தூத்துக்குடி

தமிழகத்தின் தென்பகுதியில் முக்கியமான துறைமுக நகரம் தூத்துக்குடி. தாமிரபரணி ஆறு பல ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி விட்டு, தூத்துக்குடிக்கு அருகில் தான் கடலில் கலக்கிறது. துறைமுகம், ஸ்பிக், ஸ்டெர்லைட், டி.ஏ.சி. மற்றும் தெர்மல் பவர் பிளான்ட்களைக் கொண்டுள்ளது. தொழில் நகரமாகவும், விவசாயம், மீன்பிடித் தொழில் மற்றும் உப்பு உற்பத்தி, தெர்மல் பவர் பிளான்ட் என பல தொழில்களைக் கொண்டு விளங்கும் இந்நகரத்தில் இன்னும் என்னென்ன வசதிகள், திட்டங்கள், வளர்ச்சிகள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதை அறிய பலதரப்பினரையும் சந்தித்து விசாரித்தோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அரசிடம் விளக்கம்கேட்டு போராடும் பாலகிருஷ்ணனை முதலில் சந்தித்தோம். ''தூத்துக்குடியில் மேற்கு பகுதி மட்டும்தான் மக்கள் வாழும் பகுதிகளாக இருக்கின்றன. நகருக்குள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர வேண்டும். தற்போது பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இயங்கி வருகிறது. ரயில் நிலையத்தை மீளவிட்டான் பகுதிக்குக் கொண்டு வரவேண்டும்'' என்றார்.

அடுத்து, சமூக ஆர்வலரான குலசேகரனைச் சந்தித்தோம். ''கடல்வளம் அதிகம் இருக்கும் இந்நகரத்தில் அந்த வளங்களை முழுமையாக இன்னும் பயன்படுத்தவில்லை. இதனை அதிகரிக்க இறால் வளர்ப்பு, கடல் உணவு வகைகள் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட் டவைகள் அதிகரிக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் புதிய சிப்காட் தொழிற்பேட்டை துவங்க வேண்டும். இங்கு துறைமுகத்திற்கு அருகில் நிறைய இடம் காலியாக இருப்பதால் அதை துறைமுக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தலாம். கடந்த நூறு வருடங்களாக நகரத்தின் கழிவுநீர் கடலில்தான் கலக்கிறது. இதனால் கடல் நீர் மாசுபடுவதோடு, அந்த கடல் நீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பும் தரமற்றதாக இருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் சாலைக்கு போக்குவரத்து சரியாக இல்லை. இதனை சரி செய்ய வேண்டும். மேலும், கடற்கரையை ஒட்டி தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரிக்கு சாலைப் போக்குவரத்தைச் செயல்படுத்த வேண்டும்'' என்றார்.
மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 58 சதவிகிதம் மக்கள் கிராமப் பகுதியைச் சார்ந்து வாழ்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம்.

''இந்த மாவட்டத்தில் 50 கி.மீ. தொலைவிற்கு தாமிரபரணி நதி பாய்கிறது. தாமிரபரணித் தண்ணீரை

தொழிற்சாலைகள் அதிகம் எடுத்து பயன்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விளைச்சல் பாதிப்படைகிறது. இந்த பகுதியில் வாழை முக்கிய பயிராக இருப்பதால் வாழை சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும். வாழைப் பழம் சீக்கிரம் அழுகும் பொருள் என்பதால் விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியதிருக்கிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் குளிர்பதன கிடங்குகள் நிறுவ வேண்டும்'' என்றார்.
தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இங்கிருக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமான ஹரி அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிஹரனிடம் பேசினோம்.
''முன்பு கப்பல் வந்தால் அதிலிருக்கும் சரக்குகளை இறக்க பத்து நாட்கள் வரை ஆகும். ஆனால், இப்போது இரண்டு நாட் களில் இறக்கிவிடுகிறோம். இதனை வெளியே எடுத்துச் செல்லத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை துறைமுகத்தில் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். துறைமுகத்திற்குச் சொந்தமாக இடங்கள் நிறைய இருக்கிறது. துறைமுகத்திற்கு உள்ளேயே சரக்கு குடோன் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்'' என்றார்.
தூத்துக்குடியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி. இந்த அமைப்பின் செயலாளரும், வி.வி.டி. அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் டி.ஆர்.கோடீஸ்வரனிடம் பேசினோம்.
''தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகில் 586 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை 1,000 ஏக்கராக அதிகரித்து விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். இது தொழில் நகரம் என்பதால் மற்ற இடங்களுக்கு அதிகளவில் பயணம்

செய்யவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் உள்நாட்டு விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும். சர்வதேச விமானங்கள் இங்கு வந்துசெல்கிற மாதிரியான நிலையை உருவாக்க வேண்டும். அடுத்து, துறைமுகத்தில் ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்வதோடு, கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் பணி ஆகியவற்றை மேற்கொண்டால் வேலைவாய்ப்பு கள் பெருகக்கூடும்.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சூரிய மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம்தான் சூரிய மின் உற்பத்திக்கு ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. காரணம், சூரியனின் கதிர்வீச்சு இங்கு அதிகமாக இருப்பதே. விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கிறது. அதனால் சூரிய மின் உற்பத்தியை இங்கு அதிகரிக்க வேண்டும்.
சென்னையைப் போன்று தொழில் துவங்குவதற்கு கடல் மார்க்கமாகவும், சாலை மார்க்கமா கவும் போக்குவரத்து வசதி இருப்பதால் இந்த மாவட்டத்தில் கார் தொழிற்சாலை ஒன்று கொண்டுவந்தால் இந்த மாவட்டத்திற்கு பெரிய வாய்ப்பாக அமையும். காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் இதை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பணியாளர்களுக்கான செலவு குறைவாக இருப்பதும் தொழில் துவங்குபவர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.
சரக்குகளை ஏற்றிச் செல்ல லாரிகள் அதிகளவில் இருப்ப தால் நகரின் சாலையோர பகுதிகளில் இந்த லாரிகளை நிறுத்தவேண்டி இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் லாரிகள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்க வசதியாக ஆட்டோ நகர் ஒன்றை உருவாக்க வேண்டும்'' என்றார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கிகளில் முக்கியமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 24 கிளைகளுடன் செயல்பட்டுவரும், இந்த வங்கியின் தலைமை பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை,
''இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில்களுக்கு அதிகளவில் கடன்கள் வழங்குகிறோம். நாட்டின் முக்கிய தேவையான மின் உற்பத்திக்கு அதிகளவில் கடன் வழங்கி உள்ளோம். 1,200 மெகாவாட் மற்றும் 550 மெகாவாட் அனல் மின்நிலையங்கள் நிறுவவும், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் வழங்கியுள்ளோம். சிறுதொழில், செங்கல் உற்பத்தி, இறால் மீன் வளர்ப்பு, ரசாயன பொருள் உற்பத்தி என பல தொழில்களுக்கும் கடன் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.
தூத்துக்குடி சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்டின் தலைவர் நடராஜன், துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.
''முக்கியமான இந்த துறைமுகத்திலிருந்து மாலத்தீவு, சீனா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2000-2001-ல் 10 மில்லியன் டன்னாக இருந்த கார்கோ டிராஃபிக், 2011-2012-ம் ஆண்டில் 28.10 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த துறைமுகம் 2011-2012ம் நிதியாண்டில் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய கன்டெய்னர் கையாளும் துறைமுகமாகத் திகழ்கிறது.
2011-2012-ம் நிதியாண்டில் இதன் நிகர லாபம் 102.03 கோடி ரூபாய். துறைமுகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து
300 கோடி ரூபாய் செலவில் என்.ஹெச்.7.ஏ. நெடுஞ்சாலையையும், துறைமுகத்தையும் இணைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 25 கோடி ரூபாய் துறைமுகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.ஹெச். 45 பி மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
துறைமுகத்தின் எதிர்காலத் திட்டங்களில் தமிழ் நாட்டின் மத்திய பகுதிகளை தூத்துக்குடியுடன் இணைக்க இரண்டுபாதை ரயில் திட்டம் தேவை. லாரிகளை ஒரேஇடத்தில் நிறுத்த அனைத்து வசதிகளுடன் 'டிரக்டெர்மினல்’ நிறுவ மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2020-ம் வருடத்திற்குள் இந்த துறைமுகம் நல்ல வளர்ச்சியைக் கண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பக்கபலமாக இருக்கும்'' என்றார்.
ஆக, உள்கட்டமைப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி சில முக்கியமான விஷயங்களைச் செய்தால், முத்து நகரம் சத்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
_ எஸ்.சரவணப் பெருமாள்,
பானுமதி அருணாசலம்.
படங்கள்: ஏ.சிதம்பரம்.