வேண்டும் சாயக்கழிவுக்குத் தீர்வு ! பானுமதி அருணாசலம்,படங்கள்: கா.மகேஷ்.
##~## |
விவசாயமும், தொழில் துறையும் ஒருசேர செழிப்புடன் வீறுநடை போடும் மாவட்டம்தான் ஈரோடு. கொங்கு நாட்டின் ஒருபகுதியான ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் பெட்ஷீட், கைலிகள், மஞ்சள் என பல பொருட்களுக்கு முக்கியமான கேந்திரமாக இருக்கிறது. இந்நகரத்தின் வளர்ச்சிக்கு இன்னும் என்னென்ன தேவை? என்பதை அறிய பல தரப்பினருடன் பேசினோம். நாம் முதலில் சந்தித்தது, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆ.சரவணனை.
''ஜவுளித் துறையில் பலவிதமான ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்தது ஒரு காலம். ஆனால், தற்போது ஜவுளித் தொழிலை முடக்கும் வகையில் பல பிரச்னைகள் தலைவிரித்து ஆடுகின்றன. நூலின் விலையில் இருக்கும் பெரும் வித்தியாசங்கள் இத்தொழிலை செய்ய முடியாமல் தடுக்கிறது. விலை ஏற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நூல் வங்கிகள் தொடங்கினால் அதிகப்படியான விலையைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கான மார்க்கெட்டிங் சென்டர்களை ஈரோட்டில் அமைக்கவேண்டும். தற்போது நாங்கள் திருப்பூர் சென்றுதான் ஏற்றுமதி ஆர்டர்களை பெற முடிகிறது. இங்கு மொத்தம் இருபதாயிரம் பவர்லூம்கள் இருக்கிறது. இப்படி பல்லாயிரக்கணக்கான நபர்கள் இங்கு வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மின் வெட்டு காரணமாக முன்பு 24 மணி நேரமும் ஓடிய பவர்லூம்கள், இப்போது எட்டு மணி நேரம் ஓடுவதே அரிதாக இருக்கிறது'' என்று வேதனைப்பட்டார்.
ஜவுளித் துறைக்கு அடுத்து, இங்கு முக்கிய வளமாக இருப்பது விவசாயம். நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்டவைகள் முக்கிய பயிராகப் பயிரிடப்படுகிறது. விவசாயத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமியிடம் பேசினோம்.

''ஈரோடு மாவட்ட விவசாயத்தில் 2,70,000 ஏக்கர் பரப்பளவு பவானி நீர் பாசனம் மூலமும், 12,000 ஏக்கர் பரப்பளவில் காலிங்கராயன் நீர் பாசனம் மூலமும் விவசாயம் நடைபெறுகிறது. கொடிவேரி பாசனம் மூலம் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது. போதுமான தண்ணீர் கிடைக்காததால், நெல் சாகுபடி குறைந்துவிட்டது. இதற்கு காரணம், பவானி ஆறு உற்பத்தியாகும் இடம் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருந்தாலும், அதன் வழிப்போக்கு கேரள எல்லைகளை கடந்து வருவதால் அங்கு பல தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் அளவை குறைத்துவிட்டார்கள். காவிரியும் ஏமாற்றிவருவதால் மழையை நம்பிதான் விவசாயம் செய்யவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். கீழ்பவானி அணையிலிருந்து ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 தேதி வரை திறந்துவிடப்படும் தண்ணீர் இந்த முறை திறந்து விடப்படவில்லை. அதனால் மழை நீரை சேகரித்து அவினாசி அத்திக்கடவு திறந்தவெளி கால்வாய் மூலம் 200 குளங்கள், குட்டைகளை நிரப்பினால் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம். மஞ்சள் சாகுபடி அதிகமாகச் செய்வதாலும், மஞ்சளின் சந்தை இங்கு நடைபெறுவதாலும் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம் வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கையாகும்'' என்று சொன்னார்.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 14,500-க்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் இருக்கும் இந்த ஊரின் அனைத்துத் தொழில் வணிகச் சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவநேசன் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாம்.
''இந்தப் பகுதியில் 15,000 கிலோ மல்லிகைப்பூ உற்பத்தி ஆகிறது. சீஸன் அல்லாத நேரங்களில் இந்த பூ வீணாகத்தான் போகிறது. அதற்கு மாற்றுவழியாக இங்கு வாசனைத் திரவிய தொழிற்சாலை கொண்டுவந்தால் பூ வீணாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பும் உருவாகும். நிறைய காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் கோபிசெட்டிபாளையத்தில் எத்தனால் வாயுக்கொண்ட குளிர்பதன கிடங்கு தேவை. மஞ்சளை இங்கிருந்து வாங்கி அதை அஹமதாபாத்தில் பொடியாக்கி மீண்டும் இங்கே கொண்டுவந்து விற்பது அதிகமாக நடக்கிறது. மஞ்சளை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்ற அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள் வரவேண்டும். ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகமும் அவசியமாகத் தேவைப்படுகிறது. உணவுப் பொருட்கள் தயாரித்தால் அவற்றை சோதனை செய்ய நாங்கள் தஞ்சாவூர் அல்லது மைசூர் போகவேண்டியது இருக்கிறது. அதனால் இங்கு சோதனை ஆய்வு நிலையம் வந்தால் நன்றாக இருக்கும். நவீன ரைஸ்மில், முருங்கை உற்பத்தி, தோல் பதனிடும் தொழில் என பல தொழில்கள் இருக்கிறது. இங்கு மட்டும் 97 தோல் பட்டறைகள் இருந்தது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி நடந்தது. ஆனால், தற்போது 32 பட்டறைகள்தான் இருக்கிறது. இந்தக் கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய கழிவுநீரை பைப்லைன் மூலம் கடலில் கலக்கும் திட்டம் பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்கள் கிடப்பிலேயே இருப்பதால், வளரவேண்டிய நகரம் இன்னும் வளராமலே இருக்கிறது'' என தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
விசைத்தறி மூலம் துணிகள் நெய்யும் யூனிட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை பெறுகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் சித்தூர், லக்காபுரம், சூரம்பட்டி விலக்கு, வீரப்பன் சத்திரம் முதலிய இடங் களில் அதிக எண்ணிக்கையில் தறி போடும் யூனிட்கள் சுமார் ஆயிரம்வரை இருக்கின்றன. இந்தத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அண்ணாத்துரையிடம் பேசினோம்.

''மின் வெட்டுதான் எங்களுக்கு முக்கிய பிரச்னை. தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை கரன்ட் போவதால் தறி ஓட்ட முடியவில்லை. இதனால், ஜெனரேட்டர் மூலம் தறி ஓட்ட வேண்டிய கட்டாயம். இது உற்பத்திச் செலவை மூன்று மடங்காக ஆக்குகிறது. தீபாவளி முதல் இதுவரை டிமாண்ட் இல்லை. தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில்தான் இப்போது தறி ஓட்டி வருகிறோம். காரணம், இருக்கும் வேலையாட்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் இப்போது நஷ்டத் திலும் தறியை ஓட்டுகிறோம். எங்கள் தொழில் நடக்காமல் போக நூல்விலை அதிகரிப்பு, மின் வெட்டு, சாயப்பட்டறை பிரச்னை என பல பிரச்னைகள் இருக்கிறது. அரசாங்கம் நேரடியாக எங்கள் பிரச்னையில் தலையிட்டு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களை அமரவைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே சிக்கல்களை தடுக்கமுடியும். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் தொழில் இருந்தும் அதை செய்யமுடியாத சூழலில் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.'' என்றார்.
இந்த மாவட்டத்தில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறீர்கள் என ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் கே.சி.பழனிச்சாமியிடம் கேட்டோம்.
''சாயக்கழிவுகளை ஆற்றில் விட தடை விதித்துள்ளோம். சாயக் கழிவு, காலிங்கராயன் வாய்க்கால் வழியாக துணை வாய்க்காலில் செல்ல வாய்க்கால் அமைக்க சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய பொது பிளான்டை அரசு செய்துதர வேண்டும் என ஜவுளித் துறையைச் சார்ந்த தொழிலதிபர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு தீர்வாக தற்போது நார்வே அரசு 2,600 ஏக்கர் நிலங்களை ஆய்வு செய்து வருகின்றது. நான்குபேர் கொண்ட குழு இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண ஆய்வு நடத்தி வருகின்றது. ஆய்வு முடிந்ததும் நார்வே அரசு மற்றும் மாநில அரசு இணைந்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் ஜனநெருக்கடி அதிகரித்து வருவதால் இரண்டு பேருந்து நிலையம் அமைக்கலாம் என திட்டம் வகுத்து வருகிறோம்'' என்றார்.
இந்த மஞ்சள் நகரத்தில் சாயக்கழிவு பிரச்னையைத் தீர்த்தாலே, ஜவுளித் தொழில் வளரும். விவசாயமும் செழிக்கும். ஆக, தொழில் மற்றும் விவசாயத் துறையில் பல்வேறு வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இந்நகரத்தில் இன்னும் பல திட்டங்களைத் தீட்டினால், பொருளாதார முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.