அலுவலக நட்பு... ஆரவாரம் இல்லாமல் இருக்க செ.கார்த்திகேயன், படம்: ஜெ.வேங்கடராஜ்.
##~## |
ஒரு மனிதனுக்குப் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என பலர் இருப்பர். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது அலுவலக நட்பு.
பள்ளி, கல்லூரிகளில் கிடைக்கும் நட்பு என்றைக்குமே ஒரு பக்குவமான மனநிலையில் இருக்காது. நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால்கூட யோசிக்காமல் அடாவடித்தனத்தில் இறங்கும் பயமறியா நட்பு அது. ஆனால், அலுவலக நட்பு, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சாதுரியமாக கையாளும் மனப்பக்குவத்துடன் செயல்படுவது. அலுவலக நட்பில் பிரச்னை இல்லாமல் இருக்க என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும் என்ற கேள்வியுடன் சென்னை காம்ஃபை சொல்யூஷன் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரனிடம் பேசினோம். அவர் சொன்ன விஷயங்கள்...
''வேலையில் சேர்ந்த புதிதில் நாம் புது அலுவலக நண்பரைத் தேட ஆரம்பிப்போம். பலர் இந்த நட்பை தேனீர் மற்றும் உணவு இடைவேளைகளின்போது பேச்சுத்துணைக்கு ஆள் வேண்டும் என்பதற்காக ஆரம்பித்து, அலுவலக ரீதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட சுக-துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வளர்த்துக்கொள்வார்கள். இது அலுவலகச் சூழலுக்கு இடையூராக இல்லாமல் இருக்கிறவரை எந்தப் பாதகமும் இல்லை.

அலுவலகத்தில் மிகுந்த நட்புடன் பழகியவர்களுக்கு இடையில் ஏதேனும் ஒரு காரணத்தினால் விரிசல் விழுந்தால் இருவருக்குமே பிரச்னைதான். இதனால் மனஅழுத்தம் உண்டாகி செய்யும் வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அலுவலக நட்பில் நெருக்கம் அதிகம் இல்லாமல் இடைவெளிவிட்டுப் பழகுவது நல்லது.
பெரும்பாலானவர்கள், அலுவலகத்திற்கு வெளியில் சென்றதும் அலுவலக விஷயங்களை மறப்பதுபோல, அலுவலக நண்பர்களையும் மறந்துவிடுவார்கள். ஆனால், அலுவலகத்திற்கு வெளியில்தான் அவர்களின் உண்மையான மனநிலையைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த சமயத்தில் அந்த உறவு இன்னும் நம்பகத்தன்மை பெறும்.
அலுவலக வாழ்க்கையையும் தனிப்பட்ட விஷயங்களையும் தனித்தனியான கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டுமே ஒழிய ஒன்றாக நினைப்பது கூடாது. இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்ப ஆரம்பித்தால், தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்கள் குறித்து அலுவலக நண்பர்களிடம் கருத்துகேட்க வேண்டிவரும். அவர்கள் சொல்லும் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில்

தேவையில்லாமல் மனக்கசப்பு உருவாகலாம்.
எதை எதை யாரிடம் சொல்ல வேண்டுமோ, அதை அதை மட்டுமே அவர்களிடம் சொல்லவேண்டும் என்பது அலுவலக நட்பிற்கு முற்றிலும் பொருந்தும். தேவையில்லாத விஷயங்களை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது. எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் உளறுவதால் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. இது தலைமை அதிகாரிக்குச் செல்லும்பட்சத்தில் தேவை இல்லாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
அலுவலக நண்பர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களிடம் உள்ள குறைகளைச் சொல்லி மனக்கசப்பிற்கு ஆளாகக்கூடாது. தேவை இல்லாமல் அரட்டை அடிப்பதை நிறுத்தினாலே அலுவலக நட்பு பிரச்னைக்குக் கொண்டு செல்லாது.
பொருளாதாரப் பற்றாக்குறை வரும்போது அலுவலக நண்பர்களிடம் 'கைமாத்து’ வாங்குவது புத்திசாலித்தனமல்ல. அப்படியே வாங்கினாலும் அந்தப் பணத்தை உடனடியாகத் தந்துவிடவேண்டும். கைமாத்தே கூடாது எனில், கடன் கூடவே கூடாது.
அலுவலக நண்பர்கள் தங்களின் வீட்டு விஷேசங்களுக்கு அழைத்தால் அதில் தவறாமல் கலந்துகொள்வது நல்லது. அதேபோல அலுவலக நண்பர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துக்களை சொல்வதன் மூலம் உறவை மேம்படுத்தலாம்.
அலுவலக நட்பில் உணர்ச்சி வயப்படுவதைக் குறைத்துக் கொண்டு உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நன்றாகப் படிக்கும் இரு மாணவர்கள் சேர்ந்தால் அதிக மதிப்பெண் வாங்குவது எப்படி உறுதியான விஷயமோ, அதே போல அறிவார்ந்த இரு அலுவலக நண்பர்கள் இணைந்தால், அவர்களுக்கிடையேயான நட்புறவு அதிகரித்து, அதனால் நிறுவனமும் பயன் பெறும்.
அலுவலக நட்பில் இருந்துதான் அவரவர்களின் வாழ்க்கைப் பாதை தீர்மானமாகிறது. அறிவுப்பகிர்வும் அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. அந்த அறிவுப்பகிர்வும், வாழ்க்கையின் ஆரம்பமும் இனிமையாக அமையவேண்டுமெனில் அலுவலக நட்பை ஆரவாரமில்லாமல் அமைத்துக்கொள்வது அவசியம்!''