Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே !

பிஸினஸ் வெற்றிக் கதைகள் வே.கிருஷ்ணவேணி படங்கள்: வி.செந்தில்குமார்

##~##

''ஒரு ஆக்ஸிடென்ட் என்னை முழுமையா முடக்கிப் போட... அதுல இருந்து தப்பிக்க நான் கையில எடுத்த ஆயுதம்... ஆரத்தித் தட்டு. அதுதான் இன்னிக்கு என்னை வாழ வைக்குது'' என்று நம்பிக்கையோடு பேசும் சென்னை, நன்மங்கலத்தை சேர்ந்த விஜிதா... ஆரத்தித் தட்டுகள் செய்வதையே ஒரு தொழிலாக எடுத்து, அதில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் அள்ளிக் கொண்டிருக்கிறார்.

பி.இ முடித்து, கல்லூரியில் லெக்சராக இருந்த விஜிதாவுக்கு, ஃபினான்ஷியல் அனலிஸ்ட் திலக் சந்தருடன் திருமணம் நிச்சயமானது. அந்த சமயத்தில்தான், ஒரு ஜவுளிக் கடையின் நாற்காலியிலிருந்த இரும்புக் கம்பி அவருடைய தொடையில் ஏறி, கிட்டத்தட்ட ஓராண்டு விஜிதாவை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டு விட்டது. இப்படிப்பட்ட சூழலில் திருமணம் முடிந்துவிட்டாலும், வாழ்க்கையை நரகமாக உணர்ந்து கொண்டிருந்த நிலையில் ஆரத்தித்  தட்டு விஷயத்தை இவர் கையில் எடுத்த முன் கதையை   கடந்த இதழில் பார்த்தோம். இனி, தான் முன்னேற்றப்  பாதை யில் அடியெடுத்து வைத்தது... அதில் வெற்றிகளை சாதித்தது என்று அனைத்தையும் இந்த இதழில் பேசுகிறார் விஜிதா...

''உடல் நிலை பற்றியே யோசிக்காம, ஏதாவது ஒரு கிரியேட்டிவ் விஷயத்துல கவனம் செலுத்துனு கணவர் தூண்டி விட... 'உன்னால் முடியும் பெண்ணே'னு எனக்குக் கைகொடுத்தவர்... இந்திரா ஈஸ்வர். ஆலந்தூர், அறிவொளி இயக்க மகளிர் சுய உதவிக்குழுவோட தலைவியா இருக்கற இந்திரா ஈஸ்வர் தொழில் பத்தின வழிகாட்டல்களை எனக்குக் கொடுத்தாங்க. அதுதான் நான் எடுத்து வெச்ச முதல் அடி'' என்ற விஜிதா, அந்தத் தொழிலின் அடிப்படை விவரங்கள் முதல் லாபக் கணக்குகள் வரை அனைத்தும் பேசினார்... சிநேகத்துடன்!

உன்னால் முடியும் பெண்ணே !

''ஆரத்தித் தட்டு தொழிலைச் செய்ய கொஞ்சமே கொஞ்சம் முதலீடும், நிறைய கற்பனை வளமும் போதும். ஒரு காலத்துல திருமணம், சடங்குகள்ல சம்பிரதாயமா இருந்த ஆரத்தி, இப்போ ஃபேஷனா, பிரமாண்டமா ஆயிடுச்சு. விளக்கு ஆரத்தி, குண்டுமணி ஆரத்தினு சாஸ்திரத்துக்கு இரண்டு, மூன்று வகைகள்ல ஆரத்தி எடுத்த காலம் போய், இப்போ 21, 51, 101 வகைகள் வரைகூட ஆரத்திகள் எடுக்கிற விருப்பமும்... பழக்கமும் மக்கள்கிட்ட வந்திருக்கு. இதையே நமக்கான வாய்ப்பா பயன்படுத்திக் கிட்டு களத்துல இறங்கினா... ஜெயம்தான்.

உன்னால் முடியும் பெண்ணே !

இருக்கிற இடத்துலயே, கிரியேட்டிவிட்டியை கொட்டி செய்ற வேலை இது. கற்கண்டு, காய்கறிகள், பழங்கள், மலர்கள்ல ஆரம்பிச்சு... பாக்கு மட்டை, தெர்மக்கோல், பிளாஸ்டிக், பீங்கான், ஜமிக்கினு பல பொருட்கள்லயும் ஆரத்தி தட்டுகள் செய்யலாம். ஒரே நிபந்தனை... பார்க்கறவங்க ரசிக்கிற மாதிரி அது அழகோட, நேர்த்தியோட இருக்கணும்... அவ்வளவுதான். உதாரணமா, காய்கறிகளை மலர் வடிவத்துல 'கட்’ செய்றது, சீனியைப் பரப்பி கடுகு, மிளகு, சீரகம்னு மளிகைப் பொருட்களை வெச்சே அதன் மேல மணமக்களோட முகங்களை வரையறது, கடவுளர்களோட முகங்கள், நேச்சுரல் ஸீன்கள், பறவைகள்னு பலதையும் வரையலாம்.

ஆரத்தித்தட்டு விலைக்கு வாங்குறவங்க... பெரும்பாலும் கிரியேட்டிவ் வேலைப்பாடுள்ள தட்டுகளைத்தான் கேட்கறாங்க. அதனால கற்பனைத் திறனை எல்லையில்லாம விரிச்சு வெச்சுக்கிட்டு ஆரத்தி தட்டுகள செய்தா... கண்டிப்பா ஜெயிக்கலாம்!

ஆரத்தி தட்டுகளுக்கு ஆர்டர் பிடிக்கிறது, அடுத்த வேலை. ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள்னு தெரிஞ்சவங்ககிட்ட ஆர்டர்கள் எடுக்கலாம். அதை சிறப்பா, மத்தவங்கள கவனிக்க வைக்கற மாதிரி பண்ணிட்டா, அந்த விசேஷத்துக்கு வந்திருக்கிறவங்க நிச்சயமா உங்களை மனசுல குறிச்சுக்குவாங்க. கூடவே, அந்த திருமணக் கூட்டத்திலேயே, 'நான் விசேஷங்களுக்கு ஆரத்தித் தட்டுகள் செய்றேன்... உங்க வீட்டு விசேஷங்களுக்கும் தேவைப்பட்டா கூப்பிடுங்க...’னு வாய்மொழியாவோ, விசிட்டிங் கார்டு, துண்டு பேப்பர் மூலமாவோ விளம்பரம் செய்து, தொடர்பு   களை ஏற்படுத்திக்கலாம். இதன் மூலமா அடுத்தடுத்த ஆர்டர்கள் கிடைக்க வழி ஏற்படும்.

பியூட்டி பார்லர்கள், திருமண மண்டபங்கள், சமையல் கான்ட்ராக்டர்கள், திருமண பத்திரிகை அடிக்கிற பிரின்ட்டிங் பிரஸ்காரர்கள்னு இவங்ககிட்ட எல்லாம் அறிமுகம் ஏற்படுத்திக் கிட்டு, அவங்களுக்கு வர்ற திருமண ஆர்டர்கள் கிட்ட உங்களுக்கான ஆரத்தி வாய்ப்பைக் கேட்கலாம். தவிர, ஏரியா அசோஸியேஷன்கள், மகளிர் சங்கங்கள்னும் அறிமுகம் ஏற்படுத்திக் கிட்டும் வாய்ப்பு கேட்கலாம். இதெல்லாம் அதிக ஆர்டர்களைப் பெற்றுத் தருவதற்    கான வழிகள். நலங்கு, நிச்சயதார்த்தம், திருமணம்னு ஆரத்தி எடுக்கறது மட்டுமில்ல... வரவேற்பு, மேடையில் ஆரத்தி பரப்புறதும் இப்போ சிறப்பு.

உன்னால் முடியும் பெண்ணே !

ஒரு ஆர்டர்ல, வைக்கிற தட்டுகளோட எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் வாங்கலாம். பொதுவா ஒரு தட்டோட குறைந்தபட்ச விலை 150 ரூபாய்தான். ஒரு நிகழ்ச்சியில 7 தட்டு வெச்சா... 1,050 ரூபாய் வரும். வெஜிடபிள் கார்விங், மணமக்கள் முகங்களை வரையறது மாதிரியான ஸ்பெஷல் தட்டுனா... கட்டணம் கூடுதலா வரும்.

முகூர்த்தம் மட்டுமில்ல... காது குத்து, மகளிர் தின திருவிழாக்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், அரசியல்கட்சிகளோட நிகழ்ச்சிகள், அரசு அலுவலகங்கள்ல நடக்கற நிகழ்ச்சிகள், சுயஉதவிக் குழுக் களோட நிகழ்ச்சிகள், பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்னு பலவிதமான நிகழ்ச்சிகள்லயும் ஆரத்தித் தட்டுக்கு மவுசு இருக்கு. முகூர்த்த மாதங்களா இருந்தா 20 ஆயிரம் ரூபாயும், மத்த மாதங்களில் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமலும் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கு'' என்று சொல்லும் விஜிதா...

''பலரும் என்கிட்ட கேப்பாங்க... 'என்ன இது பி.இ. படிச்சுட்டு இந்த வேலையைச் செய்துட்டிருக்கியே?'னு! உட்கார்ந்த இடத்திலிருந்தே, இந்தத் தொழில் மூலமா நான் வாங்கிக்கிட்டிருக்கற பாராட்டு, சம்பாதிக்கற பணம்... இதெல்லாம்தான் அவங்களுக்கான பதில்!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்.

நிஜம்தானே!
- லாபம் வளரும்...

குறைந்தபட்சம் 150 ரூபாய்!

ஆரத்தித் தட்டுகளை பிளாஸ்டிக் தட்டு, தெர்மக்கோல் தட்டு, பாக்குமட்டை தட்டு, கண்ணாடி தட்டு மற்றும் எவர்சில்வர் தட்டு என்று பலவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். வாடகை மற்றும் விற் பனை என்று இரண்டு வழிகளில் இந்த ஆரத்தி தட்டு தொழிலை நாம் மேற்கொள்ள முடியும். சிலர் ஆரத்தி தட்டுகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு விடுவார்கள். சிலர், தங்களுடைய நிகழ்ச்சியில் காட்சிக் காக வைப்பதற்கு மட்டும் வாடகை அடிப்படையில் வாங்குவார்கள். இதற்காக பிரத்யேக டிசைன்களுடன் ஆர்டர்கள் தருவார்கள். அதற்கேற்றாற்போல செய்து கொடுத்து, நாம் வாடகைக் கட்டணத்தை வசூலிக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த தட்டுகளை திரும்ப எடுத்து வந்துவிடலாம். இப்படி வாடகைக்காக தயாரிக்கப்படும் தட்டுகள்... கண்ணாடி அல்லது எவர்சில்வர் தட்டுகளாக இருந்தால், அவற்றில் ஏற்கெனவே நாம் செய்திருக்கும் டிசைன்களை மாற்றிவிட்டு, புது டிசைன் போட்டு வேறு நபர்களுக்கு கொடுக்க முடியும். திரும்பத் திரும்ப இப்படி பயன்படுத்த முடியும்.

விலைக்கு கொடுப்பது என்றால், சாதாரணமாக ஒரு தட்டு 150 ரூபாய் முதல் விலை போகும். மணப்பெண் மற்றும் மணமகனின் முகங்கள், கடவுள்களின் முகங்கள் என்று கூடுதல் டிசைன்களுடன் இருந்தால்... குறைந்தபட்சம் 250 ரூபாய் விலை வைத்து விற்கலாம். வாடகைக்கு என்றால், குறைந்தபட்சம் 80 ரூபாய்க்குக் கொடுக்கலாம். நாளன்றுக்கு 10 தட்டுகள் வீதம் தயாரிக்க முடியும். அதாவது ஒரு நாளுக்கு 1,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தேவையான பொருட்கள்!

உன்னால் முடியும் பெண்ணே !

ஆரத்தி தட்டுக்குத் தேவையான பொருட்கள்... ரொம்ப ரொம்ப எளிமை யானது, குறைந்த முதலீட்டுப் பணத்தில் வாங்கக் கூடியதுதான். எவர்சில்வர், பிளாஸ்டிக், கண்ணாடி, பாக்குமட்டை தட்டுகள்... கப்புகள், காய்கறிகள், பழங்கள், ஜமிக்கி, பசை, நூல், சுடிதார்களுக்கு பயன்படுத்தப்படும் சிறிய கண்ணாடி டிசைன்கள், பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள், கிளிட்டர், 3டி கலர்கள், வாட்டர் பெயின்ட், சிறிய அகல்விளக்குகள் (மாலை நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்றால், இந்த அகல் விளக்குகளின் ஒளியில்... ஆரத்தித் தட்டு டிசைன்கள் மிக அழகாக ஜொலிக்கும்) என்று பலவிதமான பொருட்களையும் பயன்படுத்தலாம். ஃபேன்ஸி ஸ்டோர், மொத்த விலைக்கடைகளில் இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.