மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

பானுமதி அருணாசலம்படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், பா.காளிமுத்து

காரைக்குடி!

##~##

தமிழ்நாட்டில் பல தொழிலதிபர்களை உருவாக்கிய பெருமை காரைக்குடிக்கு உண்டு. ஏ.வி.எம். ஸ்டூடியோ, ஹெர்குலீஸ் சைக்கிள், செட்டிநாடு சிமென்ட், கொரமண்டல் கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்கள் உருவாக காரைக்குடி மண்ணின் மைந்தர்கள்தான் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்தார்கள். பாரம்பரியமிக்க இந்த ஊரில் இன்னும் என்னென்ன வாய்ப்புகள் வந்தால் வளர்ச்சி காணும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்த ஊரை ஒரு ரவுண்ட் வலம் வந்தோம். நாம் முதலில் சந்தித்தது காரைக்குடி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முத்து பழனியப்பனை.

''காரைக்குடி பாரம்பரியமான நகரமே தவிர,  தொழில் நகரமல்ல. அந்த காலத்திலேயே பர்மா, மலேசியா, இலங்கை என வெளிநாடுகளுக்குச் சென்றுதான் வாணிபம் செய்து, அங்கு சேர்த்த  பணத்தைக் காரைக்குடிக்கு கொண்டுவந்து வட்டிக்கு விட்டனர். எந்த ஒரு தொழில் செய்வது என்றாலும் அதற்கான மூலப் பொருட்கள் வாங்குவது, மெஷின்கள் வாங்குவது, மார்க்கெட்டிங் செய்வது என அனைத்திற்கும் சென்னை செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இதனால் சென்னையில்தான் பலரும்  தொழில் தொடங்கினார்கள். இதனால் காலப்போக்கில் காரைக்குடிக்கு தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

ஊர் ஜாதகம்

இப்போது எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பட்டறைகள் முன்னூறுக்கும் மேற்பட்டவை காரைக்குடியைச் சுற்றி இயங்குகின்றன. அதேபோல், டெக்ஸ்டைல்ஸ் தொழிலும் இந்த பகுதியில் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், மின்சாரப் பிரச்னை காரணமாக டெக்ஸ்டைல்ஸ் யூனிட்களைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை. அரிசி மில்களும் இங்கு அதிகளவில் இருக்கிறது. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

காரைக்குடியில் தமிழ்நாடு கெமிக்கல் தொழிற்சாலை கொண்டு வந்தார்கள். அது தவிர, இங்கு சொல்லிக்கொள்ளும்படி எந்தத் தொழிற்சாலையும் கிடையாது. இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய மூன்று நாடுகளுடன் ஒப்பந்தம்போடப்பட்டது. ஆனால், அந்த தொழிற்சாலைக்கு அருகிலிருக்கும் மக்கள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக எதிர்ப்புக்குரல் கொடுத்ததால் அந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஊர் ஜாதகம்

சுற்றுலாத் துறைக்கு இங்கு வாய்ப்பு அதிகம். உலகின் அனைத்து நாட்டு கலாச்சாரத்தையும் கொண்ட கட்டடங்கள் இங்கு இருக்கிறது என்பதே இதன் சிறப்பு. அதனால் சுற்றுலாவை வளர்க்கும் விதமாக ரயில், சாலை வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். அதை செய்தாலே வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்'' என்றார் அவர்.  

சென்னையை அடுத்து அதிக சினிமா படங்கள் எடுக்கப்படுவது செட்டிநாட்டில்தான். மினி கோடம்பாக்கம் என அழைக்கப்படும் இங்கு சினிமாத் துறையினரின் எதிர்பார்ப்பு என்ன என திரைப்படத் தயாரிப்பு மேனேஜர் குமரேசனிடம் பேசினோம்.

''தமிழக கிராமச் சூழலை கண்முன் கொண்டுவரும் கிராமங்கள் காரைக்குடியைச் சுற்றி நிறைய இருக்கின்றன. கோயில், மலை, காடு, குன்று என அனைத்து விதங்களிலும் படம் எடுக்கத் தேவையான அம்சங்கள் இங்கு இருக்கிறது. இதனால் லாட்ஜ், கார்கள், ஓட்டல்கள் எல்லாமே புக் ஆகிவிடுகின்றன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் இங்கு இரண்டு லாட்ஜ்கள் கட்டினால் நன்றாக இருக்கும்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொடர் களும் இங்கு அதிகளவில் எடுக்கப்படுகின்றன. ஆனால், டப்பிங், எடிட்டிங் செய்ய சென்னைக்குத்தான் செல்ல வேண்டும். ஏதாவது மாறுதல் செய்யவேண்டி இருந்தால் மீண்டும் காரைக்குடிக்கு வரவேண்டும். இதனால் செலவு அதிகரிக்கிறது. எங்கள் செலவைக் குறைக்க அரசே டப்பிங், எடிட்டிங் ஸ்டூடியோ கட்டித் தரவேண்டும்'' என்றார்.

அடுத்து, வைர வியாபாரியான தெய்வசிகாமணியிடம் பேசினோம். ''செட்டிநாடு நகைகள், வைரம் என்றால் மிகவும் பிரபலமானது. இங்கு அதிகளவில் பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள். கைதேர்ந்த இவர்களின் வாரிசுகள் இப்போது இந்தத் தொழிலுக்கு வருவதில்லை. இவர் களுக்கு   டிப்ளமோ படிப்புடன் கூடிய பயிற்சியை இங்கிருக்கும் பல்கலைக்கழகத்தின் மூலமாக தரலாம். தற்போது மெஷின் கட்டிங் மூலம் நகை களை செய்கிறார்கள். இதனால் எங்களுக்குத் தொழில் இழப்பு ஏற்படும். இதனைத் தடுக்க  மெஷின் கட்டிங் மூலம் செய்யப்படும் நகைகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்'' என்றார்.

ஊர் ஜாதகம்

காரைக்குடி நகைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முருகேசனிடம் பேசினோம். ''இந்தியாவிலே முதன் முறையாக தங்கக் கட்டிகளை எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் நகை செய்பவர்களுக்கு வங்கி மூலம் கடன் தரும் திட்டம் இங்குதான் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் இங்கிருக்கும் நகைத் தொழில் நசிந்து போவதிலிருந்து பாதுகாக்கப்படும். அடுத்து, நகைகளுக்கு 'ஹால்மார்க்’ முத்திரை வாங்க மதுரைக்கும், சென்னைக்கும் செல்ல வேண்டியது இருக்கிறது. இதற்காக போக்குவரத்து செலவு அதிகம் ஆவதோடு, நகை தொலைந்துவிடுமோ என்று பயந்து சாக வேண்டியிருக்கிறது. எனவே, காரைக்குடியிலேயே 'ஹால்மார்க்’ முத்திரை வழங்கும் மையத்தைக் கொண்டு வந்தால் எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்'' என்றார்.

ஊர் ஜாதகம்

காரைக்குடியில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகரமன்றத் தலைவர் கற்பகம் இளங்கோவிடம் கேட்டோம். ''காரைக்குடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிக்காக 135 கோடி ரூபாயும், குடிநீர் வழங்கும் பைப் லைன்களை புதுப்பிக்க 18.58 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

ஊர் ஜாதகம்

என்ன இருந்தாலும் நாட்டுக்கே நிதி நிர்வாகம் செய்யும் இந்த மண்ணைச் சேர்ந்த ப.சிதம்பரம், இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் இந்த நகரம் இன்னும் பன்மடங்கு வளர நிச்சயம் வாய்ப்புண்டு என்பதே ஊர் மக்களின் கருத்து!  

ஊர் ஜாதகம்