மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் ! பானுமதி அருணாசலம் படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்.

##~##

தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் நகரமிது. சிம்சன் குரூப் அனந்தராமகிருஷ்ணன், டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் போன்ற தொழிலதிபர்களை ஈன்றெடுத்த மண் இது. பீடி சுற்றுதல், அலுமினியப் பாத்திரங்கள் தயாரித்தல், பின், கிளிப், தீப்பெட்டி செய்தல், செங்கல் காளவாசல்கள், ஸ்பின்னிங் மில்கள், பாய் பின்னுதல், விவசாயம் உள்ளிட்ட பல தொழில்கள் இந்த நகரத்தை செழிப்புடன் வைத்திருக்கின்றன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 30,72,880 -ஆக இருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் ஏதுமில்லை என்றாலும் மக்கள் தங்களது கடுமையான உழைப்பால், தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகின்றனர். நகரத்தின் வளர்ச்சிக்கு இன்னும் என்னென்ன விஷயங்கள் தேவை என்பதைக் கண்டறிய இந்த ஊரைச் சுற்றி வலம் வந்தோம்.  

திருநெல்வேலி மாவட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் மற்றும் பெல் குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குணசிங் செல்லதுரையுடன் பேசினோம். ''படிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் வேலைவாய்ப்பிற்கு சென்னையை நோக்கிச் செல்லும் அவலநிலைதான் இன்னும் தொடர்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் போன்ற சில தொழிற்சாலைகள்தான் இருக்கிறது. இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு தகுந்த தொழிற்சாலைகள் அதிகமாக வரவேண்டும். சுண்ணாம்பு, கிரானைட் என தாதுக்கள் அதிகமாக இருந்தாலும் இன்னும் அதனை முழு அளவில் பயன்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இல்லாமல் இருக்கிறது. பேட்டை மற்றும் சங்கரன் கோவிலில்தான் சிட்கோ இருக்கிறது. நெல்லையில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் இன்னொரு சிட்கோ வரத் திட்டம் இருக்கிறது.

ஊர் ஜாதகம்

ஆனால், அதைத் தொடங்குவதற்கான முயற்சிகள் இன்னும் இல்லை. பன்னிரெண்டு பேப்பர் மில், 250 சிறு தொழிற்சாலைகள் மற்றும் அதிக அளவிலான ஃபிளை ஆஷ் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களும் இங்கு உள்ளன. கங்கைகொண்டானில் 2,400 ஏக்கர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பத்து வருடங்களுக்கு முன்பு கொண்டு வந்தார்கள். ஆனால், இன்னும் அங்கு மின்சார சப்ளை வசதிகூட செய்து தரவில்லை. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரோலிங் பிளான்ட், வெண்கலம், காப்பர் ரோலிங் பிளான்ட் இங்கு தொடங்கலாம். காரணம், அதற்கான மூலப்பொருட்கள் இங்கு நிறைய கிடைக்கிறது. இங்கிருந்து மூலப்பொருட்களை அனுப்பி வெளி ஊர்களில் ரோலிங் செய்து வருகிறார்கள். அதற்கு பதில் இங்கேயே இந்த ரோலிங் யூனிட்கள் கொண்டு வந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கிளஸ்டர் ஆஃப் இண்டஸ்ட்ரி கொண்டு வரவேண்டும்'' என்றார்.

கல்வித் துறையில் சிறந்து விளங்கும் இந்த நகரத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள் மிக அதிகம். கல்வித் துறையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா ராமனிடம் பேசினோம்.

''கல்விப் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறோம். நல்ல தரமான கல்வி தருவதற்கான ஆசிரியர்கள் இங்கு இருப்பதால் கல்விக்கான துறை இன்னும் இங்கு வளர்ச்சி காண வேண்டும். மிகப் பெரிய தொழிற்சாலைகள் இங்கு வராமல் இருக்கிறது. கங்கைகொண்டானில் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவர ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பூங்கா செயல்படத் தொடங்கினால் வெளியூருக்குச் சென்று வேலைப் பார்க்க முடியாத இளைஞர்களுக்கும், படித்துவிட்டு குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் பட்டதாரிகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும். மக்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு, நகரின் வளர்ச்சிக்கும் வழி செய்து வருகிறார்கள். இனி அடுத்த கட்ட வளர்ச்சி அடைய வேண்டுமெனில், அதற்குத் தேவையானதை அரசாங்கம்தான் செய்து தரவேண்டும்'' என்றார் அவர்.

ஊர் ஜாதகம்

நாம் இந்த ஊரைச் சுற்றி வந்தபோது நிறைய தொழில்கள் அழிந்து வருவதைப் பார்க்க முடிந்தது. அதில் ஒன்று மர செப்பு சாமான்கள். குழந்தைகள் வைத்து விளையாடும் செப்பு சாமான்கள் செய்வது தமிழகத்தில் அம்பாசமுத்திரத்தில் மட்டும்தான். இத்தொழிலை பல வருடங்களாக செய்து வரும் சரவணனிடம் பேசினோம்.

''செப்பு சாமான்கள், தொட்டில் கம்பு, மர நடைவண்டி உள்ளிட்ட இந்தப் பொருட்களை செய்யும் 500 குடும்பங்கள் இங்கு இருந்தது. 2000-ம் ஆண்டு வரை எங்கள் தொழில் நன்றாகவே போனது. ஆனால், இப்போது நூறு குடும்பங்கள்தான் இத்தொழிலில் ஈடுபட்டுளோம். இந்த சாமானில் பயன்படுத்தப்படும் நிறத்தின் விலை முன்பைவிட நான்கு மடங்கு அதிகமாகிவிட்டது. மேலும், கர்நாடக மாநிலத்தில் இந்த தொழில் செய்பவர்களுக்கு மானிய விலையில் காட்டில் மரம் கொடுக்கிறார்கள். மின்சாரப் பிரச்னை வேறு அதிகமாக இருப்பதால் தொழில் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அரசாங்கம்தான் இத்தொழிலுக்கான பயிற்சி தந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்'' என்றார்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சி இந்த பகுதியில் வேகமாக இருக்கிறது. இது குறித்து மாயன் ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் ராஜாவிடம் கேட்டோம்.

''சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இங்கிருக்கும் கல்வித் தரத்தைப் பார்த்து இங்குள்ள கிராமங்களில் எதிர்காலத் திட்டங்களுக்காக இடம் வாங்கிப் போடுகின்றன. முன்பு முதலீட்டு அடிப்படையில் நிலம் வாங்கி போட்ட மக்கள் இப்போது வீடு கட்ட வேண்டும் என்றால் மட்டுமே நிலம் வாங்குகின்றனர். நாங்குநேரியில் கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் செயல்படத் தொடங்கினால் இன்னும் மாற்றங்கள் ஏற்படும்'' என்றார்.

விவசாயம் குறித்து இயற்கை விவசாயி தேவதாஸிடம் பேசினோம். ''நான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், விவசாயம் செய்வதற்கான வசதிகள் இப்போது குறைந்து வருகிறது. விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்கு அதிகப்படியான தொகை கேட்கிறார்கள். ஆடு, மாடு இருந்தால்தான் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடியும். ஆனால், அதுவும் இப்போது இல்லை. வாய்க்கால்கள் முழுவதும் அமலை செடிகள் ஆக்கிரமித்தும், வாய்க்கால்களில் கழிவுநீர் கலந்தும் வருகிறது. நிறைய விவசாய நிலங்களை பிளாட்டுக்களாக விற்பனை செய்து வருகிறார்கள்.  வேலையாட்கள் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது. தொடர் மின்சாரத் துண்டிப்பும் எங்களை விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கிறது'' என்று புலம்பினார்.

விவசாயத்திற்கு அடுத்த படியாக திருநெல்வேலியில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் செங்கல் காளவாசல் மற்றும் மண் பாண்டம் தொழில்தான். நாட்டுச் செங்கல் தயாரிப்பில் மட்டும் சுமார் ஆறு லட்சம் மக்கள் பணிபுரிகிறார்கள். இத்தொழிலில் இருக்கும் பிரச்னை குறித்து அகில இந்திய செங்கல் தயாரிப்பு மற்றும் மண்பாண்டம் தொழிற்சங்க உறுப்பினர் முருகனிடம் கேட்டோம்.

ஊர் ஜாதகம்

''நாட்டுச் செங்கல் தயாரிப்புதான் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கிய தொழில். சுமார் 5,000 செங்கல் காளவாசல்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. மண்பாண்டம் செய்வதன் மூலம் சுமார் ஒரு லட்சம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த தொழிலில் இருக்கும் முக்கியப் பிரச்னையே மண் அள்ளுவதற்கு தடை ஏற்படுவதுதான். எங்கள் தொழிலுக்கு ஒரு நபருக்கு 80 யூனிட் வரை வருடத்திற்கு மண் அள்ளிக்கொள்ளலாம் என சட்டப்படி உத்தரவாகியுள்ளது. எனினும், அதிகாரிகள் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் அலைகழிக்கிறார்கள். காலம் காலமாய் குளம், ஆறுகளில் மண் எடுத்துதான் மண்பாண்டம் மற்றும் செங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த மண் எடுப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, மண் எடுப்பதற்கு எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் இருக்க வழி செய்தாலே இந்த தொழிலை விட்டு போகும் பலர் இந்த தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்'' என்றார்.

நாம் பார்த்தவரை பல சிறு தொழில்கள் அழிந்தும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பத்தமடை பாய், கல்லிடைக்குறிச்சி அப்பளம் இங்கு மிகவும் பிரபலம். ஆனால், பத்தமடை பாய் பின்னுவதை பலர் நிறுத்திவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். அப்பளத்தின் கதையும் அதேதான். இப்படி அழிந்துவரும் தொழில்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலே திருநெல்வேலியை விட்டு வெளியூர்களுக்கு சென்று வேலை தேடும் அவலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படாது.