நடப்பு
Published:Updated:

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!

நாணயம் புக் செல்ஃப்

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், வெற்றிகரமானதொரு விளையாட்டு வீரராகத் தொடர்ந்து நீங்கள் இருப்பது எப்படி என்கிற ரகசியத்தை எடுத்துச் சொல்கிறது. ஜிம் அஃபெர்மோ என்பவர் எழுதிய இந்தப் புத்தகம், பள்ளி, கல்லூரி, பொழுதுபோக்கு அல்லது புரஃபஷனல், ஒலிம்பிக் போட்டி என எந்தவிதமான விளையாட்டினை விளையாடும் நபராக நீங்கள் இருந்தாலுமே அதில் எப்படி வெற்றியாளராகத் திகழ்வது என்பதைச் சொல்கிறது. 

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!

“கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கபடி என நீங்கள் எந்தவிதமான விளையாட்டினை விளையாடினாலும், உங்கள் முழு உழைப்பையும் கவனத்தினையும் வெற்றி பெறுவதற்காகச் செலவழிப்பீர்கள். நீங்கள் எப்போது வெற்றி பெறுவீர்கள் எனில், தேவையான நேரத்தில் உங்களுடைய செயல்பாட்டினை மிகச் சிறப்பாக செய்துமுடிக்கும்போதுதான். நிர்ணயிக்கப்படும் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் நீங்கள் வெகு சிறப்பாகச் செயல்படுவதுதான் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான அம்சமாகும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்” என ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!



‘‘உங்களைச் சுற்றியிருக்கும் வெற்றிகரமான மனிதர்களை உற்றுநோக்குங்கள். குறிப்பாகச் சொன்னால், நீங்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்களைக் கொஞ்சம் கவனியுங்கள். அவர்களுடைய தன்னம்பிக்கை, கவனம், மன அமைதி, அர்ப்பணிப்பு என எந்தக் குணம் அவர்களை மரியாதைமிக்கவர் களாக ஆக்குகிறது, அவர்களிடமிருக்கும் எந்தக் குணத்தை நீங்கள் அதிகம் மதிக்கிறீர்கள், அவர்களுடைய மனோதிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பாருங்கள்.

இத்தகைய நபர்களிடம் உள்ள சிறப்பு குணாதிசயங்களில் எதெல்லாம் உங்களுக்குப் பெரிய அளவில் பிடிக்கிறதோ, அவை   உங்களுக்கு உள்ளேயும் இருக்கவே செய்கிறது. அவற்றை முழுமையாக வெளிக்கொணர்ந்தால், நீங்களும் வெற்றியாளரே” என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!

‘‘வெற்றியாளர்களைக் கண்டு வியந்து அவர்களை மெச்சுவதோ அல்லது அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்வதோ மனிதர்கள் அனைவருக்குமே கைவந்த கலையாகும். ஆனால், மனிதர்கள் அனைவருமே ஒரே மாதிரியானவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக, மனிதர்கள் பெருமளவில் வேறுபட்டவர்கள் இல்லை. ஆனால், வெற்றியாளர்களைப் பின்பற்றி அவர்களைப்போலவே (மிமிக்ரி செய்வது மாதிரி) செயல்படுவது நம்மைத் தோல்வியிலேயே கொண்டுபோய் சேர்க்கும். மாறாக, நமக்குள் இருக்கும் பண்புகளைக் கண்டறிந்து அவற்றிற்கு முழு எனர்ஜியையும் கொடுத்தால் மட்டுமே நம்மால் வெற்றியாளராக உருவெடுக்க முடியும்.  

விளையாட்டில் வெற்றி என்பது 90% மனம் சம்பந்தப்பட்டதும், மீதமிருப்பவை உடல் சம்பந்தப்பட்டதும் என்பார்கள். எனவே, ஒரு விளையாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வெற்றியாளரைப்போலத்  திகழ வேண்டுமெனில், நீங்களும் அவரைப் போன்ற குணாதிசயங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதேபோன்ற சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் இலக்கினைச் சென்றடையத் தேவையான தயார் நிலையையும், மனோதிடத்தையும், மனதின் திட்டங்களையும், ஞானத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

எந்த விளையாட்டானாலும் சரி, எது வெற்றியாளர்களை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று பார்த்தால், அது வெற்றியாளர்களின் மனோபாவமேயாகும். மனநிலையே ஏனைய விஷயங்கள் அனைத்தையும் நிகழ்த்துகிறது என்றே விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் பலரும் உணர்ந்து சொல்கின்றனர். எனவே, மனோதிடம் என்பது வெற்றியில் பெரியதோர் அங்கம் வகிக்கிறது. வெறுமனே உடல்ரீதியான ஃபிட்னஸ் மட்டுமே வெற்றிக்கு வழிவகுத்துவிடுவதில்லை.  உடல்வலுவில் மிகச் சிறந்து விளங்கும் பல விளையாட்டு வீரர்களுமே வெற்றிக்கு மனதின் பங்களிப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர்’’ என்கிறார் ஆசிரியர்.

“ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் மனதின்  பங்களிப்பைப் பார்ப்போம். வெற்றிபெறும் குழுவின்  கெமிஸ்ட்ரி, ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே மனநிலை என்பதே வெற்றியை எட்டுவதற்கு உதவும் விஷயங்களாக இருக்கின்றன.

ஒரு குழுவின் வெற்றி என்பது அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைவரின் விதிப்பயன் எனச் சொல்லலாம். ஆனால், அந்த விதிப்பயனை வெற்றிக்கானதாக மாற்ற என்னென்ன கேள்விகளை அந்தக் குழுவில் இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளவேண்டும் தெரியுமா?

1. நான் செய்கிற எந்தக் காரியம் (உதாரணமாக, புகார் சொல்லுதல், புறங்கூறுதல் போன்றவை) என்னுடைய குழுவைச் சீர்குலைக்கிறது?

2. நான் செய்யாத எந்தக் காரியம் (உதாரணத்திற்கு, குழுவின் அங்கத்தினர்களை உற்சாகப்படுத்தத் தவறுவது, நமக்குக் குழுவில் தரப் பட்டுள்ள பாத்திரத்தை முழுமனதாக ஏற்க மறுப்பது) என்னுடைய குழுவைச் சீர்குலைக்கிறது?

வெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்!

3. தற்போதைய நிலையை விட சிறந்த நிலையை அடைய நான் எந்தெந்த நடவடிக்கைகளைப் போட்டி களின்போது எடுக்க வேண்டியிருக்கும்?

இவைதான் அந்தக் கேள்விகள். இந்தக் கேள்வி களில் பெரும்பான்மை யானவை மனரீதியான விஷயங்களையே குறிப்பிடு கின்றன. எனவேதான், தனிநபர் விளையாட்டானா லும் சரி, அல்லது குழுவாக விளையாடும் விளையாட்டானாலும் சரி மனநிலை என்பது வெற்றி பெறுவதில் பெரும்பங்கு வகிக்கிறது” என்கிறார் ஆசிரியர்.

“விளையாட்டில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது பல்வேறு விதமான இடைஞ்சல்கள் தோன்றவே செய்யும். விளையாட்டையும் வாழ்க்கையையும் சமமாக வைத்திருக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வேலை - வாழ்க்கை சமநிலை குறித்து எக்கச்சக்கமாகப் பேசப்பட்டாலும் நடப்பில் இதை எட்டமுடியாமல் தத்தளிப்போம். இந்த சமநிலை என்பது எல்லாக் காலகட்டத்திலும் (ஒரு நாள், ஒரு மாதம், ஒரு ஆண்டு என) ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று நினைத்தால், அது நடக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் சிலசமயம், விளையாட்டில்  முழுமையாக ஈடுபடவேண்டியிருக்கும். விளையாட்டு சூப்பராகப் போகும்போது வாழ்க்கையும் சுமாராகப் போகலாம். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவழிக்க முடியாமல் போகலாம். இதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கமே என்பதைப் புரிந்துகொண்டு, நீங்கள் செயல்படவேண்டும். ஏனென்றால், விளையாட்டு உங்களுடைய முழுமையான கவனத்தினைக் கோரும்போது, ‘என்ன இழவு வாழ்க்கை இது’ என்கிற எண்ணம் தோன்றி னால், அது வெற்றிக்கு வழி வகுக்காது’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘இந்தப் புத்தகத்தில் தரப் பட்டுள்ள அணுகுமுறைகள் மற்றும் நடப்புவிதிகள் எல்லாம் விளையாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், கார்ப்பரேட் செயல்பாடு களுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் உகந்ததாக  இருக்கும். உலகத்திலுள்ள பல்வேறு விளையாட்டுகளின் வெற்றியாளர்களுடைய வெற்றிக்கான மனரீதியான காரணிகளை அவர்களிடமே கேட்டறிந்து, அந்தக் கருத்துகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கடைப்பிடித்தால் வெற்றியாளருக்கான மனநிலையைப் பெறலாம்’’ என்கிறார் ஆசிரியர்.
 
கஷ்டப்பட்டு நீங்கள் கற்றுக்கொண்ட  வெற்றியாளர் மனநிலையை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதற்கான ஐடியாக்களை இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

விளையாட்டோ அல்லது வேலையோ, வெற்றி என்பதை எட்டிப்பிடிக்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம். வெற்றி பெறுவதற்கான மனோநிலையை அமைத்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்!

- நாணயம் விகடன் டீம்