நடப்பு
Published:Updated:

எடக்கு மடக்கு

ஏழைகளுக்கும் கடன் தாங்கய்யா!

##~##

பொங்கல் விடுமுறையப்ப என் மகளோட சைக்கிளை ஓவர்-ஹாலுக்கு (அதாங்க, ஓவர்ஆயில்!) செய்ய  சைக்கிள் கடைக்குக் கொண்டுபோய் கொடுத்தேன். ''ஏகாம்பரம் சார், சாயங்காலம் வந்து வாங்கிக்குங்க''ன்னார். சாயங்காலம் போனப்ப, இதோ, அஞ்சு நிமிஷத்துல தந்துட்றேன்னு சொல்லிட்டு,  ஃபைனல் டச் தர ஆரம்பித்தார். அப்ப ஒருத்தரு பழைய மாடல் புல்லட்டுல வெள்ளைச்சட்டையும் புஷ்டி மீசையுமா வந்தாரு. உடனே சைக்கிள் கடைக்காரரு ஓர் அட்டையையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு போயி அவரிடம் தர, அட்டையில் ஏதோ குறித்துத் தந்துவிட்டு, புல்லட்டைக் கிளப்பினார் மீசைக்காரர்.

திரும்பிவந்த சைக்கிள் கடைக்காரரிடம், ''என்னப்பா, சீட்டு கம்பெனி வசூலா?'' என்று கேட்டேன் பொழுதுபோகாமல். ''இல்லீங்க! வீடு ரிப்பேர் பண்ண கொஞ்சம் கடன் வாங்கினேன். அதை தினசரி தவணையா கட்டி கழிச்சுகிட்டு இருக்கேன்''ன்னார் கடைக்காரர். ''அந்த அட்டையைக் குடுப்பா, பார்க்குறேன்''ன்னு வாங்கிப் பார்த்தா, மொத்தம் 80,000 ரூபாய் கடன் தொகை. தினசரி தவணை ரூபாய் 250 ஒரு வருடத்திற்கு என்று அதில் போட்டிருந்துச்சு.

குத்துமதிப்பா ஒரு கணக்குப்போட்டு பார்த்துட்டு, ''பரவாயில்லையே, 18 சதவிகித வட்டில உனக்கு தர்றாரே மீசைக்காரரு''ன்னு கேட்டேன். ''என்னது பரவாயில்லையா, அது 80,000 ரூபாய்க்கு இல்ல சார்! கடன் தர்றப்பவே 8,000 ரூபா வட்டியைப் பிடிச்சுக்கிட்டு 72,000 ரூபாதான் தருவாங்க. அதுக்கு தினசரி 250 ரூபா பன்னிரண்டு மாசம் கட்டி அடைக்கணும்'' என்றார். ''அய்யோ, அப்ப வட்டி மட்டுமே 36 சதவிகிதத்திற்கு மேல போயிடுதே!''ன்னு நான் அலறினேன். ''வேற வழி இல்லாமதான் சார் இந்தக் கடனை வாங்கிக் கட்டிக் கிட்டிருக்கேன்! என்ன பண்றது சார், என்னை நம்பி குறைஞ்ச வட்டிக்கு யார் பணம் தர்றா?''ன்னு புலம்பினார் கடைக்காரர்.  

எடக்கு மடக்கு

''தப்பா நினைக்கலேன்னா சொல்லுங்க... கடையில மாசம் எவ்வளவு வருமானம் வரும்'' என்றேன். ''ஆவரேஜா மாசத்துக்கு ஒரு பதினைஞ்சு பதினெட்டாயிரம் கையில நிற்கும்'' என்றார்.

''எந்த பேங்கில கணக்கு வச்சிருக்கீங்க'' என்றேன். ''எனக்கேதுங்க கணக்கு. என் பையன் காலேஜில படிக்கிறான். வெளியூரில இருக்கறதால அவனுக்கு ஒரு பேங்க் கணக்கு இருக்குது. பணம் அர்ஜென்டா தேவைப்பட்டா யாரிடமாவது சொல்லி அவன் கணக்குல கட்டிருவேன். அந்த அட்டையிலேயே பின்னாடி அவன் கணக்கோட நம்பர் இருக்குது பாருங்க'' என்றார். ''எத்தனை வருஷமா தொழில் பண்றீங்க என்றேன். ''நான் எஸ்.எஸ்.எல்.சி. பெயில் ஆனவுடனே தொழில் பழகினேங்க. கிட்டத்தட்ட 30 வருஷமாயிடுச்சு. இந்த லொக்கேஷனிலேயே நாலுதடவை கடையை மாத்திட்டேன்'' என்றார்.

''இத்தனை வருஷமாத் தொழில் பண்றீங்களே ஏன் உங்களுக்கு பேங்கில் கணக்கு இல்லை'' என்றதற்கு அந்த அளவுக்குப் பணம் நம்மகிட்ட இல்லீங்களே'' என்று சிரித்தார். ''ஏங்க பேங்க் கணக்கு வச்சுக்க பெரிசா பணம் ஒண்ணும் தேவையில்லீங்க. உங்க தினசரி கலெக்ஷனை கணக்கு ஒண்ணை திறந்து அதுல போட்டு செலவுக்கு அதில இருந்து எடுத்து ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கும்போது செக் கொடுத்து தொழில் பண்ணினா பேங்க்காரங்களுக்கு உங்க வரவு செலவு தெரியும். அதைக் காண்பிச்சு உங்களுக்கு தொழில் விருத்தி பண்ணவோ, வீடு ரிப்பேர் பண்ணவோ பணம் தேவைப்படறப்போ குறைஞ்ச வட்டியிலே கடன் வாங்கலாமே'' என்றேன். உடனே ஆர்வமானாரு சைக்கிள் கடைக்காரரு. ''என்ன வட்டிக்குக் கிடைக்கும்'' என்றார்.

எடக்கு மடக்கு

''13 முதல் 16 சதவிகித வட்டி இருக்கும்!'' என்றேன் நான். ''ஆனா, பேங்க்ல அக்கவுன்ட் வச்சுருக்கிறவங்களுக்குதானே சார் கடன் தருவாங்க. நான் எந்த பேங்க்லயும் அக்கவுன்ட் வச்சுக்கல. காலேஜ்ல படிக்கிற என் பையனுக்கு பேங்க் அக்கவுன்ட் இருக்கு. ஆனா, நான் வச்சுக்கல. அதுக்கெல்லாம் அலையறதுக்கு எனக்கு டயமில்லை'' என்றார் கடைக்காரர்.

''என்னப்பா, இப்பிடி சொல்லிட்டே. உன் கடையில இருந்து கூப்பிடு தூரத்தில மூணு பேங்க் இருக்குது. ஒரு மணி நேரம் போனா கணக்கை ஓப்பன் பண்ணிடலாமே! தவிர, பேங்கில் வரவு-செலவு வெச்சுக்கிட்டா தொழில் ரீதியாவும் மற்ற தேவைக்கும் கடன் வாங்க ஒத்தாசையா இருக்குமே!''ன்னு அவருக்கு வெளக்கமா எடுத்துச் சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து டிவி-யைப் போட்டா, ரிசர்வ் பேங்க் கவர்னரு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தாரு. 'இந்தியாவில் உள்ள 6 லட்சம் ஊர்களில் 90 சதவிகிதம் ஊர்கள் வங்கி வசதி இல்லாமல் இருக்கின்றன. வங்கிகள் அந்த ஊர்களில் கிளைகள் திறக்க  முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும்’ன்னு சொல்லி இருந்தாரு.  

தெருமுனையில மூணு பேங்க் இருக்கிறப்பவே பேங்க் கணக்கில்லாம இருக்கிறாங்க நம்ம ஊரு ஜனங்க. பேங்கே இல்லாத ஊரிலேயும், பஸ் பிடிச்சு பத்து கிலோ மீட்டர் போனாத்தான் பேங்குன்ற ஊரிலேயும் என்னவாகும்? நம்ம புல்லட்காரர் மாதிரி பலபேர் நடமாடும் பேங்கா செயல்படுவாங்க. கிலோ மீட்டர் வட்டி ஓடிகிட்டிருக்கும். உழைச்சு ஓடாய்த்தேஞ்சு வட்டிகட்டி வாழ்ந்தோமுன்னு ஜனங்க இருப்பாங்க. சம்பாதிக்க ஸ்கோப் இருந்தாலும் வட்டிகட்டி அதைத் தொலைக்கிற மாதிரியில்ல இருக்கும். குறைந்த வட்டியில பணம் கிடைச்சா நல்லா தொழில் பண்ணி நாலு காசு சேமிச்சா அது பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயமா உதவுமே. பெரிய ஊரில மட்டும் பேங்கை வச்சுகிட்டு பல்க்கா கடன் கொடுத்து பல்க்கா வாராக்கடன் பண்றதுக்குப் பதிலா சின்னச் சின்ன ஊர்களிலே கிளைகளைத் திறக்கலாமே. ரிஸ்க்கும் ஸ்பிரெட் ஆகும். நாடும் வளர வாய்ப்பு அதிகரிக்கும். இன்க்ளூசிவ் குரோத் இன்க்ளூசிவ் குரோத்துன்னு பேசினா மட்டும் போதாது இன்க்ளூட் பண்றதுக்கு முதலில

பிராஞ்ச் இருக்கணுமுங்கிறது கண்டிஷனா இருக்க வேண்டாமா?

ஒரு குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்குன்னு டார்கெட்டுங்கிறாரு கவர்னரு. ஓர் ஊருக்கு குறைஞ்சபட்சம் ஒரு பேங்கோட பிராஞ்சுன்னு டார்கெட் வச்சா பெட்டருங்க. பிரைவேட் பேங்குகளைப் பாருங்க. குறைஞ்சபட்ச இடத்துல பிராஞ்சைப் போட்டிடறாங்க. ஒவ்வொரு பேங்க் இல்லாத ஊரிலேயும் இத்தனை வருஷத்துக்குள்ளாற குறைஞ்சபட்ச பேங்கிங் ஃபெசிலிட்டி இருக்கணுமின்னு ஒரு கண்டிஷன் போட்டாகணுங்க.

பேங்க் பிராஞ்ச் இல்லாத இடத்துல பிராஞ்ச் ஓப்பன் பண்ணினா, அந்தச் செலவுக்கு வரி விலக்கு உண்டுன்னு சொல்லணுங்க. இப்படி என்னென்ன விதத்தில பேங்குகளை ஊக்குவிக்க முடியுமோ அப்படி ஊக்குவிச்சாதான், அவங்க புது ஊருங்கள்ல பிராஞ்சைப் போடுவாங்க. இல்லாட்டி ஏற்கெனவே இருக்கற ஊரில சுத்தி சுத்தி பிராஞ்ச் வளருங்க.

சரி அதைவிடுங்க, நான் சைக்கிள் கடைக்காரருக்கு கிளாஸ் எடுத்த மாதிரி எத்தனைபேர் எடுக்கிறாங்க? ஒரு வங்கிக் கணக்கை துவங்குங்க! அதனால் என்னென்ன நன்மை கிடைக்கும்னு யாராவது சாமான்யன்களுக்குச் சொல்லணுமுங்க. யாராவது என்ன, யாராவது? பேங்குங்கதான் போய்ச் சொல்லணும். உங்க வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிட்டீர்களா? அப்படீன்னு விளம்பரத்தை யாராவது பார்த்திருக்கோமா? இல்லியே. வங்கிக் கணக்கிலே இருக்கவேண்டிய மினிமம் தொகையை அஞ்சு ரூபாயாப் பண்ணினதுதான் கிளாஸ் பேங்கிங் டு மாஸ் பேங்கிங்கிற்கு சூழ்நிலையை மாத்துமுன்னு நான் சின்னப்புள்ளையா இருக்கறப்ப படிச்சிருக் கேங்க. இப்ப அஞ்சு ரூபாய்க்கு மதிப்பில்லேங்கிறது வேற விஷயம்.

பேங்கிங்கால என்ன பயன்? சேமிப்பு, வட்டி, மாசம் ஆயிரம் ரூபாய் போட்டா இத்தனை வருஷத்தில கோடீஸ்வரன்னு சொல்றதை யெல்லாம் விட்டுடுங்க. எல்லாரும் கையில காசை வச்சுக்கிட்டா கோடீஸ்வரனாகுறதுக்கு வழி தெரியாமத் திரியறாங்க. சின்னத் தொழிலோ, சின்ன வேலையோ பேங்குல கணக்கு வையுங்க. உங்க கணக்கோட செயல்பாட்டைப் பார்த்துட்டு உங்களுக்கு குறைஞ்சபட்ச வட்டிக்கு கடன் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு ஜனங்கள்ட்ட சொல்லிப் பழகுங்க.

சின்னச் சின்ன ஊருல கடன் கொடுத்தாக் கொஞ்சம் அப்படி இப்படி வராமத்தான் செய்யும். ஆனா, அவங்க திருப்பிக் கட்ட நிச்சயம் முயற்சி பண்ணுவாங்க. நாமதான் ஒரே பார்ட்டி 8,000 கோடி என்.பி.ஏ. பண்ணினாலும் தாங்குறோமே.

அப்புறம் என்ன! கொஞ்சம் முயற்சி செஞ்சா எல்லோரும் கூட்டமா வங்கிக்கு வருவாங்க. வளரவும் செய்வாங்க. இதை விட்டுட்டு கூட்டமா நீங்க போய் ஒரே ஆளுக்கு கடனைக்கொடுத்துட்டு அதை என்.பி.ஏ. ஆக்கிடறீங்களே! இது சரியா?

மக்கள் எல்லோரும் வளர ஆரம்பிச்சாதான் எல்லாத்திலேயும் இந்தியா சிறந்து விளங்கும். பல்க்கா சம்பாதிப்போமுன்னு நினைச்சு பல்க்கா ஏமாறாதீங்க சார். கொஞ்சம் சாமான் யருங்களையும் பாருங்க சார்! என்னங்க நான் சொல்றது!