இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் சலுகை கிடைக்குமா?
கேள்வி - பதில்
##~## |
?நான் 100 சதவிகிதம் உடல் தகுதியோடு இருந்தபோது ஆயுள் காப்பீடு எடுத்து அதற்குரிய பிரீமியம் செலுத்தி வந்தேன். தற்போது ஒரு விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, பணிக்குச் செல்லமுடியாத நிலையில் உள்ளேன். இதனால் பிரீமியம் கட்டுவது தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான் காப்பீட்டுத் தொகை பிரீமியம் கட்டுவதில் சலுகை கிடைக்குமா?
- குமரகுரு, வாடிப்பட்டி.


வி.கிருஷ்ணதாசன், இந்தியா நிவேஸ் செக்யூரிட்டீஸ்.
''நீங்கள் எடுத்துள்ள ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து அதனோடு வழங்கப்படும் ரைடர் பாலிசி எடுத்திருந்தால் வருமான இழப்பு காலத்திலும் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தடையில்லாமல் தொடர முடியும். பகுதி ஊனம் அல்லது நிரந்தர ஊனத்திற்குரிய ரைடர் பாலிசி எடுத்திருந்தால், வருமானம் ஈட்ட முடியாத காலத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனமே உங்களுக்குரிய மாதாந்திர வருமானத்தை வழங்கிவிடும். இந்தத் தொகையைக்கொண்டு பிரீமியத்தையும் தொடர்ந்து செலுத்தி வரலாம். எனவே, சலுகை என்பதைவிட இந்த ரைடர் பாலிசி இருக்கும்பட்சத்தில் பாலிசியைத் தொடரலாம். இது எடுக்கப்படவில்லை என்றால் எதையும் எதிர்பார்க்க முடியாது!''
?அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் உள்ள மனையின் அளவு மற்றும் சாலையின் அளவு பத்திரத்தில் உள்ள அளவுகளுடன் வேறுபட்டிருந்தால் அதை முறைப்படுத்த என்ன வழி?
- இரா.கண்ணன், கோவை.
ஜீவா, வழக்கறிஞர்.

''ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு பத்திரத்தை எழுதும்போது இதுபோன்ற சிக்கல்கள் நேரலாம். பொதுவாக ஆவணங்கள் சரியாக இருந்தாலும், அதன் அடிப்படையில் இடத்தை அளந்துபார்த்து அதற்கேற்ப பத்திரங்களை எழுதுவதுதான் சரியாக இருக்கும்.
எனவே, நீங்கள் இப்போது இருக்கும் இடத்தின் அளவுக்கு ஏற்ப பத்திரத்தை மாற்றி எழுதவேண்டும். இதற்கென பிழைதிருத்தப் பத்திரம் எழுதி அதை பதிவு செய்யவேண்டும். இதற்கு முன்பு பதிவு செய்திருக்கும் இடத்திற்கும், தற்போது பதிவு செய்யும் இடத்திற்கும் வித்தியாசம் இருந்தால் கூடுதலாக உள்ள இடத்திற்கு ஏற்ப வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும்.''
?நான் எனது இரண்டு குழந்தை களின் கல்விச் செலவுக்காக எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் (அம்பர்லா - கான்ட்ரா குரோத்) என்கிற திட்டத்தில் மாதம் 2,000 வீதம் மூன்று வருடங்களாகக் கட்டிவருகிறேன்.

இத்திட்டத்தை தொடரலாமா? அல்லது இந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்கு மாற்றலாமா?
- கதிரேசன், சிதம்பரம்.
ராமகிருஷ்ணன் வி.நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்.
''நீண்டகால முதலீட்டு நோக்கில் இந்த ஃபண்ட் நல்ல வருமானத்தைத் தரும் என எதிர்பார்க்கலாம். எனவே, இந்த முதலீட்டை எடுத்து வேறு திட்டங்களுக்கு மாற்றவேண்டாம். ஆனால், இரண்டு குழந்தைகளின் கல்வி செலவு என்கிறபோது இந்த முதலீட்டுத் தொகை குறைவானதே.
எனவே, முதலீட்டை அதிகப்படுத்தும் வாய்ப்பு இருந்தால், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஃப்ராங்க்ளின் இண்டியா புளூசிப் ஃபண்டுகளில் ஏதாவது ஒன்றில் எஸ்.பி.ஐ. மூலம் முதலீடு செய்யவும்.''
?ஒரு கூட்டு வியாபாரத்தில் எழுந்த பிரச்னை காரண மாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எதிர்தரப்பினர் வழக்கறிஞர் மூலம் சொத்தை பறிமுதல் செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

சொத்தை பறிமுதல் செய்வதற்கு எதிர்தரப்பினருக்கு அதிகாரம் உள்ளதா?
- ஒரு வாசகர், திருத்தணி.
அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
''கூட்டுச் சேர்ந்து செய்த வியாபாரத்திலிருந்து கிடைத்த லாபத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும், அதை பறிமுதல் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நபர் வழக்கறிஞர் மூலமாக தகுந்த நீதிமன்றத்தை அணுகி, தான் ஏமாற்றப்பட்டதாக நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு கோர்ட் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே சொத்தை பறிமுதல் செய்ய முடியும்.''
?வெளிநாட்டில் வசிக்கும் நான், தமிழ்நாட்டில் திருமண மண்டபம் கட்ட என்னென்ன அனுமதி வாங்கவேண்டும்?
- வெங்கட், ஜப்பான்.
பி.மணிசங்கர், தலைவர், ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்டு ஹவுஸிங்

புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.
''திருமண மண்டபமா அல்லது கம்யூனிட்டி ஹால் என்கிற சிறிய அளவிலான மண்டபமா என்பதைப் பொறுத்து அனுமதி வாங்க வேண்டும். திருமண மண்டபம் என்கிறபட்சத்தில் குடியிருப்புப் பகுதிகளில் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காது. இதுதவிர, திட்டமிட்டுள்ள இடத்திற்கு அருகில் பள்ளி, கல்லூரி, அல்லது மருத்துவமனைகள் இருக்கக்கூடாது. இடத்தின் முன்பக்க பரப்பளவு, கார் நிறுத்தும் இடவசதி இவற்றின் அடிப்படையில்தான் திட்ட அனுமதி கிடைக்கும். இது தவிர, காவல்துறை, தீயணைப்புதுறை, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் போன்றவற்றில் தடையில்லாச் சான்றிதழ் வாங்கவேண்டும். திட்டமிட்டுள்ள இடத்திற்கான சாலை அகலம் 33 அடிக்கு மேல் இருந்தால் தரைத் தளத்தோடு இரண்டு தளங்களும், 30 அடி சாலையாக இருந்தால் தரைத்தளத்தோடு ஒரு தளம் மட்டுமே கட்ட அனுமதி கிடைக்கும். கமர்ஷியல் ஜோன் என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிட்டால் இந்த அனுமதிகள் எளிதாகக் கிடைக்கும். இதுதவிர, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொத்த பரப்பு 300 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கவேண்டும்''.
? ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் பங்கு களை ரூ.45-க்கு வாங்கி வைத்துள்ளேன். இதை தொடர்ந்து

வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிடலாமா?
- டி.ராம்குமார், இ மெயில் மூலம்.
எம்.சேகர். இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.
''சர்க்கரை, நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அத்தியாவசிய பொருள் என்பதால் இதன் வளர்ச்சியை பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. எனவே, சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை துறை பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் இந்தப் பங்கை மேற்கொண்டு ஆவரேஜ் செய்வதோ, விலை ஏறும் என்று காத்திருக்கவோ வேண்டாம். இப்போதைய நிலையில் வெளியேறி எஃப்.எம்.சி.ஜி எனப்படும் நுகர்வோர் பொருள் தயாரிக்கும் துறை பங்குகளில் முதலீடு செய்யவும். கையிலிருக்கும் பங்குகளை விற்பதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் அளவுக்கு இந்தத் துறையின் வளர்ச்சி இருக்கும்.''

