மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

பன்னாட்டு நிறுவனங்கள் வரவேண்டும்! பானுமதி அருணாசலம்,படங்கள்: பா.காளிமுத்து.

ஊர் ஜாதகம்

##~##

தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரையானது சென்னை, கோயம்புத்தூரை அடுத்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகத் திகழ்கிறது. மாட்டுத்தாவணி, அண்ணா, பெரியார் பேருந்து நிலையங்கள், ஆரப்பாளையம், பழங்காநத்தம் என ஒரே நகரத்தில் பல பேருந்து நிலையங்கள் இருப்பது மதுரையாக மட்டுமே இருக்கமுடியும். இரவு ஒரு மணி என்றால்கூட சின்னச் சின்ன ஓட்டல்களில் சுடச்சுட இட்லி கிடைக்கிறது.

மண்வாசனை மாறாமல் இருக்கும் மதுரை நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் என்னென்ன வசதிகள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ரவுண்டு அடித்து, பலதரப்பட்ட நபர்களைச் சந்தித்தோம். நாம் முதலில் சந்தித்தது, கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜோதிராமனை.

''டெக்ஸ்டைல்ஸ் நகரமாகத் திகழ்ந்தது முன்பு. ஆனால் இன்று, மதுரையில் மிகச் சில மில்கள் மட்டுமே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த கைத்தறி, பட்டு நெசவுத் தொழிலை செய்வதற்கு இன்று ஆட்களே இல்லை. இந்தத் தொழில்கள் மீண்டும் வளர வேண்டுமென்றால் அரசு மானிய விலையில் நூல், மின்சாரம் போன்றவற்றை தர வேண்டும். மதுரையில் பெயர் பெற்றது சுங்குடிச் சேலை. எங்கிருந்து மதுரைக்கு  மக்கள் வந்தாலும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மதுரை மல்லி போல இதை இந்த மண்ணுக்கே உரிய ஒரு தயாரிப்பாக விளம்பரப்படுத்தி, இன்னும் அதிகமாக விற்க அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.

ஊர் ஜாதகம்

மதுரையைப் பொறுத்தவரை, ஃபர்னிச்சர், பீரோ, கட்டில்கள் இங்கு அதிகளவில் செய்யப்படுகின்றன. இங்குத் தயாரிக்கப்படும் அரிக்கன் விளக்கு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் தொழில்களை இன்னும் பெரிதாக வளர்த்தெடுத்தால் மதுரை மக்களுக்கு நிறைய வேலை கிடைக்கும். காரணம், இங்கிருக்கும் மக்கள் வெளிமாவட்டங் களை நோக்கி வேலைக்குச் செல் லும் அவலநிலைதான் இருக்கிறது.

ஊர் ஜாதகம்

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மாசு அதிகமாக இருப்பதும் இங்குதான். மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மதுரையின் கூவம் நதியாக வைகை நதி மாறி வருகிறது. நகரத்தின் கழிவுகள் அனைத்தும் வைகை நதியில்தான் விடப்படுகிறது. அதனால் பாதாளச் சாக்கடை திட்டம் உடனடியாகக் கொண்டுவர வேண்டும். மதுரையின் நான்கு வழி வீதிகளிலும் மேம்பாலம் வருகிறது என்றார்கள். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளில் சுரங்கப் பாதைகள் கட்டித் தரவேண்டும் என்று இருபது வருடங்களாகக் கேட்டு வருகி றோம். போக்குவரத்து நெரிசலைப் போக்க தற்காலிகத் தீர்வுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்''  என்றார்.

''கடந்த ஐம்பது வருடங்களாக மதுரைக்குப் புதிய தொழிற்சாலைகள் என எதுவும் வரவில்லை. டி.வி.எஸ்., மதுரா கோட்ஸ் நிறுவனங்கள் தவிர சொல்லிக்கொள்ளும்படியான நிறுவனங்கள் இங்கு இல்லை. ஆங்காங்கே சிறுசிறு தொழில்களைச் செய்து தங்களது காலத்தை ஓட்டி வருகின்றனர் மதுரை மக்கள். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மதுரையில் தங்களது உற்பத்திக் கிடங்குகளை நிறுவலாம். காரணம், அதற்கான தகுதி வாய்ந்த வேலையாட்கள் இங்கு கிடைக்கிறார்கள். ஒரே ஒரு ஐ.டி. நிறுவனம்தான் மதுரையில் இருக்கிறது. ஐ.டி. பார்க் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. இன்னும் பெரிய ஐ.டி. நிறுவனங்கள் மதுரை நோக்கி வருகிற மாதிரி உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவேண்டும்'' என்றார் காங்கிரஸ் பிரமுகரும் சமூக சேவகருமான சொக்கலிங்கம்.

மதுரை நகரத்துக்குத் தேவை யான வசதிகள் குறித்து தொழில் துறையைச் சேர்ந்தவர்களின் கருத்தை அறிய பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் செந்திலுடன் பேசி னோம். ''தமிழ்நாட்டில் திருச்சி, கோயம்புத்தூர் நகரங்களோடு ஒப்பிடும்போது மதுரையில் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் கிடையாது. மல்டி நேஷனல் நிறுவனங்கள் இங்கு வர மறுக்கின்றன. ஒரு பெரிய தொழிற்சாலை வந்தால், அதனைச் சார்ந்து சிறு நிறுவனங்கள் பல வருவதற்கான வாய்ப்புகள் ஏராளம். இப்போது சர்வதேச விமான போக்குவரத்து துவங்கினாலும் இன்னும் நிறைய விமானச் சேவை தேவை. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், ஃபர்னிஷிங் தொழிற்சாலைகள் இங்கு இல்லை. அதனால், சிறு அளவில் பிஸினஸ் செய்யும் நபர்களிடம்தான் எங்கள் பொருட்களை சப்ளை செய்கி றோம். தொழில் துறையினர் விரும்பி வருகிற மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தவேண்டும்'' என்றார்.

ஊர் ஜாதகம்

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஞானசம்பந்தனிடம் பேசினோம்.  ''பல புதிய தொழில்கள் முதலில் துவங்கிய இடம் மதுரை தான். ஆனால், இப்போது அந்தத் தொழில்கள் அனைத்தும் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. மதுரையில் ஒரு மாதத்திற்கு ஐந்து கோடி ரூபாய் வரை வருமானம் கொடுத்து வந்தது டெக்ஸ்டைல்ஸ் துறை. சுமார் 27 மில்கள் வரை மூடப்பட்டுவிட்டன. 1960-ம் வருடத்தில் வெட்கிரைண்டர் தயாரித்தது முதன் முதலில் மதுரையில்தான். இன்று, சினிமா மற்றும் அரசியல் துறைக்கான தளமாக மதுரை மாறிவிட்டது. எந்த ஒரு கட்சியும் புதிதாகத் துவங்குவது என்றால், இங்குதான் தொடங்கப்படுகிறது. சினிமா எடுப்பவர்கள் அனைவரும் மதுரைக்காரர்களை கொடூரமானவர்களாகப் படத்தில் சித்தரிப்பதால் இந்த ஊர் இளைஞர்களை தொழில் நிறுவனங்கள் நம்பி வேலைவாய்ப்புகளைத் தருவதில்லை. நிலக்கோட்டை பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பதப்படுத்தும் கிடங்கு கொண்டு வந்தார்கள். ஆனால், மேற்கொண்டு அந்தத் திட்டத்தைச் செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். சிவரக்கோட்டையில் தொழிற் பேட்டை ஆரம்பிக்கவேண்டும் என்று பேச்சு வந்தது. அதுவும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

சர்வதேச அந்தஸ்து மதுரை விமான நிலையத்திற்குக் கொடுத்தாலும் கொழும்பிற்கு மட்டுமே விமானப் போக்குவரத்து உள்ளது. மற்ற நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தைச் செயல்படுத்தினால் தென் மாவட்ட தொழிலதிபர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே துறையும் தென் மாவட்டங்களை எப்போதும்  வஞ்சித்து வருகிறது. மதுரை யிலிருந்து சென்னையை இணைக்கும் ரயில்களை அதிகப்படுத்தவேண்டும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மேம்பாலங்கள் கட்டித் தரவேண்டும். மேலும், மதுரையைச் சுற்றி சுற்றுலாத் தளங்கள் அதிகமாக இருக்கின்றன. சுற்றுலாச் சார்ந்த விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தினால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இன்னும் அதிகரிக்கும். இப்படி பல்வேறு

ஊர் ஜாதகம்

வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே மதுரை நகரம் இன்னும் வளரும்'' என்றார்.  

மதுரையில் நெல் முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர், நிலக்கோட்டை, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகள் இருபோக பயிரிடும் இடமாகத் திகழ்கிறது. மதுரை மல்லி உலகப் புகழ் வாய்ந்தது. தினம் 2,000 விவசாயிகள் வரை மதுரையின் சுற்றுவட்டாரத்திலிருந்து வந்து பூ விற்பனை செய்துவிட்டு செல்கிறார்கள். இதை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது.  

மதுரையைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் ஸ்டாலினுடன் பேசினோம். விவசாய நிலங்கள் ப்ளாட்டுகளாக மாறிவருவதாகச் சொன்ன அவர், ''கண்மாய்களில் அதிகளவில் உடைப்பு இருப்பதால் பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் செல்வதில்லை. விவசாயத்திற்கு பயன்படும் கண்மாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யவேண்டிய நிலை உள்ளது.

அடுத்த முக்கிய பிரச்னை, போக்குவரத்து நெரிசல். ஒத்தகடையைத் தாண்டி மதுரைக்குள் வரவேண்டுமென்றால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதேபோல் திருநகர் பகுதியிலிருந்து நகரத்திற்குள் வருவதற்குள் போதும்போதுமென ஆகிவிடுகிறது. பாதைகளை மாற்றி மாற்றிவிட்டு தினமும் மக்கள் குழம்பும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். அதனை ஒழுங்கான முறையில் செயல்படுத்திப் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவேண்டும்'' என்றார்.

மதுரையில் மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல பொறியியல் கல்லூரிகள், வேளாண் மற்றும் சட்டக் கல்லூரி, ஏழு பாலிடெக்னிக் மற்றும் ஐந்து ஐ.டி.ஐ. கல்வி நிலையங்களும், பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இருக்கின்றன. படித்துவரும் இளைஞர்கள் கூட்டம் பல்லாயிரத்தையும் தாண்டி இருக்கிறது. எனவே, பெரிய சிறு நிறுவனங்கள் மதுரையில் தாராளமாகத் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்கலாம். இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் மதுரை நகரம் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இன்னும் வேகமாகச் செல்லும்.