Published:Updated:

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்... வளர்ச்சியும்..!

நீரை.மகேந்திரன், படம்: ச.வெங்கடேசன்.

##~##

ஒருபக்கம் உயரமான மலை, இன்னொரு பக்கம் பிரமாண்டமான பாலாறு, இரண்டுக்கும் நடுவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது வேலூர் மாநகரம். சென்னை டு பெங்களூரு தேசிய

நெடுஞ்சாலையில் மையமாக இருக்கிறது இந்நகரம். சிதையாத வரலாற்று அடையாளமாக இப்போதும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் வேலூர் கோட்டை. நூற்றாண்டுகளை கடந்து வளரும் இந்த நகரத்திற்கு முக்கியமான சாட்சி. இந்த கோட்டைச் சிப்பாய்களிடம் இருந்துதான் முதல் சுதந்திரப் போர் தொடங்கியது.  

ஆயிரம் ஆண்டுகால பழைமையான நகரம் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது வேலூர். தென் தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும், சென்னைக்கும் பெங்களூருவுக்கும் என குறுக்கு நெடுக்கில் மையமான நகரமாக இருப்பதால் போக்குவரத்து சிக்கல் இல்லை. நான்கு பக்கமும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைத்துவிடுகிறது. வேலூருக்கு அருகில் இருக்கும் ராணிப்பேட்டை, வாணியம்பாடி போன்ற நகரங்கள் தொழில் வளர்ச்சியில் பின்னியெடுக்க, வேலூரில் அந்த சுவடுகளே இல்லை. இருக்கும் ஒரே ஒரு சிப்காட் தொழிற்பேட்டையும் ஏனோதானோ என்றுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது.  

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்...  வளர்ச்சியும்..!

பாலாற்றில் இரண்டு கரைகளும் வழிந்து ஒரே ஒருநாள் தண்ணீர் ஓடினால் மூன்று ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கேள்விப்பட்ட நமக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. நகரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என சில உள்ளூர் வி.ஐ.பி.களைச் சந்தித்து கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது வேலூரைப் பற்றி நன்கு அறிந்தவரும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் தொழில் நிறுவனம் நடத்துபவருமான யுனிவர்சல் லீடு அலாய்ஸ் நிறுவனத்தின் தலைவர் வி.சோலைநாதனை.

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்...  வளர்ச்சியும்..!

''வேலூருக்கு மூன்று முகங்கள். இந்த மூன்று முகங்களையும் மேம்படுத்தினாலே வேலூர் ஜொலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால், அதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள்கூட தென்படவில்லை. இதில், முதல் முகமாக வேலூர் ஆன்மிக நகரமாக மாறிவருவது. குறிப்பாக, தங்க கோயிலால் இப்போது முக்கிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாறிவிட்டது. தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்களிலிருந்து ஆன்மிகப் பயணமாக மக்கள் வருகிறார்கள். முக்கிய வி.ஐ.பி.களும் வருவதால் வேலூர் வேகமாகப் பிரபலமாகி வருகிறது.

வேலூரின்  இரண்டாவது முகம், மருத்துவத் துறையில் தன்னிறைவு. சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் சேர்ந்து வேலூரை மருத்துவத் தன்னிறைவு நகரமாக மாற்றியுள்ளன.

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்...  வளர்ச்சியும்..!

மூன்றாவது கல்வி முகம், உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்களை கவர்ந்து இழுக்கிறது வி.ஐ.டி. நிறுவனம்'' என்றவரிடம், ''எல்லா சிறப்புகளும் இருக்கே. ஆனா, இது மட்டும் போதுமா?'' என்று கேட்டோம்.

''பல ஆயிரம் மக்கள் வெளியூர்களிலிருந்து வேலூருக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கும் வசதிகள் வேலூரில் இல்லை. தவிர, நகரத்திற்குள் உள்கட்டமைப்பு வசதிகளும் குறைவு. இந்த இரண்டு வசதிகளும் நிறைவு செய்யப்பட்டாலே வேலூரின் வளர்ச்சி இன்னும் வேகமெடுத்துவிடும்'' என்றார்.

சரி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏதாவது நிலுவையில் இருக்கிறதா? என்று கேட்டோம். ''ஏன் இல்லை? பல வளர்ச்சித் திட்டங்கள் அப்படியே கிடப்பில் உள்ளன. அதில் முக்கியமானது விமான நிலையம். இப்போ வரும் அப்போ வரும் என்று எங்கள் எதிர்பார்ப்புதான் அதிகரித்துள்ளதே தவிர, திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. தவிர, நகர விரிவாக்கம் உடனடித் தேவையாக இருக்கிறது. குறிப்பாக, ஆட்டோமொபைல் வேலைகளை ஒருங்கிணைத்து அதற்கென தனி நகரை அலமேலுரங்காபுரத்துக்கு அருகே கொண்டுவரும் திட்டமும், மண்டித் தெருவிலிருக்கும் கடைகளை மொனவூர் ஏரியாவுக்கு மாற்றும் திட்டமும் அப்படியே கிடக்கிறது. இந்த திட்டங்களை செயல்படுத்தினால் வளர்ச்சி சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும்''  என்றார் அவர்.

அடுத்து நாம் சந்தித்தது சிண்டிகேட் வங்கியின் கிளை மேலாளர் எஸ்.வெங்கடேசனை. ''வேலூர் நகரத்தில் மட்டும் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் அறுபது கிளைகள் இருக்கின்றன. மாவட்ட தொழில் மையம், மற்றும் காதி மற்றும் கிராம தொழில் வாரியம், தாட்கோ தொழில் கடன்கள் என அனைத்து கடன் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளன. இப்படி வாங்கும் கடன்களை தொழில்களுக்கு செலவு செய்தால் நகரத்தின் சிறு, குறுந் தொழில்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால், அப்படி நடக்கிற மாதிரி தெரியவில்லை'' என்று வருத்தப்பட்டார்.  

''இதுபோன்று கடன்கள் அனைத்தும் அதன் முழுப் பயனை எட்டுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு அமைப்பு அவசியம் வேண்டும். சுயஉதவிக் குழுக்களை பொறுத்தவரை வாங்கிய

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்...  வளர்ச்சியும்..!

கடனைத் திருப்பி செலுத்திவிடுகிறார்கள். பிற வகை கடன்களில் வாராக் கடன் அளவு அதிகரிப்பதால் திரும்ப வேறு பயனாளிகளுக்கு கடன் வழங்க யோசிக்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் வங்கித் திட்டத்தின் கீழ் 1,600-லிருந்து 2,000 வரை மக்கள்தொகை கொண்ட சிறு கிராமங்களை இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. 2013 மார்ச் மாதத்திற்குள் இது முழுமையாக நிறைவேற்றப்படும். இது நடைமுறைக்கு வந்தால்  முதியோர் உதவித் தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட உதவிகள் போன்றவை இதன் மூலம் எளிதாகிவிடும்'' என்றார்.

இவர் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம், இங்குள்ள வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியூரில் தொழில் செய்பவர்கள்தான்.  

அடுத்து நாம் சந்தித்தது லயன்ஸ் கிளப்பின் மாவட்ட தலைவர் டி.எஸ்.உதயசங்கரை. ''வேலூரில் திறமையான மனிதவளம், போதுமான இடம் இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லை. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை வெல்லம் மற்றும் அரிசி கமிஷன் மண்டி தொழில் ஓகோ என இருந்தது. தற்போது அதுவும் இல்லை. முக்கியமாக, வேலூருக்கு என்று தனி அடையாளம் சொல்லும்படி தொழில்கள் எதுவும் கிடையாது. இதற்கான திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதுபோல் சுற்றுலாத் துறை வளர்வதற்கு வாய்ப்பிருந்தும் முன்னேற்றமில்லை. தவிர, நகர விரிவாக்கம் உடனடி தேவை. பாகாயம், செதுவாலை சுற்றி பள்ளிக்கொண்டா வரை புறவழிச்சாலை அமைத்தால் வாகன நெரிசல் குறையும்.

இங்கு மருத்துவத் துறை சார்ந்த துணைத் தொழில்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் பிஸினஸ் மேன்கள்  இதை கவனிக்கலாம். கல்வியில் வேலூரை குறைசொல்ல முடியாது. எல்.கே.ஜி முதல் உயர்கல்வி வரை தரமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எங்களுக்கும் விரிவாக்கம் செய்தால் குடிநீர் தட்டுப்பாடு குறையும்.

ஊர் ஜாதகம் : வாய்ப்பும்...  வளர்ச்சியும்..!

முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் மையமாக இருப்பதால் கனரக வாகனத் தொழில் மேம்பாடு அடைய வாய்ப்பிருக்கிறது. சரக்குகளை ஏற்றி இறக்கி கையாளும் 'ஹப்’பாக வேலூரை மாற்ற முடியும்'' என்றார்.

அப்படியே நகரத்தைச் சுற்றினோம். நகரத்தின் பிரதான சாலைகள் வாகன நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது. உள்கட்டமைப்பை மேம்படுத்தினால் வேலூரை ஒரு தொழில் நகரமாக மாற்றலாம்.