மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

சீர்கெடுக்கும் சாயப் பட்டறை ! பானுமதி அருணாசலம், படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்.

##~##

கொங்கு நாட்டின் எல்லையில் இருக்கும் ஊர் என்றாலும் அந்த மண்ணுக்கே உரிய சுறுசுறுப்பு கரூரில் பொங்கி வழியவே செய்கிறது. டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி பில்டிங், கொசுவலை தயாரித்தல் என நகர் முழுவதும் சின்னதும் பெரியதுமாக பல தொழிற்சாலைகள். சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் வேறு எந்த ஊரிலும் இல்லாதச் சிறப்பு கரூரைத் தலைமையிடமாகக்கொண்டு கரூர் வைஸ்யா பேங்க், லக்ஷ்மி விலாஸ் பேங்க் என்கிற இரண்டு தனியார் வங்கிகள் வெற்றிநடை போட்டு வருகின்றன. எனினும், சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை கழிவுகள் குறித்தப் பிரச்னை இந்த நகரை உலுக்கி வருகிறது.

முதலில், கரூரின் முக்கியத் தொழிலான டெக்ஸ்டைல்ஸ் துறையில் முன்னோடி யாகத் திகழும் மாசிலாமணி டிரேடர்ஸ் நிறுவனத்தின் முருகேசனிடம் பேசினோம்.

''இந்தியாவிலேயே ஏற்றுமதிக்கு சிறந்த இடமாக கரூர் திகழ்ந்தது. டெக்ஸ்டைல்ஸ் துறையில் சுமார் பத்து லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், இப்போது அது அழிந்துகொண்டு வருகிறது. கடந்த ஆறு, ஏழு வருடங்களாக சாயப்பட்டறை பிரச்னை தலைதூக்கி வருவதால் டெக்ஸ்டைல் துறை மிகவும் பிரச்னைக்கு உள்ளாகி வருகிறது. இந்த வேலைகளை செய்துவந்த மக்கள் கூலி வேலைக்குச் செல்லும் அவலநிலையில் இருக்கிறார்கள்.

ஊர் ஜாதகம்

சாயப்பட்டறை கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தவேண்டும் என்கிறது அரசாங்கம்.  ஆனால், அதற்கான ஏற்பாடு களை நாங்களே செய்தால் அதை குறை சொல்கிறது.  இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அரசாங்கமே இந்த மறுசுழற்சி பிளான்ட்களை டையிங் யூனிட்களில் அமைத்து தந்தால் அதற்கான பணத்தை நாங்கள் செலுத்தத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

ஏற்றுமதித் தொழிலில் கொடிகட்டிப் பறந்து வருகிறது இந்நகரம். ஏற்றுமதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து கரூர் ஜவுளித் தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கரூர் டெக்ஸ்டைல் பார்க்கின் தலைவர் நாச்சிமுத்துவிடம் பேசினோம்.

''மின்வெட்டு பிரச்னை சுத்தமாகத் தொழில் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. கரன்சி ஏற்ற, இறக்கம் மற்றொரு பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக ஜவுளிகளை கொல்கத்தா மற்றும் மற்ற இடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். பங்களாதேஷில் கரன்ட் பிரச்னை கிடையாது; வேலையாட்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்து தருவதால் அங்கிருந்து வரும் ஜவுளிகள் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இதனால் அரசு பங்களாதேஷில் இருந்துவரும் ஜவுளிகளை தடை செய்யவேண்டும்.  

ஊர் ஜாதகம்

இரண்டு வருடங்களுக்கு முன், இங்கு மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் கொண்டுவந்த டெக்ஸ்டைல் பார்க் மூலம் 700 முதல் 800 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் நாற்பது ஜவுளி பார்க்-களில் கரூர் பார்க்தான் மிகச் சிறந்தது. இன்னும் டையிங் பார்க் ஒன்று அமைத்து தரவும் கோரிக்கை வைத்துள்ளோம். இதுவும் வந்துவிட்டால் இந்த ஊர் இன்னும் முன்னேற்றம் அடையும்'' என்றார்.

ஏற்றுமதியில் இருக்கும் வாய்ப்புகள்  குறித்து கரூர் ஜவுளித் தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் சி.இ.ஓ. அனந்தபத்மநாபனிடம் பேசினோம்.

''முன்பு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது. 2008-ல் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னை காரணமாக அங்கு ஏற்றுமதி நடைபெறுவது இல்லை. ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு மட்டுமே ஏற்றுமதி நடக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது மெதுவாக சீரடைந்து வருவதால் அங்கிருந்து ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்றுமதி செய்வதற்கான புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஊர் ஜாதகம்

கரூரில் எல்லோருமே வீட்டிலிருந்து வேலை பார்ப்பார்கள். பெரும்பாலானவர்கள் எஸ்.எம்.இ.-கள்தான். வருடத்திற்கு 3,500 கோடி வரை டேர்னோவர் நடந்தது. 2008 பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு 30 முதல் 40 சதவிகிதம் வரை இந்த டேர்னோவர் குறைந்திருக்கிறது. சாயப்பட்டறை பிரச்னைதான்  இதற்கு ஒரே காரணம்'' என்றார்.

தமிழகத்தில் ஓடும் பல தனியார் பேருந்துகள் கரூரில் உருவானதாகவே இருக்கும். இந்தத் தொழிலின் முன்னோடியான கரூரின் முன்னணி பஸ் பாடி பில்டிங் நிறுவனமான பி.டி. கோச்சின் சேர்மன் மற்றும் கோச் நிறுவனங் களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் தங்கராஜ் இந்தத் தொழில் குறித்த விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''1952-ல்தான் இந்த பஸ் பாடி பில்டிங் தொழில் கரூரில் தொடங்கியது. மாதத்திற்கு ஒரு வண்டி பாடி கட்ட ஆரம்பித்து, இப்போது மாதத்திற்கு சராசரியாக 200 பேருந்துகள் வரை பாடி கட்டுகிறோம். 1952-ல் ஒரு பேருந்து பாடி கட்ட 9,000 ரூபாய் வரை ஆனது. இப்போது அதுவே ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆகிறது. பெரும்பாலும், தமிழகத்துக்கும் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளாவுக்கும் இங்கு தயாராகும் பஸ்கள் செல்கிறது.

இப்போது ஆப்பிரிக்காவில் நல்ல சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. எங்கள் தொழிலில் இருக்கும் முக்கிய பிரச்னை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காததே. மேலும், எங்களுக்கு 14.5 சதவிகிதம் விற்பனை வரி விதிக்கிறது அரசாங்கம். மற்ற மாநிலங்களில் இது ஐந்து சதவிகிதம்தான். எனவே, அதிகப்படியான விற்பனை வரியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கொசுவலை தயாரிப்பும் இந்த ஊரில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 50,000 நபர்களுக்கு இத்தொழிலில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்தொழிலில் இருக்கும் பிரச்னை குறித்து கரூர் கொசுவலை தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.-வான மலையப்பசாமியிடம் பேசினோம்.

''1972-ல் பனியன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் கொசுவலை செய்ய துவங்கினார் எனது தந்தை. முதலில் நூல் வாங்கிக் கொண்டுவந்து கொசுவலை தயாரித்து வந்தோம். அதன்பிறகு ஹெச்.டி.பி.இ. மோனோ ஃபிளமென்ட் மூலம் கொசு வலை தயாரிக்க ஆரம்பித்தோம். இப்போது 3,500 கொசுவலை தயாரிப்பு யூனிட்கள் இங்கு இருக்கிறது. இங்கிருந்து தயாரிக்கப்படும் கொசுவலைகள் டெல்லி, பாட்னா உட்பட வடமாநிலங்களுக்குச் செல்கிறது. பட்டுப்பூச்சி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பிலும் கொசுவலை பயன்படுகின்றது. ஆண்டுக்கு

ஊர் ஜாதகம்

500 கோடி ரூபாய் வரை இந்தத் தொழில் மூலம் வருமானம் நடக்கிறது. ஏற்றுமதியும் நடக்கிறது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆயிரம் பேர் வந்தாலும் உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது'' என்றார் அவர்.

கரூரை பொறுத்தவரை ஃபைனான்ஸ் முக்கிய தொழிலாக இருக்கிறது. அந்த  நகரத்தில் வங்கி துவங்கி தற்போது தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டு திகழும் கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர் ஜனார்த்தனனிடம் பேசினோம்.

''கரூரில் இருபதாம் நூற்றாண்டில் கரூர் வைஸ்யா வங்கி தொடங்கப்பட்டது. 1916-ம் வருடத்தில் இந்த வங்கி துவங்க ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இன்று சுமார் 64,000  கோடி ரூபாய் வரை மொத்த பிஸினஸ் நடக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கரூர் நகரின் 40 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் இங்குவந்து வேலை பார்க்கின்றனர். தற்போது சாயப்பட்டறை பிரச்னை பெரும் சவாலாக இருப்பதால் அரசாங்கம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து சொல்லவேண்டும். அடுத்து சென்னைக்கு செல்லவேண்டுமெனில் ஒரு ரயில் மட்டுமே உள்ளது. கரூரிலிருந்து சென்னைக்கு தனியாக ஒரு ரயில் வந்தால் இந்நகரம் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் வேகம் காட்டும். இதை எல்லாம் கொண்டு வந்தால் கரூர் நகரம் இன்னும் வளர்ச்சி காணும் என்பதில் ஐயமில்லை'' என்றார்.

இத்தொழில்கள் தவிர, கவரிங் நகைகளுக்குப் பயன்படுத்தப்படும் கற்கள் கிடைப்பதால் வடமாநிலங்களி லிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். சத்தமில்லாமல் இந்தத் தொழிலும் பல கோடிகளில் புழங்குகிறது. இந்த ஊரைச் சுற்றி வாழை, கரும்பு, மல்லிகை பூ என விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிக அளவில் இருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு கொண்டுவரவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. டெக்ஸ்டைஸ் மட்டுமல்லாமல் விவசாயமும் செழிப்புடன் இருந்தால் மட்டுமே கரூர் இன்னும் வளர்ச்சியடையும் என்பது இந்த ஊர் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.