மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி

தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி

தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த `ப்ரதிக்ஸ் என்விரோவ் சொல்யூஷன்’ நிறுவன உரிமையாளரான தாக்‌ஷாயிணி.

இந்தக் கோடை, நகரங்கள் முதல் கிராமங்கள்வரை தண்ணீருக்காக பொதுமக்களைத் திண்டாடவைத்துக்கொண்டிருக்கிறது. பருவமழைக் காலங்களில் மழைநீரை முறையாகச் சேமிக்காததும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வில்லாமல் இருப்பதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்குப் பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், நீர் மேலாண்மையைத் தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தாக்‌ஷாயிணி.

மைசூரைச் சேர்ந்த தாக்‌ஷாயிணி, கோழிக்கோடு ஐஐஎம்மில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருமணமாகி சென்னையில் குடியேறியவர், 12 ஆண்டுகளில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்திருக்கிறார். நல்ல சம்பளத்துடன் வாழ்க்கை சீராகச் சென்றபோதும், `இதில் என்ன சுவாரஸ்யம்? வாழ்க்கையில் நிறைய சவால்களைச் சந்தித்தால்தான், நம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும்’ என  தாக்‌ஷாயிணி நினைத்திருக்கிறார். எனவே, தொழில்முனைவோராக வேண்டும் என்கிற தன் லட்சியத்துக்கு செயல்வடிவம் கொடுக்கிறார். `மேன் பவர் ஏஜென்சி' நிறுவனத்தை ஆறு ஆண்டுகள் நடத்தியவரின் அடுத்த இலக்கு, நீர் மேலாண்மை மீது திரும்பியிருக்கிறது.

தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி

``சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு பெரும் பிரச்னைகளாக உருவெடுத்துவந்த நிலையில் அதற்குத் தீர்வுகாண நினைச்சேன். எனக்கு டெக்னாலஜி சார்ந்த விஷயங்களில் அனுபவமும் ஆர்வமும் உண்டு. எனவே, 2011-ம் ஆண்டு என்.ஜி.ஓ ஒன்றைத் தொடங்கி, சேவை நோக்கத்துடன் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் உதவிகளும் செய்துட்டிருந்தேன். நீர் மேலாண்மை குறித்து பயனுள்ள பல ஆலோசனைகளை அரசு அதிகாரிகளிடமும் விவரிப்பேன். அப்போ என் வேலைகளை  வெறும் சேவை நோக்கத்தில் செய்ததால், பெரிதாக மக்களிடம் வரவேற்பு கிடைக்கலை. அவமதிப்புதான் அதிகம் கிடைச்சது. என்றாலும், அதே மக்கள் கோடைக்காலத்துல தண்ணீர்த் தட்டுப்பாட்டால் லாரி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கப் போட்டி போட்டதையெல்லாம் பார்த்து ஆதங்கப்பட்டேன். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண என்னாலான உதவிகளைச் செய்யணும்னு நினைச்சேன். 2015-ம் ஆண்டு முதல், நீர் மேலாண்மையில் பிசினஸ் நோக்கத்திலும் செயல்பட ஆரம்பிச்சேன்.

நிறைய மக்கள், பெரு நிறுவன முதலாளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள்னு பலரையும் சந்திச்சேன். அவர்களிடம், `தண்ணீர்த் தட்டுப்பாடு தவிர்க்க வழி இருக்கிறது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர் மேலாண்மையைக் கடைப்பிடிக்கலாம். அதைக் குறைந்த செலவில் நான் செய்துகொடுக்கிறேன்’னு சொல்வேன். ஆனாலும், அவங்களுக்கு அதைப் புரியவைக்கிறது சவாலா இருந்துச்சு. இந்தத் தொழிலில் வேலையாட்கள் பிரச்னையும் இருந்துச்சு. `என் வேலையில் திருப்தி கிடைச்சா மட்டும் பணம் கொடுங்க’னு சொல்லி நிறைய வாடிக்கையாளர்களை உருவாக்கினேன். `நல்ல வேலையை விட்டுட்டு, செப்டிக் டேங்க்கை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்றீங்களே’ன்னு பலர் கேட்டாங்க. இதையெல்லாம் பார்த்தா முன்னேற்றம் கிடைக்காது என்பதில் உறுதியாயிருந்தேன்” - இதே உத்வேகத்துடன் தொழில் பயணத்தில் பல்வேறு தடைகளையும் கடந்திருக்கிறார், தாக்‌ஷாயிணி.

பொதுவாக நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு தினமும் 750 லிட்டர் தண்ணீர் தேவை.

தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி

இந்தத் தேவையில் இப்போது 50% தட்டுப்பாடு நிலவுகிறது. இருந்தும் தண்ணீரை மறுசுழற்சிக்கு உட்படுத்திப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் பயன்படுத்துவதில் 90% - 100% தண்ணீரை வீணாக்கு கிறோம். நம் தாத்தா காலத்தில் போர்வெல் தொழில்நுட்பம் கிடையாது. பல வீட்டாரும் ஒன்று சேர்ந்து, பொதுப் பயன்பாட்டுக்கென கிணறு வெட்டினார்கள். அதை மழையில்லா காலங்களில் முறையாகத் தூர்வாரி, மழைக்காலங்களில் நீர் சேமிப்பைக் கடைப்பிடித்தார்கள். முடிந்த அளவுக்குத் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளித்தார்கள். இன்று பல நூறு அடியைக் கடந்தும் ஆழ்குழாய் கிணற்றில் நீர் கிடைப்பதில்லை. இன்னும் அதிக ஆழத்தில் கிடைக்கும் போர்வெல் நீரில் குளோரைடு, அயர்ன், உப்புத்தன்மை அதிகமிருப்பதால், அவை நம் உடலுக்கு உகந்ததாக இருப்பதில்லை.

பணம் செலுத்தி, மெட்ரோ குடிநீருக்கு விண்ணப்பித்தாலும், 2-3 வாரங்கள் காத்திருப்பு நிலை ஏற்படுகிறது. 50 லட்சம் ரூபாயில் அப்பார்ட்மென்ட் வீட்டை வாங்குபவர்கள், அந்தப் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை எப்படியிருக்கிறது எனக் கேட்பதில்லை. பிறகு பணம் செலுத்தி லாரியில் தண்ணீரை வாங்குகிறார்கள். இத்தகைய நிலையெல்லாம் தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிக மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். தலைநகர் சென்னையில் காசுக்குக்கூடத் தண்ணீர் இல்லை என்ற நிலை நிச்சயம் உருவாகும். அந்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களை யெல்லாம் மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார், தாக்‌ஷாயிணி

``சமையலறை பயன்பாட்டுக்கு, துணி துவைக்க, குளியலுக்கு என அத்தியாவசியத் தேவைக்காக ஒரு வீட்டில் தினமும் 1,000 லிட்டர் நீர் செலவாகிறது என வைத்துக்கொள்வோம். அந்நீரை, `க்ரே வாட்டர் ரீ-சைக்ளிங் ட்ரீட்மென்ட்’ முறையில் சுத்திகரித்தால், 700 லிட்டர் நீர் கிடைக்கும். அதை மனிதர்களுக்கான பயன்பாடு தவிர்த்து, கழிவறை, க்ளீனிங், தோட்டப் பயன்பாடு உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இப்படித் தொடர்ந்து தண்ணீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்திட்டேயிருந்தா, தண்ணீர்த் தட்டுப்பாடு எப்படி வரும்? `பயோ டைஜஸ்டர் பிளான்ட்’ முறையில் டாய்லெட் கழிவுநீரையும் சுத்திகரிக்கலாம். சுத்திகரித்த அந்த நீரைப் பயன்படுத்த விரும்பாதவங்க, அப்படியே நிலத்தடி நீர் சேமிப்பில் விடலாம்.

`ஹைட்ரோ ஜியலாஜிக்கல் அசஸ்மென்ட்’ முறையில் நிலத்தடி நீரின் தன்மையைச் சோதித்து, அதைக் குடிநீர் பயன்பாட்டுக்கு உகந்ததா மாற்றலாம். `வாட்டர் ஆடிட்’ முறையில் நீர் மேலாண்மை குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிஞ்சுக்கலாம். இது வணிக நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டுவோருக்குப் பெரிதும் உதவும். `பயோ சீவேஜ் ட்ரீட்மென்ட் பிளான்ட்’ முறையில் கழிவுநீரையும் சுத்திகரிக்க முடியும். இப்படி, நீர் மேலாண்மைக்கு நிறைய தொழில்நுட்பங்கள் இருக்கு. மேற்சொன்ன முறைகளில் ஒவ்வொருத்தரும் தங்களுக்கு உகந்ததை வீடு கட்டும்போதே அமைத்தால் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். தண்ணீர்ப் பிரச்னையும் தீரும்’’ என்று நம்பிக்கையளிக்கிறார், தாக்‌ஷாயிணி.

தொடர் முயற்சியாலும் உழைப்பாலும் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறார் தாக்‌ஷாயிணி. நீர் மேலாண்மை தவிர, பயோ கேஸ் பிளான்ட் உள்ளிட்ட வேலைகளிலும் கவனம் செலுத்துகிறார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகளை முடித்திருக்கிறார்.

சென்னையிலுள்ள முக்கியமான கோயில் குளங்களைப் பராமரிக்கும் பணிகளையும் மேற்கொள்கிறார். தவிர, அரசுப் பணிகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூய்மைப்படுத்தும் வேலைகளையும் செய்துவருகிறார். இப்போது 40 பேருக்கு முதலாளியான இவர், ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புராஜெக்ட்டுகளிலும் பணியாற்றிவருகிறார். 2021-ம் ஆண்டில் 100 கோடி டர்ன் ஓவர் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார். பிசினஸ் தவிர, சேவை நோக்கிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

``நான்கைந்து வருஷத்துக்கு ஒருமுறை சராசரி அளவைவிட அதிக மழை நமக்குக் கிடைக்குது. தவிர, பருவ மழை பொய்த்துப் போனாலும் ஆண்டுக்கு ஒருமுறை சில மாதங்களில் நல்ல மழை கிடைக்குது. நீர் சேகரிப்பில் அரசு அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம்தான்... அதேநேரம் மழைக்காலங்களில் நம் வீட்டைச் சுற்றித் தேங்கும் மழைநீரையாவது சேமிக்க வேண்டியது மக்களின் கடமை. அதனால நீர் மட்டம் உயரும். தவிர, தொழில்நுட்பங்களின் உதவியுடன் குறைந்த செலவில் நீரை மறுசுழற்சி செய்தும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எளிதில் சமாளிக்கலாம். இப்படிச் செய்வதால், எங்க வீட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு என்பதே இல்லை. எங்க வீட்டுக்கு யார் வேணும்னாலும் வந்து, நான் மேற்கொள்ளும் நீர் மேலாண்மை முறைகளை கற்றுக்கொண்டுப்போகலாம்” என்று மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுக்கிறார் தாக்‌ஷாயிணி.

- நாம் வெல்வோம்!

- கு.ஆனந்தராஜ், படங்கள்: பா.காளிமுத்து

நான் கற்ற பாடம்!

தொழில் பயணத்தில் எடுத்த உடனேயே வெற்றி கிடைச்சுடாது. பல வருஷங்களுக்கு முன்னாடி நான் விழிப்புணர்வு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு இப்போதான் தண்ணீரின் அருமை புரிஞ்சிருக்கு; நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை அமைச்சுக்கொடுக்கச் சொல்லி என்னைத் தேடி வர்றாங்க. இப்படி, பிசினஸில் நம்ம போடுற விதை எப்போ வளரும்னு சொல்ல முடியாது. ஆனா, நம்பிக்கையுடன் தொடர்ந்து விதை போட்டுக்கிட்டே இருக்கணும். அதனால, எதிர்கால இலக்குகளுக்கும் சேர்த்து நான் விதைகளை விதைச்சுட்டேயிருக்கேன்.