மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

நவீன துறைமுகம் அவசியம்! க.பூபாலன்,படங்கள்: எஸ்.தேவராஜன்.

##~##

தென்பெண்ணையாறு, கெடிலம் நதிகளைக்கொண்ட நகரமிது. இந்திய பிஸினஸ் உலகத்தையே புரட்டிப் போட்ட சாஷே பாக்கெட்டைக் கண்டுபிடித்து தந்தது இந்த ஊரில் பிறந்து வளர்ந்த சின்னி கிருஷ்ணன்தான். மீன்பிடி தொழில், விவசாயம், பெரிய பெரிய தொழிற்சாலைகள், பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் ஐஸ் கட்டி தயாரித்தல் போன்ற தொழில்கள் நகரத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், இருபது வருடத்திற்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னமும் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது கடலூர்.

சென்ற வருடத்தில் மாவட்டத்தின் மக்கள் தொகை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நகரத்தின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கடலூர் வளர என்னென்ன விஷயங்கள் தேவை என்பதைக் கண்டறிய இந்த நகரத்தைச் சுற்றி வலம் வந்தோம்.

தொழிலதிபர் பிரகாசம் சொல்கிறார்... ''கடலூரில் இருந்து நாகபட்டினம் வரை கடற்கரைப் பகுதியை மத்திய அரசானது ஆயில் மண்டலமாக அறிவித்து, அதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மேம்பாட்டு நிதியாக ஒதுக்கியது. ஆனால், இந்நாள்வரை சின்ன வேலைகூட நடக்கவில்லை. பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைய உகந்தப் பகுதி கடலூர்தான். நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 3,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன்கொண்ட பவர் பிளான்டும் அமைய உள்ளது. தவிர, மாவட்டத்தில் என்.எல்.சி, சர்க்கரை ஆலைகள், சிமென்ட் ஆலைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்தும் நகர வளர்ச்சி என்பது எட்டாதப் பொருளாகவே உள்ளது.

ஊர் ஜாதகம்

மக்களுக்குக் குடிநீர், வடிகால் வசதி, சாலை வசதி, சுகாதாரம் போன்றவை முக்கியமானது, ஆனால், அவையெல்லாம் அடிமட்டமாக உள்ளது. பழைமையான கப்பல் துறைமுகம் பாழ்பட்டு கிடக்கிறது. அதை மேம்படுத்தினால் வியாபார ஏற்றுமதி, இறக்குமதி மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை கிடைத்து நகரம் வளர்ச்சி அடைய உறுதுணையாக இருக்கும்'' என்றார்.

ஊர் ஜாதகம்

விவசாயிகளின் கைகள் பலமாக ஓங்கியிருந்த இந்தப் பகுதியில், இப்போது விவசாயம் என்றாலே ஏதோ வேண்டாத வேலை என்று ஒதுங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். இதற்கு காரணம் என்னவென்று விவசாயி ராஜாராமிடம் கேட்டோம். ''வறட்சி என்றாலும், வெள்ளப் பெருக்கு என்றாலும் கடுமையாகப் பாதிக்கப்படுவது இந்தப் பகுதிதான். மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிடுகிறது. இதைத் தடுக்க தென்பெண்ணையாற்றிலும், கெடிலம் ஆற்றிலும் தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும். பராந்தகச் சோழன் காலத்தில் வெட்டப்பட்ட பெருமாள் ஏரி பல நூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தூர்கூட வாரப் படவில்லை. தொழிற்சாலைகளின் கழிவுகளால் விளைநிலங்கள் இன்று மலடாகிப் போயுள்ளது. இப்படியிருக்க எப்படி விவசாயம் செழிக்கும்?'' என்று கேட்டார்.

நகர மக்களின் பெரும்பாலானவர்களின் ஏக்கமே பைபாஸ் திட்டம்தான். இத்திட்டம் குறித்து பஸ் ஓனர் அசோசியேஷன் பிரமுகர் கரிகாலனிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில் சிப்காட் இருப்பதால் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கான வாகனங்கள் நகரத்தைக் கடந்து செல்கிறது.  நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைச் சமாளிக்கும் வகையில் சாலை வசதியோ, பேருந்து நிலையமோ இல்லை. பாதாளச் சாக்கடை திட்டமோ, ரயில்வே மேம்பால திட்டமோ விரைவாக முடிக்கப்படவில்லை. கடலூரைவிட சிறிய நகரங்களான பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளுக்கு பைபாஸ் வந்துவிட்டது. ஆனால், இங்கு வரவில்லை. இப்போது நகர வளர்ச்சிக்கு முக்கியமானது பைபாஸ் திட்டம்'' என்றார்.

இந்நகரத்தின் முக்கியமான அடையாளமே சிப்காட் தொழிற்சாலைகள்தான். இந்த சிப்காட் பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், இப்போது பத்து தொழிற்சாலைகள்தான் இயங்கி வருகிறது. இப்படி நகரத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போவதைப் பற்றி இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயர் உமாசந்திரனிடம் பேசினோம்.

ஊர் ஜாதகம்

''இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் தொண்ணூறு சதவிகிதம் கெமிக்கல் கம்பெனிகள் தான். இந்த கம்பெனிகளின் கழிவுகள் கடலில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல், காற்றில் மாசு கலந்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் சுகாதாரத்தையே கெடுத்துவிடுகிறது. இந்த கெமிக்கலால் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டது. திருப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயப் பட்டறை கம்பெனிகள் இங்குத் தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டமிட்டு நிலங்களும் வாங்கிப் போட்டுள்ளன. இதுபோன்ற கெமிக்கல் கம்பெனிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அமைகிற கம்பெனிகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களை சேர்ப்பதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு அலையவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது''  என்றார்.

ஊர் ஜாதகம்

இன்று இப்பகுதியில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. பட்டதாரி இளைஞரான சுந்தரிடம் பேசினோம். ''சென்னைக்கு அடுத்து நீண்ட மிக அழகான கடற்கரை பகுதி இருப்பது இங்குதான். அதுமட்டுமில்லாமல் பழைமையான புராதன பிரசித்திப் பெற்ற கோயில்கள் இப்பகுதியில்தான் உள்ளன. அதனால் அரசானது சுற்றுலாப் பகுதியாக்குவதற்கு முக்கியத்துவம் தரலாம். அப்படி சுற்றுலாத் தலமாக அமைந்தால் மக்கள் புழக்கம் ஏற்படும். இதனால் பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். கடல் உணவு ஏற்றுமதியை ஊக்குவித்தால் அதுவும் நகர வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும். உலகப் புகழ்பெற்ற பிச்சாவரம், சுற்றுலாப் பகுதி இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருபுறம் கடல், ஒருபுறம் மலை சூழ்ந்த அழகான பகுதி. இந்நகரத்திற்கு அருகிலேயே புதுவை மாநிலம் அமைந்துள்ளது. அதனால் இப்பகுதி மக்கள் எந்தப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலும் புதுவைக்கே படையெடுக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் பொருட்களின் விலையும் மலிவாகக் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய ரயில் நிலையம் இருந்தும் முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. பக்கத்தில் இருக்கும் ஓ.டி. ரயில் நிலையத்தில் நிற்கிறது. நகரத்தை சுற்றுலாத் தலமாக்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு வருமானம் பெருகும். நகரமும் அதிவேகத்தில் வளரும்'' என்றார்.

ஊர் ஜாதகம்

கடலூர் நகரத்தில் முப்பத்து நாலாயிரம் மீனவர்கள் வாழ்கிறார்கள். அதில் பத்தாயிரத்துக்கும் மேலான மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடி தொழிலைச் செய்கின்றனர். இங்கு பிடிக்கும் மீன்கள் வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் தைவான், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கு சரியான துறைமுகம் அமையாததால் கொச்சி, தூத்துக்குடி சென்று மீன்களை ஏற்றுமதி செய்கின்றனர் இங்குள்ள வியாபாரிகள். இந்த மீன்பிடி தொழில் மூலம் மீனவர்கள் வருடத்துக்கு 30 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதேபோல் இப்பகுதியில் தயாரிக்கப்படும் கைத்தறித் துணிகள் உலகளவில் புகழ் பெற்றது. ஆனால், இந்தத் தொழில் இப்போது இருக்கும் இடமே தெரியவில்லை. கூட்டுறவு சங்கம் மூலம் சந்தை அமைத்துத் தந்து,  நெசவுத் தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கலாம். நலிந்துகொண்டே வரும் பீங்கான் பொம்மைகள் தயாரிக்கும் தொழில், கயிறு தயாரித்தல் தொழில் போன்ற சிறு தொழில்கள் மீதும் கொஞ்சம் கவனம் வைத்தால் நகரத்தைத் தொழில்மயமாக மாற்றலாம்.