மற்ற எபிசோடுகள்
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - அபார லாபம் தரும் ஐ.டி.!

வி.நாகப்பன்

##~##

''சூ மந்திரக்காளி, ரூ.10,000 முதலீடு: 30 ஆண்டுகளில் ரூ.500 கோடியாகப் பெருகட்டும்'' என மந்திரம் போட்டதுபோல ஒரு முதலீடு பெருகியது என்று சொன்னால் நம்புவீர்களா?

நான் எதைச் சொல்கிறேன் என உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.

1981-82-ல் அந்தப் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.100; நூறு பங்குகளில் முதலீடு செய்திருந்தால், மொத்த முதலீடு ரூ.10,000 மட்டுமே. தொடர்ந்து போனஸ் மற்றும் பங்கு பிரிப்பு என பல்கிப் பெருகியது அந்த முதலீடு; இன்று அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.500 கோடியைத் தொட்டிருக்கும். அதுதான் விப்ரோ.

அது மட்டுமா? அதே ரூ.10,000-த்தை பத்தாண்டுகளுக்குப் பின்னர் வெளியான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் முதலீடு செய்து 100 பங்குகளை வாங்கியிருந்தால், இன்று சுமார் ரூ.3.50 கோடிக்கு மேல் மதிப்பு இருக்கும். வருமான வரியில்லா டிவிடெண்ட் வருவாயைச் சேர்க்காமலேயே இவ்வளவு ஆதாயம் என்பதைக் கவனிக்கவும்!

செக்டார் அனாலிசிஸ் - அபார லாபம் தரும்  ஐ.டி.!

கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு துறை அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்றால் நம்மால் செல்லமாக 'ஐ.டி.’ துறை என அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை தான். அதிலும் குறிப்பாக, மென்பொருள் துறைதான்.

2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிக்குப்பின் 'ஐ.டி. துறை இனி அவ்வளவு தான்; காலி’ எனப் பலரும் சொன்னார்கள். பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பும் செய்தன. ஆனால், ஒரே ஆண்டில் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்தது. எல்லோரும் ஆச்சரியப்படுகிற வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட இருமடங்காக வளர்ந்திருக்கிறது. 2008-ல் ரூ.2,500 பில்லியனில் இருந்து இப்போது ரூ.4,600 பில்லியனைத் தாண்டி வளர்ந்திருக்கிறது இத்துறை.

இனியும் இத்துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஏற்றுமதி மூலம் வரும் வருவாய் என்பது முக்கிய அம்சம்.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை மென்பொருள் துறை, சேவைத் துறை, பி.பி.ஓ./கால்சென்டர், மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன், ஐ.டி. எனேபில்டு சர்வீஸஸ், புதிய ஆராய்ச்சித் துறை என பலவாறாகப் பிரிக்கலாம். வன்பொருள் எனும் ஹார்டுவேர் தயாரிப்பும் இதில் அடங்கும். குறிப்பாக, இதில் சேவைத் துறையின் பங்களிப்பு மட்டும் 60 சதவிகிதமாக இருக்கும். ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், ஏறத்தாழ 40 சதவிகித வருவாய், 'பி.எஃப்.எஸ்.ஐ.’ எனும் (பேங்கிங், ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் அண்டு இன்ஷூரன்ஸ்) வங்கித் துறை, நிதித் துறை மற்றும் காப்பீட்டுத் துறை சம்பந்தப்பட்ட சேவையில்

செக்டார் அனாலிசிஸ் - அபார லாபம் தரும்  ஐ.டி.!

இருந்துதான் வருகிறது. மேலும், 20 சதவிகித வருவாய், தொலைதொடர்புத் துறையின் மூலம் வருகிறது. மற்ற துறைகளில் இருந்து மீதம் 40 சதவிகித ஏற்றுமதி வருவாய் வருகிறது.  

நம் ஐ.டி. ஏற்றுமதியில் பாதிக்கு மேல் அமெரிக்காவை நம்பியே உள்ளது. அதற்கு அடுத்ததாக, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நம்பி

30 சதவிகித ஏற்றுமதி வருவாய் உள்ளது. ஆக, நம் நாட்டின் ஐ.டி. துறையின் ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதத்திற்கு மேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியே உள்ளது. இங்குதான் சிக்கலே ஆரம்பம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்கள் விழும்போதெல்லாம் நம்மையும் அது பாதிக்கும்; பொருளாதாரச் சிக்கல் காரணமாக கடும் சிக்கன நடவடிக்கைகளை அந்த அரசுகள் மேற்கொள்ளும்போது அங்குள்ள நிறுவனங்களும் அதைப் பின்பற்றும். அவர்களது ஐ.டி. தேவைகளைக் குறைத்துக்கொள்வது அல்லது தள்ளிப்போடுவது போன்ற முயற்சிகளில் அவர்கள் இறங்கலாம். கடந்த காலங்களில் அப்படி நடக்கவும் செய்திருக்கிறது. எனவே, இவர்களை மட்டுமே நம்பி இருக்காமல், மேலும் புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

இப்போதைக்கு ஒரு நல்ல விஷயம், அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கநிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் துவங்கிருக்கிறது என்பதுதான்.

இருந்தாலும்கூட, ஒரு சில நாடுகளை மட்டுமே நம்பியிராமல், நம்முடைய வாடிக்கையாளர்கள் பரவலாக உலகம் முழுவதும் பரவி இருப்பதே நம் ரிஸ்க்கைக் குறைக்கும் இல்லையா? வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல விசா நடைமுறைகளை மிகக் கடுமையாக்கி இருப்பதை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

செக்டார் அனாலிசிஸ் - அபார லாபம் தரும்  ஐ.டி.!

ஆங்கிலம் அறிந்த இளைய தலைமுறையும், ஓரளவுக்குக் குறைந்த சம்பளம் ஆகியவை நம் நாட்டின் ஐ.டி. துறையின் வளர்ச்சிக்குக் காரணம் எனப் பார்த்தோமல்லவா? இதை நன்கு உணர்ந்துகொண்ட சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், தங்களது இளைய தலைமுறையின் ஆங்கிலத்தை பலப்படுத்தத் துவங்கியிருக்கின்றன. நம்மூரில் வேலூரில் மட்டும் நிறைய சீன மாணவர்கள் படிப்பதன் ரகசியம் இதுதான். எனவே, நமக்கு இதுவரையில் இருந்துவந்த பலம், இனியும் தொடரும் எனச் சொல்ல முடியாது. ஆசிய நாடுகளில் இருந்து போட்டி கடுமையானதாக இருக்கும்.

போட்டிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிய ஆரம்பித்து விட்டது. பில்லிங்கிற்கான ரேட் கணிசமாகக் குறைய ஆரம்பித்திருப்பதாகச் சொல்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். இதன் தொடர்ச்சியாக, நிறுவனங்களின் லாபமும் குறையும்; ஊழியர்களின் சம்பளமும் குறையும். ஆட்குறைப்புக்கூட நடக்கலாம், தாற்காலிமாக.

செக்டார் அனாலிசிஸ் - அபார லாபம் தரும்  ஐ.டி.!

இந்தச் சூழலில், நம் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இன்னும் பழைய கதைகளையே பேசிக்கொண்டிருந்தால் வளர முடியாது; புதிய சந்தைகளை அணுக வேண்டும். முக்கியமாக, உள்ளூர் சந்தைகள் பெரிய வாய்ப்பை அள்ளி வழங்க இருக்கிறது.

'இ-கவர்னன்ஸ்’, 'இ-பாஸ்போர்ட்’, யூ.ஐ.டி., பத்திரப் பதிவு என உள்ளூர் ஐ.டி. சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது. வேல்யூ செயினில் அதிக லாபம் தராத லோ எண்ட் புராடக்ட்ஸ் பண்ணுவதிலிருந்து விடுபட்டு அதிக லாபம் ஈட்டக்கூடிய மதிப்பு கூட்டுப் பொருட்கள் சந்தையில் கவனம் செலுத்துவதே நல்லது.

ரூபாயின் மதிப்பு குறைந்து டாலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்ந்து வருவது, ஏற்றுமதி அதிகம் செய்யும் இந்நிறுவனங்களுக்கு இப்போதைக்கு நல்ல பலனைக்கொடுத்து வருகிறது. இருந்தாலும், ஏற்றுமதியையே பெரும்பாலும் நம்பி இருப்பது சில சமயம் நல்லதல்ல. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் டாலரின் மதிப்புக் கடுமையாகக் குறைந்து, டாலர் ஒன்று ரூ.40-க்கும் கீழே வந்து, எல்லா ஏற்றுமதி நிறுவனங்களையும் பீதிக்குள்ளாக்கியதை மறந்திருக்க முடியாது. அதிலிருந்து வெளிவர 'எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ்’சில் சிக்கி மேலும் பணம் இழந்தன சில நிறுவனங்கள். ஐ.டி. துறையை 'ஸ்வாட்’ அனாலிசிஸுக்கு உட்படுத்தி, அதன் பலத்தையும் பலவீனத்தையும் மேலே பாக்ஸில் சொல்லி இருக்கிறேன். அதில், பலம் அதிகமாக இருக்கிறது. எதிர்காலத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், வாய்ப்புகளுக்கும் குறைவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதில்லையா?

ஐ.டி. துறையில் முதலீட்டிற்கு ஏற்ற ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதை அடுத்தவாரம் சொல்கிறேன்.

(அலசுவோம்)