பானுமதி அருணாசலம், படங்கள் : ரா.ராம்குமார்.
##~## |
பெயர் கன்னியாகுமரி மாவட்டம் என்றாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட முக்கியமான அலுவலகங்கள் அனைத்தும் அமைந்திருப்பது நாகர்கோவிலில்தான். தமிழ்நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் இருக்கும் ஊர் எனினும், வளர்ச்சியானது பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே, வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலைதான் இந்த நகரத்திலும் இருக்கிறது. அடுத்தக் கட்டத்தை நோக்கி அதிவேகமாகச் செல்லவேண்டும் என்றால் இந்த நகரத்திற்கு இன்னும் என்னென்ன தேவை என்பதை அறிய ஊரைச் சுற்றி வலம் வந்தோம்.
இந்த ஊருக்கே சோறு போடுகிற இரு பெரும் தொழில்களில் முதலாவது, மீன்பிடித் தொழில். இம்மாவட்டத்தில் கடல் 68 கி.மீ. நீளமுள்ளது. 44 மீனவக் கிராமங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த மீனவர்கள் 26 சதவிகிதம் பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறார்கள். மீன்பிடித் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில துணைத் தலைவர் சுதனிடம் பேசினோம்.

ஆழ்கடலில் மீன் பிடிக்க..!
''கன்னியாகுமரி கடலுக்குள் 20 மீட்டர் நீளம் வரை சென்றுதான் மீன்பிடிக்க முடியும். அதற்குமேல் போக தடை செய்யப் பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால்தான் நிறைய மீன்கள் கிடைக்கும். அதேபோல், இரவில் கடலில் தங்கி மீன்பிடித்து வரவும் அனுமதி இல்லை. ஆனால், சென்னையில் கடலுக்குள் சென்று இரவு தங்கி மீன் பிடிக்கலாம். ஒருமுறை கடலுக்குள் சென்றுவர, 42,000 ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவழித்து, கடலுக்குப் போனால் இரவுக்குள் திரும்பவேண்டும் என்பதால் சரியாக மீன்பிடிக்க முடிவதில்லை.
தவிர, 75 அடி நீளம் இருக்கும் படகுகளை நிறுத்திவைக்க துறைமுகத்தில் வசதி இல்லை. எனவே, துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவேண்டும். தவிர, கேரளா, தமிழ்நாட்டில் இரண்டு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் மீன்பிடி தடைக் காலத்தைக் கொண்டு வரவேண்டும்'' என்றார்.
வலைக்கும் வந்தது பிரச்னை !
இந்த மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பிரதானம் என்பதால், மீன்வலை செய்யும் தொழிற்சாலைகள் இங்கு ஏராளமாக இருக்கிறது. இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மீன்வலை தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பீர்முகமதுவிடம் கேட்டோம்.
''இந்தியாவிலேயே மீன்வலை தயாரிப்பில் முன்னோடியாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம்தான். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் தொழிலுக்கும் பிரச்னை வந்துவிட்டது. ஜப்பானிலிருந்து மீன்வலைகளை இறக்குமதி செய்ய துவங்கியதும் எங்கள் தொழில் சரியத் துவங்கிவிட்டது. விலை குறைவு என்பதால் மீனவர்கள் இதையே வாங்குகிறார்கள். ஆனால், இந்த வலையை ஒருமுறை பயன்படுத்தினால் இன்னொரு முறை பயன்படுத்த முடியாது. கொல்கத்தா சந்தையில் இங்குள்ள வலைகள்தான் விற்பனைக்குப் போகும். ஆனால், அங்கும் ஜப்பான் வலைகள் விற்பனைக்கு வருகிறது. நமக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கும்போது இறக்குமதி வலைகளுக்குத் தடை விதிக்கவேண்டும்'' என்றார் அவர்.
தூர்வாரப்படாத குளங்கள் !
இரண்டாவது முக்கியத் தொழிலான, விவசாயம் தொடர்பாக இருக்கும் பிரச்னைகளை அறிய, லால் மோகனைச் சந்தித்தோம். இவர், நாகர்கோவிலில் இருக்கும் பிரச்னைகளுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் போராடி வருபவர். இந்திய கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்-ன் முன்னாள் ஆராய்ச்சியாளர்.
''நாகர்கோவிலைச் சுற்றி பல நீர்நிலைகள் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,000 குளங்கள் இருந்தன. ஆனால், இப்போது 2,000 குளங்கள்தான் இருக்கிறது. இதையும் சரியான முறையில் பராமரிப்பது கிடையாது. ஊரைச் சுற்றி நீர் ஆதாரங்கள் இருந்தாலும் குடிநீருக்குத் தட்டுபாடு இருக்கிறது. விவசாய நிலங்களை ப்ளாட்டுகளாக மாற்றி வருகிறார்கள். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது'' என்று எச்சரித்தார் அவர்.
மணக்கும் அரளிப்பூ !

தமிழ்நாட்டில் பூ-விற்கு விலை நிர்ணயம் செய்யப்படுவது நாகர்கோவிலில் இருக்கும் தோவாளையில்தான். தோவாளையில் பூ மொத்த வியாபாரம் செய்யும் ராஜேந்திரனிடம் பேசினோம்.
''இங்கு வரும் மலர்கள் அதிகமாக கேரளாவிற்குதான் செல்கிறது. நாங்கள் இங்கிருந்து நாகர்கோவிலுக்குச் செல்வதற்கே அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. திருவனந்தபுரம் போய் சேருவதற்குள் பெரும்பாடு படுகிறோம். சாலை வசதி மோசமாக இருக்கிறது. பூ அதிகமாக வரும் சீஸனில் 1,500 கிலோ பிச்சிப்பூ, 8,000 கிலோ மல்லிப்பூ வரும். இங்கிருக்கும் அரளிப்பூ மிகவும் பிரபலமானது. வேறு எங்கும் இந்த வாசனையில் அரளிப்பூ கிடைக்காது. விற்பனை போக மிச்சமிருக்கும் பூ வீணாகிப் போகிறது. அதனால் இங்கு குளிர்பதனக் கிடங்கும், சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலையும் அரசு கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்'' என்றார்.
கல் வேண்டும் !
முக்கடலும் சங்கமிக்கும் குமரிக்கடலில் கம்பீரமாக நிற்கும் ஐயன் வள்ளுவர் சிலை போல சிற்பக் கலையில் சிறந்து விளங்குபவர்கள் மயிலாடியில் இருக்கும் சிற்பக் கலைஞர்கள். இவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து சிற்பக் கலைஞர் மாணிக்கத்திடம் பேசினோம்.
''மயிலாடியில் இருக்கும் கிருஷ்ணன் மலையில் கிடைக்கும் கல், சிற்பம் செய்வதற்கு ஏற்றது. இப்போது கிருஷ்ணன் மலையில் கல் எடுக்க அனுமதிப்பதில்லை. இதனால் திருநெல்வேலி கருங்குளத்திலிருந்து கல் கொண்டுவந்து சிற்பம் செய்கிறோம். கிருஷ்ணன் மலைக் கல்லைக்கொண்டு பத்து நாள் செய்துமுடிக்கும் வேலையை கருங்குளம் கல்லில் செய்து முடிக்க முப்பதுநாள் ஆகிறது. எனவே, கிருஷ்ணன் மலையிலிருந்து கல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
பார்க்கிங் வசூல் படுஜோர்!
இயற்கை செழிப்போடு இருக்கும் கன்னியா குமரி மாவட்டம் சுற்றுலாவுக்கு பெயர்போனது. ஓர் ஆண்டுக்கு 76,64,823 உள்நாட்டுப் பயணிகளும், 2,13,900 வெளிநாட்டுப் பயணிகளும் சுற்றுலா வருகிறார்கள். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சுசீந்திரம், பத்மநாபபுரம், திற்பரப்புத்துறை, முட்டம் என சில சுற்றுலாத்தலங்களே மீண்டும் மீண்டும் அரசினால் அதிக அளவு விளம்பரம் செய்யப்படுகிறது. இவை தவிர, மருந்துக்கோட்டை, மையக்கோட்டை, இரணியல் அரண்மனை போன்ற இடங்களை பராமரித்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் மக்கள்.
நாகர்கோவில், கன்னியாகுமரியில் எங்கு வண்டியை நிறுத்தினாலும் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் சுற்றுலா வரும் பயணிகள் சங்கடத்தில் நெளிகிறார்கள். இதற்கு பதில், பேக்கேஜ் கட்டண முறையை கொண்டுவரலாம். இதனால் விரும்பும் இடங்களுக்கு வண்டியை எளிதில் எடுத்துச் செல்ல முடிவதோடு, கட்டணம் வசூலிக்கும் வேலையையும் எளிதாகச் செய்துமுடிக்க முடியும்.
படகு நிறுத்தம் போதாது !
கன்னியாகுமரிக்கு விவேகானந்தர் பாறையை சுற்றிப்பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், விவேகானந்தர் பாறையில் ஒரு படகு மட்டுமே நிறுத்த முடிகிறது. ஒரு படகு சென்று ஆட்களை இறக்கிவிட்டு வந்தபிறகே இன்னொரு படகு செல்ல முடிகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காத்திருக்க நேரமில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இரண்டு படகுகளை நிறுத்துகிற மாதிரி வசதி செய்யவேண்டும். விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு போக பாலம் அமைக்கவேண்டும் என்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.
அரசாங்கம் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது?
சுற்றுலாவை மேம்படுத்த ரூ.1,413 லட்சம்!
நாகர்கோவில் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் கேட்டோம்.
''சமீபகாலமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றி நிறைய மருத்துவமனைகள் வருகின்றன. இங்கு சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். தேங்காய்பட்டினம் மற்றும் குளச்சல் பகுதிகளை மீன்பிடித் தடங்களாக மேம்படுத்தவும் திட்டங்கள் வகுத்துள்ளோம்.

இங்கு இயற்கை ரப்பர் அதிகமாக விளைகிறது என்பதால் ரப்பர் ஆராய்ச்சி மையம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரத்தில் நான்கு வழிச் சாலை போடப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் விதத்தில் 1,413 லட்சம் ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார் அவர்.