்கு எடுத்தார்கள். அப்போதுதான் பணம் தேவை என்பதே உறைத்தது. ஆடம் பேஸ்புக்கில் மிக முக்கியமான பதவியிலிருந்தவர். அதனால் நிறைய முதலீட்டாளர்களுக்கு அவரையும் அவர் திறமை பற்றியும் தெரியும். அதில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு 11 மில்லியன் டாலர் முதலீடு தந்தார். அதனால் எந்தப் பிரச்னையுமின்றி கோரா வளர்ந்தது.
ஆடமுக்கு எளிமை பிடிக்கும். அதனால் கோரா இணையதளத்தை எளிமையாக வடிவமைத்தார். நிறைய வசதிகள், பளிச் பளிச் விஷயங்கள் என ஏதுமின்றி, கேள்விகள் அதற்கான பதில்கள் என்றாக்கினார். ``இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு?” எனக் கேட்டவர்களிடம், “கோராவின் அழகு அதன் வடிவத்தில் இல்லை; அதைப் பயன்படுத்துபவர்கள் பகிரப்போவதில் இருக்கிறது’’ என்றார்.
முதலில் டெக் ஆர்வலர்கள் நிறைய பேர் கோராவைப் பயன்படுத்தினார்கள். அதற்குக் காரணம் டெக் ஆர்வலர்களுக்கு ஆடமைத் தெரியும். மார்க் ,பேஸ்புக்கைத் தவிர மற்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தது கிடையாது. ஆனால், கோரா தொடங்கியபோது மார்க் அதன் பவர் யூஸர். “பேஸ்புக் வாங்க வேண்டிய அடுத்த நிறுவனம் எது” என ஒரு முறை கோராவில் அவர் கேட்க, நிறைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில் முக்கியமான ஸ்டார்ட் அப் Nextstop. அடுத்த சில மாதங்களில் பேஸ்புக் அதை வாங்கியது. மார்க்காவது ஆடமின் நண்பர்; உதவி செய்தார் எனச் சொல்லலாம். ஆனால், சிலிக்கான் வேலியின் முக்கியமான முதலீட்டாளர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களும் கோராவில் பிஸி ஆனார்கள். அதுவே நிறைய வாடிக்கையாளர்களை கோராவில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பத்தில் உதவியது.
கல்விமுறைத் தேர்வுகளில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். அதனால், விடையளிப்பது என்பது நமக்கு விருப்பமான ஒன்றாக இருக்காது. ஆனால், நம் அனைவருக்குமே நமக்கு விடை தெரிந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆசையிருக்கும். கோரா அதற்குத் தளம் அமைத்துக் கொடுக்கிறது. தகவல்களைப் பரிமாற, பலருக்கும் தயக்கமிருக்கும். ஆனால், அறிவைப் பகிர்வதில் அந்தத் தயக்கம் இருக்காது. அறிவைப் பகிரும்போது அங்கே உரையாடலுக்கு ஒரு வாய்ப்பு உருவாகிறது. உரையாடல் நம் அறிவைக் கூர்மையாக்கும். அதனால், நாம் அறிவாளி என்பதை உலகுக்குப் பறைசாற்றும் அதே நேரம் இன்னுமின்னும் நம் அறிவை வளர்த்துக்கொள்ளவும் செய்யலாம். இதுதான் கோராவின் வெற்றிக்கான முக்கியமான காரணம்.

ஆடம் படித்தது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில். நம்ம ஊர் போலவே அங்கேயும் CGPA ரேட்டிங் உண்டு. ஆடம் எடுத்த CGPA 4 தான். காரணம், அங்கு அதிகபட்ச மதிப்பெண்ணே 4 தான். ஆடமுக்கு எப்போதும் அப்படியிருக்கத்தான் ஆசை. அதனால், கோராவைச் சிறப்பான, சரியான பதில்கள் தருமிடமாக அமைக்க விரும்பினார்.
மூன்று பேருடன் தொடங்கப்பட்ட கோராவை, இப்போது ஒவ்வொரு மாதமும் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்கள் பட்டியலில் இப்போது 85-வது இடத்திலிருக்கிறது கோரா. அறிவுக்கு மொழி ஒரு போதும் தடையாக இருக்க முடியாது என நம்புகிறது கோரா. அதனால், தமிழ் உட்பட உலக மொழிகள் பலவற்றுக்கும் கோரா வரப்போகிறது. அதற்கான பீட்டா சோதனைகள் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கோராவில் நாம் நிறைய நேரம் செலவிட்டால் நமக்குப் பணமோ பாயின்ட்ஸோ கிடைக்காது. இது மற்ற சமூக வலைதளங்களைப் போல நேரத்தைப் போக்குவதற்காக உதவுவதும் கிடையாது. கோராவில் நாம் தரும் ஒவ்வொரு விடையும் நமக்கான அங்கீகாரம். நமக்கான நன்மதிப்பைப் பெற்றுத்தரும். அதுதான் இதை மற்ற சமூக வலைதளங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
ஆடமுக்கு இப்போதுதான் 34 வயதாகிறது. 2016-லே அவர் மதிப்பு 5000 கோடி என்கிறது போர்ப்ஸ். அதைவிட முக்கியம் 34 வயதிலே தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார். இந்த உலகுக்கு அவர் பங்களிக்க விரும்பிய, மனிதர்களின் அறிவைப் பெருக்க உதவும் கருவியொன்றை நமக்கு அவர் தந்திருக்கிறார். ஒவ்வொருவரும் இந்த உலகுக்குக் கொடுக்க அப்படி ஒன்று நிச்சயம் இருக்கும். அதை நாம் செய்கிறோமா என்பதுதான் நமக்கான கேள்வி. நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி.
- கார்க்கிபவா