மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

ஊர் ஜாதகம்

##~##

தமிழக அளவில் அதிக வருமானத்தை ஈட்டித் தரும் நகராட்சிகளில் முக்கியமானது ஓசூர். ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்ததால் மாவட்டத்தின் வளர்ச்சி கருதி 1977-ல் இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. தர்மபுரியைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது ஓசூர் நகரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

எட்டு நிறுவனங்களோடு தொடங்கப்பட்ட சிப்காட் முதல் யூனிட் தொழிற்பேட்டை, இன்று இரண்டு சிப்காட் யூனிட்களாகவும், ஐந்து சிட்கோ தொழிற்பேட்டைகளாகவும் வளர்ந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களோடு செயல்பட்டு வருகிறது. தவிர, மூன்றாவது சிப்காட் தொழிற்பேட்டை வேலைகளும், ஐ.டி. பார்க் வேலைகளும் நடந்து வருகின்றன. ஆட்டோமொபைல் வளர்ச்சியில் குறிப்பிட்டு சொல்லும்படி இடத்தை எட்டியிருக்கும் ஓசூரின் ஊர் ஜாதகத்தை அலச களமிறங்கினோம்.

ஊர் ஜாதகம்

சின்ன குர்கான் போல, பல ஊரைச் சேர்ந்தவர் களும் வேலை தேடி ஓடி வந்துகொண்டி ருப்பார்கள் என்கிற  எதிர்பார்ப்போடு ஓசூரில் இறங்கினால்... என் வளர்ச்சிக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தேவை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொன்னது அந்நகரம். தென் இந்தியாவின் மிக முக்கியமான ஆட்டோ ஹப்பாக மாறியிருக்க வேண்டிய இந்நகரம், இன்று ஏதோ நானும் இருக்கிறேன் என்று தள்ளாடுவது எதனால்? என்ன வேண்டும் இந்நகரத்திற்கு? என்கிற கேள்விகளோடு ஓசூரில் இருக்கும் பல தரப்பினரையும் சந்தித்தோம்.

ஊர் ஜாதகம்

 மின் வெட்டு!

நாம் முதலில் சந்தித்தது ஓசூர் சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர் கே.ராமலிங்கத்தை. ''ஒசூரின் இன்றைய மோசமான நிலைமைக்கு காரணம், மின் தட்டுப்பாடுதான். அதனாலேயே பல நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களைத் தேடிப் போகவேண்டிய கட்டாயம்'' என்று ஆரம்பித்தவர் மேலும் தொடர்ந்தார்.

''எங்கள் சங்கத்தின் மூலமாக தூத்துக்குடியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து மின்சாரம் தயாரித்து, இங்கு கொண்டுவர  திட்டமிட்டுள்ளோம். இதற்கான மின்பாதை கேட்டு மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த அனுமதி கிடைத்ததும், இங்குள்ள நிறுவனங்கள் மின் தட்டுப்பாடு இல்லாமல் இயங்க முடியும், இது தவிர, சிப்காட் மூன்றாவது யூனிட் வந்தால் ஓசூர் மேலும் வளர வாய்ப்பு அதிகம்'' என்றார்.

பழைய உள்கட்டமைப்பு!

ஊர் ஜாதகம்

மின் வெட்டுப் பிரச்னையோடு வேறு சில அடிப்படை பிரச்னைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார் அரவிந்த் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஞானசேகரன்.

''சிப்காட்டின் ஆரம்ப காலத்தில் என்ன அடிப்படை வசதிகள் செய்துதந்தார்களோ, அதுதான் இன்றளவும் இருக்கிறது.  எப்போதும் குண்டும் குழியுமாக உள்ள சிப்காட் சாலைகளே இதற்கு அடையாளம். 80 டன் எடை கொண்ட கனரக வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு தொழிற்பேட்டை சாலையின் தரம் இருக்கவேண்டும். ஆனால், அது இங்கு பின்பற்றப்படவில்லை. ஆரம்பகாலத்தில் ஒன்றிரண்டு நிறுவனங்கள் இருந்தபோது இந்த சாலை வசதி போதுமானதாக இருக்கலாம். இப்போதும் இதே சாலைகள் தாங்காது. ஒழுங்கான சாலை வசதி கட்டாயம் வேண்டும்.

ரயில் வசதி இருந்தும் தொழிற்துறையினருக்கு எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லை. சென்னையை இணைப்பது போல ரயில் வசதி கிடைத்தால்தான், கச்சாப் பொருட்களை இலகுவாகக் கொண்டுவர முடியும். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இருக்கும் ஊரில் ஒரு வர்த்தக மையம் கிடையாது.

தொழிலாளர்கள் திறனை மேம்படுத்துவது போல ஒரு பயிற்சி மையம் கிடையாது. கனரக வாகனங்களை நிறுத்தும் யார்டு வசதிகூட இல்லை; தினசரி வேலை தேடிவந்து இறங்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான அளவுக்கு தங்கும் வசதி இல்லை; இப்படி பல அடிப்படை தேவை களுக்கு ஏங்கி நிற்கிறோம்' என தனது குமுறல்களை நம்மிடம் கொட்டித் தீர்த்தார் அவர்.  

அரசின் பாராமுகம்!

அடுத்ததாக நாம் சந்தித்தது ஓசூர் தொழிற்பேட்டை முதல் யூனிட் தொடங்கியபோது முதன் முதலில்

ஊர் ஜாதகம்

தொழில் நிறுவனம் தொடங்கி யவரும், ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனின் தற்போதைய தலைவருமான ஆதியை.  

''லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றும் ஊரில் ஒரு தொழிலாளர் நலத்துறை அலுவலகம்கூட இல்லை. சிப்காட் பகுதியில் எங்களது சொந்தச் செலவில் சாலைகளை செப்பனிட்டுக்கொள்கிறோம். நிலைமை இப்படி இருக்க புதிதாக மூன்றாவது யூனிட் தொடங்க வேலைகள் நடக்கிறது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்காமல் புதிய தொழில் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இப்போது இருக்கும் வசதியை புதியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் எங்கள் நிலைமை இன்னும் மோசமாகும்'' என்றார்.

இவ்வளவு நெருக்கடிகளையும் தாண்டி சிறு குறு நிறுவனங்கள் தாக்குப்பிடித்து இருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான். ஆனால், 'சிறு குறு நிறுவனங்கள் தங்களது முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது’ என்கின்றனர் இத்துறையைச் சார்ந்தவர்கள்.

 புத்துணர்வு விவசாயம் !

தொழிற்துறைக்கு அடுத்து ஓசூர் சுற்றுவட்டாரத்தில் விவசாய வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கிறது. இதன் நிலவரங்களை அறிந்துகொள்ள விவசாயத் துறையின் மாவட்ட துணை அதிகாரியான நாகராஜனை சந்தித்தோம்.

''விவசாய உற்பத்தியில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவு, மலர் உற்பத்தியில் ஓசூர் முக்கிய இடத்தில் உள்ளது. திசு வளர்ப்பு முறையில் நவீன விவசாய உற்பத்தியிலும் ஓசூர் மையமாக உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருவதன் மூலம் இந்த உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும்'' என்றார்.  

ஊர் ஜாதகம்

முன்பு பெங்களூருவைவிட செலவுகள் குறைவாக இருந்த நிலை மாறி இன்றைக்கு பெங்களூருவுக்கும் ஓசூருக்கும் செலவு விஷயத்தில் பெரிய வித்தியாசமில்லை என்கிற அளவுக்கு உயர்ந்துவிட்டது வீட்டு வாடகை. குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளது என்று புலம்புகின்றனர் பலரும்.  

ஊர் ஜாதகம்

போக்குவரத்து!

''மிக நெரிசலான தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், இண்டஸ்ட்ரியல் நகரம் என்பதாலும் போக்குவரத்து  சிக்கலில் இந்நகரம் திண்டாடுகிறது. இதைத் தவிர்க்க நகரைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்கவேண்டும்''  என்கிறார் தனியார் வாகன ஓட்டுநர் ராமர்.

பாகலூர், பேரிகை வழியாக சூளகிரி வரையிலும், கெலமங்கலம் சாலையை இணைத்து கிருஷ்ணகிரி வரையிலும் புறவழிச்சாலை வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது தவிர, நகர விரிவாக்கத்திற்கு ஏற்ப உள்ளூர் போக்குவரத்து இல்லாதது பெரிய குறையாக உள்ளது. மினி பேருந்துகள் அல்லது நகரப் பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்கள்..

 உயிர்நாடி வங்கிகள்!

தொழிற்துறை வளர்ச்சிக்கும், மக்களின் சேமிப்புக்கும் உயிர்நாடி களாக இருப்பவை வங்கிகள். வங்கிகள் செயல்பாடு இந்நகரத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய இந்நகரத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மேலாளர் கிருஷ்ணதாஸை சந்தித்தோம்.

''ஓசூர் நகரத்தில் மட்டும் 45 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கிளைகள் இயங்குகின்றன. அனைத்து கிளைகளுமே நடுத்தர, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தொழிற்சாலை விரிவுபடுத்த, இயந்திரம் வாங்க, அல்லது ஓவர் டிராஃப்ட் என்கிற வகைகளில் பல்வேறுவிதமாக வங்கிக் கடன் வழங்குகின்றன. விவசாயக் கடன்கள் மூலமும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஓசூரை பொறுத்தவரை சிறு குறு நிறுவனங்களின் உயிர்நாடியாக வங்கிகள் இயங்கி வருகின்றன'' என்றார்.

ஓசூரின் மைய முகமாக இருக்கும் பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப கழிவறை வசதி கிடையாது. கழிவுநீர் தேங்கிய சுகாதாரமற்ற இடத்திலேயே உணவகங்கள் இயங்குகின்றன. நகராட்சி அலுவலகம் அருகில் இருந்தும் இந்தத் தேவை கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம்.

ஊர் ஜாதகம்

'அனைத்து வரிகளையும் ஒழுங்காகக் கட்டியும் எங்கள் குறை நீங்கமாட்டேன் என்கிறதே’ என்று புலம்புகின்றனர் பலர். இந்நகரத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்தால், ஓசூர் நகரம் தமிழகத்தின் பெங்களூராக மாற வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், எங்களை பெங்களூருவுடன் இணைத்து விடுங்கள் என்று சொல்லிவிடும் மனநிலை மக்களிடத்தில் அதிகரிக்கும்.  

நீரை.மகேந்திரன், படங்கள்: நா.வசந்தகுமார்.